அத்தியாயம் : 27 அந்நம்ல்

அத்தியாயம் : 27

அந்நம்ல்- எறும்பு

மொத்த வசனங்கள் : 93

ந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. தா, ஸீன்.2 இது குர்ஆனின், தெளிவான வேதத்தின் வசனங்கள்.

2. (இது) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், நற்செய்தியுமாகும்.

3. அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தை வழங்குவார்கள். மறுமையை1அவர்களே உறுதியாக நம்புவார்கள்.

4. மறுமையை நம்பாமல் இருப்போரின் செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுகிறோம். எனவே அவர்கள் தட்டழிகின்றனர்.

5. அவர்களுக்கே தீய வேதனை உண்டு. அவர்களே மறுமையில் நட்டமடைந்தவர்கள்.

6. (முஹம்மதே!) நன்கறிந்த ஞானமிக்கோனிடமிருந்து இக்குர்ஆன் உமக்குக் கொடுக்கப்படுகிறது.

7. "நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து உங்களுக்கு செய்தி கொண்டு வருகிறேன். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஒரு தீப்பந்தத்தை உங்களிடம் கொண்டு வருகிறேன்'' என்று மூஸா தமது குடும்பத்தாரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

8. அங்கே அவர் வந்தபோது "நெருப்பில் இருப்பவரும், அதைச் சுற்றியுள்ளோரும் பாக்கியமளிக்கப்பட்டவர்கள்; அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் தூயவன்''10 என்று அறிவிக்கப்பட்டார்.

9. மூஸாவே! நான் தான் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்.

10. உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றும் அறிவிக்கப்பட்டார்.) அவர் அதைப் போட்டதும் அது ஒரு பாம்பைப் போல் நெளிந்ததைக் கண்டு, பின்வாங்கி திரும்பிப் பார்க்காது ஓடினார்.269"மூஸாவே! பயப்படாதீர்! தூதர்கள் என்னிடம் பயப்பட மாட்டார்கள்''

11. "எனினும் அநீதி இழைத்து தீமைக்குப் பின் நன்மையாக மாற்றிக் கொண்டவரை நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்''

12. "உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும்.269 ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்'' (என்று இறைவன் கூறினான்).

13. பார்க்கும் வகையில் நமது சான்றுகள் அவர்களிடம் வந்தபோது "இது தெளிவான சூனியம்''285என்று அவர்கள் கூறினர்.

14. அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். "குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?'' என்று கவனிப்பீராக!

15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். "நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று அவ்விருவரும் கூறினர்.

16. தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். "மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும்'' என்று அவர் கூறினார்.

17. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.269

18. அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது.470

19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!'' என்றார்.

20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத் பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.

21. அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும் (என்றும் கூறினார்).

22. (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்'' என்று கூறியது.

23. "நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது''

24. "அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வுக்கன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்'' (என்றும் கூறியது.)

25. வானங்களிலும்,507 பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா?396 நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான்.

26. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின்488அதிபதி என்றும் கூறியது.

27. "நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்'' என்று அவர் கூறினார்.

28. "எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் இதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!'' (என்றும் கூறினார்).

29. "பிரமுகர்களே! என்னிடம் மகத்துவமிக்க கடிதம் போடப்பட்டுள்ளது'' என்று அவள் கூறினாள்.

30, 31. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! (என்று அதில் உள்ளது.)26

32. "சபையோர்களே! என் விஷயமாக முடிவு கூறுங்கள்! நீங்கள் ஆலோசனை கூறாத வரையில் நான் எந்தக் காரியத்தையும் முடிவு செய்பவளாக இல்லை" என்று அவள் கூறினாள்.

33. "நாம் வலிமை மிக்கோராகவும், கடுமையாகப் போரிடும் திறன் உடையோராகவும் இருக்கிறோம். அதிகாரம் உம்மிடமே உள்ளது. எனவே என்ன கட்டளையிடுவது என்பதை யோசித்து முடிவெடுப்பீராக!'' என்று (சபையோர்) கூறினர்.

34, 35. "மன்னர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் அதைப் பாழாக்குவார்கள். அவ்வூராரில் மதிப்பு மிக்கவர்களை இழிந்தோராக ஆக்குவார்கள். இப்படித்தான் செய்வார்கள். நான் அவர்களிடம் ஒரு அன்பளிப்பை அனுப்புகிறேன். அனுப்பப்பட்டோர் என்ன முடிவுடன் திரும்புகிறார்கள் என கவனிக்கப் போகிறேன்'' என்றும் கூறினாள்.26

36. ஸுலைமானிடம் (தூதுவர்) வந்தபோது "செல்வத்தால் எனக்கு உதவுகிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை விட எனக்கு வழங்கியது சிறந்தது. மாறாக உங்கள் அன்பளிப்பில் நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்!'' என்றார்.

37. "அவர்களிடம் திரும்பிச் செல்வீராக! அவர்கள் எதிர்க்க முடியாத படைகளுடன் அவர்களிடம் வருவோம். சிறுமைப்பட்டு, இழிந்தோராக அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவோம்'' (என்றும் கூறினார்).

38. "பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார்.

39. "உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.183

40. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.183 தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக484 இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவைகளற்றவன்;485கண்ணியமிக்கவன்.

41. "அவளது சிம்மாசனத்தை அடையாளம் தெரியாமல் மாற்றுங்கள்! அவள் கண்டுபிடிக்கிறாளா? கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறாளா எனப் பார்ப்போம்'' என்றார்.

42. அவள் வந்தபோது "உனது சிம்மாசனம் இப்படித்தான் இருக்குமா?'' என்று கேட்கப்பட்டது. "அதுபோல் தான் இருக்கிறது'' என்று அவள் கூறினாள். "இவளுக்கு முன்பே நாங்கள் அறிவு வழங்கப்பட்டுள்ளோம். நாங்கள் முஸ்லிம்களாகவும்295 இருக்கிறோம்'' (என்று ஸுலைமான் கூறினார்).

43. அவள் (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்து அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்தது (ஒரேஇறைவனை நம்புவதை விட்டும்) அவளைத் தடுத்தது.

44. "இம்மாளிகையில் நுழைவாயாக!'' என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். "அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை'' என்று அவர் கூறினார். "என் இறைவா நான் எனக்கே தீங்கிழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்'' என்று அவள் கூறினாள்.

45. அல்லாஹ்வை வணங்குங்கள்! என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.

46. "என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட மாட்டீர்களா? நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் '' என்று அவர் கூறினார்.

47. உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும்484கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

48. அந்நகரத்தில் ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில் சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்துவோராக இல்லை.

49. "இவரையும், இவரது குடும்பத்தாரையும் இரவில் அழித்து விடுவோம். பின்னர் "இவரது குடும்பத்தினர் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை; நாங்கள் உண்மையே கூறுகிறோம் என்று அவரது உறவினரிடம் தெரிவித்து விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கூறினர்.

50. அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். அவர்கள் அறியாதவாறு நாமும் பெரும் சூழ்ச்சி செய்தோம்6.

51. அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக! அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர் அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம்.

52. அவர்கள் அநீதி இழைத்ததால் இதோ அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன! அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது.

53. நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றினோம்.

54, 55. "தெரிந்து கொண்டே வெட்கக்கேடான காரியத்தைச் செய்கிறீர்களா? பெண்களை விட்டு விட்டு இச்சையுடன் ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் மூடர் கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' என்று லூத் தமது சமுதாயத்திடம் கூறினார்.26

56. "லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.

57. அவரையும், அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தையும் காப்பாற்றினோம். அவளை (அழிவோருடன்) தங்கி விடுபவள் என நிர்ணயித்து விட்டோம்.

58. அவர்கள் மீது (கல்) மழையைப் பொழிந்தோம்.412 எச்சரிக்கப்பட்டோரின் மழை கெட்டதாக இருந்தது.

59. "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனது அடியார்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும். அல்லாஹ் சிறந்தவனா? அவர்கள் இணை கற்பிப்பவையா?'' என்று கேட்பீராக!

60. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும்,507 பூமியையும் படைத்து வானத்திலிருந்து507 தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

61. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அதனிடையே ஆறுகளை உருவாக்கி, அதற்கு முளைகளையும்248 அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா?305 அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

62. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும்போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

63. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில்303 உங்களுக்கு வழிகாட்டியவனா? தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.

64. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும்,507 பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா?463 அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!

65. "வானங்களிலும்,507 பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

66. மறுமையைப் பற்றிய அவர்களின் அறிவு சுருங்கி விட்டது. இல்லை! அது குறித்து அவர்கள் சந்தேகத்தில் உள்ளனர். இல்லை! அதைப் பொறுத்த வரை அவர்கள் குருடர்களாகவே உள்ளனர்.

67. "நாங்களும், எங்கள் முன்னோர்களும் மண்ணாக ஆகிவிட்டால் வெளிக்கொண்டு வரப்படுவோமா?'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர்.

68. "நாங்களும், இதற்கு முன் எங்கள் முன்னோர்களும் இது குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தோம். இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்).

69. "பூமியில் பயணம் செய்யுங்கள்! குற்றவாளிகளின் முடிவு எப்படி அமைந்தது என்று பாருங்கள்!'' எனக் கூறுவீராக!

70. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் மன நெருக்கடிக்கும் ஆளாகாதீர்!

71. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்)?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.

72. "நீங்கள் அவசரமாகத் தேடுபவற்றில் ஒரு பகுதி உங்களை வந்தடையும்'' என்று கூறுவீராக!

73. உமது இறைவன் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் அவர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.

74. அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் உமது இறைவன் அறிவான்.

75. பூமியிலோ, வானத்திலோ507 மறைவான எதுவானாலும் அது தெளிவான பதிவேட்டில்157இருக்கிறது.

76. இஸ்ராயீலின் மக்கள் முரண்பட்டவற்றில் அதிகமானவற்றை இக்குர்ஆன் அவர்களுக்கு விவரிக்கிறது.

77. இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

78. உமது இறைவன் அவர்களிடையே தனது தீர்ப்பை வழங்குவான். அவன் மிகைத்தவன்; அறிந்தவன்.

79. அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! நீர் தெளிவான உண்மையில் இருக்கிறீர்.

80. நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

81. குருடர்களின் வழிகேட்டை நீக்கி அவர்களுக்கு நேர்வழி காட்டுபவராகவும் நீர் இல்லை. நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருப்போர்க்கே நீர் கேட்கச் செய்வீர்!81

82. அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும்போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.308

83. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு கூட்டத்தினரை நாம் ஒன்று திரட்டும் நாளில்1 அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள்.

84. அவர்கள் வந்ததும் "எனது வசனங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அதைப் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு என்ன தான் செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று (இறைவன்) கேட்பான்.

85. அவர்கள் அநீதி இழைத்ததால் அவர்களுக்கு எதிரான கட்டளை நிகழும். அப்போது அவர்கள் பேச மாட்டார்கள்.

86. அவர்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்ப்பதற்கேற்றவாறு பகலையும் ஆக்கியதை அவர்கள் காணவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

87. ஸூர் ஊதப்படும் நாளில்1 வானங்களில்507 உள்ளவர்களிலும், பூமியில் உள்ளவர்களிலும் அல்லாஹ் நாடியோரைத் தவிர அனைவரும் நடுங்குவார்கள். அனைவரும் அடங்கி அவனிடம் வருவார்கள்.

88. மலைகளை நீர் காண்கிறீர். அவை திடமானவை என்று நினைக்கிறீர். அவை மேகம் நகர்வது போல (அந்நாளில்) நகரும். இது ஒவ்வொரு பொருளையும் சீராக அமைத்த அல்லாஹ்வின் தயாரிப்பாகும். நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன்.

89. ஒரு நன்மையைக் கொண்டு வந்தவருக்கு அதை விடச் சிறந்தது இருக்கிறது. அவர்கள் அந்நாளின்1 நடுக்கத்திலிருந்து அச்சமற்றவர்கள்.

90. தீமையைக் கொண்டு வந்தோர் முகம் குப்புற நரகில் தள்ளப்படுவார்கள். "நீங்கள் செய்ததைத் தவிர வேறு கூலி கொடுக்கப்படுவீர்களா?'' (என்று கூறப்படும்.)

91, 92. அல்லாஹ் புனிதமாக்கிய இவ்வூரின் (மக்காவின்) இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஒவ்வொரு பொருளும் அவனுக்கே உரியது. முஸ்லிமாக நான் ஆகுமாறும், குர்ஆனை ஓதுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளேன். "நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். யாராவது வழி தவறினால் (அதற்கு நான் பொறுப்பல்ல) நான் எச்சரிப்பவனே''81 (எனக் கூறுவீராக!)26

93. "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே'' என்றும் கூறுவீராக! அவன் தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுவான். அதை அறிந்து கொள்வீர்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

 

Leave a Reply