வானவர்களை நாம் பார்க்க முடியுமா?

வானவர்களை நாம் பார்க்க முடியுமா?

சில அறிஞர்கள் பயான் செய்யும் நிகழ்ச்சிகளில் வானவர்கள் வந்து கலந்து கொள்வதாகக் கூறி ஒரு வீடியோவையும் பரப்பி வருகின்றனர். இது உண்மையா? வானவர்களை நாம் காண முடியுமா?

வானவர்கள் பல்வேறு சபைகளுக்கு ஆஜராவதாக ஹதீஸ்கள் உள்ளன. அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதால் மறைவான விஷயம் என்ற அடிப்படையில் நாம் நம்புகிறோம். ஆனால் அந்த சபையில் நாம் இருந்தாலும் வானவர்களை நாம் காண முடியாது.

477 – حدثنا مسدد، قال: حدثنا أبو معاوية، عن الأعمش، عن أبي صالح، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: " صلاة الجميع تزيد على صلاته في بيته، وصلاته في سوقه، خمسا وعشرين درجة، فإن أحدكم إذا توضأ فأحسن، وأتى المسجد، لا يريد إلا الصلاة، لم يخط خطوة إلا رفعه الله بها درجة، وحط عنه خطيئة، حتى يدخل المسجد، وإذا دخل المسجد، كان في صلاة ما كانت تحبسه، وتصلي – يعني عليه الملائكة – ما دام في مجلسه الذي يصلي فيه: اللهم اغفر له، اللهم ارحمه، ما لم يحدث فيه "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் உளூ செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழும் நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான்.  தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருந்து சிறுதுடக்கு ஏற்படாதவரை அவருக்காக வானவர்கள்  இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கின்றார்கள்.

நூல் : புகாரி 477

பள்ளிவாசலில் தொழுகைக்காக நாம் காத்திருக்கும் போது வானவர்கள் அந்தச் சபையில் இருந்தாலும் அவர்கள் நம் கண்களுக்குத் தென்படுவதில்லை.

555 – حدثنا عبد الله بن يوسف، قال: حدثنا مالك، عن أبي الزناد، عن الأعرج، عن أبي هريرة: أن رسول الله صلى الله عليه وسلم قال: " يتعاقبون [ص:116] فيكم ملائكة بالليل وملائكة بالنهار، ويجتمعون في صلاة الفجر وصلاة العصر، ثم يعرج الذين باتوا فيكم، فيسألهم وهو أعلم بهم: كيف تركتم عبادي؟ فيقولون: تركناهم وهم يصلون، وأتيناهم وهم يصلون "

555 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும், அஸ்ர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கியவர்கள் மேலேறி (இறைவனிடம்) செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அவர்களிடம்,  என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கு அவர்கள், உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம் என்று பதிலளிப்பார்கள்.

நூல் : புகாரி 555

தினமும் காலையிலும், மாலையிலும் நம்மைப் பார்க்க வானவர்கள் வந்தாலும் ஒரு நாளும் நாம் அவர்களைப் பார்த்ததில்லை.

799 – حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن نعيم بن عبد الله المجمر، عن علي بن يحيى بن خلاد الزرقي، عن أبيه، عن رفاعة بن رافع الزرقي، قال: " كنا يوما نصلي وراء النبي صلى الله عليه وسلم، فلما رفع رأسه من الركعة قال: سمع الله لمن حمده "، قال رجل وراءه: ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه، فلما انصرف، قال: «من المتكلم» قال: أنا، قال: «رأيت بضعة وثلاثين ملكا يبتدرونها أيهم يكتبها أول»

ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. பகட்டோ பெருமையோ கலவாமல் தூய்மையும் சுபிட்சம் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான்தான் என்றார். முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்' என(த் தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 799

ஒரு நபித்தோழர் கூறியதை வானவர்கள் பதிவு செய்த விபரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்ததால் தான் நபித்தோழர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வானவர்களைப் பார்க்கவில்லை.

929 – حدثنا آدم، قال: حدثنا ابن أبي ذئب، عن الزهري، عن أبي عبد الله الأغر، عن أبي هريرة ، قال: قال النبي صلى الله عليه وسلم: «إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون الأول فالأول، ومثل المهجر كمثل الذي يهدي بدنة، ثم كالذي يهدي بقرة، ثم كبشا، ثم دجاجة، ثم بيضة، فإذا خرج الإمام طووا صحفهم، ويستمعون الذكر»

929 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளி வாசலின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். நேரத்தோடு வருபவரது நிலை ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவராவார். அதற்கடுத்து வருபவர் கொம்புள்ள ஓர் ஆட்டையும், அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவராவார்கள். இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளைச் சுருட்டி விட்டு உரையைச் செவிதாழ்த்திக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 929

ஒவ்வொரு ஜுமுஆவுக்கும் வானவர்கள் வருவது உறுதி என்றாலும் அவர்கள் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். தென்பட மாட்டார்கள் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை நமக்குக் கூறுகிறார்கள்.

3303 – حدثنا قتيبة، حدثنا الليث، عن جعفر بن ربيعة، عن الأعرج، عن أبي هريرة رضي الله عنه، أن النبي صلى الله عليه وسلم، قال: «إذا سمعتم صياح الديكة فاسألوا الله من فضله، فإنها رأت ملكا، وإذا سمعتم نهيق الحمار فتعوذوا بالله من الشيطان، فإنه رأى شيطانا»

3303 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்துவிட்டன. கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்துவிட்டது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3303

நாம் வானவர்களைப் பார்க்க முடியும் என்றால் சேவல் சப்தத்தை வைத்து வானவர்களின் வருகையை அறியத் தேவை இல்லை. நாமே பார்த்து அறிந்து கொள்ளலாம்.

3768 – حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، قال أبو سلمة: إن عائشة رضي الله عنها، قالت: قال رسول الله صلى الله عليه وسلم يوما: «يا عائش، هذا جبريل يقرئك السلام» فقلت: وعليه السلام ورحمة الله وبركاته، ترى ما لا أرى «تريد رسول الله صلى الله عليه وسلم»

3768 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள், ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு' – அவர் மீதும் சலாம் பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய பரக்கத்தும் பொழியட்டும் என்று பதில் முகமன் சொல்லி விட்டு, நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன்.

நூல் : புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும் இருக்கும் போது வந்த வானவரை ஆயிஷா (ரலி) பார்க்கவில்லை. ஆயிஷா (ரலி)க்கு ஜிப்ரீல் சலாம் சொல்லும் போது கூட ஆயிஷா (ரலி)க்கு நேரடியாக சலாம் கூறாமல் நபியின் வழியாகவே சொல்கிறார்கள். இதிலிருந்து நபிமார்களைத் தவிர மற்றவர்கள் வானவர்களைக் காண முடியாது என்பது உறுதியாகிறது. நான் பார்க்காததை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று ஆயிஷா (ரலி) கூறியது இதை இன்னும் அழுத்தமாகக் கூறுகிறது.

சில வேளைகளில் மனித வடிவில் வானவர்கள் வந்த போது நபித்தோழர்கள் பார்த்துள்ளார்கள். ஆனால் அவர்கள் வானவர்கள் என்பதை நபித்தோழர்கள் அறியவில்லை. அவர் வந்து சென்ற பின்னர் வானவர் வந்தார் என்று நபிகள் சொன்ன பிறகே நபித்தோழர்கள் வானவர் வந்தார் என்பதை அறிந்து கொண்டார்கள்.

50 – حدثنا مسدد، قال: حدثنا إسماعيل بن إبراهيم، أخبرنا أبو حيان التيمي، عن أبي زرعة، عن أبي هريرة، قال: كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس، فأتاه جبريل فقال: ما الإيمان؟ قال: «الإيمان أن تؤمن بالله وملائكته، وكتبه، وبلقائه، ورسله وتؤمن بالبعث». قال: ما الإسلام؟ قال: " الإسلام: أن تعبد الله، ولا تشرك به شيئا، وتقيم الصلاة، وتؤدي الزكاة المفروضة، وتصوم رمضان ". قال: ما الإحسان؟ قال: «أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه فإنه يراك»، قال: متى الساعة؟ قال: " ما المسئول عنها بأعلم من السائل، وسأخبرك عن أشراطها: إذا ولدت الأمة ربها، وإذا تطاول رعاة الإبل البهم في البنيان، في خمس لا يعلمهن إلا الله " ثم تلا النبي صلى الله عليه وسلم: {إن الله عنده علم الساعة} [لقمان: 34] الآية، ثم أدبر فقال: «ردوه» فلم يروا شيئا، فقال: «هذا جبريل جاء يعلم الناس دينهم» قال أبو عبد الله: جعل ذلك كله من الإيمان

50 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈமான் என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும் என்று பதிலளித்தார்கள். அடுத்து அவர், இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தைக் கொடுத்து வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும் என்றனர். அடுத்து இஹ்ஸான் என்றால் என்ன? என்று அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றனர். அடுத்து அவர் மறுமை நாள் எப்போது? என்று கேட்க, அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்), (அதைப் பற்றிக்) கேட்கின்றவரை (உம்மை விட) மிக அறிந்தவரல்லர். அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற (அடிமட்ட) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவு அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும் என்று கூறிவிட்டு, உலக இறுதி பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது… எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள் என்றனர். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கேயும் காணவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவர் ஜிப்ரீல் ஆவார். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தர வந்திருந்தார் என்றனர்.

நூல் : புகாரி 50

நமது சபைகளுக்கு வானவர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களை நாம் பார்க்கிறோம் என்றால் அவர்கள் வானவர்கள் தான் என்று உறுதிப்படுத்த நபியவர்கள் இல்லை.

எனவே வானவர்கள் அமர்ந்திருப்பது போல் கிராபிக் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களைப் பரப்பி பாவத்தைச் சுமக்க வேண்டாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன