நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி?

றைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர்.  எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.

எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதைத் திருக்குர்ஆனும் சொல்லிக்காட்டுகிறது.

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்? என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

திருக்குர்ஆன் 17:94

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 23:33

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது?  இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?''  என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள் என்று (அவ்வூரார்) கூறினர்.

திருக்குர்ஆன் 36:15

இவ்வசனங்களிலும், 21:3, 23:47, 26:154, 26:186 ஆகிய வசனங்களிலும் இதை அல்லாஹ் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.

மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.

மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத்தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத்தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர்கள் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும்போது அவர் இறைவனின் தூதர்தான் என்று நம்புவதற்கு நன்மக்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.

தாங்கள் இறைத்தூதர்கள் தான் என்பதை நிரூபிக்க நபிமார்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான் என்பதையும், அற்புதம் வழங்கப்படாமல் எந்தத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதையும் திருக்குர்ஆன் தெளிவாக கூறுகிறது.

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழிகாட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏகஇறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களைப் புறக்கணித்தான். அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 64:6

இக்கருத்தை 3:184, 7:101, 9:70, 10:13, 10:74, 35:25, 40:22, 40:50, 57:25 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

மனிதர்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அனுப்பப்படும் இறைத்தூதர்களை, இறைத்தூதர்கள் தான் என்று நம்புவதற்கான ஆதாரமாகவே அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான்.

அப்படியானால் அல்லாஹ்வைப் போல் செயல்படும் ஆற்றல் இறைத்தூதர்களுக்கும் இருக்கிறதே என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம். அந்தச் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் தான் இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான்.

அது பற்றியும் விரிவாக அறிந்து கொள்வோம்.

நபிமார்கள் தாம் நினைத்த அற்புதங்களைச் செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் இறைவனைப் போல் செயல்படுகிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் எந்த அற்புதம் அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டதோ அந்த அற்புதங்களை மட்டும் தான் அவர்கள் நிகழ்த்த முடியும். மற்ற விஷயங்களில் மற்ற மனிதர்களைப் போல் தான் அவர்கள் செயல்பட முடியும்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களைக் கூட அவர்கள் நினைத்த போதெல்லாம் செய்துகாட்டும் ஆற்றல் வழங்கப்பட்டிருந்தால்  இறைவனைப் போல் செயல்படுகிறார்கள் என்று கருத முடியும். அப்படி அல்லாஹ் அதிகாரம் வழங்கவில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதத்தை ஒவ்வொரு தடவை செய்யும் போதும் அல்லாஹ்வின் கட்டளை வந்தால் தான் செய்ய முடியும். அவர்கள் நினைத்த நேரத்திலெல்லாம் அந்த அற்புதங்களைச் செய்ய முடியாது.

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது என்பதை திருக்குர்ஆன் தெளிவான வார்த்தைகளால் விளக்கியுள்ளது.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்குர்ஆன் 13:38

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.

திருக்குர்ஆன் 40:78

'நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 14:11

அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எதிரிகள் கோரினார்கள். அப்போது அல்லாஹ் அளித்த பதிலைப் பாருங்கள்!

'இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்' என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டுதுண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) 'என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:90-93

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.

ஆனாலும் இந்த அதிகாரம் என்னிடம் இல்லை என்று சொல்லுமாறும், நீங்கள் கோரியதைச் செய்து காட்ட நான் கடவுள் அல்ல. மனிதன் தான் என்று சொல்லுமாறும் நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும்தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது என்பதை இவ்வசனங்களில் இருந்து அறிந்து கொள்கிறோம்.

அற்புதங்களை நபிமார்கள் செய்யவில்லை. நபிமார்கள் மூலமாக அல்லாஹ் செய்தான் என்பதை இன்னும் உறுதியாக அறிந்து கொள்ள மூஸா நபி மூலம் வெளிப்பட்ட சில அற்புதங்களைக் கவனிக்கலாம்.

மூஸா நபியைத் தூதராக நியமித்து அவர்களிடம் அல்லாஹ் உரையாடி ஒரு அற்புதத்தை வழங்கினான். உம் கையில் இருப்பது என்ன என்று கேட்டு  வெறும் கைத்தடி தான் என்று மூஸா நபியிடம் அல்லாஹ் பதிலைப் பெறுகிறான். அதனைக் கீழே போடு என்று அல்லாஹ் சொன்னான். உடன் அது பாம்பாக மாறியது. இந்த அற்புதத்தை அல்லாஹ்வே நிகழ்த்திக் காண்பித்தான். அது பாம்பாக மாறும் என்பது மூஸா நபிக்குத் தெரியாது. 20:17-21 வசனங்களில் இருந்து இதை அறியலாம்.

பின்னர் பிர்அவ்னிடம் சென்று மூஸா நபி அழைப்பு கொடுத்து அதே அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்து காட்டினார்கள். இதைக் கண்ட பிர்அவ்ன் இது சூனியமாகும். நமது நாட்டில் உள்ள சூனியக்காரர்களுடன் போட்டி ஏற்படுத்தி உம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விட்டான்.

சூனியக்காரர்களும் வந்தனர். அவர்கள் தமது சூனியங்களைச் செய்தனர். மூஸா நபியிடம் கைத்தடி இருந்தும் அவர்கள் அதைப் போட்டு எதிரிகளை முறியடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். ஏற்கனவே பாம்பாக மாற்றி அல்லாஹ் காண்பித்திருந்தாலும் மீண்டும் அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த பின்பே அதனை மூஸா நபி செய்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் கைத்தடியைப் போட்டதால் தான் சூனியக்காரர்களின் வித்தையை அது விழுங்கியது.

"மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று அவர்கள் கேட்டனர்.  "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்டபோது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை357 அவர்கள் கொண்டு வந்தனர்.  "உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

திருக்குர் ஆன் 7:115, 116, 117

"மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?'' என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.  "இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.  மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.  "அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்'' என்று நாம் கூறினோம்.  "உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி.

திருக்குர் ஆன் 20:65-69

மூஸா நபியின் கையில் கைத்தடி கையில் இருந்தும், போட வேண்டிய நேரம் வந்தும் அவர்கள் தாமாகக் கைத்தடியைப் போடவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குப் பின்னரே போட்டார்கள்.

அதுபோல் மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

மூஸா நபியை எதிரிகள் விரட்டிக் கொண்டு வரும்போது எதிரில் கடல் குறுக்கிடுகிறது. பிர்அவ்னுடைய படையினருக்கும், கடலுக்கும் இடையே அவர்கள் மாட்டிக் கொண்டனர். மக்கள் முறையிட்ட போது தமது கைத்தடியால் அடித்து கடலைப் பிளக்கவில்லை. அல்லாஹ் எனக்கு வழிகாட்டுவான் என்று கூறி அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று கட்டளை வந்த பின்னர் தான் கைத்தடியால் கடலில் அடித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை காரணமாகத் தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது.

இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டபோது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். "அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்'' என்று அவர் கூறினார். "உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

திருக்குர்ஆன் 20:61, 62, 63

இது போல் மூஸா நபி வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்!

மூஸா நபியின் சமுதாயத்துக்குத் தாகம் ஏற்பட்ட போது மூஸா நபியிடம் அவர்கள் முறையிட்டார்கள். கையில் கைத்தடி இருந்தும் தேவையான நேரத்தில் அடித்து நீரூற்றை அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக மக்களின் தாகத்தை அல்லாஹ்விடம் முறையிட்டு அல்லாஹ்விடம் தண்ணீரைக் கேட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பின்னர் தான் கைத்தடியைப் பாறையில் அடித்தார்கள். அதில் இருந்து நீரூற்றுக்கள் உருவாயின.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டியபோது "உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!" என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன.

திருக்குர்ஆன் 2:60

ஈஸா நபியவர்கள் இறந்தவர்களை உயிப்பித்தல் உள்ளிட்ட பல அற்புதங்களைச் செய்தார்கள். இது பற்றி அல்லாஹ் கூறும்போது எனது அனுமதியுடன் தான் இது நடந்தது என்றும், ஈஸா நபியால் நடக்கவில்லை என்றும் சொல்லிக் காட்டுகிறான்.

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் அனுமதியின்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் அனுமதியின்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது'' (என்றார்)

திருக்குர்ஆன் 3:49

"மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் அனுமதியின்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் அனுமதியின்படி அது பறவையாக மாறியதையும், என் அனுமதியின்படி பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் அனுமதியின்படி (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி வேறில்லை'' என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!'' என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 5:110

நபிமார்களுக்கு எந்த அற்புதம் வழங்கப்பட்டதோ அந்த அற்புதத்தைக் கூட ஒவ்வொரு தடவை செய்யும் போதும் அல்லாஹ் அனுமதிக்க வேண்டும். இப்படித்தான் அல்லாஹ் அற்புதத்தை நபிமார்களுக்கு வழங்கினான். அற்புதம் வழங்கப்பட்ட நபிமார்களும் தமக்கு வழங்கப்பட்ட அற்புதத்தை இப்படித்தான் புரிந்து கொண்டனர்.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும் போது நபிமார்கள் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.

நபிமார்களுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டதால் அவர்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி வந்துவிடாது; எல்லா மனிதர்களையும் போல் அவர்களும் இன்ப துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதைத் தடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கவில்லை.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit