182. சமமாக அறிவித்தல்
முஸ்லிம் சமுதாயத்தில் சிலரிடம் குடிகொண்டுள்ள தவறான நம்பிக்கைக்கு இவ்வசனம் (21:109) தக்க மறுப்பாக அமைந்துள்ளது.
அந்தத் தவறான நம்பிக்கை இதுதான்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மக்களுக்குச் சொன்னவை தான் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களாகும். இவை அல்லாத இரகசிய ஞானத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்பித்தனர். இதைப் பொதுமக்களுக்கு அறிவிக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தோழர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுத்தனர். அந்தத் தோழர்கள் தமக்கு அடுத்த தலைமுறையினர் அனைவருக்கும் அதைச் சொல்லாமல் தேர்வு செய்யப்பட்ட சிலரிடம் பைஅத் எனும் உறுதிமொழி எடுத்து அவர்களுக்கு மட்டும் கற்றுக் கொடுத்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்களை ஷரீஅத் சட்டம் கட்டுப்படுத்தாது. இரகசிய ஞானத்தின் மூலம் அறிந்தவற்றின் படி இவர்கள் நடப்பார்கள் என்பது தான் அந்தக் கேடுகெட்ட கொள்கை.
இதை அடிப்படையாக வைத்து இஸ்லாத்துக்கு எதிரான தரீக்காக்கள் உருவாக்கப்பட்டன. அதன் தலைவர்கள் ஷைகுகள் (குருமார்கள்) என்றும் இவர்களின் அடிமைகள் முரீதுகள் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.
ஷைகு என்பவர் எதைச் சொன்னாலும் முரீதுகள் ஆதாரம் கேட்காமல் பின்பற்ற வேண்டும். அவர் சொல்வது திருக்குர்ஆனில் இல்லாவிட்டாலும், நபிவழியில் இல்லாவிட்டாலும் அதற்கு ஆதாரம் கேட்கக் கூடாது. மெஞ்ஞானத்தின் மூலம் அவர்கள் கட்டளை இடுகிறார்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தொழுவது அவசியமில்லை; அது சாதாரண மக்களுக்கானது. நாங்கள் உள்ளத்தால் அல்லாஹ்வைத் தொழுவோம். கஞ்சா குடிப்போம். ஆடல்பாடல்களை ரசிப்போம். அன்னியப் பெண்களுடன் தனித்து இருப்போம். சாதாரண மக்களுக்கான சட்டத்தின்படி இது தவறு என்றாலும் எங்களை இது கட்டுப்படுத்தாது என்று கூறும் ஷைத்தான்களும் ஷைகுகளாக பவனி வருகின்றனர்.
ஷரீஅத் வேறு. தரீகத் வேறு எனக் கூறி இஸ்லாத்தைக் கூறு போடும் இவர்கள் தங்களை ஆன்மிக மேல்சாதியினர் என்று கருதிக் கொள்கின்றனர்.
ஆனால் இஸ்லாம் என்பது அனைவருக்கும் ஒரே இஸ்லாம் தான். எவராக இருந்தாலும் அந்த ஒரே இஸ்லாத்தைத் தான் பின்பற்ற வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசிய ஞானம் என்று எதையும் கற்றுக் கொடுக்கவில்லை. இதை இவ்வசனம் (21:109) தெளிவாக அடித்துச் சொல்கிறது.
நான் அனைவருக்கும் சமமாக அறிவித்து விட்டேன் என்று மக்களுக்கு கூறுமாறு இவ்வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும், அதன் போதனைகளையும் அனைவருக்கும் சமமாகவே சொன்னார்கள் என்பதையும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தனியாக மெஞ்ஞானத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை என்பதையும் இவ்வசனம் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கிறது. கள்ள மதகுமார்களின் பிடியில் மக்கள் சிக்கி விடாமல் இவ்வசனம் காப்பாற்றுகிறது.
தீட்சை, பைஅத், மெஞ்ஞானம் ஆகியன இஸ்லாத்தில் இல்லை என்பதை மேலும் அறிந்து கொள்ள 81, 273, 334 ஆகிய குறிப்புகளை வாசிக்கவும்.
பிறப்பால் அனைவரும் சமமே! நடத்தையால் மட்டுமே ஒருவனை விட மற்றவன் உயர முடியும் என்பதையும், இஸ்லாம் கூறும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் அறிய 11, 32, 49, 59, 141, 182, 227, 290, 368, 508 ஆகிய குறிப்புகளைக் காண்க!