தான் செய்யாத ஒன்றை மற்றவர்களுக்கு அறிவுரையாக கூறலாமா?

தான் செய்யாத ஒன்றை மற்றவர்களுக்கு அறிவுரையாக கூறலாமா?

? ஒருவர் ஓரளவு குர்ஆன் ஹதீஸ்களைத் தெரிந்து வைத்துள்ளார். அவர் மற்றவர்களுக்கும் இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றார். ஆனால் அவர் அவற்றை தனது நடைமுறையில் செயல்படுத்தவில்லை. தான் செய்யாவிட்டாலும் அடுத்தவருக்கு எத்தி வைக்கலாம் என்று வாதாடுகின்றார். இது சரியா?

மண்டபம் எஸ். முஹம்மது ஷாஃபி, அபுதாபி

பதில் :

! மக்களுக்குச் சொல்வதை தான் செய்யாமல் இருப்பது மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட செயலாகும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.

திருக்குர்ஆன் 61:2,3

இத்தகையவர்களுக்கு மறுமையில் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

صحيح البخاري

3267 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قِيلَ لِأُسَامَةَ لَوْ أَتَيْتَ فُلاَنًا فَكَلَّمْتَهُ، قَالَ: إِنَّكُمْ لَتُرَوْنَ أَنِّي لاَ أُكَلِّمُهُ إِلَّا أُسْمِعُكُمْ، إِنِّي أُكَلِّمُهُ فِي السِّرِّ دُونَ أَنْ أَفْتَحَ بَابًا لاَ أَكُونُ أَوَّلَ مَنْ فَتَحَهُ، وَلاَ أَقُولُ لِرَجُلٍ أَنْ كَانَ عَلَيَّ أَمِيرًا إِنَّهُ خَيْرُ النَّاسِ، بَعْدَ شَيْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالُوا: وَمَا سَمِعْتَهُ يَقُولُ: قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: " يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ القِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ، فَتَنْدَلِقُ أَقْتَابُهُ فِي النَّارِ، فَيَدُورُ كَمَا يَدُورُ الحِمَارُ بِرَحَاهُ، فَيَجْتَمِعُ أَهْلُ النَّارِ عَلَيْهِ فَيَقُولُونَ: أَيْ فُلاَنُ مَا شَأْنُكَ؟ أَلَيْسَ كُنْتَ تَأْمُرُنَا بِالْمَعْرُوفِ وَتَنْهَانَا عَنِ المُنْكَرِ؟ قَالَ: كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ، وَأَنْهَاكُمْ عَنِ المُنْكَرِ وَآتِيهِ

மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவது போன்று அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலகத்தில்) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர், நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன். ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை செய்ய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன். ஆனால் அந்தத் தீமையை நானே செய்து வந்தேன் என்று கூறுவார்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என்று உஸாமா பின் ஸைத் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி 3267

ஒருவரிடம் சில தீய செயல்கள் உள்ளன. அவர் அதைப் பற்றி பிறருக்குச் சொல்லாமல் தான் விலகி இருக்கும் தீமைகளைத் தடுத்து பிரச்சாரம் செய்வதைத் தடுக்க முடியாது. அது போல் ஒருவர் சில சுன்னத்துகளைச் செய்வதில்லை. அதைச் செய்யுங்கள் என்று அவர் மக்களிடம் போதிப்பதில்லை. ஆனால் அவர் கடைப்பிடிக்கும்  நன்மைகளை மக்களுக்கு அவர் சொல்வதற்குத் தடை இல்லை.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் இருந்தே இதை அறிய முடியும்.

எந்த மனிதனாக இருந்தாலும் அவனிடம் சில தீய செய்ல்கள் இல்லாமல் இருக்காது. எந்த மனிதராக இருந்தாலும் அவரிடம் சில ந₹₹ற்செயல்கள் இல்லாமல் இருக்கும்.

ஒருவர் சில தவறுகளைச் செய்கிறார் என்பதற்காக மற்றவர்களுக்குச் சொல்லும் தகுதியை இழக்கிறார் என்றால் உலகில் யாரும் எக்காலத்திலும் பிரச்சாரம் செய்ய முடியாது.

எந்த தவறைச் செய்கிறாரோ அதைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் தகுதிதான் அவருக்கு இல்லை. தானே கடைப்பிடித்து ஒழுகும் விஷயங்களை எடுத்துச் சொல்ல அவருக்கு தகுதி உள்ளது என்பதை எல்லா மனிதனும் தவறு செய்பவனே என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் இருந்து அறியலாம்.

23.12.2014. 20:17 PM

Leave a Reply