சாலை ஆக்கிரமிப்பும் ஷரீஅத் ஆக்கிரமிப்பு ம்

சாலை ஆக்கிரமிப்பும் ஷரீஅத் ஆக்கிரமிப்பும்

ஏகத்துவம் 2005 ஜூன்

அபூஉஸாமா

போக்குவரத்து சாலைகளிலும், பொது இடங்களிலும், அரசுக்குச் சொந்தமான இடங்களிலும் தனியார்களால் நடத்தப்பட்டிருக்கும் ஆக்கிரப்புகளைத் தயவு தாட்சண்யமின்றி அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை சமீபத்தில் ஆணை பிறப்பித்ததை யடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். வானளாவிய வணிகக் கூடங்களாக இருந்தாலும், வழிபாட்டுத் தலங்களாக இருந்தாலும் அவை ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்தால் இராட்சதக் கருவிகள் மூலம் உடைக்கப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பிறகு தான் அந்த இடங்களின் உண்மையான தோற்றம் நமக்குத் தெரிய வருகின்றது. சாலைகளில் தங்கு தடையற்ற போக்குவரத்து நடைபெறுகின்றது. ஆக்கிரமிப்பாளர்கள் ஆத்திரப் பட்டாலும் பொது மக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்கவே செய்கின்றனர்.

அரசியல் சக்திகள், ஆதிக்கபுரிகள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து வாய் திறக்க முடியவில்லை. அரசு நிர்வாகத்தின் இயந்திர சக்கரத்தில் ஆக்கிரமிப் பாளர்களின் அடுக்கு மாடிகள் நொறுங்கி விழுவதை எதிர்த்து ஏன் எழ முடியவில்லை? நிச்சயமாக எதிர்க்க முடியாது. காரணம், அரசாங்கத்திடம் உள்ள பக்காவான பதிவு ஆவணம் தான். இப்போது அது தான் பேசுகின்றது. அதை வைத்துத் தான் உயர் நீதிமன்றம் ஓர் இறுக்கு இறுக்கியது. இதை எதிர்த்து எந்தக் கொம்பனும் எதுவும் பேச முடியவில்லை.

மத சார்பின்மையை உயிர் நாடியாகக் கொண்டு செயல்படும் இந்நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிராகத் தங்கள் மதங்கள் குறுக்கே வராமல் பார்த்துக் கொள்ளும் நீதிபதிகள், நிர்வாகத் துறையினர் இன்னும் இருந்து கொண்டி ருக்கின்றார்கள் என்பதை இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மூலம் நாம் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். அதற்காக அவர்களை நாம் பாராட்டவும் கடமைப் பட்டுள்ளோம்.

இங்கே ஏகத்துவம் இந்த விவகாரத்தை எடுப்பதற்கான காரணம், உயர் நீதிமன்ற உத்தரவுப் படி, பிற மதத்தினரைப் போல் முஸ்லிம்களும் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கின்றார்கள். இப்போது முஸ்லிம்களிடம் ஏகத்துவம் கேட்கும் கேள்வி என்னவெனில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப் படி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வந்த நீங்கள், அல்லாஹ்வின் உத்தரவுப் படி ஷரீஅத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வராதது ஏன்? என்பது தான்.

அல்லாஹ்வின் உத்தரவை அவனது தூதர் (ஸல்) அவர்கள் இதோ தனது வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றார்கள்.

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக யார் உண்டாக்குகின்றானோ அவனது அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697, முஸ்லிம் 3242

அதாவது, யாரேனும் இந்த மார்க்கத்தில் ஒரு புது வணக்கத்தைப் புகுத்தினார் என்றால் அது நிச்சயமாக ஷரீஅத்தில் செய்யப்படும் ஆக்கிரமிப்பாகும். ஏனெனில் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில்,

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். (அல்குர்ஆன் 5:3)

என்று கூறுகின்றான்.

இப்படி முழுமையாக்கப்பட்ட மார்க்கம் எனும் கட்டடத்தில் யாரேனும் வணக்கம் என்ற பெயரில் ஒரு புதிய கட்டடத்தைக் கட்டினால் அது தகர்க்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அரசு வரைபடத்திற்கும், அதன் பதிவு ஆவணத்திற்கும் மாற்றமாக சாலையில் ஒரு கட்டடம் கட்டப்படுமானால் அதற்குப் பெயர் ஆக்கிரமிப்பு எனப்படும்.

அது போல் குர்ஆன், ஹதீஸ் என்ற ஆவணத்திற்கு மாற்றமாக ஷரீஅத்தில் ஒரு புது வணக்கம் ஏற்படுத்தப்படுமானால் அது பித்அத் எனப்படும். இப்படி மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட பித்அத்துக்களைப் பார்ப்போம்.

தர்ஹாக்கள்

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது, "யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1244

இது நபி (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு நான்கைந்து நாட்கள் இருக்கும் போது,மரணப் படுக்கையில் விடுத்த எச்சரிக்கையாகும்.

"தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1609

இந்த ஹதீஸ்களை, ஆரம்பத்திலேயே நம் முன்னோர்கள் அறிந்திருந்தால் தர்காக்களைக் கட்டியிருக்கக் கூடாது. ஆனால் என்ன நடந்துள்ளது? சுண்ணாம்பு,செங்கல் வைத்துத் தானே கட்டக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?நாங்கள் என்ன செய்கிறோம் பாருங்கள் என்று வானளாவ மினாராக்களை எழுப்புகின்றார்கள்.

அம்மினாராக்களில் வண்ண விளக்கு அலங்காரங்களை அள்ளித் தெளித்து ஆண்டு தோறும் கந்தூரிகள், விழாக்கள், கொடியேற்றம், சந்தனக் கூடு, இன்னிசைக் கச்சேரிகள் வாண வேடிக்கை, வெடிச் சத்தங்கள் என சங்கையான சங்கதிகள் மூலம் இந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைகளைப் பகிரங்கமாகவே புறக்கணிக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் இறுதி நாட்களின் போது இட்ட எச்சரிக்கை எந்த அளவுக்குத் தூக்கி எறியப்பட்டுள்ளது என்று பாருங்கள்.

அரசாங்க சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்தால் அது காங்கிரீட் கட்டடமாக இருந்தாலும் அதைத் தரை மட்டமாக்க அரசு நிர்வாகம் தயங்காதோ அதே போல் ஷரீஅத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இந்த தர்காக்களை, கப்ருகளை தகர்த்தெறிந்தால் என்ன? சாலை ஆக்கிரமிப்பை தானே முன் வந்து சரி செய்யும் முஸ்லிம்கள், இந்த ஷரீஅத் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன் வருவதில்லை.

சப்தம் போட்டு திக்ரு செய்தல்

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும்,அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

(அல்குர்ஆன் 7:205)

இறைவனை எவ்வாறு நினைவு கூர வேண்டும் என்ற ஒழுங்கு இங்கே கூறப்படுகிறது. முத-லில், பணிவுடனும், அச்சத்துடனும் இறைவனை நினைவு கூர வேண்டும். இரண்டாவது, நாவால் மட்டும் இறைவனின் பெயரைக் கூறாமல் உள்ளத்திலும் நினைவு கூர வேண்டும். மூன்றாவதாக, உரத்த சப்தமின்றி நினைவு கூர வேண்டும்.

இன்றைக்கு தமிழக முஸ்-லிம்களில் பலர் ராத்திபு என்ற பெயரிலும், ஹல்கா என்ற பெயரிலும் பெரும் கூச்சலுடனும், ஆட்டம், பாட்டத்துடனும் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக நினைத்துக் கொண்டு பாவத்தைச் சுமந்து வருகின்றனர்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறும் போது, லா இலாஹ இல்லல்லாஹ் என்றும், அல்லாஹு அக்பர் என்று கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ, அல்லது தூரத்தில் இருப்பவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனே இருக்கிறான். அவன் செவியேற்பவன். அருகிலிருப்பவன். அவனது பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸல் அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 4202

நபி (ஸல்) அவர்கள் சாதாரணமாக சப்தமிட்டு திக்ரு செய்வதைத் தானே கண்டித்தார்கள், நாங்கள் ஒலி பெருக்கி வைத்து, சப்தம் போடுகின்றோம் என்று கூச்சல் போடுவதைப் பார்க்கிறோம்.

மவ்லிதுகள்

"கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ர-) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி 3445

மேலும், என் மீது யார் வேண்டுமென்றே பொய் கூறுகின்றாரோ அவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

(புகாரி 1291)

ஆனால் நபி (ஸல்) அவர்கள் எதனை எச்சரிக்கை செய்தார்களோ அத்தகைய வழிகேட்டில் சமுதாயம் வீழ்ந்து விட்டது. அத்தகைய வழிகேடுகளில் முதன்மையானது தான் இன்றைய கால கட்டத்தில் பயபக்தியோடு இஸ்லாமிய சமுதாய மக்களால் ஓதப்படுகின்ற மவ்லூது என்ற இணைவைப்பு கவிதை வரிகள் ஆகும். இந்த மவ்லிதுகளில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் கவிதைகளும், நபி (ஸல்) அவர்கள் மீது பொய் கூறும் செய்திகளும் ஏராளமாக மண்டிக் கிடக்கின்றன. இவையும் ஷரீஅத்தில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளாகும்.

பாங்குக்கு முன் ஸலவாத் கூறுதல்

முஅத்தினின் அதானை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள். பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் 577

நபி (ஸல்) அவர்கள் பாங்குக்குப் பின் ஸலவாத் சொல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்று பாங்குக்கு முன் ஸலவாத் ஓதுவதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் கட்டளை அப்பட்டமாக மீறப் படுகின்றது.

ஜும்ஆவில் இரண்டு பாங்கு கூறுதல்

ஜும்ஆ நாளில் இரண்டு பாங்கு சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் மிம்பர் மீது ஏறும் போது சொல்லப்படும் ஒரு பாங்கு தான் நடைமுறையில் இருந்தது.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் காலத்திலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் ஏறி அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் மூன்றாவது அழைப்பு அதிகமானது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரி 861

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜும்ஆவில் ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இன்று இன்னொரு பாங்கு ஜும்ஆவில் ஆக்கிரமித்து விட்டது.

தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸா தொழுகை

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அவர் இறந்து விட்டார்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். "நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்” என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் இறக்கவில்லை” என்று சொன்னார்கள். பிறகு அம்மனிதர், (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அவர் இறந்து விட்டார்” என்று தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், "அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், "அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்” என்றார். "நீ பார்த்தாயா?” என்று நபி (ஸல்) கேட்க, அவர் ஆம் என்றார். "அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்க மாட்டேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 3185

நபி (ஸல்) அவர்களின் இந்த வழிமுறைக்கு மாற்றமாக, மத்ஹபுகள் என்ற பெயரால் தற்கொலை செய்து கொண்டவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படுகின்றது. இது மார்க்கத்தில் நாம் ஏற்படுத்திக் கொண்ட ஆக்கிரமிப்பு அல்லவா?

வரதட்சணை

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! (அல்குர்ஆன்4:4)

இந்த வசனம் பெண்களுக்கு மஹர் கொடுத்து மணம் முடிக்கச் சொல்கின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக லட்சக்கணக்கில் தொகையாகவும், நகையாகவும் பெண்ணிடமிருந்து வாங்கி மணம் முடிக்கும் அவல நிலை உள்ளது.

மார்க்கத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் சிலவற்றை மட்டுமே இங்கே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

மீலாது விழா

தொழுகைக்குப் பின் கூட்டு துஆ

ஷஃபான் பிறை 15, ரஜப் பிறை 27 போன்ற இரவுகளில் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத தொழுகைகள், அன்றைய பகலில் நோன்பு நோற்றல்

இறந்தவர்களுக்கு மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பது ஃபாத்திஹா, வருட ஃபாத்திஹா ஓதுதல்

இன்னும் எண்ணற்ற காரியங்களை, அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத செயல்களை வணக்கம் என்ற பெயரில் செய்து வருகிறோம். இவை அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். மார்க்கத்தில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் ஆகும்.

இந்த உலகத்தில் ஆக்கிரமிப்புகள் செய்தால் அவை இடித்துத் தள்ளப்படுவதுடன் முடிந்து விடுகின்றது. ஆனால் மார்க்கத்தில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகள் வெறுமனே அகற்றப்படுவதுடன் முடிந்து விடுவதில்லை. இந்த ஆக்கிரமிப்பைச் செய்தவர்களுக்கு, பித்அத் செய்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டணை நரகமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸயீ 1560

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, "நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்” என்று கூறிவிட்டு, "முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்” என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு மறுமை நாளில் உடையணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.

அப்போது நான், "என் இறைவா, என் தோழர்கள்” என்று சொல்வேன். அதற்கு, "இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும். அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், "நான் அவர்களிடையே இருந்த வரை நான் அவர்களைக் கண்காணிப் பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்” என்று பதிலளிப்பேன். அதற்கு, "இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந் தார்கள்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4740, 6524

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்காக மக்கள் அலை மோதும் மறுமை நாளில், இந்த ஷரீஅத் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்காமல் அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

எனவே அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையையும் மட்டுமே பின்பற்றி மறுமையில் வெற்றியடைவோம்.