புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?

புகாரியில் பலவீனமான செய்திகள் உள்ளனவா?

கேள்வி:

ஆதாரப்பூர்வமான ஆறு நூல்கள் – ஸிஹாஹுஸ் ஸித்தா எனப்படும் (புஹாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா, அபூதாவூத்) நூல்களில் இருக்கும் அனைத்து ஹதீஸ்களும் சரியானவையா? பலவீனமான ஹதீஸ்களும் கலந்து இருக்குமா? பலவீனமான ஹதீஸ்கள் கலந்து இருக்கும் என்றும், அதற்குக் கீழ் பலவீனமானவை என எழுதப்பட்டிருக்கும் என்றும் கூறுகிறார்களே இது சரியா? விளக்கம் தரவும்.

– ஆர்.மிஹ்ராஜ் நிஷா

பதில் :

இந்தக் கேள்வி இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானதாகும். நீங்கள் குறிப்பிடும் ஆறு நூல்களும் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதங்கள் அல்ல. அல்லாஹ்வின் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு மட்டுமே அல்லாஹ் முழுமையான பாதுகாப்பை வழங்கியுள்ளான். அதில் பலவீனமான தவறான செய்திகள் எதுவும் இருக்காது.

நபியவர்கள் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு வசனமும் அருளப்பட்டவுடன் அது பல நபித்தோழர்களால் மனனம் செய்யப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேற்பார்வையில் எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டது. எந்த மனிதரும் அதில் ஒரு சொல்லைக்கூட சேர்க்கவோ நீக்கவோ மாற்றவோ இயலாத அளவுக்கு முழுமையான பாதுகாப்பு செய்யப்பட்டது.

ஆனால் ஹதீஸ்களின் நிலை இதுவல்ல.

நபிகள் சொன்ன ஒவ்வொரு செய்தியும் நபித்தோழர்களால் மனனம் செய்யப்படவில்லை.

ஓரிரு செய்திகளை ஓரிரு தோழர்கள் எழுதிக் கொண்டதைத் தவிர அனைத்து செய்திகளும் எழுத்து வடிவமாக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் செவி வழியாக தமக்கு கிடைத்த அனைத்து செய்திகளையும் சிலர் பதிவு செய்தார்கள்.

இன்னும் சிலர் சந்தேகத்துக்கு இடமானவர்களால் அறிவிக்கப்படும் செய்திகளை மட்டும் தொகுத்து அளித்தனர்.

மற்றும் சிலர் அந்தச் செய்தி யார் வழியாக கிடைத்தது என்று ஆய்வு செய்து நம்பகமானவர்கள் என்று அவர்களுக்கு யார் விஷயத்தில் நம்பிக்கை வந்ததோ அவர்களின் அறிவிப்புக்களை மட்டும் சிலர் பதிவு செய்தார்கள்.

இந்த மூன்றாவது வகையில் தான் புகாரி, முஸ்லிம் போன்ற சில நூல்கள் அமைந்துள்ளன.

இந்த அறிஞர்கள் யாரை நம்பகமானவர்கள் என்று கருதினார்களோ அவர்கள் மெய்யாகவே நம்பகமானவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வெளிப்படையாக அவர்கள் அறிந்த தகவல்களை வைத்து அந்த அறிஞர்கள் எடுத்த முடிவு தான் நம்பகமான அறிவிப்பாளர் என்பது.

அப்படியானால் அவர்கள் யாரை நம்பகமானவர்கள் என்று கருத்தினார்களோ அவர்கள் மெய்யாகவே நம்பகமானவர்கள் தான் என்று சொன்னால் அது அப்பட்டமான இணைவைப்பாக ஆகிவிடும்.

இந்தப் பின்னணியில் தான் இமாம் ஷாஃபீ அவர்கள், திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலுக்கும் அல்லாஹ் முழுமையளிக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்கள். இது விவாதித்து ஏற்க வேண்டிய அவசியமில்லாத ஓர் அடிப்படையான உண்மையாகும்.

ஆனால் புகாரி, முஸ்லிம் ஆகியோர் கேட்டதை எல்லாம் பதிவு செய்யாமல் தங்கள் சக்திக்கு உட்பட்டு ஆட்களை எடை போட்டுள்ளார்கள். கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. எவ்வளவுதான் கூடுதல் கவனம் செலுத்தினாலும் மனிதர்களின் மதிப்பீடு முற்றிலும் சரியாக இருக்காது; அதில் தவறானவையும் இருக்கும் என்பது அதைவிட பேருண்மையாகும்.

26.10.2015. 10:48 AM

Leave a Reply