358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு
இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.
தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரைவிட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க வேண்டும் என நினைத்தார்கள்.
நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.
இந்த நிலையில்தான் மக்காவின் முக்கியப் பிரமுகரான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.
எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காகத் தமது தலைமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படைநடத்திச் சென்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும், தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்றப் படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார்.
இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.
வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்துப் பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும், அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத்தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.
எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படைபலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள். எதிரிகளை பத்ர் என்னும் இடத்தில் எதிர்கொண்டு மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள்.
இந்நிகழ்ச்சி தான் இவ்வசனத்தில் கூறப்படுகிறது. இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்' என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான்.
வணிகக் கூட்டம், அல்லது அவர்களைக் காப்பாற்ற வந்த மக்காவின் இராணுவம் இவ்விரண்டில் ஒன்றை நீங்கள் வெற்றி கொள்வீர்கள் என்று முன்னரே அல்லாஹ் வாக்களித்துள்ளதாக இவ்வசனம் கூறுகின்றது.
ஏற்கனவே அளித்த வாக்குறுதியை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நினைவுபடுத்துகின்றான்.
திருக்குர்ஆன் அல்லாத வழியிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து கட்டளைகள் வரும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.
"இரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள்'' என்று இறைவன் வாக்களித்ததாக இவ்வசனம் கூறுகிறது. திருக்குர்ஆன் முழுவதும் தேடினாலும் இக்கருத்தைச் சொல்லும் வசனம் ஏதும் இல்லை.
இறைவன் வாக்களித்ததாகக் கூறுகின்றான். ஆனால் அந்த வாக்குறுதி திருக்குர்ஆனில் இல்லை. ஹதீஸ்களில் தான் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில், திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வகையிலும் செய்தியை இறைவன் வழங்குவான் என்பதற்கு இவ்வசனமும் சான்றாக அமைந்துள்ளது.
திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!