இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி

இன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது! இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன?

நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்.

இதுதான் அதனுடைய பொருளாகும்.

நம்முடைய உயிர்களானாலும், உடைமைகளானாலும் எதுவும் நமக்குச் சொந்தமில்லை. அவற்றைத் தந்த அந்த இறைவனுக்கே சொந்தம். இவை நம்மிடத்தில் இரவலாக இருக்கின்றன. அவற்றை அவன் எப்போது வேண்டுமானாலும் பறிக்கலாம். அவற்றைப் பறிப்பதற்கு அவன் முழு உரிமை படைத்தவன் என்ற கருத்தை இதிலிருந்து எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

நம்மிடமிருந்து யார் பிரிந்தாலும், அல்லது எது பறி போனாலும் அந்தப் பாதிப்பை தாங்கக் கூடிய பக்குவத்தை இந்தப் பிரார்த்தனை உளவியல் ரீதியாக நமக்குத் தருகின்றது.

நாம் வெளிநாட்டில் இருக்கும் போது நமது அரபி விசாவை ரத்து செய்து எப்போது வேண்டுமானாலும் நம்மை ஊருக்கு அனுப்புவான் என்று பேசிக் கொள்வோம். அது போல் அவன் அனுப்பி விட்டால் அது நமக்குக் கவலையை ஏற்படுத்தினாலும் அது பெரிய பாதிப்பாகத் தெரியாது.

இந்தப் பிரார்த்தனையை அடிக்கடி சொல்கின்ற போது நாம் எந்த உலகத்திலிருந்து வந்தோமோ அந்த உலகத்திற்குத் திரும்பப் போகின்றோம் என்ற உணர்வு ஏற்படுகின்றது. நம்மில் நெருங்கிய உறவினர் யாராவது இறந்து விட்டால் நமக்குப் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. நாம் இறந்து விட்டாலும் நம்முடைய உறவினருக்கு அது பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

நமக்கு இருப்பது ஒரே ஓர் ஆண் குழந்தை என்று வைத்துக் கொள்வோம். நாம் இனிமேல் குழந்தை பெற முடியாத நிலையில் அந்தக் குழந்தை இறந்து விட்டால் இது நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இது நம்முடைய இதயத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி அதை இயங்க விடாமல் தடுக்கின்ற ஒரு பேரிடியாகும். அந்தக் கட்டத்தில் நாம் சொல்கின்ற இந்தப் பிரார்த்தனை வெறும் மந்திரச் சொல்லாக இல்லாமல் அந்த இடியின் பாரத்தைத் தாங்கி தடுக்கின்ற, ஏந்திக் கடத்துகின்ற இயந்திரக் கம்பியாக மாறி விடுகின்றது.

அண்மையில் ஜெயலலிதா இறந்தவுடன் 470 பேர்கள் இறந்துள்ளார்கள். தற்கொலை இறப்புகளைத் தவிர்த்து மீதி உள்ளவர்கள் இறந்ததற்குக் காரணம் அதிர்ச்சி தான். இந்த அதிர்ச்சித் தகவலைத் தாங்காமல் போனதற்குக் காரணம் இது போன்ற இடி தாங்கியாகத் திகழ்கின்ற பிரார்த்தனை அவர்களுக்கு இல்லாமல் போனது தான்.

இமயம் போன்று வான் முட்ட உயரே எழுந்த ஒரு மாளிகையில், இடிதாங்கி இல்லாது போனால் இடி விழும் போது அது அடி வாங்கி நொறுங்கி விடுகின்றது. அதுபோல் இதயம் என்ற மாளிகைக்கு இடிதாங்கியான இந்தப் பிரார்த்தனை இல்லை என்றால் அது இடிந்து நொறுங்கி விடுகின்றது. அப்படித் தான் முஸ்லிம் அல்லாதவர்களின் இதயங்கள் அதிர்ச்சியில் நொடிந்து நின்று விடுகின்றது. உடனே அவர்கள் இறந்தும் விடுகின்றார்கள். இந்த வகையில் இது முஸ்லிம்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இறங்கிய அருள்களில் ஒன்றாக அமைந்து விடுகின்றது. இதைப் பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.

திருக்குர்ஆன் 2:155,156,157

இந்த வசனத்தில் இடம் பெறுகின்ற அருள்கள், மறுமையில் கிடைக்கின்ற அருள்களையும் குறிக்கும்; இம்மையில் கிடைக்கின்ற அருள்களையும் குறிக்கும். இறப்புச் செய்தி வருகின்ற போது அதனுடைய அதிர்ச்சியினால் இதயம் நின்று விடாமல் காக்கின்ற வகையில் இது ஓர் இறையருளாக அமைந்து விடுகின்றது.

சில பேர்கள் அதிர்ச்சியில் இறக்காவிட்டாலும் அது அவர்களிடம் நெஞ்சு வலியை ஏற்படுத்தி விடும். இது போன்ற சோதனைகள் ஏற்படாமல் ஒரு தடுப்பு அரணாக இந்தப் பிரார்த்தனை அமைந்து அருளாக ஆகி விடுகின்றது.

முஸ்லிம்களும் இந்த வழிமுறையை அப்படியே கடைப்பிடித்து வருகின்றார்கள். இதனால் அவர்களிடம் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் அதிகமாக நிகழ்வதில்லை. இந்த வகையில் இது முஸ்லிம்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த மாபெரும் அருட்கொடையாகும். இதற்காக முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த அருள்மிகு பிரார்த்தனையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதலாக ஒரு பிரார்த்தனையை இணைத்துச் சொல்லித் தருகின்றார்கள்.

صحيح مسلم
2165 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – أَخْبَرَنِى سَعْدُ بْنُ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ عَنِ ابْنِ سَفِينَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ فَيَقُولُ مَا أَمَرَهُ اللَّهُ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِى فِى مُصِيبَتِى وَأَخْلِفْ لِى خَيْرًا مِنْهَا. إِلاَّ أَخْلَفَ اللَّهُ لَهُ خَيْرًا مِنْهَا ». قَالَتْ فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ أَىُّ الْمُسْلِمِينَ خَيْرٌ مِنْ أَبِى سَلَمَةَ أَوَّلُ بَيْتٍ هَاجَرَ إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. ثُمَّ إِنِّى قُلْتُهَا فَأَخْلَفَ اللَّهُ لِى رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم-. قَالَتْ أَرْسَلَ إِلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- حَاطِبَ بْنَ أَبِى بَلْتَعَةَ يَخْطُبُنِى لَهُ فَقُلْتُ إِنَّ لِى بِنْتًا وَأَنَا غَيُورٌ. فَقَالَ « أَمَّا ابْنَتُهَا فَنَدْعُو اللَّهَ أَنْ يُغْنِيَهَا عَنْهَا وَأَدْعُو اللَّهَ أَنْ يَذْهَبَ بِالْغَيْرَةِ ».

சோதனை ஏற்படும் போது ஒருவர்,

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா

(பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சோதனையில் கூலியைத் தருவாயாக! எனக்கு இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக!)

என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

(என் கணவர்) அபூஸலமா (ரலி) இறந்த போது, முஸ்லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் சென்ற குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார் (என எண்ணினேன்) பின்பு நான் அந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். அல்லாஹ் எனக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பகரமாக வழங்கினான்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல் : முஸ்லிம் 1525

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதலாகச் சொல்லி தந்த பிரார்த்தனையாகும். இந்தப் பிரார்த்தனை செய்பவருக்குக் கை மேல் பலன் கிடைப்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. கை மேல் கிடைக்கும் அந்தப் பலன் ஒருவர் நேரடியாகக் காணும் விதத்தில் அமைந்திருக்கலாம். அல்லது மறைமுகமாகவும் அமைந்திருக்கலாம்.

உறங்கும் போது மரண நினைவு

இது அல்லாமல், இஸ்லாமிய மார்க்கம் ஒருவர் தனது அன்றாட வாழ்க்கையில் உறங்கும் போதும், எழுந்திருக்கின்ற போதும் மரணத்தைப் பற்றி நினைக்கச் செய்கின்றது. ஒருவர் உறங்கும் போது

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹ்வே! உனது பெயரால் நான் மரணிக்கின்றேன் (தூங்குகின்றேன்); உனது பெயரால் உயிர் பெறுகின்றேன் (விழிக்கின்றேன்) என்றும், காலையில் விழிக்கின்ற போது…

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

உறங்குகின்றேன் என்பதற்கு அனாமு என்ற வார்த்தை அரபியில் உள்ளது ஆனால் அதற்குப் பதிலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமூது நான் மரணிக்கின்றேன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்கள். இரவில் தூங்கி விட்டுக் காலையில் எழுவதற்கு உனக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் பாவங்களிலிருந்து விலகிக் கொள் என்ற எச்சரிக்கையை இந்தப் பிரார்த்தனை மனிதனுக்கு தருகின்ற அதே வேளையில் தூங்கி எழுவதற்குள் உனது உயிர் பிரிந்தாலும் பிரிந்து விடும் என்ற மரணத்தைப் பற்றிய நினைவூட்டல் இதில் அடங்கியிருக்கின்றது.

மரணத்தை நினைக்க மையவாடி சந்திப்பு

அன்றாடம் ஒரு முஸ்லிமுக்கு மரணத்தை நினைவூட்டுவதுடன் இஸ்லாம் நின்று விடவில்லை. அடிக்கடி இறந்தவர்களின் பொது மையவாடியைப் போய் சந்திக்கவும் சொல்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்த பின்னர், நீங்கள் அடக்கத்தலங்களை (கப்ருகளை) சந்தியுங்கள். அது மறுமையை (மரணத்தை) நினைவூட்டுகின்றது என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

அவ்வாறு சந்திக்கும் போது…

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் முமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹி(க்)கூன்

இதன் பொருள்:

இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும்.  அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்களே!

ஆதாரம் : முஸ்லிம்

வெளியிலிருந்து யார் என்ன பேசினாலும் இறந்தவர்கள் அதைச் செவியுற மாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அழுத்தமான நம்பிக்கையாகும். அப்படியிருந்தும் இஸ்லாம் இந்தப் பிரார்த்தனையை செய்யச் சொல்கின்றது என்றால் இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

1. உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களுக்காக அல்லாஹ்விடம் செய்கின்ற பிரார்த்தனையாகும்.

2. உயிருடன் இருப்பவர்கள் தாங்களும் மரணமடைந்து அவர்களுடன் போய் சேரக் கூடியவர்கள் என்று உணரச் செய்வதாகும்.

நாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்கள் என்ற வார்த்தைகள் உளவியல் ரீதியாகத் தாங்களும் மரணிப்பவர்கள் என்ற ஒரு பயிற்சியை அளிக்கின்றது. இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம் மரணச் செய்தியைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கின்றது. உண்மையில், இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.

எம். ஷம்சுல்லுஹா

Leave a Reply