85. சாட்சியத்தில் ஆண், பெண் வேற்றுமை ஏன்?
இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமம் என்று இவ்வசனம் (2:282) கூறுகிறது.
அதிகமான மக்களுக்கு இதில் நெருடல் உள்ளது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஆண்களை விடப் பெண்களே தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். இது பெண்களின் நினைவாற்றலுக்கும், அறிவுத்திறனுக்கும் சான்றாக உள்ளது. சாட்சியம் கூறுவதற்குத் தேவையான அறிவுத்திறனும், நினைவாற்றலும் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாகவே உள்ளபோது அவர்களின் சாட்சியத்தைப் பாதி சாட்சியமாகக் கருதுவது ஏன் என்று சிலர் நினைக்கலாம்.
பெண்களுக்கு நல்ல நினைவாற்றலும், அறிவுத்திறனும் உள்ளதை இஸ்லாம் மறுக்கவில்லை. சில விஷயங்களில் ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாக அந்தத் தகுதிகள் உள்ளதையும் இஸ்லாம் மறுக்கவில்லை.
"கூரிய மதி உடைய ஆணின் அறிவையே செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பெண்களுக்குத் திறமை உண்டு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க: புகாரீ 304, 1462)
அன்னை ஆயிஷா (ரலி), அன்னை உம்மு ஸலமா (ரலி) போன்ற பெண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கே பாடம் சொல்லித் தருமளவிற்கு நினைவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளனர். ஆண்களை மிஞ்சுமளவுக்கு அவர்களின் அறிவுத் திறமை மேலோங்கியிருந்தது. இஸ்லாமிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகள் இதற்குச் சான்றுகளாக உள்ளன.
சாட்சியம் கூறுவதற்கு நினைவாற்றல் என்ற தகுதி மட்டும் போதுமா? என்றால் நிச்சயமாகப் போதாது! சாட்சியத்துக்கு முக்கியமான தகுதி என்னவென்றால் கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல், திரிக்காமல் உள்ளதை உள்ளபடி கூற வேண்டும். இந்தத் தகுதிதான் சாட்சியம் கூறுவதற்கு மிக முக்கியம்.
சாட்சியம் என்பது உண்மையைக் கண்டுபிடிக்க உதவுவதும், இன்னொருவரின் எதிர்காலத்தை முடிவு செய்வதுமாகும்.
சாட்சியம் சொல்லும்போது கூட்டாமல், குறைக்காமல், மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும். கூட்டி, குறைத்து சாட்சியம் சொன்னால் நிரபாராதி குற்றவாளியாக்கப்படுவான். குற்றவாளி நிரபராதியாக்கப்படுவான்.
இந்த விஷயத்தில் ஆண்களும், பெண்களும் சமமாக இல்லை என்று இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிந்திப்பது, மனனம் செய்வது உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது. ஆண்களின் மூளைக்கும், பெண்களின் மூளைக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பெண்களின் மூளையை விட ஆண்களின் மூளை 100 கிராம் அதிக அளவு கொண்டதாகப் படைக்கப்பட்டுள்ளது. சிந்தித்தல், மனனம் செய்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், கற்பனை செய்தல், ஆசைப்படுதல், கோபப்படுதல் என ஒவ்வொன்றுக்கும் மூளையில் குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிந்தித்து, ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்தல் ஆண் பெண் இருபாலருக்கும் உள்ளது என்றாலும் ஆண்களின் மூளையில் பெண்களின் மூளையை விட 13 சதவிகிதம் நியூட்ரான்கள் அதிகமாக உள்ளன. இதனால் பெண்களை விட ஆண்கள் சிந்தித்து முடிவு செய்வதில் சிறந்து விளங்குகிறார்கள்.
மூளையின் நினைவாற்றல் பகுதி ஆண்களை விட பெண்களுக்கு 11 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.
இதனால் தான் மனனம் செய்கிற துறையில் பெண்கள் பிரகாசிக்கிறார்கள். பள்ளிக்கூடப் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவதில் அதிகமானவர்கள் பெண்களாகத் தான் இருக்கிறார்கள். பிள்ளை பிறந்த தேதி, திருமண தேதி, முக்கிய நாட்களின் தேதி போன்றவற்றை மிகச் சரியாகச் சொல்பவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். ஆண்கள் இதில் பின் தங்கியே இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் சிந்திக்கும் சக்தி பெண்களுக்கு ஆண்களை விட குறைவாகத் தான் இருக்கும். உலகில் அதிகமான சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள் ஆண்களில்தான் அதிகம் இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்.
மேலும் கற்பனை செய்யும் தன்மை பெண்களின் மூளையில் அதிகமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர்.
தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ்சிறிய குறையையும் மிகப் பெரிய குறையாகக் காண்பதும் பெண்களின் இயல்பாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது. நிறை விஷயத்திலும் அப்படியே.
பதற்றமின்றிப் பொய் சொல்வதில் ஆண்களை விடப் பெண்களே வல்லவர்களாக இருப்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளிடம் உண்மை கண்டறிவதற்காகக் கருவிகளின் மூலம் சோதனை நடத்தப்படுகின்றது. பொய் சொல்லும்போது ஏற்படும் பதற்றத்தால் மூளையில் உண்டாகும் அதிர்வுகளைக் கருவிகள் பதிவு செய்கின்றன. சொல்வது உண்மையா, பொய்யா என்பதை இதைக் கொண்டு தீர்மானிக்கின்றனர்.
இந்தச் சோதனைகளின்போது பெண்கள் பொய் சொன்னால் பெரும்பாலும் கருவிகளில் அது துல்லியமாகத் தெரிவதில்லை. ஆண்கள் பொய் சொல்வதைத்தான் இக்கருவிகள் கண்டுபிடிக்கின்றன. பதற்றமோ, உறுத்தலோ இல்லாமல் பெண்கள் சகஜமாகப் பொய் சொல்வதால் அதைக் கருவிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.
இதே போன்று நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணையின்போதும் பெண்கள், பதற்றமோ, தடுமாற்றமோ இன்றிப் பொய் சொல்வதால் அதைப் பொய்யென்று கண்டறிவது சிரமம்.
எனவே இரண்டு பெண்களின் சாட்சியம், ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் சரியானது தான் என்பதில் சந்தேகம் இல்லை.