ஏகத்துவமும் சோதனைகளும்

ஏகத்துவமும் சோதனைகளும்

கே.எம். அப்துந்நாஸிர்

ஏகத்துவம் 2005 ஜூன்

ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப்பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப் படுவான். ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்”என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி 2322

இன்று குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என உறுதிகொண்டு அதனைப் பிரச்சாரம் செய்கின்ற ஒவ்வொருவரும் மேற்கண்ட ஹதீஸை மனதில் நிறுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இன்று தான் ஏகத்துவவாதிகளுக்கு மத்தியில் எவ்வளவு திருப்பங்கள் மாற்றங்கள் கருத்துருவாக்கங்கள்.

ஒரு நேரத்தில் தர்ஹா வழிபாட்டை எதிர்த்து, மத்ஹபு பிரிவுகளை எதிர்த்து, சடங்கு சம்பிரதாயங்களை, பித்அத்தான அனாச்சாரங்களை எதிர்த்தவர்கள், வரதட்சணை திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டோம் என சூளுரைத்தவர்கள், ஊரை எதிர்த்து சமுதாயத்தை எதிர்த்து குடும்பத் தினரை எதிர்த்து, ஏன்? பெற்றெடுத்த தாய் தந்தையர்களைக் கூட எதிர்த்து எங்களுடைய தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டும் தான் நாங்கள் பின்பற்றுவோம். மார்க்க விஷயங்களில் எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டோம் என மார் தட்டியவர்கள், இது போன்று எதிர்த்துக் கூற வலிமையில்லா விட்டாலும் நீங்கள் செய்வது சரிதான். இதுதான் சரியான வழிமுறை என்று ஆதரவாகப் பேசியவர்கள் இவர்களுக்கு மத்தியில்தான் எவ்வளவு திருப்பங்கள்.

இக்கட்டுரையை எழுதுகின்ற நான் இந்த உண்மையான ஏகத்துவக் கொள்கையை விளங்கி ஆறு அல்லது ஏழு வருடங்கள் தான் ஆகின்றது. ஆனால் எனக்கு ஏகத்துவத்தைப் போதித்தவர்கள் தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் ஆணி வேராகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் மூலம் நான் ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்னால் தமிழக முஸ்லிம்களின் மார்க்கத்தின் நிலைகளைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். இஸ்லாமிய சமுதாயம் ஓரிறைக் கொள்கைளை விளங்காமல் இணைவைக்கும் காரியங்களில் தான் மூழ்கிக் கிடந்தார்கள். இவைகள் தான் நம்மை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லக் கூடியவை என்று ஒரு ஆழமான நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. எங்கு நோக்கினும் கோயில் வழிபாடுகளைப் போல் மக்கள் தர்ஹாக்களிலும் கந்தூரி உரூஸ் திருவிழாக்களிலும் தான் மூழ்கிக் கிடந்தனர். தாயத்து தகடுகள் தான் அவர்களின் வீடுகளிலும் கடைகளிலும் அவர்களின் உடல்களிலும் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.

ஃபாத்திஹாக்கள், மவ்லூதுகள், நூறு மஸாலாக்கள் தான் அவர்களுக்கு இறைவேதம் போல் காட்டப்பட்து. திருமறைக்குர்ஆனை மக்களுக்குக் கற்பிக்க வேண்டிய ஆலிம் பெருமக்களே அதனைத் தமிழில் வெளியிடுவதற்குப் பெரும் தடைக் கற்களாக இருந்தார்கள். அனைத்து அனாச்சாரங்களிலும் முன்னின்று வழி நடத்தியவர்கள் இந்த ஆலிம் பெரு மக்கள் தான். மக்கத்து காஃபிர்களின் இணைவைப்புக் கொள்கைகளை விட மிக மோசமான கொள்கையில் தான் அன்று நம்முடைய சமுதாயம் மூழ்கிக் கிடந்தது. மக்கத்து காஃபிர்களாவது துன்பம் வரும்போது அல்லாஹ்வை மட்டும் அழைப்பார்கள் என திருமறைக்குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் இவர்களோ துன்ப நேரத்திலும் கூட "முஹையித்தீனே’ என்னை காப்பாற்றுங்கள்” என்று அழைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

மார்க்கத்தைப் போதிக்க வேண்டிய மதரஸாக்கள் மத்ஹபு வெறியை வளர்க்கக் கூடிய கூடங்களாகவும். அங்கு பயின்று வெளிவரும் மாணவர்கள் புரோகிதர்களாகவும் மாறிக் கொண்டிருந்தனர். வரதட்சணைக் கொடுமை தலை விரித்தாடியது. வட்டியை பாவம் என்று அறியாமலேயே சமுதாயம் அதில் மூழ்கிக் கிடந்தது.

மார்க்க விஷயத்தில் மட்டும் அவர்கள் பேரிழப்பில் இருக்கவில்லை. அரசியல் ரீதியாகவும் அவர்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தங்களுக்கெதிராக உலக அளவில் பின்னப்படுகின்ற சதிவலைகளை அவர்கள் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்தவ சமுதாயத்தவர்கள், மதவெறியர்கள்,நாத்திகவாதிகள், காதியானிகள் இஸ்லாத்தை சரியாக விளங்காமல் செய்கின்ற அவதூறுப் பிரச்சாரங்களுக்கு பதிலளிக்க இவர்களுக்குத் தெம்பில்லை. இஸ்லாமிய சமுதாயத்தவர்கள் சினிமா நடிகர்களை தங்களுடைய வாழ்க்கைக்கு முன் மாதிரியாக்கி அவர்களுக்குப் பின்னால் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். சமுதாயத்தில் காணப்பட்ட மூடநம்பிக்கைகளையும் அனாச்சாரங்களையும் கண்ட சிலர் இஸ்லாத்தையே வெறுத்து கம்யூனிஸ்டுகளாகவும் நாத்திகவாதிகளாகவும் மாறினர்கள். சின்னஞ் சிறிய சமுதாயங்கள் கூட தங்களுடைய உரிமைகளுக்குப் போராடி இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் இவர்களுக்கென்று குரல் கொடுப்பதற்கு யாருமில்லை. போராட்ட வழிமுறைகளை அறியாமல் சமுதாயம் தடுமாறிக் கொண்டிருந்தது.

மக்களை மார்க்க ரீதியாக சீர்திருத்தம் செய்யக்கூடிய எந்த இயக்கங்களும் அப்பொழுது தமிழகத்தில் இல்லை என நான் கூற வரவில்லை. இவற்றையெல்லாம் தவறு என விளங்கியவர்கள் அன்றைக்கும் இருக்கத்தான் செய்தனர். மக்கள் அந்த நம்பிக்கைகளில் கொண்டிருந்த நம்பிக்கையையும், ஆழ்ந்த பற்றையும் பார்த்தவர்கள் இதனை எதிர்த்துக் கூறினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைக் கவனித்துத் தங்களோடு அதனை நிறுத்திக் கொண்டனர். இவற்றை எதிர்த்தால் தங்கள் இயக்கத்திற்குக் கூட்டம் சேராது என்ற கவலையும் அவர்களுக்கு இருந்தது.

இப்படிப் பட்ட காலகட்டத்தில் தான் பின் விளைவுகளைப் பற்றிக் கொஞ்சம் கூட சிந்திக்காமல் உள்ளதை உள்ளபடி தெளிவாகக் கூறி உண்மையான இஸ்லாத்தைப் போதிக்கக் கூடிய அழைப்பாளர்கள் இறைவனின் அருளால் உருவானார்கள். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் யாருடைய வார்த்தைகளுக்கும் இல்லாத தாக்கங்களும் எதிர்ப்புகளும் இவர்களுடைய வார்த்தைகளுக்கு இருந்தது. ஒவ்வொரு ஊரிலும் சத்தியப் பிரச்சாரம் ஒலித்தது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஏகத்துவத்தைப் போதிக்கக் கூடியவர்களின் கேஸட்டுகளும் கட்டுரைகளும் அலசப்பட்டுக் கொண்டிருந்தன. உண்மையான தவ்ஹீதை விளங்கி அதைப் பின்பற்றிய சகோதரர்கள் சமுதாய ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளானார்கள். ஊர்விலக்கம் செய்யப்பட்டார்கள், அவர்கள் பள்ளிவாசல்களுக்குள் வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

இவர்கள் தொழுகையில் விரலை அசைக்கிறார்கள், நெஞ்சில் தக்பீர் கட்டுகிறார்கள்,குழப்பம் செய்கிறார்கள் என அவர்கள் வெளிப்படையாகக் கூறிக் கொண்டாலும் அவர்கள் தடை செய்ததன் உண்மையான காரணம் அவர்களின் கொள்கைப் பிரச்சனை தான். காலம் காலமாக நாமும் நம்முடைய மூதாதையர்களும் செய்து வந்தவற்றை இவர்கள் கூடாது என்கிறார்களே இவற்றைச் செய்தால் நரகம் என்கிறார்களே என்ற கொள்கை வெறி தான் அவர்களைத் தூண்டிவிட்டது.

மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த ஆலிம் பெருமக்களும் இவர்களால் எங்கே நம்முடைய பிழைப்பிற்கு ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்து "ஜமாத்துல் உலமா”வின் மூலம் கடுமையான எதிர்ப்புகளும் நம்மைப் பற்றி அவதூறுப் பிரச்சாரங்களையும் கடுமையாகத் தூண்டிவிட்டனர். சமுதாயத் துரோகிகள், யூதக் கைக்கூலிகள், பிரிவினை வாதிகள் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டனர்.

"எரிகிற தீயில் பிடுங்கிய வரை லாபம்” என்று கூறுவது போல் இந்த எதிர்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுடைய இயக்கத்திற்கு ஆள் பிடிப்பதற்காக முஸ்லிம் லீக்,ஜமாத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாத் போன்ற இயக்கத்தினரும் இவர்களை கடுமையாக எதிர்த்தார்கள்.

எதிர்ப்புகள் கடுமையாக இருந்தாலும் இந்த தவ்ஹீது பிரச்சாரம் மேலோங்கிய பிறகு இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறிய கிறிஸ்தவர்களுக்கும், மத வெறியர்களுக்கும், பிற மத சகோதரர்களுக்கும், நாத்திகவாதிகளுக்கும்,காதியானிகளுக்கும் ஆதாரப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பதிலளிக்கப்பட்டது. இஸ்லாத்தைத் தவறாக விளங்கியவர்களெல்லாம் அதனுடைய தனிச் சிறப்பை விளங்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகளோடு விவாதம் செய்யப்பட்டு உண்மையான மார்க்கம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இஸ்லாம் என்பது குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான். மத்ஹபு பிரிவினைகளுக்கும், தரீக்கா பிரிவினைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என எடுத்துரைக்கப்பட்டது.

இந்த ஏகத்துவப் பிரச்சாரகர்களின் பிரச்சாரத்தின் மூலம் அனைத்து அனாச்சாரங்களையும் இல்லாமல் ஆக்க முடியவில்லை என்றாலும் நாளுக்கு நாள் அதிலிருந்து விடுபடக்கூடிய சகோதரர்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களுக்குரிய எதிôப்புகளும் பலவிதங்களில் அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.

மார்க்க விஷயத்தில் மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் விழிப்புணர்வு ஏற்பட்டது. மார்க்க ரீதியாக இவர்களை எதிர்ப்பவர்கள் கூட இவர்களுடைய பொது நலச் சேவைகளையும், சமுதாயப் பிரச்சினைகளில் இவர்கள் காட்டுகின்ற தீவிரத்தையும் கவனித்து இவர்களுக்குப் பின்னால் அணி வகுக்கத் துவங்கினர். முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதி வலைகள் அனைத்தும் மக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. ஜனநாயக ரீதியாகப் போராடும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டனர். தங்களுடைய பிரச்சனைகளையும் பாதிப்புகளையும் மேல் மட்டம் வரை கொண்டு செல்லும் திறனைப் பெற்றனர்.

மார்க்க ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும். பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வரும் இவர்களுக்கு மத்தியில் இப்பொழுது புதுவிதமான ஒரு சோதனையும் ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு சில தவ்ஹீத்வாதிகள், சத்தியப் பிரச்சாரத்தையே சதிவேலை எனக் கூறும் அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

இவர்களுடைய சத்தியப் பிரச்சாரத்தின் மூலம் கவரப்பட்ட இளைஞர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதைப் பார்த்த சில போலிகள் அவர்களைத் திசை திருப்புவதற்காக இவர்களைப் போன்று தங்களையும் காட்டிக் கொண்டு இவர்களோடு கலந்தனர். தங்களுக்கென்று செல்வாக்கையும் தேடிக் கொண்டனர். இன்றைக்கு இவர்கள் தங்களுடைய சுயரூபத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று கூறுகின்ற இவர்கள் தர்ஹா வழிபாட்டுக்காரர்களை எதிர்த்தால் நியாயம் என்று கூறலாம். மத்ஹபு பிரிவினைகளையோ, பித்அத்தான அனாச்சாரங்களையோ, வரதட்சணை திருமணங்களையோ இவர்கள் எதிர்க்கவில்லை.

மாறாக தர்ஹா வழிபாடுகளையும், மத்ஹபு பிரிவினைகளையும், வரதட்சனைக் கொடுமைகளையும், பித்அத்தான அனாச்சாரங்களையும் எதிர்த்து சமுதாய ரீதியாக,குடும்ப ரீதியாக, வட்டார ரீதியாக பிரச்சினைகளை எதிர் கொள்கின்ற மக்களைப் பார்த்து "இவர்கள் சமுதாயத் துரோகிகள். சமுதாய ஒற்றுமையை சீர் குலைத்தவர்கள், பிரிவினைவாதிகள், சின்னஞ் சிறிய உப்புச் சப்பில்லாத விஷயங்களுக் கெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். முஸ்லிம்களைக் காஃபிர்கள் என்று கூறிவிட்டார்கள்” என்றெல்லாம் விமர்சனங்களைத் துவக்கியுள்ளனர்.

நாம் தர்ஹா வழிபாட்டை எதிர்ப்பதும். மவ்லூதுகளை எதிர்ப்பதும். தாயத்து,தகடுகளை எதிôப்பதும் வரதட்சனைக்கு எதிராக களமிறங்குவதும் இவர்களுக்குச் சின்னஞ் சிறிய விஷயமாகவும், சமுதாயப் பிரிவினைகளாகவும் தெரிகிறது. மறுமையை மறந்து இவ்வுலக வாழ்வை மட்டும் சிந்திக்கக் கூடிய இவர்கள் "இதனை எதிôப்பதால் சமுதாயத்திற்கு என்ன இலாபம்?” என்று கேட்கின்றனர்.

உண்மையில் இவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் நாம் இந்த இணை வைப்புக்காரியங்களை எடுத்துரைக்கும் போது நிச்சயம் பெரும்பான்மையான மக்கள் அதனை எதிர்க்கத் தான் செய்வார்கள். இதைத் தான் அனைத்து நபிமார்களின் வாழ்வும் நமக்கு உணர்த்துகிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவின் மூலம் வளரத் துடிக்கின்ற இவர்கள் அதற்கு இடையூறாக நாமும் நம்முடைய பிரச்சாரமும் இருப்பதினால் தான் இவ்வாறு கூறத் துவங்கியுள்ளனர்.

சமுதாயம் எவ்வளவு எதிர்த்தாலும், அனைவருமே இந்த சத்தியப் பிரச்சாரத்திற்கு எதிராகக் களமிறங்கினாலும், எவ்வளவு பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இந்த சத்தியப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டோம் என்பதில் உண்மையான தவ்ஹீத் வாதிகள் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த சத்தியப் பிரச்சாரத்திற்காகத் தான் அல்லாஹ் அனைத்து நபிமார்களையும் அனுப்பியுள்ளான்.

"அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்

(அல்குர்ஆன் 16:36)

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்”என்று அவர் கூறினார்

(அல் குர்ஆன் 7:59)

ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று அவர் கேட்டார்.

(அல்குர்ஆன் 7:65)

ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்று அவர் கூறினார்

(அல்குர்ஆன் 7:73)

மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 7:85)

இவ்வுலக வாழ்வு என்பது அற்பமானதாகும். மரணத்திற்குப் பிறகு நாம் சந்திக்கவிருக்கின்ற மறுமை வாழ்வு தான் நிரந்தரமானதாகும். மறுமையில் நம்மை காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவக் கலிமா தான். இன்றைய சமுதாயமோ செல்வாக்கோ படை பலமோ அங்கு நமக்குப் பயனளிக்காது. பின் வரக்கூடிய ஹதீஸ்களிலிருந்து இந்தத் தவ்ஹீதின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக என்னுடைய சமுதாயத்திலிருந்து ஒரு மனினை தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராகத் தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும்.

பிறகு அல்லாஹ் அவனிடம் இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள், உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா? என்று கேட்பான். "என்னுடைய இரட்சகனே இல்லை (அனைத்தும் நான் செய்த பாவங்கள்தான்) என்று அவன் கூறுவான். (நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன் "என் இரடசகனே ஏதுமில்லை” என்று கூறுவான்.

அப்போது அல்லாஹ் கூறுவான். அவ்வாறில்லை உனக்கு நம்மிடத்தில் ஒரு நன்மை இருக்கிறது, இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று கூறியவுடன் ஒரு சிற்றேடு வெளிப்படும் அதில் "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸுலுஹு” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்று சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.

நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார் என்று அல்லாஹ் கூறுவான். "என்னுடைய இரட்சகனே (இந்த பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன (பெரிதா?)” என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் "நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்” என்று கூறுவான். அந்த பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்த சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடிவிடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.

அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ் (ரலி)

நூல்: திர்மிதி (2563)

மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (தனக்கு இணை வைக்காத ஒரு அடியானைப் பார்த்து) "ஆதமுடைய மகனே நீ பூமி நிறைய பாவத்துடன் என்னிடம் வந்திருக்கின்றாய். (ஆனால்) நீ எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்கவில்லை. எனவே நான் உனக்கு பூமி நிறைய பாவமன்னிப்பை வழங்குகின்றேன்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூதர்(ரலி)

நூல்: அஹ்மத் 20349

இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்கு தங்கத்தைத் கொடுத்தாலும் நரக வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை பின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். "உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் "ஆம்” என்று கூறுவான். "இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணைகற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் நீ அதனைச் செய்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்)” என்று அவனுக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6538

நம்மை மறுமையில் காப்பாற்றக் கூடியது இந்த ஏகத்துவம் மட்டும் தான். நாம் அதில் தவறிழைத்து விட்டோம் என்றால் அதை விடப் பேரிழப்பு வேறோன்றுமில்லை. நாம் மக்களுக்கு செய்கின்ற சேவைகளிலேயே மிகச் சிறந்த சேவை அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பது தான்.

இன்றைக்கு இதைத் தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் பெரும் கூட்டம் இருக்கிறார்கள். இந்த சத்தியப் பிரச்சாரத்தை எடுத்துரைப்பதற்குத் தான் அனைவரும் தயங்குகிறார்கள்.

ஏனென்றால் இதனை எடுத்துரைக்கும் போது அவனுக்குப் பல விதமான சோதனைகள் பல விதங்களிலும் வந்து கொண்டிருக்கும். அப்படி சோதனைகள் வரவில்லை யென்றால் நாம் சத்தியத்தைக் கூறவில்லை என்று தான் பொருள். இதைத் தான் நாம் முதலில் குறிப்பிட்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு ஏகத்துவ வாதி இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் சோதனைகளைச் சந்தித்து தான் தீரவேண்டும். நமக்கு நிரந்தர வெற்றி மறுமையில் தான் இருக்கிறது. எனவே இப்படிப் பட்ட உண்மையை உணர்ந்து உண்மையான சத்தியக் கொள்கையைப் பின்பற்றி அதனை எடுத்துரைத்து வாழக் கூடியவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit