ஏகத்துவம் 2005 டிசம்பர்

பிகார் தேர்தல்:பி.ஜே.பி.க்குப்பிராண வாயு தந்த பயங்கரவாதம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி. மரணப்படுக்கையில் உயிர் பிரியும் நிலையில்கிடந்தது. இந்நிலையில்அதற்கு ஒரு பிராண வாயு கிடைத்து பிழைத்துக் கொண்டது. அந்தப் பிராண வாயு டெல்லி குண்டு வெடிப்புக்குப் பின்னால்அதற்குக் கிடைத்தது.தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்குமுன்நடந்த அந்தச் சம்பவத்தில் 60 பேர் இறந்து போயினர். 210 பேர்காயம் அடைந்தனர்.

தீபாவளி மற்றும் நோன்புப் பெருநாள் போன்ற மிகமுக்கியமான பண்டிகைகளைக் கருத்தில் கொண்டுநடத்தப்பட்ட இந்தக் குண்டு வெடிப்பில் வணிகத் தலத்திற்குவந்த பெண்கள், குழந்தைகள் பலியான காட்சி மக்களின்நெஞ்சைப் பிளப்பதாக அமைந்தது.

இதைச் செய்தது யார்? எந்த மதத்தினர் என்று பாராமல்அனைவரும் இந்தக் கோரத் தாக்குதலை வன்மை யாகக்கண்டித்தனர். ஏகத்துவமும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தது.

(இந்தக் கொடுமையைச் செய்தது முஸ்லிம்கள் தான் எனஎப்படிச் சொல்ல முடியும்? என்ற கேள்வி எழலாம். இந்தக்குண்டு வெடிப்பு உட்பட அன்றாடம் காஷ்மீரில் நடைபெறும்தற்கொலைத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் பெயர் தாங்கிகள்பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்)

ஒரு பண்டிகை நாளை முன்னிட்டு நடந்த இந்தப் பயங்கரவாதம், இஸ்லாத்தின் மீது ஒரு வெறுப்பான பார்வை வரக் காரணமாகஅமைந்து விட்டது. அதன் எதிரொலி தான் பீகாரில் பி.ஜே.பி. அடைந்த வெற்றியாகும்.

ஜிஹாத் என்ற பெயரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துதல், ஆள் கடத்திக் கொலை செய்தல் போன்றவற்றில்ஈடுபடுவோர்ஒரு போதும் நன்மையானகாரியத்தில் ஈடுபட்டவராக மாட்டார். அதனால் ஏற்படும் விளைவுகளிலிருந்து அவர் தப்பி விடமுடியாது. அந்த விளைவுகளுக்கு அவரே பொறுப் பேற்றாகவேண்டும்.

இது போன்ற காரியங்களால் ஏற் படுகின்ற விளைவுகளைப்பார்ப்போம்.

இஸ்லாத்தின் மீது ஏற்படும்வெறுப்பு

கேரளாவில் மணியப்பன் குட்டி என்பவரின் குடும்பமும் அவர்வாழ்ந்தகிராமமும் அவருடைய மரணத்தால் சோகத்தில்மூழ்கியது. இவர்களிடத்தில் யாராவது போய் இஸ்லாத்தைப்பற்றி, அது ஒரு கருணை மார்க்கம் என்று எடுத்துச் சொல்லமுடியுமா?

மறுமையில் மக்கள் நரகத்தில் போய்ச் சேர்ந்து விடக் கூடாது. அவர்களை நரகிலிருந்து காக்க வேண்டும். இதைச் சொல்லவேநபிமார் கள்வந்தனர். அவர்களுக்கு வேதம் அருளப்பட்டது. இந்த இலட்சியத்தை மணியப்பனின் ஒரு தலைமுறை அல்ல, ஏழுதலைமுறையினர் ஏற்க முடியாத அளவுக்கு இஸ்லாத்தின்மீது ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

கிறித்தவ மதத்திற்கு ஆள்சேர்த்தல்

கிறித்தவ மதம் தன்னை அன்பு மார்க்கம், காருண்ய மார்க்கம்என்று கூறிக் கொண்டிருக்கிறது. இஸ்லாம், கிறித்தவம் ஆகியஇவ்விரண்டில் அமைதியை விரும்பும் ஒருவன்கிறித்தவத்தையே தேர்வு செய்யும் அளவுக்கு அப்பாவிகள் மீதுமிருகத்தனமான தாக்குதல் நடந்து கொண்டிருக்கின்றது.

பாதிப்புக்குள்ளாகும்சிறுபான்மைசமுதாயம்

இத்தகைய குண்டு வெடிப்புகள் நடந்து முடிந்ததும்பெரும்பான்மை சமுதாயத்துடன் கலந்து வாழும் சிறுபான்மைமுஸ்லிம்கள், பெரும்பான்மையினரின் எல்லையற்றவெறுப்புக்கும், கோபத்திற்கும் உள்ளாகும் நிலை. அவர்களுடன்கொடுக்கல் வாங்கல், விவசாயம், தொழில் அத்தனையிலும்முஸ்லிம்கள் தனிமைப் படுத்தப்படுகின்றனர்.

இதற்குச் சிறந்த உதாரணம் கோவை மற்றும் மேலப்பாளையம்போன்ற பகுதிகள். வணிகத்தில் முஸ்லிம்கள் கொடி கட்டிப்பறந்த கோவையில் குண்டு வெடிப்புக்குப் பிறகு முஸ்லிம்கள்50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டனர். சுற்று வட்டாரகிராமங்களைச் சேர்ந்த முஸ்லிமல்லாத வர்களின் வணிகச்சந்தையாகத் திகழ்ந்த மேலப்பாளையத்தில் சில சமூக விரோதச்செயல்கள் நடைபெற்ற பிறகு ஒட்டு மொத்த வியாபாரமும்படுத்து விட்டது.

பாதிக்கப்படும் பிரச்சாரப் பணி

இஸ்லாமிய ஆட்சி உள்ள நாடுகளை விட இந்தியாவில்முஸ்லிம் களுக்குபேச்சு சுதந்திரமும், பிரச்சாரஉரிமையும்உள்ளது. முஸ்லிம்களிடமே இன்று இஸ்லாத்தைச் சொல்லவேண்டிய நிலையில் உள்ள நாம் அந்தப் பிரச்சாரப் பணியைமுழுமையாகச் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

கோவையில் குண்டு வெடிப்பு நடந்தபிறகு முஸ்லிம்அமைப்புகள் பொதுக் கூட்டம் நடத்த முடியாத நிலைஏற்பட்டது. சமீபத்தில் லண்டனில் நடந்த பாதாள ரயில் குண்டுவெடிப்புக்குப் பிறகு முஸ்லிம்கள் சந்தித்த சோதனைகள்சொல்லி மாளாது. அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறுநாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள் திருப்பிஅனுப்பப்பட்டனர்.

டில்லியில் குண்டு வெடிப்பு நடந்து விட்டதா? அப்படியானால்பீகாரில் பி.ஜே.பி. கூட்டணி ஆட்சிக்குவந்து விடும் என்றுபாமரனும் கணக்குப் போடும் அளவுக்கு அதன் பாதகம் பரந்துவிரிந்த ஒன்றாகி விட்டது. பீகாரில் நக்ஸலைட்டுகளால்நடத்தப் பட்ட சிறை தகர்ப்பு நிகழ்வும் இந்தத் தேர்தல் முடிவைநிர்ணயம் செய்யும் ஒரு கூடுதல் காரணியாக அமைந்தது.

கோவை குண்டு வெடிப்பு, தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாமுழுவதும் தேர்தலின் போக்கையே மாற்றி அமைத்தது. அதுதான் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக் கட்டில் அமைப்பதற்குஅஸ்திவாரம் போட்டுக் கொடுத்தது என்ற உண்மையையாராலும் மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை வேரறுத்ததால்சொந்த நாட்டுமக்களிடமே வெறுப்புக்குள்ளாகி 2004ல் நடந்தஅதிபர் தேர்தலில் தோல்வியை எதிர் நோக்கியிருந்த ஜார்ஜ் புஷ், தனக்கு எதிராகக் களத்தில் நின்ற ஜான் கெர்ரியை விட ஒருசதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.இதற்கு என்ன காரணம் தெரியுமா? தேர்தலுக்குமுதல் நாள் வெளியான ஒரு ஆடியோ கேஸட் தான். உலகவர்த்தக மையத்தைத் தாக்கியது போன்ற பெரிய தாக்குதல்ஒன்றை மீண்டும் நடத்தப் போவதாக உஸாமா பின் லாதின்மிரட்டல் விடுப்பதாக அந்தக் கேஸட் மிரட்டியது. அவ்வளவுதான்! தேர்தலின் போக்கே தலைகீழாக மாறி கொடுங்கோலன்புஷ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற அது காரணமாகஅமைந்தது. பின் லேடனுக்கு நன்றி என்றதலைப்பில்ஊடகங்கள் இதைச் செய்தியாக வெளியிட்டன. உலகெங்கும்உள்ள தேர்தல் முடிவுகள் முஸ்லிம் களுக்கு எதிராகஅமைவதற்கு இந்தத் தாக்குதல்கள் காரணமாக உள்ளனஎன்பதற்கு இது நிதர்சனமான எடுத்துக்காட்டு.

எதிர்த் தாக்குதலில் பலியாகும்அப்பாவிகள்

உலகில் எந்தப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றாலும் அந்தப்பகுதியில் வசிக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள், பெரும்பான்மை சமுதாயத்திலுள்ள விஷமிகளால் கடும்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற இந்து மதவெறியர்கள் ஏற்கனவே முஸ்லிம்களைக் கருவறுப்பதற்குக்காரணம் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறுதாக்குதல் நடந்தாலும் அதைச் சாக்காக வைத்துக் கொண்டுசகட்டு மேனிக்கு முஸ்லிம்கள் மீது தாக்குதல்நடத்துகின்றார்கள்.

இதில் இந்தப் போலி ஜிஹாத்வாதிகள் யாரும் பாதிப்பதுகிடையாது. பாதிக்கப்படுவது எல்லாமே அப்பாவி முஸ்லிம்கள். குறிப்பாக பெண்கள், குழந்தைகள். மும்பை கலவரம், குஜராத்படுகொலைகள் எல்லாமே எதிர் விளைவால் ஏற்பட்டவை தான்.

இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் நடைபெற்றதாக்குதலுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் கொடும் தாக்குதலுக்குஉள்ளாயினர்.

அமெரிக்காவிலும், லண்டனிலும் நடந்த தாக்குதல்களுக்குப்பிறகு அங்குள்ள முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள்ஏராளம். அடித்து நொறுக்கப்பட்ட பள்ளிவாசல்கள்கணக்கிலடங்காது.

அநாதைகள் வயிற்றில்அடித்தல்

உலகமெங்கும் உள்ள ஏழை நாடுகளில்வசிக்கும்முஸ்லிம்களுக்கு, குறிப்பாக அனாதைகளுக்கு அரபகமுஸ்லிம்கள் மாதாந்திர, வருடாந்திர நிதி உதவிகளைச் செய்துவந்தனர். அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டபிறகு இந்தப் பயங்கர வாதத்திற்குப் பணம் எப்படிச் செல்கிறது? என்ற தனது ஆந்தைப் பார்வையை அமெரிக்க அரசுசெலுத்தியது. அதன் கோணப் பார்வையில் தட்டுப்பட்டது இந்தஅனாதைகளுக்கும், ஏழைகளுக் கும் வளைகுடா முஸ்லிம்கள்அளிக்கும் அற்பக் காசுகள் தான். (அரபக மக்களின் குடும்பச்செலவுடன் ஒப்பிடும் போது அவை அற்பக் காசுகள் தான்)

அவற்றை நிறுத்து! என்று வளைகுடாநாடுகளுக்கு அமெரிக்காஉத்தரவு போட்டு, அனாதைகள் மற்றும் ஆதர வற்றவர்களின்வயிற்றில் மண்ணள்ளிப் போட்டது. சோமாலியா என்றாலேஅங்குள்ள எலும்புக் குழந்தைகள் தான் நம் கண் முன்தோன்றும். அந்த நாட்டில் பட்டினியால் வாடும் மக்களுக்குஉதவிக் கொண்டிருந்த இஸ்லாமிய அமைப்புகளின்சொத்துக்களும் முடக்கப்பட்டன; முடமாக்கப்பட்டன.

இந்த ஏழை, எளிய மக்களுக்குப் போய்ச் சேர்ந்த எச்சில்காசுகளும் தற்கொலைத் தாக்குதல்களால் தடுத்துநிறுத்தப்பட்டு விட்டன. ஜிஹாதின் நோக்கமே இவர்களைக்காப்பதற்காகத் தான். ஆனால் அவர்களின் வாழ்க்கையைக் இதுஅழிக்கவல்லவா செய்கின்றது?

இது மட்டுமா? உலகின் பல்வேறு பகுதிகளில் கல்விநிறுவனங்கள், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் வளைகுடாமுஸ்லிம்கள் பண உதவி செய்து வந்தனர். அந்த வாசலையும்அமெரிக்கா அடைத்து விட்டது.

பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம்

இந்தத் தவறான ஜிஹாத்வாதிகள் கையாளும் யுக்தியில் ஒன்றுமறைமுகத் தாக்குதல். இவர்கள் தாக்கி விட்டுப் போய்விடுவார்கள். காவல் துறை அல்லது ராணுவத்தினர், அப்பாவிகள் யாரையாவது இதற்குப்பலிகடாவாக்கிவிடுகின்றனர். ஒவ்வொரு தடவை தாக்குதல் நடத்தும் போதும், நடத்தியவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். அப்பாவிகள் தான்பலிகடாவாக்கப் படுகின்றார்கள். தாக்குதல் நடத்தியவர்களில்யாரையாவது காவல் துறை அடையாளம் கண்டு விடடால், அவர்களுடைய குடும்பத்தை வதை செய்ய ஆரம்பித்துவிடுகின்றது. தொழில் நடத்த விடாமல்,வியாபாரம் செய்யவிடாமல், பாஸ்போர்ட்டை முடக்கி வெளிநாடு செல்லவிடாமல், இன்னும் ஒரு படி தாண்டி அவர்களுடைய குடும்பப்பெண்களைஅழைத்துச் சென்று கொடுமைப் படுத்துதல் போன்றஅத்துமீறல் எல்லாம் எதனால் ஏற்படுகின்றது? இந்தமறைமுகத் தாக்குதலால் தான்.

எனவே இந்தத் தவறான ஜிஹாத் எனும்வினையில்இறங்குபவர்கள் இந்த விளைவுகளைச் சிந்தித்தாக வேண்டும். ஆனால் இவர்கள் இதையெல்லாம் கொஞ்சம் கூடசிந்திப்பதில்லை. அவர்களுடைய பார்வை ஒரு பக்கப் பார்வைதான். அவர்களுடைய குறி ஒன்று தான். அது கொல்வது மட்டும்தான்.

இஸ்லாமிய மார்க்கம் போரில் கூட குறியை மட்டும் பார்க்கச்சொல்ல வில்லை. நெறியையும் பார்க்கச் சொல்கின்றது. அந்தநெறியைப் பார்க்காததால் தான் இத்தகைய பாதகவிளைவுகளை இவர்கள் ஏற்படுத்தி விடுகின்றார்கள். இந்த எதிர்விளைவுகளுக்குத் தாங்கள் பொறுப்பு கிடையாது என்றுநினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நிச்சயமாக இந்தஎதிர் விளைவுகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம்இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.

மணியப்பன் குட்டி படுகொலை:தாலிபான்களின் தற்கொலைமுடிவுகள்

தினமணி நாளிதழ் படத்துடன் ஒரு செய்தியைவெளியிட்டிருந்தது. அதைப்பார்த்தவுடன் உருகாத மனமும்உருகி விடும். கரையாத உள்ளமும் கரைந்து விடும். கண்கள்கண்ணீரை வடிக்கும். பார்ப்பவரின் நெஞ்சம் பதை பதைக்கும், பரிதவிக்கும்.

கணவனைப் பறி கொடுத்த மனைவி; அந்தத் தாய்க்கு அருகில்இரண்டு வயதுக் குழந்தை! அந்தப் படத்தின் கீழே உள்ள செய்திஇதோ:

தன்னையே தேற்றிக் கொள்ள முடியாதசோகத்தில், "அப்பாஎப்போம்மா வருவார்?” என்று கேட்கும் ஒன்றும் அறியாதகுழந்தைக்கு என்ன பதில் கூறித் தேற்றுவது எனத் தெரியாமல்திகைத்துநிற்கும் தாய் பிந்து! தனது 2 வயது மகன்ஆஷயேவுடன், கேரளத்தில்உள்ள சிகோல் கிராமத்திலுள்ளவீட்டில் பித்துப் பிடித்துப் போய் அமர்ந்திருக்கின்றார். அவரதுகணவர் மணியப்பன் குட்டியைத் தான் ஆப்கானிஸ்தானில்தாலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று படுகொலைசெய்து விட்டனர்.

பார்ப்பவர்களிடம் அந்தப் படமே ஒரு கேள்வியை முன்வைக்கின்றது. போர் செய்வதற்காக அல்ல! பிழைப்புக்காகச்சென்ற மணியப்பனைத் தாலிபான்கள் கடத்திச் சென்று கொலைசெய்தது நியாயமா?

தந்தை ராமக்குட்டி, தாயார் மனியம்மா, மனைவி பிந்து, மூன்றாம் வகுப்பு படிக்கும் மூத்தப் பிள்ளை அஜய், இரண்டுவயதுக் குழந்தை அக்ஷாய் ஆகியோருக்கு சம்பாதித்துப் போடும்மணியப்பன் என்ற ஆல மரத்தை வெட்டிச் சாய்த்தது, வேரறுத்தது நீதியா? நியாயமா? என்று அந்தப் படம்சரமாரியான கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றது.

இது உண்மையில் இஸ்லாத்தின் கருணை முகத்தைக்காட்டுமிராண்டி முகமாகக் காட்டச் செய்கின்றது. ஈவுஇரக்கத்தைப் போதிக்க வந்த மார்க்கத்தை அரக்க குணம்கொண்ட இரத்தக் காட்டேறியாக இது சித்தரிக்கின்றது. இஸ்லாத்தின் அகோரம் கைக்குழந்தைகளையும், கர்ப்பிணிப்பெண்களையும், கைத்தடி ஊன்றும் முதியவர்களையும் விட்டுவைப்பதில்லை என்ற தப்பெண்ணம் மாற்றாரின் உள்ளங்களில்பதியப்பட்டு விட்டது.

ஜிஹாதும் இஜ்திஹாதும்

இஸ்லாத்தின் இனிய தோற்றம் சிதைக்கப்படுவதற்கு யார்காரணம்? தாலிபான்கள் தான். அவர்கள் தான் ஆப்கான்மண்ணில் எல்லைச் சாலைகள் அமைப்பு என்ற இந்திய அரசுநிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றியமணியப்பனைக்கொலை செய்து சாலையில் வீசிச் சென்றனர். இந்த மணியப்பன்என்ன காரணத்திற்காகக் கொல்லப்பட்டார் என்பது அவருக்குத்தெரியாது.

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனதுஉயிர் எவன் கைவசம்இருக்கின்றதோஅவன் மீது ஆணையாக! கொலைசெய்தவனுக்கு அவன் எதற்காகக் கொலை செய்தான் என்றகாரணம் தெரியாது. தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்றகாரணம் கொலையுண்டவனுக்கும் தெரியாத ஒரு காலம்மக்களிடம் வரும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5177

மணியப்பன் குட்டி ஆப்கான் மண்ணில் கொல்லப்பட்ட நிகழ்வு, அந்தக்காலம் இது தான் என்று எண்ண வைக்கிறது. ஏனெனில்ஒரு மனிதன் கொல்லப்பட வேண்டுமானால் மூன்றுகாரணங்களுக்காகக் கொல்லப் பட வேண்டும்.

1. போர்

போரில் தான் அடையப் போவது வெற்றி அல்லது வீர மரணம்என்பதை இலட்சியமாகக் கொண்டு தான் ஒருவன் களத்திற்குவருகின்றான்.

2. குற்றவியல்

ஒரு மனிதனின் உயிருக்கு எது வரைஉத்தரவாதம்? என்றுகேட்டால், அடுத்தவரின் உயிரைப் பறிக்காத வரை என்பதுஉலகம் முழுவதும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். கொலைஅல்லது திருமணத்திற்குப் பின் விபச்சாரம் போன்றகுற்றங்களுக்காக ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படும்மரணதண்டனை.

3. தற்காப்பு

தன்னை ஒருவன் கொல்ல வருகின்றான்என்று உறுதியாகத்தெரியும் போது, தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகஅவனைக் கொலை செய்வது.

இந்த மூன்று அடிப்படைகளில் தான்ஒருவனின் உயிரைப்பறிக்க முடியும். இதல்லாத காரணத்திற்காக ஒருவன் கொலைசெய்யப்பட்டான் என்றால்அவன் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டான் என்று தான் அர்த்தம். இது நிச்சயமாகமனிதர்கள் அனைவரையும் கொலை செய்ததைப்போன்றதாகும்.

"கொலைக்குப் பதிலாகவோ, பூமியில்செய்யும் குழப்பத்திற்குப்பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலைசெய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர்போலாவார்’ என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லாமனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’ என்றும்இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவேவிதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள்தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர்அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவேஉள்ளனர். (அல்குர்ஆன் 5:32)

இப்போது தாலிபான் இந்தப் பாவத்தைத் தான்செய்திருக்கின்றது.

ஆப்கான் மீது மணியப்பன் குட்டி போர் தொடுக்க வந்தாரா? என்றால் நிச்சயமாக இல்லை. அவர் ஆப்கான் மண்ணைச்செம்மைப் படுத்துவதற்கும், செப்பனிடுவதற்கும் தான் வந்தார். இந்தியா – ஆப்கான் நட்புறவுத் திட்டத்தின் கீழ் ஜரான்ச் – தேலாராம் சாலையை அமைக்கும் பணியை இந்தியாமேற்கொண்டுள்ளது. எல்லைப் புறச் சாலைகள் நிறுவனம்செய்து வரும் இந்தப் பணித் திட்டத்தின் கீழ் தன்னுடையவயிற்றுப் பிழைப்புக்காக காரோட்டியாகப்பணியாற்றினார். அவரைத் தான் தாலிபான்கள் கடத்திச் சென்றுகொன்றிருக்கிறார்கள்.

இவர் ஆப்கானுடன் போர் செய்யவோ, அல்லது உளவு வேலைபார்க்கவோ வரவில்லை. இந்நோக்கங்களுக்காக அல்லாமல்வெறும் பிழைப்புக்காக வந்தவரை அழைத்துச் சென்றுகொல்வது எந்த அடிப்படையில் நியாயம்?

ஒரு நாட்டின் குற்றவியல் சட்டத்தின் படி இவர் குற்றவாளியாகஇருந்து அவருக்கு இத்தகைய மரண தண்டனையைஅளித்திருந்தால் அதனை நியாயம் என்று சொல்லலாம். மரணதண்டனைக்கான குற்றம் எதையும் இவர் செய்தவரல்ல! அப்படியிருக்கையில் இவருக்கு எந்த அடிப்படையில் இந்தமரண தண்டனை வழங்கப்பட்டது?

மணியப்பன் குட்டி, யாரையாவது தாக்கச் சென்று அதனால்பாதிக்கப் படவிருந்தவர் – படுகொலை செய்யப் படவிருந்தவர்இந்தக் கொலையைச் செய்து விட்டார் என்று சொன்னால் கூடஅதில் ஒரு நியாயம் இருக்கிறது.அந்த நியாயம் கூட இதில்இல்லையே!

எனவே இந்த மூன்று அடிப்படைகளில்ஏதேனும் ஒன்றின் படிஇவர் கொல்லப்படவில்லை எனும் போது நிச்சயமாக இவர்அநியாயமாகத் தான் கொல்லப்பட்டிருக்கின்றார். தாலிபான்கள்அத்துமீறி, ஜிஹாத் என்ற போர்வையில் இவரைக்கொன்றுள்ளனர். இது போன்ற தப்பான முடிவால் தான், தற்கொலை முடிவால் தான் தாலிபான் தன்னை அழித்துக்கொண்டு விட்டது. எதையுமே மார்க்கத்தின் அடிப்படையில்நிலை நாட்டும் போது அங்கு அல்லாஹ்வின் அருள்கிடைக்கும். இல்லையேல் அங்கு அல்லாஹ்வின் தண்டனைதான் கிடைக்கும்.

தாலிபானும் தற்கொலைத் தாக்குதல்களும்

தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதையாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன.

"ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னைமுந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தைஹராமாக்கி விட்டேன் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)

நூல்: புகாரி 1364

"யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மைஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்” என்று அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1365

தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்தஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாதுஎன்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காகத் தற்கொலை செய்யலாம் என்றுஇவர்கள் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இதுவும்போர் தான் என்றும் கூறுகின்றனர்.

ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில்விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால்அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்கவேண்டும். ஆனால் அது போன்ற நேரடியானஆதாரம் எதையும்இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்தஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!

போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள்போரில் கொல்லப்பட்டுள்ளனர், இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும்.

போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒரு சேர எதிர்பார்த்துத் தான் போரில் களம்இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பதுஅவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கேஇடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருதமுடியாது.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதைபுகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்த இவர்கள்மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழமுடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால்தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல!இது போன்றதாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயேசெய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலிகிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல்அனுமதிக்கப் பட்டது தான் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு தவறானவியாக்கியானம் கூறி இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்டவிஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்லஎண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப் படுத்தமுடியாது.

உதாரணமாக நோன்பு வைப்பவர் அல்லாஹ்வுக்காக நோன்புவைப்பதாக எண்ணிக் கொண்டு வைத்தால் அவருக்குநோன்பின் கூலி கிடைக்கும். ஆனால்தனது உடல் இளைப்பதைநோக்கமாகக் கொண்டு நோன்பு வைத்தால் நோன்பின் எல்லாவிதிகளும் பின்பற்றப்பட்டாலும் அவருக்கு நோன்பிற்கானகூலி கிடைக்காது. இதே உதாரணத்தை தடுக்கப்பட்டசெயல்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.

போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும்போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மதுஅருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பதுநோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் போரிடவேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காகஅல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்றுயாரும் வாதிட மாட்டார்கள்.

விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின்குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டுஅவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூறமுடியுமா? அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால்அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம், திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாகஇருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.

தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப்பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப்பூர்வமாகமட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும்முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், நேருக்கு நேர்மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இனஉணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத்தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு தான் அநீதி இழைக்கப்பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும்அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமேநடக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விடஉணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதைஇஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம்ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத்தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும்இல்லை என்பதை அறியலாம்.

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில்பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப் படுகின்றன என்றுபார்த்தால், இதில் பலியாவோர் பொது மக்களாக இருப்பதைக்காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமானங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவைதான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காகஉள்ளன.

போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும்போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலைஎன்று கூறமாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூடபணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகியஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன.

புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும்குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதைநியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக்கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக்கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால்இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.

நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும் சிறுவர்களும்கொல்லப் படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத்தடை செய்துவிட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வதுஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஒரு செயல் முதலில்அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டால் தடையைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில்கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்குஅனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடையதெளிவான தீர்ப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய ஒருபடையினர்சிறுவர்களையும் கொன்றுவிட்டனர். இதைக் கேள்விப்பட்டநபி(ஸல்) அவர்கள் விசாரணை நடத்திய போது, "அவர்களும்இணை வைப்பவர்களின் வழித் தோன்றல்கள் தானே!” என்றுநபித்தோழர்கள் கூறினார்கள். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், "கொலை செய்வதில் இவர்கள் வரம்புமீறி விட்டனர். சிறுவர்களைக் கொல்லாதீர்கள்! சிறுவர்களைக்கொல்லாதீர்கள்! பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம்எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள்உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர். அவர்களின்பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்” என்றுகூறினார்கள்.

(நூல்: அஹ்மத் 15036, 15037)

குழந்தைகளைக் கொல்லக் கூடாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தையும் இங்குகுறிப்பிடுகின்றார்கள்.

முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டதால்தான் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப்பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படைஅனுப்பிய போது பிறப்பித்த பத்து கட்டளைகளில்பெண்களையும் சிறுவர்களையும் முதியவர்களையும்கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப்பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வதுஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாதுஎன்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் உறுதிப் படுத்துகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்கள்என்று போருக்குச்சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்துதற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப் படுவதே இதுமார்க்கத்திற்கு முரணானது என்பதை வலியுறுத்துகின்றது.

மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இதுபோன்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படக் கூடாது. ஆனால்தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால்இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம்குறிப்பிட வேண்டியுள்ளது.

அப்பாவிகள் கொல்லப்படுவதைக் காணும்முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும்வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால்இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

(இது குறித்து, தலையங்கத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவோரில் பலர்தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது,அதாவதுதொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சிஅடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும்பகுதியில் நடந்து, அதனால் தனது குடும்பமோ சொத்துக்களோபாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.

மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலானகாரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்குஅனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.

ஒருவரைக் கொலை செய்ய வேண்டும் என்று குறி வைத்து, அவரைக் கொல்வதற்காக ஒரு விமானத்தையே குண்டுவைத்துத் தகர்க்கிறார்கள். அல்லது பல்லாயிரம் பேர்கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தில் குண்டுவைக்கிறார்கள். அங்கு அந்தத் தலைவரைச் சுற்றியிருந்த கைக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்,கண் பார்வை தெரியாத முதியவர்கள்போன்றோர் இருப்பதையெல்லாம் கவனிக்காமல் வெடிகுண்டுத்தாக்குதல் நடத்தப்படுகிறது.

போரில் கூட பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள்கொல்லப்படக் கூடாது என்ற நெறியைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, குறியை மட்டும்இலக்காகக் கொண்டுஅப்பாவிகளையும் சேர்த்து இந்தத் தற்கொலைப் படை கொன்றுவிடும். இது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எப்படிச்சரியாகும்?

உண்மையில் இத்தகைய முடிவை எடுப்பவர் தங்களை மட்டும்அன்றி தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் சேர்த்தே அழிக்கின்றபாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

ஆப்கானில் தாலிபான்கள் நடத்திய ஆட்சியை யாரும் குறைசொல்லவில்லை. ஆப்கான் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அதையும் நாம் கண்டிக்கத் தவறவில்லை. ஆனால்தாலிபான்கள் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமான ஒரு நிலையைத்தேர்ந்தெடுத்தார்களே! அது தான் அவர்களுக்குக் கேடாகஅமைந்து விட்டது.

உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தற்கொலைப் படைத்தாக்குதல் இந்த அடிப்படையில் உள்ளது தான். இந்தத்தாக்குதலுக்கு முன்னால் அமெரிக்கா, ஆப்கானைக் கண்டுஅரண்டு போயிருந்தது. அச்சத்தில் நடுநடுங்கிக்கொண்டிருந்தது. ஆனால் என்றைக்கு உலக வர்த்தகமையத்தின் மீது கை வைக்கப்பட்டதோ அன்றைக்கே ஆப்கான்மீது மோதிப் பார்க்கத் துணிந்து விட்டது. கடைசியில்ஆப்கானைத் துடைத்தெடுத்து விட்டது. அத்துடன் அமெரிக்காநின்று விடவில்லை. இராக்கில் நுழைந்து அங்குள்ள ஆட்சியைநிர்மூலமாக்கியது. இப்போது சிரியாவில் நுழைவதற்கு சாக்குபோக்குகளைத் தேடிக் கொண்டிருக்கின்றது.

பாதிப்புகள் இத்துடன் நிற்கவில்லை. ஆக்கப்பூர்வமாகநடைபெற்ற அழைப்புப் பணிகளிலும், அனாதைகளுக்குச் சேரவேண்டிய உதவிகளிலும், அல்லாஹ்வின் ஆலயங்கள்கட்டுவதற்கான நிதியாதாரங்களிலும் மண்ணை அள்ளிப்போட்டு விட்டது.

செய்த தவறும் செய்யத்தவறியதும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் தெளிவாகத்தடுக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தவிர்த்து விட்டு, தான்அமைத்த ஆப்கான் அரசை மேலும் மேலும் வலுப்படுத்தி அதன்மூலம் இஸ்லாமிய அரசுகளுக்கு ஒருநெருக்கடியை ஏற்படுத்திஅவர்களைஓரணியில் திரட்டியிருக்கலாம். நியாயமானமுறையில், நீதியின் அடிப்படையில் அமெரிக்கா போன்றஆதிக்க சக்திகளை எதிர்ப்பதற்கு ஒரு தேர்ந்த போராளிப்படையை உருவாக்கி இருக்கலாம். அதற்காக நீண்ட காலம்காத்திருந்து, சரியான வியூகத்துடனும், மதி யூகத்துடனும்செயல்பட்டு, இது போன்ற தற்கொலைத் தாக்குதலில்அல்லாமல் எதிரிகளைக்களத்தில் சந்தித்திருக்கலாம்.

அப்போது இஸ்லாமிய மார்க்கம் சாந்தியும், சக்தியும் ஒரு சேரஅமையப் பெற்ற சரியான மார்க்கம் என்ற உண்மை புரியவைக்கப்பட்டிருக்கும்.

அந்த வாய்ப்பையெல்லாம் தாலிபான்படை தகர்த்து எறிந்துவிட்டு, தற்குறித்தனமான தற்கொலைத் தாக்குதலைக் கைவசம்எடுத்ததால் தனது ஆட்சியை மட்டுமல்லை, இப்போதுதன்னையும் சுத்தமாக அழித்துக் கொண்டிருக்கின்றது.

தற்போது மணியப்பன் குட்டி படுகொலையின் மூலம் குர்ஆன், ஹதீசுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைநிரூபித்துள்ளது.