முஹம்மது என்று திக்ரு செய்யலாமா?

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா?

நூரீஷாஹ் தரீக்கா எனும் வழிகெட்ட கூட்டத்தினர் அல்லாஹ்வை திக்ரு செய்வது போல் நபிகள் நாயகத்தையும் திக்ரு செய்து மக்களை இணைவைப்பில் தள்ளி வருகின்றனர். இந்த தரீகாவின் ஷைகுகள் எனப்படும் ஷைத்தான்களின் கால்களில் அவர்களின் அடிமைகள் காலில் விழுந்து கும்பிட்டு வருகின்றனர்.

தவ்ஹீத் கொள்கைவாதிகளைப் பொருத்த வரை இது அப்பட்டமான ஷிர்க் என்று விளங்கி வைத்துள்ளனர். மத்ஹபுவாதிகள் தான் இக்கூட்டத்தில் சேரலாயினர்.

இந்தக் கூட்டம் 1977 ல் திடீரென முளைத்த போது இவர்கள் வழிகேடர்கள் என்பதை மத்ஹபுவாதியான கேஏ நிஜாமுத்தீன் என்பவர் மத்ஹபு அறிஞர்களின் பத்வாக்களைத் திரட்டி இவர்களின் வழிகேட்டை அம்பலமாக்கி இர்பானுல் ஹக் என்ற நூலை வெளியிட்டார்.

மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய இர்ஃபானுல் ஹக்' (உண்மை விளக்கம்) எனும் நூலில், முஹம்மது என்ற திக்ரு' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியை இங்கே அப்படியே தந்துள்ளோம்.

சிலர் தரீக்கா என்ற பெயரால் அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்கின்றனர். குறிப்பாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருநாமத்தை மரியாதையின்றி,  முஹம்மத்,  முஹம்மத்'  என திக்ரு செய்கிறார்கள். சூபிய்யாக்களுக்கு இது ஆகும் என்று கூறுகின்றனர்.

திக்ரு என்பதின் கருத்தையும் ஷரீஅத்தின் சட்டங்களையும் சரியாக விளங்காத காரணத்தால் ஏற்படும் தீமையாகும் இது. அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்வது மாபெரிய தீமையாகும் என்பதைப் பற்றிய விளக்கத்தை இங்கு காண்போம்.

 
அல்லாஹு தஆலாவுடைய திருநாமங்களைப் போன்று வேறு படைப்பினங்களின் பெயரை திக்ரு செய்வது ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். பெரும் பாவமுமாகும் என ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: ஷிபாவுல் அலீல் ஷரஹ் அல்கவ்லுல் ஜமீல், பக்கம்: 18

திக்ரு என்பது ஒரு வணக்கம் (இபாதத்). அதுவும் உயர்ந்த, சிறந்த வணக்கம். இந்த வணக்கத்தில் அல்லாஹு தஆலாவுக்கு இணையாக வேறு மனிதரை அல்லது வேறு பொருளை திக்ரு செய்வது ஷிர்க் என்பதாக ஆகி விடுகின்றது.

அல்லாஹு தஆலா திருக் குர்ஆனில், இய்யாக நஃபுது' என்று கூறுகின்றான்.

இய்யாக = உன்னையே

நஃபுது = வணங்குகிறோம்

என்பது இதனுடைய பொருள்.

இந்த வாசகத்தின் அசல் அமைப்பு நஃபுதுக' என்றிருக்க வேண்டும். நஃபுதுக' என்றால் உன்னை வணங்குகிறோம் என்ற பொருளாகும். உன்னைத் தான் வணங்குகிறோம்; வேறு எவரையும் வணங்க மாட்டோம்' என்ற குறிப்பாக்கி வைக்கும் பொருள் அதில் ஏற்பட வேண்டும் என்பதற்காக நஃபுதுக' என்பதை இய்யாக நஃபுது' என்று மாற்றி அல்லாஹு தஆலா கூறியுள்ளான்.

நஃபுது என்பதனுடைய வேர்ச் சொல் இபாதத் என்பதாகும். இபாதத் என்றால் வணக்கம் என்று பொருள். ஒரு முஃமின் செய்கின்ற தொழுகை,  நோன்பு, ஜகாத், ஹஜ், திக்ரு, ஃபிக்ரு, இன்ன பிற செயல்கள் அனைத்தும் இபாதத் என்பது தான். எனவே இய்யாக நஃபுது உன்னையே வணங்குகிறோம்' என்று நாம் சொல்லும் போது,

உன்னையே தொழுகிறோம்; வேறு எவரையும் தொழ மாட்டோம்.

உன்னையே திக்ரு செய்கிறோம்; வேறு எவரையும் திக்ரு செய்ய மாட்டோம்.

உனக்காகவே ஜகாத், நோன்பு, ஹஜ் இன்ன பிற நற்செயல்கள் அனைத்தையும் செய்கிறோம்; வேறு எவருக்காகவும் இவற்றைச் செய்ய மாட்டோம்.

என்ற எல்லாக் கருத்துக்களையும் தன்னுள் கொண்டது தான் இய்யாக நஃபுது' என்ற திருவாசகம். இக்கருத்துக்கள் தப்ஸீர் பைலாவீயிலும் அதனுடைய விளக்கவுரை நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்போது நாம் கவனிப்போம்.

இய்யாக நஃபுது என்பதற்கு, உன்னையே திக்ரு செய்கிறோம்; வேறு யாரையும் திக்ரு செய்ய மாட்டோம் என்ற பொருள் கூறப்படும் போது, அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்வது ஷிர்க்' என்ற குற்றத்தைச் சேர்ந்ததாகி விடுகிறது. இந்தக் கருத்தில் தான் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் திருநாமத்தைப் போன்று வேறு பொருள்களின் நாமங்களை திக்ரு செய்வது ஷிர்க் என்ற பெரும் பாவமாகும்' என்று கூறியுள்ளார்கள்.

மேற்கூறிய விளக்கத்தைத் தெரிந்த பின்னரும் அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்யலாம் என்று கூறுபவர்கள், அல்லாஹ் அல்லாத பொருளைத் தொழலாம்; வணங்கலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அல்லாஹ் அல்லாத பொருளில் சேர்ந்தவர்கள் தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். எனவே முஹம்மத், முஹம்மத்' என்று திக்ரு செய்வது அல்லாஹ்வுடைய வணக்கத்தில் இணை வைப்பதும், பெரும் பாவமுமாகும்.

அல்லாஹு தஆலா திருக்குர்ஆனில், அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள், என்னை திக்ரு செய்யுங்கள்' என்று தான் கூறுகிறான். ஆகவே திக்ரு என்பது அல்லாஹு தஆலாவுக்கே சொந்தமானது. (நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை திக்ரு செய்தல் கூடாது.) நபியின் மீது ஸலவாத்துச் சொல்வது தான் சுன்னத்.

(வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வா)

அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்தல் கூடாது.

ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், முஜ்தஹிதுகள், சூஃபியாக்கள் இவர்களில் எவர் மூலமாகவும் அது கூறப்படவில்லை.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், முன்னோர்களும் செய்யாத இந்தப் புதிய முறை திக்ராகிறது 'பித்அத்' என்ற வழிகேடாகும். அது ரத்துச் செய்யப்பட வேண்டியதாகும்.

 
'எவம் நம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய (பித்அத்தான) செயல்களைத் தோற்றுவித்தால் அது ரத்துச் செய்யப்பட வேண்டியதாகும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: மிஷ்காத் (பக்கம் 27)

 
'பேச்சுக்களில் சிறந்தது அல்லாஹு தஆலாவின் வேதம். நேர்வழியில் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்வழி. செயல்களில் கெட்டது மார்க்கத்தில் இல்லாத புதிய பித்அத்துக்களை உண்டாக்குவது. புதியவை (பித்அத்துக்கள்) அனைத்தும் வழிகேடானவையே' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: மிஷ்காத் (பக்கம் 27)

இந்த ஹதீஸ்களிலிருந்தும், ஃபத்வாக்களிலிருந்தும் ஷரீஅத்தில் கூறப்படாத முஹம்மத்  என்ற திக்ராகிறது வழிகேடும், மறுக்கப்பட வேண்டியதுமாகும் என்பது தெளிவாகிறது. திருக்குர்ஆனில் நூற்றுக்கணக்கான இடங்களில் திக்ரைப் பற்றியுள்ள ஆயத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அத்தனையும் அல்லாஹ்வை திக்ரு செய்யுமாறு தான் அல்லாஹ் பிரஸ்தாபிக்கின்றான். அல்லாஹ் அல்லாதவற்றை திக்ரு செய்தல் கூடாது என்பதையும் அல்லாஹ் அதன் மூலம் சுட்டிக் காட்டுகிறான்.

உங்களுக்கிடையே ஒருவரை ஒருவர் அழைப்பது போன்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைக்க வேண்டாம் என்று சூரத்துந் நூர் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஆயத்தின் விளக்கவுரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிருடன் இருக்கும் போதும், மரணமடைந்த பிறகும் பெயர் கூறி மரியாதையின்றி அழைக்கக் கூடாது என தப்ஸீர் ஸாவியில் விளக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் கூறி மரியாதையின்றி முஹம்மது என்றழைப்பது அரபு நாட்டுக் காஃபிர்களின் வழக்கமாகவும், யூத, கிறித்தவர்களின் வழக்கமாகவும் இருந்த காரணத்தால் அவ்வாறு அழைப்பது கூடாது என இந்த ஆயத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். எனவே முஹம்மத், முஹம்மத் எனக் கூறுபவர்கள் அன்றைய காபிர்கள், யூத,கிறித்தவர்களுடைய வழக்கத்தைக் கையாளுபவர்களாக ஆகி விடுகிறார்கள்.

காயத்துல் கலாம் ஃபின்னிதாஇ பிஸ்மின்னபிய்யி அலைஹிஸ்ஸலாம் என்ற நூலின்34ம் பக்கத்தில் மேற்படி ஆயத்தை ஆதாரமாகக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் கூறி அழைப்பது ஹராமாகும் என்பதற்கு இருபத்து நான்கு கிரந்தங்களை ஆதாரம் காட்டி எழுதியுள்ளார்கள். விரும்புபவர்கள் அந்நூலைப் பார்த்துக் கொள்ளலாம்.

எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணத்திற்குப் பின் யா முஹம்மத்' என்றோ,  அஹ்மத்' என்றோ, முஹம்மத், முஹம்மத்' என்றோ மரியாதையின்றி கூறுபவர் மேற்படி ஆயத்தின் கருத்துக்கு மாற்றம் செய்தவராவார் என்பது தெளிவாக்கப் படுகின்றது.

மேற்படி ஆயத்திலிருந்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் கூறி அழைப்பது எல்லா நேரங்களிலும் ஹராமாகும் எனக் கீழ்க்குறிப்பிடும் மேதைகள் அனைவரும் அறிவித்துள்ளனர் என்று தகாயிருத்தலீல்' என்ற நூலில் அல்லாமா நைனா முஹம்மது ஆலிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

1. இமாம் நவவீ (ரஹ்) ஷரஹ் முஸ்லிம்

2. இமாம் முல்லா அலீ காரீ (ரஹ்) ஷரஹ் மிஷ்காத், ஷரஹ் ஷிபா

3. காளீ இயாள் (ரஹ்) கிதாபுஷ்ஷிபா

4. ஷிஹாபுத்தீன் கஃப்பாஜீ (ரஹ்) ஷரஹ் ஷிபா

5. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) பத்ஹுல் ஜவாத், பத்ஹுல் முயீன், ஜவ்ஹருல் மன்லூம் ஹாஷியாத்துல் ஈலாஹ்

6. இமாம் கஸ்தலானீ (ரஹ்) மவாஹிப்

7. ஷைகு முஹம்மது ஸாலிஹ் (ரஹ்) அவர்களின் பதாவா

8. இமாம் சுயூத்தி (ரஹ்) அஹ்காமுல் குர்ஆன்

மேற்கூறிய மேதைகளும் மற்றும் பலரும் மேற்படி ஆயத்திலிருந்து நபியவர்களைப் பெயர் கூறி அழைப்பதை ஹராம் எனக் கூறியுள்ளனர்.

நூல்: தகாயிருத்தலீல், பக்கம்: 4

ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் கூறி முஹம்மத், முஹம்மத்' என திக்ரு செய்வதால் ஷிர்க், ஹராம் என்ற இரண்டு பெரும் குற்றங்கள் ஏற்படுகின்றன.

அல்லாஹ்வுடைய திருநாமத்தைப் போன்று அவனுக்கு இணையாக திக்ரு செய்வது – இது ஷிர்க்.

மரியாதையின்றி நபியவர்களின் பெயரைக் கூறுவது – இது ஹராம்.

…..இது தான் மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் எழுதிய இர்ஃபானுல் ஹக் என்ற நூலில் வெளியிடப்பட்ட செய்தியாகும். 1977ல் இந்நூல் வெளியிடப்பட்டு, 1982ம் ஆண்டு மறு பதிப்பு வெளியானது.

முஹம்மது என்று திக்ரு செய்யக் கூடாது என்று ஃபத்வா கொடுக்கும் நீங்கள்,முஹய்யித்தீன்' என்று அழைப்பது கூடாது என்று ஏன் ஃபத்வா கொடுக்க மறுக்கிறீர்கள்?

முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை விட முஹம்மத் (ஸல்) அவர்கள் மிக மிகச் சிறந்தவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுடன் அப்துல் காதிர் ஜீலானியை ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியாது.

அப்படிப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களை திக்ர் செய்வது ஷிர்க் என்று சொல்லும் நீங்கள், முஹய்யித்தீனை அழைத்து இருட்டு திக்ர் செய்வதை எதிர்த்து மூச்சு விடுவதில்லையே! ஏன்?

அந்த முஹய்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பதற்கு அஸ்திவாரம் போட்டிருக்கும் யா குத்பா' பாடலை அனுமதித்துக் கொண்டிருக்கின்றீர்களே! அது ஏன்? என்று தான் நாம் 80களில் இந்த ஆலிம்களிடம் கேட்டோம். இதற்கு வழக்கமான மவுனமே அவர்களின் பதிலாக அமைந்தது.

Leave a Reply