அத்தியாயம் : 36 யாஸீன்

அத்தியாயம் : 36

யாஸீன் – அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள்.

மொத்த வசனங்கள் : 83

ந்த அத்தியாயத்தின் துவக்கம் யா, ஸீன் என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. யா, ஸீன்.2

2. ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக!

3. (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர்.

4. (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர்.

5, 6. கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.26

7. அவர்களில் அதிகமானோருக்கு எதிராகக் கட்டளை உறுதியாகி விட்டது. எனவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அவை (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளன. எனவே அவர்களின் தலைகள் மேல் நோக்கியுள்ளன.

9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது.

10. அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

11. இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு பற்றியும், மரியாதைக்குரிய கூலி பற்றியும் நற்செய்தி கூறுவீராக!

12. இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில்157வரையறுத்து உள்ளோம்.

13. ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்தபோது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக!

14. அவர்களிடம் இருவரைத் தூதர்களாக நாம் அனுப்பியபோது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம்.329 நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

15. "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று (அவ்வூரார்) கூறினர்

16, 17. "நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை'' என்று (தூதர்கள்) கூறினர்.

18. "நாங்கள் உங்களைக் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையானால் உங்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களுக்கு ஏற்படும்'' என்று (அவ்வூரார்) கூறினர்.

19. "உங்கள் கெட்ட சகுனம் உங்களிடமே உள்ளது. நீங்கள் அறிவுரை கூறப்பட்டாலுமா (எங்களை மிரட்டுவீர்கள்)? இல்லை! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள்'' என்று (தூதர்கள்) கூறினர்.

20. அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, "என் சமுதாயமே! தூதர்களைப் பின்பற்றுங்கள்!'' என்றார்.

21. உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.

22. என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

23. அவனையன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவர்களின் பரிந்துரை17 எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள்.

24. அப்போது நான் பகிரங்கமான வழிகேட்டில் ஆவேன்.

25. நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவிசாயுங்கள்! (என்றும் கூறினார்).

26, 27. சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது.330 அதற்கவர் "என் இறைவன் என்னை மன்னித்ததையும், மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?'' என்றார்.26

28. அவருக்குப் பின் அவரது சமுதாயத்திற்கு எதிராக ஒரு படையை வானத்திலிருந்து507 நாம் இறக்கவில்லை. (அவ்வாறு) இறக்குவோராகவும் நாம் இருந்ததில்லை.

29. அது ஒரே ஒரு பெரும் சப்தமாகவே இருந்தது. உடனே அவர்கள் சாம்பலானார்கள்.

30. அடியார்களுக்கு இது நட்டம் தான்! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததில்லை.

31. அவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அவர்கள் இவர்களிடம் திரும்பி வர மாட்டார்கள் என்பதை இவர்கள் அறியவில்லையா?

32. அனைவரும் ஒட்டுமொத்தமாக நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

33. இறந்த பூமி அவர்களுக்கு ஓர் சான்றாகும். அதை நாம் உயிர்ப்பிக்கிறோம். அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.

34, 35. அதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தினோம். அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக. அதில் ஊற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம். அதை அவர்களின் கைகள் தயாரிக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?26

36.பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள்242 அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.10

37. இரவும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

38.சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.241

39. சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது.

40. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.241

41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும், அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை399 (நிலத்தில்) அவர்களுக்காகப் படைத்ததும் அவர்களுக்குரிய சான்றாகும்.26

43. நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்காகக் குரல் எழுப்புவோர் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள்.

44.எனினும் நமது அருளின் காரணமாகவும், குறிப்பிட்ட நேரம் வரை அனுபவிப்பதற்காகவும் (மூழ்கடிக்கவில்லை).

45. உங்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அஞ்சுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்போது (புறக்கணிக்கின்றனர்)

46.அவர்களின் இறைவனது சான்றுகளில் எந்தச் சான்று அவர்களிடம் வந்தபோதும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருந்ததில்லை.

47.அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும்போது "(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.

48. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்)?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.

49.ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போது அவர்களை அது பிடித்துக் கொள்ளும்.

50. அப்போது மரண சாசனம் கூறவும் அவர்களுக்கு இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள்.

51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.

52.எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?'' என்று கேட்பார்கள்.332அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

53. ஒரே ஒரு பெரும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லை. உடனே அவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

54. இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

55. அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள்.

56. அவர்களும், அவர்களது துணைகளும்8 கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.

57. அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும்.

58. ஸலாம்!159 இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்றாகும்.

59. "குற்றவாளிகளே! இன்று (நல்லோர்களை விட்டுப்) பிரிந்து விடுங்கள்!'' (என்று கூறப்படும்.)

60, 61. "ஆதமுடைய மக்களே!504 ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரியாவான். என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி என்று உங்களிடம் நான் உறுதிமொழி எடுக்கவில்லையா?''26

62. உங்களில் பெரும் கூட்டத்தினரை அவன் வழிகெடுத்து விட்டான். நீங்கள் விளங்கியிருக்கக் கூடாதா?

63. இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம்.

64. "நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் எரியுங்கள்!'' என்று கூறப்படும்.

65. இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம்.510 அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.

66. நாம் நினைத்திருந்தால் அவர்களின் கண்களை எடுத்திருப்போம். அப்போது பாதையை நோக்கி விரைவார்கள். அப்போது எப்படி அவர்களால் பார்க்க முடியும்?

67. நாம் நாடியிருந்தால் இருந்த இடத்திலேயே அவர்களை உருமாற்றி இருப்போம். அதனால் அவர்கள் (முன்னே) செல்ல இயலாது. பின்னேயும் செல்ல மாட்டார்கள்.

68. நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம்.333(இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?

69. இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை. இது அறிவுரையும், தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை.

70.உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும், (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்).

71. நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா?

72. அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.171

73. அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. நன்றி செலுத்த மாட்டார்களா?

74. தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.

75. அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக்கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.

76. (முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம்.

77. மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தோம்368 என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.506

78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.

79. "முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!

80. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.

81. வானங்களையும்,507 பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.

82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும்போது 'ஆகு' என்று அவன் கூற உடனே அது ஆகி விடும் என்பதுதான் அவனது நிலை.506

83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன்.10அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

 

Leave a Reply