84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?

84. சிறிய வட்டிக்கு அனுமதி உண்டா?

வ்வசனத்தில் (3:130) "பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவறாக விளங்கிக் கொண்டு "சிறிய அளவிலான நியாயமான வட்டிக்கு அனுமதி உண்டு; கொடிய வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது'' என்று சிலர் வாதிடுகின்றனர்.

இது முற்றிலும் தவறான வாதமாகும்.


 

2:278 வசனத்தில்

“வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான்.  

"வர வேண்டிய வட்டியில் கொடும் வட்டியைத் தவிர்த்து விட்டு சிறிய அளவிலான வட்டியை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்'' எனக் கூறாமல், "வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்'' என்று பொதுவாகக் கூறுவதால் சிறிய வட்டியும், பெரிய வட்டியும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம்.

2:279 வசனத்தில்

“வட்டியிலிருந்து திருந்திக் கொள்பவர்களுக்கு அவர்களின் மூலதனம் மட்டுமே சொந்தம்” 

எனக் கூறப்படுகிறது. "மூலதனமும், சிறிய அளவிலான வட்டியும் சொந்தம்'' என்று கூறப்படவில்லை. வர வேண்டிய வட்டி அற்பமாக இருந்தாலும் அதைப் பெறாமல் கொடுத்த கடனை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

அப்படியானால்

"பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்'' என்று 3:130 

வசனம் கூறுவது ஏன்?

பொதுவாக வட்டியின் தன்மையே பன்மடங்காகப் பெருகுவது தான். வியாபாரத்துக்கும், வட்டிக்கும் உள்ள வேறுபாடும் இது தான்.

அற்பமான வட்டிக்குக் கடன் கொடுத்தால் கூட நாட்கள் செல்லச் செல்ல அது பெருகிக் கொண்டே செல்லும். சிறிய வட்டிக்குக் கடன் வாங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தால் வாங்கிய கடனை விட வட்டி பன்மடங்கு அதிகமாகியிருப்பதைக் காணலாம்.

ஒரு பொருளை நாம் இலாபம் வைத்து விற்பனை செய்தால் அந்த ஒரு தடவை மட்டுமே அப்பொருள் மூலம் இலாபம் அடைகிறோம். ஆனால் ஒரு தொகையை வட்டிக்குக் கொடுத்தால் அந்தத் தொகையைத் திரும்பப் பெறும் வரை தொடர்ந்து பல தடவை இலாபம் அடைகிறோம்.

இதனால் தான் பன்மடங்காகப் பெருகும் வட்டி எனக் கூறப்படுகிறது. பெரிய வட்டி, கொடும் வட்டி என்ற கருத்தை இது தராது.

Leave a Reply