உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா?

(குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸ்கள், நம்பகமானவர்கள் என்று கருதப்படும் அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டாலும் அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பது ஹதீஸ்கலையின் விதியாகும். அவ்வாறு அமைந்த ஒரு ஹதீஸை அப்துல் கரீம் எம் ஐ எஸ் சி அவர்கள் ஆய்வு செய்து அனுப்பியுள்ளார். அந்தக் கட்டுரையை தேவையான மாற்றம் செய்து இங்கே வெளியிடுகிறோம். அட்மின்)

அறியாமைக் காலம் தொடக்கம் திருக்குர்ஆன் அருளப்படும் காலகட்டம் வரை பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் வழக்கம் இஸ்லாத்தை ஏற்காத அரபிய மக்களிடையே இருந்து வந்தது.

வறுமைக்குப் பயந்தும், பெண் குழந்தையை இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்து திருத்தியது.

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் 17:31

"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

அல்குர்ஆன் 6:151

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நட்டமடைந்தனர்; வழிகெட்டனர்; நேர்வழி பெறவில்லை.

அல்குர்ஆன் 6:140

குழந்தைகளைக் கொன்று புதைப்பது கொடிய குற்றம் எனவும், அக்குழந்தை எந்தப் பாவமும் அற்றவள் என்றும் இவ்வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,

அல்குர்ஆன் 81:8,9

என்று அல்லாஹ் கூறுகிறான். உயிருடன் புதைக்கப்படும் குழந்தைகள் எந்தப் பாவமும் அற்றவர்கள் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

இவ்வசனங்களுக்கு மாற்றமாக அஹ்மதில் பின்வருமாறு ஒரு செய்தி பதிவாகியுள்ளது.

مسند أحمد بن حنبل

 15965 – حدثنا عبد الله حدثني أبي ثنا بن أبي عدي عن داود بن أبي هند عن الشعبي عن علقمة عن سلمة بن يزيد الجعفي قال انطلقت أنا وأخي إلى رسول الله صلى الله عليه و سلم قال قلنا : يا رسول الله إن أمنا مليكة كانت تصل الرحم وتقرى الضيف وتفعل وتفعل هلكت في الجاهلية فهل ذلك نافعها شيئا قال لا قال قلنا فإنها كانت وأدت أختا لنا في الجاهلية فهل ذلك نافعها شيئا قال الوائدة والموؤدة في النار إلا أن تدرك الوائدة الإسلام فيعفو الله عنها

ஸலமா பின் யஸீத் அல்ஜூஅஃபி (ரலி) கூறியதாவது:

நானும், என் சகோதரரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தாயார் முலைக்கா (அறியாமைக் காலத்தில்) உறவைப் பேணியும், விருந்தாளியை உபசரித்தும் வந்தார்கள். மேலும் இன்னின்ன நன்மைகளை எல்லாம் செய்து வந்தார்கள். அவை என் தாயாருக்கு  நன்மை தருமா? என்று கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மை தராது என்று கூறினார்கள். அறியாமைக் காலத்தில் எங்கள் சகோதரி ஒருவரை உயிருடன் புதைத்திருந்தார். இது அவர்களுக்கு ஏதும் தீங்கு தருமா? என்று கேட்ட போது  (குழந்தையை உயிருடன்) புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகத்தில் தான் இருப்பார்கள். புதைத்தவள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ் அவளை மன்னித்தாலே தவிர என்று பதிலளித்தார்கள்.

நூல் : அஹ்மத் 15923

குழந்தையைக் கொன்று புதைப்பவள் பற்றி நபிகளாரிடம் கேட்கப்பட்ட போது புதைப்பவளுக்கும் நரகம், புதைக்கப்பட்ட குழந்தைக்கும் நரகம் என நபிகளார் பதிலளித்ததாக இச்செய்தி சொல்கின்றது.

இதன் அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கருதியுள்ளனர். ஆனாலும் இதன் கருத்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஏற்புடையதாக இல்லை.

குழந்தைகளைக் கொன்று புதைப்பவள் பெரும் கொடிய பாவத்தைச் செய்கிற காரணத்தால் அவள் நரகத்திற்கு செல்வாள் என்பது இஸ்லாத்தின் எந்த அடிப்படைக்கும் எதிராக இல்லை.

புதைக்கப்பட்ட குழந்தை ஏன் நரகிற்கு செல்ல வேண்டும்?

அக்குழந்தை நரகம் செல்லுமளவு என்ன பாவம் செய்தது?

அவள் தான் எந்த பாவமும் அற்றவள் என்று குர்ஆன் கூறிவிட்டதே?

குர்ஆனும், ஹதீஸும் தெளிவாக இவ்வாறு கூறிய பிறகு புதைக்கப்பட்ட குழந்தையும் நரகிற்குச் செல்லும் என்று கூறுவது குர்ஆனுடன் நேரிடையாக முரண்படக் கூடிய கருத்தாகும்.

ஹதீஸுக்கும் முரண்

குர்ஆனின் கருத்திற்கு மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளுக்கும், இஸ்லாம் உரைத்த அடிப்படைகளுக்கும் இச்செய்தியின் கருத்து முரண்படுகிறது.

எல்லாக் குழந்தைகளும் இஸ்லாத்தில் தான் பிறக்கின்றன என்பது இஸ்லாம் கூறும் பொதுவிதியாகும்.

صحيح البخاري

1385 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ، أَوْ يُنَصِّرَانِهِ، أَوْ يُمَجِّسَانِهِ، كَمَثَلِ البَهِيمَةِ تُنْتَجُ البَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1385

நபிகளார் மிஃராஜ் பயணம் மேற்கொண்ட சமயத்தில், தாம் பார்த்த ஒரு காட்சியை விளக்கும் போது இணை வைப்பாளர்களுடைய பிள்ளைகளையும் தான் சொர்க்கத்தில் கண்டதாகத் தெரிவிக்கின்றார்கள்.

صحيح البخاري

7047 – حَدَّثَنِي مُؤَمَّلُ بْنُ هِشَامٍ أَبُو هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَوْفٌ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا يُكْثِرُ أَنْ يَقُولَ لِأَصْحَابِهِ: «هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمْ مِنْ رُؤْيَا» قَالَ: فَيَقُصُّ عَلَيْهِ مَنْ شَاءَ اللَّهُ أَنْ يَقُصَّ، وَإِنَّهُ قَالَ ذَاتَ غَدَاةٍ: «إِنَّهُ أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ، وَإِنَّهُمَا ابْتَعَثَانِي، وَإِنَّهُمَا قَالاَ لِي انْطَلِقْ، وَإِنِّي انْطَلَقْتُ مَعَهُمَا، وَإِنَّا أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ، وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ، وَإِذَا هُوَ يَهْوِي بِالصَّخْرَةِ لِرَأْسِهِ فَيَثْلَغُ رَأْسَهُ، فَيَتَدَهْدَهُ الحَجَرُ هَا هُنَا، فَيَتْبَعُ الحَجَرَ فَيَأْخُذُهُ، فَلاَ يَرْجِعُ إِلَيْهِ حَتَّى يَصِحَّ رَأْسُهُ كَمَا كَانَ، ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ المَرَّةَ الأُولَى» قَالَ: " قُلْتُ لَهُمَا: سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ؟ " قَالَ: " قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ " قَالَ: " فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ مُسْتَلْقٍ لِقَفَاهُ، وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ بِكَلُّوبٍ مِنْ حَدِيدٍ، وَإِذَا هُوَ يَأْتِي أَحَدَ شِقَّيْ وَجْهِهِ فَيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرَهُ إِلَى قَفَاهُ، وَعَيْنَهُ إِلَى قَفَاهُ، – قَالَ: وَرُبَّمَا قَالَ أَبُو رَجَاءٍ: فَيَشُقُّ – " قَالَ: «ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الجَانِبِ الآخَرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الأَوَّلِ، فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الجَانِبُ كَمَا كَانَ، ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ المَرَّةَ الأُولَى» قَالَ: " قُلْتُ: سُبْحَانَ اللَّهِ مَا هَذَانِ؟ " قَالَ: " قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ، فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى مِثْلِ التَّنُّورِ – قَالَ: فَأَحْسِبُ أَنَّهُ كَانَ يَقُولُ – فَإِذَا فِيهِ لَغَطٌ وَأَصْوَاتٌ " قَالَ: «فَاطَّلَعْنَا فِيهِ، فَإِذَا فِيهِ رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ، وَإِذَا هُمْ يَأْتِيهِمْ لَهَبٌ مِنْ أَسْفَلَ مِنْهُمْ، فَإِذَا أَتَاهُمْ ذَلِكَ اللَّهَبُ ضَوْضَوْا» قَالَ: " قُلْتُ لَهُمَا: مَا هَؤُلاَءِ؟ " قَالَ: " قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ " قَالَ: «فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى نَهَرٍ – حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُولُ – أَحْمَرَ مِثْلِ الدَّمِ، وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ، وَإِذَا عَلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً، وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ، ثُمَّ يَأْتِي ذَلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الحِجَارَةَ، فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْقِمُهُ حَجَرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ، ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَغَرَ لَهُ فَاهُ فَأَلْقَمَهُ حَجَرًا» قَالَ: " قُلْتُ لَهُمَا: مَا هَذَانِ؟ " قَالَ: " قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ " قَالَ: «فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ كَرِيهِ المَرْآةِ، كَأَكْرَهِ مَا أَنْتَ رَاءٍ رَجُلًا مَرْآةً، وَإِذَا عِنْدَهُ نَارٌ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا» قَالَ: " قُلْتُ لَهُمَا: مَا هَذَا؟ " قَالَ: " قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ، فَانْطَلَقْنَا، فَأَتَيْنَا عَلَى رَوْضَةٍ مُعْتَمَّةٍ، فِيهَا مِنْ كُلِّ لَوْنِ الرَّبِيعِ، وَإِذَا بَيْنَ ظَهْرَيِ الرَّوْضَةِ رَجُلٌ طَوِيلٌ، لاَ أَكَادُ أَرَى رَأْسَهُ طُولًا فِي السَّمَاءِ، وَإِذَا حَوْلَ الرَّجُلِ مِنْ أَكْثَرِ وِلْدَانٍ رَأَيْتُهُمْ قَطُّ " قَالَ: " قُلْتُ لَهُمَا: مَا هَذَا مَا هَؤُلاَءِ؟ " قَالَ: " قَالاَ لِي: انْطَلِقِ انْطَلِقْ " قَالَ: «فَانْطَلَقْنَا فَانْتَهَيْنَا إِلَى رَوْضَةٍ عَظِيمَةٍ، لَمْ أَرَ رَوْضَةً قَطُّ أَعْظَمَ مِنْهَا وَلاَ أَحْسَنَ» قَالَ: " قَالاَ لِي: ارْقَ فِيهَا " قَالَ: «فَارْتَقَيْنَا فِيهَا، فَانْتَهَيْنَا إِلَى مَدِينَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ، فَأَتَيْنَا بَابَ المَدِينَةِ فَاسْتَفْتَحْنَا فَفُتِحَ لَنَا فَدَخَلْنَاهَا، فَتَلَقَّانَا فِيهَا رِجَالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ، وَشَطْرٌ كَأَقْبَحِ مَا أَنْتَ رَاءٍ» قَالَ: " قَالاَ لَهُمْ: اذْهَبُوا فَقَعُوا فِي ذَلِكَ النَّهَرِ " قَالَ: «وَإِذَا نَهَرٌ مُعْتَرِضٌ يَجْرِي كَأَنَّ مَاءَهُ المَحْضُ فِي البَيَاضِ، فَذَهَبُوا فَوَقَعُوا فِيهِ، ثُمَّ رَجَعُوا إِلَيْنَا قَدْ ذَهَبَ ذَلِكَ السُّوءُ عَنْهُمْ، فَصَارُوا فِي أَحْسَنِ صُورَةٍ» قَالَ: " قَالاَ لِي: هَذِهِ جَنَّةُ عَدْنٍ وَهَذَاكَ مَنْزِلُكَ " قَالَ: «فَسَمَا بَصَرِي صُعُدًا فَإِذَا قَصْرٌ مِثْلُ الرَّبَابَةِ البَيْضَاءِ» قَالَ: " قَالاَ لِي: هَذَاكَ مَنْزِلُكَ " قَالَ: " قُلْتُ لَهُمَا: بَارَكَ اللَّهُ فِيكُمَا ذَرَانِي فَأَدْخُلَهُ، قَالاَ: أَمَّا الآنَ فَلاَ، وَأَنْتَ دَاخِلَهُ " قَالَ: " قُلْتُ لَهُمَا: فَإِنِّي قَدْ رَأَيْتُ مُنْذُ اللَّيْلَةِ عَجَبًا، فَمَا هَذَا الَّذِي رَأَيْتُ؟ " قَالَ: " قَالاَ لِي: أَمَا إِنَّا سَنُخْبِرُكَ، أَمَّا الرَّجُلُ الأَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُثْلَغُ رَأْسُهُ بِالحَجَرِ، فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ القُرْآنَ فَيَرْفُضُهُ وَيَنَامُ عَنِ الصَّلاَةِ المَكْتُوبَةِ، وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ، يُشَرْشَرُ شِدْقُهُ إِلَى قَفَاهُ، وَمَنْخِرُهُ إِلَى قَفَاهُ، وَعَيْنُهُ إِلَى قَفَاهُ، فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ، فَيَكْذِبُ الكَذْبَةَ تَبْلُغُ الآفَاقَ، وَأَمَّا الرِّجَالُ وَالنِّسَاءُ العُرَاةُ الَّذِينَ فِي مِثْلِ بِنَاءِ التَّنُّورِ، فَإِنَّهُمُ الزُّنَاةُ وَالزَّوَانِي، وَأَمَّا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يَسْبَحُ فِي النَّهَرِ وَيُلْقَمُ الحَجَرَ، فَإِنَّهُ آكِلُ الرِّبَا، وَأَمَّا الرَّجُلُ الكَرِيهُ المَرْآةِ، الَّذِي عِنْدَ النَّارِ يَحُشُّهَا وَيَسْعَى حَوْلَهَا، فَإِنَّهُ مَالِكٌ خَازِنُ جَهَنَّمَ، وَأَمَّا الرَّجُلُ الطَّوِيلُ  الَّذِي فِي الرَّوْضَةِ فَإِنَّهُ إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَمَّا الوِلْدَانُ الَّذِينَ حَوْلَهُ فَكُلُّ مَوْلُودٍ مَاتَ عَلَى الفِطْرَةِ " قَالَ: فَقَالَ بَعْضُ المُسْلِمِينَ: يَا رَسُولَ اللَّهِ، وَأَوْلاَدُ المُشْرِكِينَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَوْلاَدُ المُشْرِكِينَ، وَأَمَّا القَوْمُ الَّذِينَ كَانُوا شَطْرٌ مِنْهُمْ حَسَنًا وَشَطْرٌ قَبِيحًا، فَإِنَّهُمْ قَوْمٌ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا، تَجَاوَزَ اللَّهُ عَنْهُمْ»

(ஹதீசின் ஒரு பகுதி) அப்படியே நாங்கள் நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்ததால் அவரது தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், "இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?'' என்று கேட்டேன்.

அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபோது, முஸ்லிம்களில் சிலர், "அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)'' என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆம்) இணை வைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்'' என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 7047

இணைவைப்பாளர்களின் பிள்ளைகள் முதற்கொண்டு எல்லா பிள்ளைகளும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திலேயே பிறப்பதாக நபிகளார் கூறிவிட்டார்கள்.  நல்லது கெட்டதைக் கண்டறியும் பருவத்தை அடையும் முன்னே அக்குழந்தைகள் இறந்து விட்டால் அவர்களின் இறப்பும் இஸ்லாத்திலேயே அமைந்து விடுவதை நபிகளாரின் இக்கூற்று உறுதிப்படுத்தி விடுகிறது.

விபரமறியும் பருவத்தை அடையும் முன் மரணித்த சிறுவர்கள் முஸ்லிம்களாகவே மரணிக்கின்றார்கள் என்ற கருத்து தெளிவாகவே இதில் உள்ளது.

இக்கருத்தை வலுப்படுத்தும் விதமாகவே மிஃராஜ் தொடர்பிலான செய்தி அமைந்திருக்கின்றது.

சொர்க்கத்தில் சில சிறுவர்களைப் பார்த்ததாக நபிகளார் குறிப்பிடும் போது இணை வைப்பாளர்களின் பிள்ளைகளும் இதில் அடங்குவார்களா? என்று நபித்தோழர்கள் கேட்க ஆம் என நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள்.

எனவே குழந்தைப் பருவத்திலே மரணிக்கின்ற பிள்ளைகள் யாவரும் இஸ்லாத்திலேயே மரணிக்கின்றார்கள் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு என்பதை இதிலிருந்து உறுதியாக விளங்கலாம்.

இஸ்லாத்தின் நிலைப்பாடு இப்படி இருக்க உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை நரகிற்குச் செல்லும் என்பது இஸ்லாத்தின் இந்நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளது.

இதன்படி மேற்கண்ட ஹதீஸின் பொருள் ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளுக்கும் மாற்றமாக உள்ளதை அறியலாம்.

தற்கால அறிஞரான இமாம் ஷூஐப் அல்அர்னாஊத் என்பவரும் அஹ்மத் செய்தியின் அடிக்குறிப்பில் இக்கருத்தை சுட்டிக்காட்டுகிறார்.

مسند أحمد بن حنبل (3/ 478)

 رجاله ثقات رجال الشيخين غير داود بن أبي هند فمن رجال مسلم وصحابيه روى له النسائي وله ذكر في صحيح مسلم … . لكن في متنه نكارة … فيه أن الموؤدة – وهي البنت التي تدفن حيه – تكون غير بالغة ونصوص الشريعة متضافرة على أنه لا تكليف قبل البلوغ والمذهب الصحيح المختار عند المحققين من أهل العلم أن أطفال المشركين الذين يموتون قبل الحنث هم من أهل الجنة

இதில் தாவூத் பின் அபீஹின்த் என்பாரைத் தவிர இதர அறிவிப்பாளர்கள் அனைவரும் புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பாளர்களாவர். தாவூத் பின் அபீஹின்த் முஸ்லிமின் அறிவிப்பாளர் ஆவார்.

இச்செய்தியை அறிவிக்கும் நபித்தோழரின் (ஸலமா ரலி) அறிவிப்பு நஸாயியிலும், முஸ்லிமிலும் உள்ளது.

எனினும் இச்செய்தியின் கருத்திலே மறுக்கத்தக்க அம்சம் உள்ளது. அது என்னவென்றால் உயிருடன் புதைக்கப்பட்ட பருவத்தை அடையாத குழந்தைக்கு நரகம் என்று இதில் கூறப்படுகிறது. பருவமடையாத குழந்தைகளைப் பொறுத்தவரை விசாரணைக்கு உட்படுத்தப்படுதல் அவர்களுக்கு இல்லை என மார்க்கச் சான்றுகள் அதிகம் சான்று பகர்கின்றன.

எனவே பருவத்தை அடையும் முன் மரணிக்கின்ற இணை வைப்பாளர்களின் குழந்தைகள் சொர்க்கவாசிகள் என்பதே ஆய்வாளர்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட சரியான கருத்தாகும்.

அஹ்மத் பாகம் 3 பக்கம் 478 அடிக்குறிப்பு

வியாக்கியானங்களும் விளக்கங்களும்

அஹ்மதில் இடம்பெறும் மேற்கண்ட செய்தியை ஏற்கும் அறிஞர்களில் சிலர் இச்செய்திக்கு சில வியாக்கியானங்களை அளிக்கின்றனர். ஆனால் அவர்களின் வியாக்கியானங்கள் எதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை என்பதுடன் மேற்குறிப்பிட்ட ஆதாரங்களுடன் பொருந்திப் போகவுமில்லை.

அவர்கள் என்ன வியாக்கியானத்தை அளிக்கின்றார்கள்? அது எவ்வாறு ஏற்புடையதாக இல்லை என்பதை சற்று விரிவாகக் காண்போம்.

வியாக்கியானம் 1

புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகத்தில் இருப்பார்கள் என்றால் இது பொதுவில் சொல்லப்பட்ட செய்தியல்ல. மாறாக ஸலமா (ரலி) அவர்கள் தன் தாயைப் பற்றியும், சகோதரியை பற்றியும் நபியிடம் கேள்வி எழுப்பிய போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதால் இங்கே இந்த இருவர் பற்றித்தான் பேசப்படுகின்றது.

அதாவது உயிருடன் புதைக்கப்பட்ட எல்லாக் குழந்தையும் நரகிற்குச் செல்வார்கள் என்பது இந்தச் செய்தியின் பொருளல்ல. இங்கே கேள்வி எழுப்பப்பட்ட  (ஸலமாவின் சகோதரி) குழந்தை மட்டுமே நரகிற்குச் செல்லும் என்பது இவர்களின் வியாக்கியானம்.

விளக்கம் 1

முதலில் இவர்கள் சொல்வது போல அந்தச் செய்தி குறிப்பிட்ட ஒரு குழந்தையைப் பற்றிப் பேசுகிறது என்று வைத்துக் கொண்டாலும் மேற்கண்ட இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். ஆனால் மேற்கண்ட ஹதீஸ் குறிப்பிட்ட ஒரு குழந்தையைப் பற்றி மட்டும் பேசவில்லை. உயிருடன் புதைக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் நிலை குறித்து பேசுவதைப் போன்று தான் அச்செய்தியின் வாசகம் உள்ளது.

இதை அந்தச் செய்தியின் இறுதி வாசகத்திலிருந்து விளங்கலாம்.

புதைத்தவள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ் அவளை மன்னித்தாலே தவிர என்று நபி கூறியதாக அந்தச் செய்தியின் இறுதியில் வந்துள்ளது.

(குழந்தையை உயிருடன்) புதைப்பவளும், புதைக்கப்பட்ட குழந்தையும் நரகத்திலே இருப்பார்கள் என்பது குறிப்பிட்ட இருவரைப்பற்றி மட்டும் கூறப்பட்டதாக இருப்பின் புதைத்தவள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ் அவளை மன்னித்தாலே தவிர என்ற வாசகம் தேவையில்லை என்றாகி விடும்.

ஏனெனில் அச்சம்பவத்தில் மரணித்துப் போன ஸலமாவின் தாய் குறித்துத் தான் கேள்வி எழுப்பப்படுகிறது. அவர்கள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ் மன்னிப்பான் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் தான் இஸ்லாத்தை அடையும் முன்னரே மரணித்து விட்டார்களே. அதனால் தானே அவர்கள் செய்த நன்மையும் அவர்களுக்குப் பலனளிக்காது என்று அச்செய்தியில் கூறப்படுகிறது.

அப்படியெனில் புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகம் செல்வார்கள். புதைப்பவள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ் அவளை மன்னித்தாலே தவிர எனும் சொல்லமைப்பு குறிப்பிட்ட இருவர் தொடர்பானது மட்டுமல்ல. இது பொதுவிதியாக அதாவது உயிருடன் குழந்தைகளைப் புதைப்போர் – புதைக்கப்படும் குழந்தைகள் அனைவரது நிலை இது தான் என்பது போன்று தான் இந்தச் செய்தியின் வாசக அமைப்பு இருக்கிறது.

குழந்தையை உயிருடன் புதைப்பவள் அதன் பின் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற வாய்ப்புள்ளது. ஆனால் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு அந்த வாய்ப்பு இல்லை.

அதனால் தான் புதைப்பவள் இஸ்லாத்தை அடைந்தாலே தவிர என்று சொல்லப்படுவதாக அந்தச் செய்தியின் தொனி அமைந்துள்ளது.

உயிருடன் புதைக்கப்படும் அனைத்து குழந்தைகள் குறித்தும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி. அப்படி ஒரு குழந்தையைக் குறித்து மட்டுமே பேசுகிறது என்று வைத்துக் கொண்டாலும் அப்போதும் இதன் கருத்து சரியில்லை என்பது தான் நமது வாதம்.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது

 அல்குர்ஆன் 81 8,9

இந்த வசனத்தின் படி உயிருடன் புதைக்கப்படுவது ஒரு குழந்தையாக இருந்தாலும் அவள் பாவமற்றவள் என்பது தான் குர்ஆனின் நிலைப்பாடு.

எனவே இவர்கள் அளிக்கும் வியாக்கியானத்திலும் அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது? ஏன்? அது நரகிற்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி அப்போதும் எழவே செய்யும்.

மேலும் எல்லாக் குழந்தைகளும் இஸ்லாத்திலேயே பிறக்கின்றார்கள். அவர்களின் மரணமும் இஸ்லாத்தில் தான் நிகழ்கின்றன எனும் முன்னர் கூறிய நபிமொழிக்கு எதிராகவும் இவர்களின் வியாக்கியானம் அமைந்திருக்கின்றது.

அந்த ஒரு குழந்தை மட்டும் தான் என்று சொல்வதால் நாம் முன்னர் குறிப்பிட்ட இந்த முரண்பாடுகள் ஒரு போதும் நீங்குவதில்லை.

வியாக்கியானம் 2

அவர்களின் அடுத்த வியாக்கியானம்

புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகத்திலே இருப்பார்கள் எனும் நபியின் கூற்று, குறிப்பிட்ட இருவர் பற்றித்தான் பேசுகிறது என்று சொல்லிவிட்டு உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை அதாவது ஸலமாவின் சகோதரி நரகிற்குச் செல்கிறாள் என்று நபி சொல்வதிலிருந்து அவள் குழந்தை அல்ல, நன்மை தீமை எதுவென அறியும் பருவத்தை அடைந்தவள் என்றும், அவள் செய்த பாவத்தின் காரணத்தாலே அவள் நரகம் செல்கிறாள் என்றும் விளங்குகிறது.  இப்படித்தான் இந்தச் செய்தியைப் புரிய வேண்டும்.

இதன்படி பாவமற்ற குழந்தையை இறைவன் தண்டித்ததாக ஆகாது என்பது இவர்களின் இன்னொரு வியாக்கியானம்.

விளக்கம் 2

குறிப்பைட்ட இருவர் பற்றித்தான் இந்தச் செய்தி பேசுகிறது எனும் இவர்களது முதல் வியாக்கியானத்தை அந்தச் செய்தியே நிராகரித்து விட்டது என்பதை முன்னர் விளக்கி விட்டோம்.

புதைப்பவள் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ்வின் மன்னிப்பை அடைந்தால்… எனும் சொல் அனைவரையும் தான் குறிக்கின்றது. குறித்த இருவரை மட்டும் குறிக்கும் சொல்லாக இல்லை என்பதை விளக்கினோம்.

ஒரு வாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட குழந்தையைப் பற்றி மட்டுமே பேசுகிறது என்றாலும் அப்போதும் குர்ஆனுக்கும், இதர ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் முரண்படவே செய்கிறது. அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தாள்? எல்லாக் குழந்தைகளும் இஸ்லாத்தில் தானே பிறக்கின்றன எனும் பொது விதிக்கு மாற்றமாக உள்ளதே என்று நாம் விளக்கியிருந்தோம்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த வியாக்கியானம் அமைந்துள்ளது.

புதைக்கப்பட்ட அவள் நரகம் செல்கிறாள் என நபி சொல்வதிலிருந்து அவள் எதுவுமறியா குழந்தை அல்ல, எல்லாமறிந்த பெண் என்று விளங்கிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

இந்த வியாக்கியானமும் தவறே.

ஏனெனில் இதே செய்தி நஸாயி அவர்களின் ஸூனனுல் குப்ராவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் உயிருடன் புதைக்கப்பட்ட தன் சகோதரி பற்றி ஸலமா ரலி கூறும் போது பருவமடையாத என் சகோதரியை என் தாயார் புதைத்து விட்டார்கள் என்று கூறியதாக தெளிவாகவே இடம்பெற்றுள்ளது.

11585- أَخْبَرَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ الْمِنْهَالِ ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، حَدَّثَنَا دَاوُدُ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ ، عَنْ سَلَمَةَ بْنِ يَزِيدَ الْجُعْفِيِّ ، قَالَ : ذَهَبْتُ أَنَا وَأَخِي ، إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قُلْتُ : يَا رَسُولَ اللهِ ، إِنَّ أُمَّنَا كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ تُقْرِي الضَّيْفَ ، وَتَصِلُ الرَّحِمَ ، هَلْ يَنْفَعُهَا عَمَلُهَا ذَلِكَ شَيْئًا ؟ قَالَ : لاَ ، قَالَ : فَإِنَّهَا وَأَدَتْ أُخْتًا لَهَا فِي الْجَاهِلِيَّةِ لَمْ تَبْلُغِ الْحِنْثَ ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الْمَوْءُودَةُ وَالْوَائِدَةُ فِي النَّارِ ، إِلاَّ أَنْ تُدْرِكَ الْوَائِدَةُ الإِسْلاَمَ.

பார்க்க ஸுனனுல் குப்ரா 11585, தப்ரானி 6195

பருவமடையாத என் சகோதரி எனும் ஸலமா (ரலி)யின் கூற்று அந்தக் குழந்தை பருவமடைந்திருக்கலாம், பாவம் செய்திருக்கலாம் எனும் இவர்களது சொந்த வியாக்கியானத்தைத் தகர்த்து விடுகிறது.

எனவே பாவமறியா குழந்தையை இறைவன் தண்டிப்பது எப்படி சரியாகும்? அது இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானதாயிற்றே எனும் நம் கேள்வி பதில் இல்லாமல் அப்படியே நிற்கின்றது.

இது குர்ஆனுக்கும் மற்ற நபிமொழிகளுக்கும் முரண்பாடாக உள்ளது எனும் கருத்தை இந்த வாசகம் மேலும் உறுதி செய்து விடுகிறது.

வியாக்கியானம் 3

புதியதொரு கோணத்தில் இந்தச் செய்திக்கு மற்றுமோர் வியாக்கியானமும் அளிக்கப்படுகிறது.

புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகம் செல்வார்கள் என்பதில் புதைத்தவள் என்பது குழந்தையை உயிருடன் புதைக்கும் பெண்களைக் குறிக்கும் சொல்லாகும்.

புதைக்கப்பட்டவர்கள் என்றால் யாருக்காக புதைக்கப்படுகிறதோ அவர்கள் என்பது இதன் பொருள்.

அதாவது மவ்ஊதா – புதைக்கப்பட்டவள் என்றால் உயிருடன் புதைக்கப்படும் குழந்தைகள் இல்லை. மாறாக யாருக்காக குழந்தை புதைக்கப்பட்டதோ அவர்கள்.

குழந்தையைப் புதைக்கும்படி தாய், தந்தை இருவரில் ஒருவர் தான் சொல்வார்கள். இவர்களுக்காகத் தான் குழந்தை புதைக்கப்படுகிறது. எனவே மவ்ஊதா என்றால் பெற்றோரில் ஒருவர் என ஒரு சிலரின் வியாக்கியானம் செல்கிறது.

விளக்கம் 3

இந்த வியாக்கியானம் மொழிக்கு சற்றும் பொருத்தமில்லாததாகும்.

மவ்ஊதா – புதைக்கப்பட்டவள் என்றிருக்கும் இடத்தில், மவ்ஊததுன் லஹூ – யாருக்காக புதைக்கப்பட்டதோ அவர்கள் என்று கற்பனையின் பேரில், செய்தியில் இல்லாத கருத்து திணிக்கப்படுகிறது.

யாருக்காக எனும் அர்த்தம் தரும் லஹூ எனும் சொல் இல்லாமலே யாருக்காகப் புதைக்கப்பட்டதோ அவர்கள் என்று ஒரு மொழிபெயர்ப்பை எப்படி இந்த செய்திக்கு வழங்க முடியும்? அது எப்படிச் சரியாகும்?

அந்தச் செய்தியில் இருப்பது மவ்ஊதா – புதைக்கப்பட்டவள் நரகம் செல்வாள் என்பது தான். புதைக்கப்பட்டவள் என்பது குழந்தையைத் தான் குறிக்கும்.

குர்ஆனிலும் மேற்கண்ட 81:8,9 வசனத்தில் மவ்ஊதா என்ற சொல் தான் வந்துள்ளது. இதே அர்த்தம் தான் அந்தச் செய்திக்கும் வரும்.

அப்படியிருக்கும் போது அந்தச் செய்தி குழந்தையைப் பற்றி பேசவில்லை; பெற்றோரைப் பற்றி பேசுகிறது என்று செய்தியின் அர்த்தத்தை எப்படி அனர்த்தமாக்க முடியும்?

குர்ஆனில் வரும் மவ்ஊதா எனும் சொல்லுக்கு குழந்தை என்று அர்த்தம், ஹதீஸில் வரும் மவ்ஊதா எனும் சொல்லுக்கு பெற்றோர் என அர்த்தம் என்பது ஆய்வு செய்யும் சரியான போக்கல்ல. மாறாக ஆய்வுப் பிறழ்வின் அடையாளமாகவே கருதப்படும்.

மேலும் இந்த வியாக்கியானத்தையும் குறிப்பிட்ட அந்த அறிவிப்பு நிராகரித்து விடுகின்றது என்பதை இந்த வியாக்கியானம் செய்வோர் கவனத்தில் கொள்ளவில்லை.

புதைக்கப்பட்டவள் என்பது குழந்தையைக் குறிக்காது; அது பெற்றோர் இருவரில் ஒருவரைத்தான் குறிக்கும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக உள்ள அந்தச் செய்தியில் புதைப்பவளும், புதைக்கப்பட்டவளும் நரகம் செல்வார்கள் என்று கூறிவிட்டு புதைப்பவள் இஸ்லாத்தை அடைந்து கொண்டாலே தவிர என்று சொன்னதாக வருகிறது.

இதன்படி புதைக்கப்பட்டவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி பேசப்படவில்லை.

இவர்களது கூற்றுப்படி புதைக்கப்பட்டவள் என்பது தாய் தந்தை இருவரில் ஒருவரைக் குறிக்கிறது என்றால் அவர்களும் இஸ்லாத்தை அடைந்து அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற வாய்ப்புள்ளதே?

இவர்களது கூற்றின் பிரகாரம் புதைப்பவள் (புதைக்கும் பெண்) புதைக்கப்பட்டவள் (குழந்தையின் தாய்- தந்தை) இருவரும் இஸ்லாத்தை அடைய வாய்ப்பிருந்தும் அந்த செய்தியில் புதைப்பவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி மட்டுமே நபியால் பேசப்படுவதாக உள்ளது.

புதைக்கப்பட்டவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி நபி பேசவில்லை.

இவர்கள் செய்யும் அர்த்தப்படி புதைக்கப்பட்டவளும் (அதாவது பெற்றோர்) இஸ்லாத்தை அடைந்து திருந்தி அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற வாய்ப்பிருக்கும் போது புதைப்பவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி மட்டுமே பேசப்படுகிறது என்றால் அந்தச் சொல்லுக்கு இவர்கள் சொல்லும் அர்த்தமில்லை.

புதைக்கப்பட்டவள் என்பது உயிருடன் புதைக்கப்படும் குழந்தையைத் தான் குறிக்கிறது என்று உறுதியாகி விடுகிறது. அதனால் தான் அவள் இஸ்லாத்தை அடைவதைப் பற்றி பேசப்படவில்லை. அவள் மரணித்து விடுவதால் இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பு இல்லாமல் போவதால் அவள் இஸ்லாத்தை ஏற்பது குறித்து பேசப்படவில்லை.

இதிலிருந்து நபியின் கூற்றாகப் பதிவாகியிருக்கும் செய்தியில் புதைக்கப்பட்டவள் என்பது குழந்தையைத் தான் குறிக்கிறது. தாய் தந்தையைக் குறிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

எனவே இந்தச் செய்தி குர்ஆனுடன் முரண்படுவதை நீக்கும் நோக்கில் பல வியாக்கியானங்களை இவர்கள் அளித்துப் பார்த்தாலும் எந்த விளக்கமும் அந்தச் செய்தியுடனோ, பிற அடிப்படைகளுடனோ சற்றும் பொருந்தவில்லை.

இதனடிப்படையில் அஹ்மதில் இடம்பெறும் செய்தி குர்ஆனுக்கும், நபிமொழிகளுக்கும் முரண்படுவது உறுதியாவதால் இந்தச் செய்தி அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் இதன் கருத்து சரியல்ல என்பதால் இது ஆதாரப்பூர்வமானதல்ல.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit