அத்தியாயம் : 24 அந்நூர்

அத்தியாயம் : 24

அந்நூர் – அந்த ஒளி

மொத்த வசனங்கள் : 64

ந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர்வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர் (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. (இது) நாம் அருளி விதியாக்கிய அத்தியாயமாகும். நீங்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவான வசனங்களை இதில் அருளினோம்.

2. விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!115 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்.43 அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.299

3. விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

4. ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்!112 அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.43

5. இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

6. தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்.454

7. தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம்6 ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும். 454

8. "அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது454 தண்டனையிலிருந்து அவளைக் காக்கும்.

9."அவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும். 454

10. அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், ஞானமிக்கவனாகவும் இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)

11. அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு.

12. இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? "இது தெளிவான அவதூறு'' என்று கூறியிருக்கக் கூடாதா?

13. இதற்கு நான்கு சாட்சிகளை112 அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.

14. இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.

15. உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.

16. இதைக் கேள்விப்பட்டபோது "இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன்.10 இது பயங்கரமான அவதூறு'' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?

17. நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

18. வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

19. வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

20. அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும், இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்).

21. நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒருபோதும் உங்களில் எவரையும் அவன் பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை அல்லாஹ் பரிசுத்தமாக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; 488 அறிந்தவன்.

22. "உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.364

23. நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

24. அந்நாளில்1 அவர்களின் நாவுகளும்,510 கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.

25. அன்று அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவுபடுத்துபவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

26. கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் (நல்லோரான) இவர்கள் நீங்கியவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

27. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும், அவ்வீட்டாருக்கு ஸலாம்159 கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

28. அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

29. யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.

30. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில்458 வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.472 தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,107 ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை458 அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம்458 அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.300

32. உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்!435 அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

33. திருமணம் செய்ய வசதியற்றவர்களை அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெற்றோராக ஆக்கும் வரை அவர்கள் கற்பொழுக்கம் பேணட்டும்.435 உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்!301 அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்! கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்! யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

34. உங்களிடம் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றோரின் முன்னுதாரணத்தையும், (நம்மை) அஞ்சுவோருக்கு அறிவுரையையும் அருளியுள்ளோம்.

35. அல்லாஹ், வானங்களுக்கும்507 பூமிக்கும் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படாவிட்டாலும் அதன் எண்ணெய் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான்.302 அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

36, 37. (இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.417 அதில் காலையிலும், மாலையிலும் அவனைச் சில ஆண்கள் துதிக்கின்றனர்.418 வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை1 அவர்கள் அஞ்சுவார்கள்.26

38. அவர்கள் செய்த நல்லறங்களுக்காக அல்லாஹ் கூலி கொடுப்பான்; அவன் தனது அருளை அவர்களுக்கு அதிகப்படுத்துவான். தான் நாடியோருக்கு அல்லாஹ் கணக்கின்றி வழங்குவான்.

39. (ஏகஇறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும்போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத்தான் காண்பான்.61 அப்போது அவனது கணக்கை (அல்லாஹ்) நேர்செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

40. அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப்303 போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை!429 அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்!303 அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது.303 அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.

41. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா?260 ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

42. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

43. அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து507 அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான்.419 தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி, பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.

44. இரவையும், பகலையும் அல்லாஹ் மாறிமாறி வரச் செய்கிறான். சிந்தனையுடையோருக்கு இதில் படிப்பினை உள்ளது.

45. ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரால் படைத்தான். அவற்றில் வயிற்றால் நடப்பவை உள்ளன. இரு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன. நான்கு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன. தான் நாடியதை அல்லாஹ் படைப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

46. தெளிவுபடுத்தும் வசனங்களை நாம் அருளினோம். தான் நாடியோரை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகிறான்.

47. "அல்லாஹ்வையும், இத்தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

48. அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.234

49. உண்மை அவர்களுக்குச் சாதகமாக இருந்தால் அதற்குக் கட்டுப்பட்டு வருகின்றனர்.

50. அவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளதா? அல்லது சந்தேகம் கொள்கிறார்களா? அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு அநீதி இழைப்பார்கள் என்று அஞ்சுகிறார்களா? இல்லை! அவர்களே அநீதி இழைத்தவர்கள்.

51. அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.234

52. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

53. (முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்கின்றனர். "சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!

54. "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.81

55. உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு முன் சென்றவர்களுக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏகஇறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

56. தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

57. (ஏகஇறைவனை) மறுப்போர் பூமியில் வென்று விடுவார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களின் புகலிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.

58. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவவயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

59. உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

60. திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; 488 அறிந்தவன்.

61. உங்கள் வீடுகளிலோ, தந்தையர் வீடுகளிலோ, அன்னையர் வீடுகளிலோ, சகோதரர்கள் வீடுகளிலோ, சகோதரிகளின் வீடுகளிலோ, தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம்159 கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.376

62. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் பொதுவான ஒரு காரியத்துக்காக இவருடன் (முஹம்மதுடன்) இருக்கும்போது இவரது அனுமதி பெறாமல் (வெளியே) போக மாட்டார்கள். உம்மிடம் அனுமதி கேட்போரே அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புகின்றனர். அவர்களின் ஒரு காரியத்திற்காக உம்மிடம் அவர்கள் அனுமதி கேட்கும்போது அவர்களில் நீர் விரும்புகிறவருக்கு அனுமதியளிப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

63. உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறுசெய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.

64. கவனத்தில் கொள்க! வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. எதில் நீங்கள் இருக்கிறீர்களோ அதை அவன் அறிவான். அவனிடம் அவர்கள் கொண்டு செல்லப்படும் நாளில்1 அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

 

Leave a Reply