வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா?

வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா?

தாடி சம்மந்தமான ஒரு ஹதீஸில் (அஹ்மத் 21252) ரசூல் (ஸல்) அவர்கள் செருப்பு அணிந்தும், வேட்டி உடுத்தியும் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறி உள்ளார்கள். எனவே இந்த செயல் சுன்னத் ஆகுமா?

பதில்

நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் இது தான்:

حدثنا زيد بن يحيى حدثنا عبد الله بن العلاء بن زبر حدثني القاسم قال سمعت أبا أمامة يقول خرج رسول الله صلى الله عليه وسلم على مشيخة من الأنصار بيض لحاهم فقال يا معشر الأنصار حمروا وصفروا وخالفوا أهل الكتاب قال فقلت يا رسول الله إن أهل الكتاب يتسرولون ولا يأتزرون فقال رسول الله صلى الله عليه وسلم تسرولوا وائتزروا وخالفوا أهل الكتاب قال فقلت يا رسول الله إن أهل الكتاب يتخففون ولا ينتعلون قال فقال النبي صلى الله عليه وسلم فتخففوا وانتعلوا وخالفوا أهل الكتاب قال فقلنا يا رسول الله إن أهل الكتاب يقصون عثانينهم ويوفرون سبالهم قال فقال النبي صلى الله عليه وسلم قصوا سبالكم ووفروا عثانينكم وخالفوا أهل الكتاب

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூத்த அன்சாரிகளைக் கடந்து சென்றனர். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது அன்சார்களே (உங்கள் முடிகளை) மஞ்சளாகவோ, சிவப்பாகவோ ஆக்கிக் கொள்ளுங்கள். வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள் எனக் கூறினார்கள். அப்படியானால் வேதக்காரர்கள் கால்சட்டை அணிகின்றனர். வேட்டி அணிவதில்லையே என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் கால்சட்டையும் அணியுங்கள்! வேட்டியும் அணியுங்கள்! வேதக்காரர்களுக்கு மாறுசெய்யுங்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! வேதக்காரர்கள் காலுறை அணிகின்றனர். செருப்பு அணிவதில்லையே என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் காலுறைகளும் அணியுங்கள். செருப்பும் அணியுங்கள். வேதக்காரர்களுக்கு மாறுசெய்யுங்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! வேதக்காரர்கள் தங்கள் தாடிகளைக் கத்தரித்து மீசைகளை முழுமையாக வைக்கின்றனரே எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தாடிகளை முழுமையாக வைத்து மீசையைக் கத்தரியுங்கள் எனக் கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸின் வாசக அமைப்பில் இருந்து நீங்கள் கூறுவது போல் புரிந்து கொள்ள முடியாது.

யூதர்கள் நரை முடிக்குச் சாயம் போடுவதில்லை. நீங்கள் சாயம் போடுங்கள் என்ற கட்டளையில் இருந்து நரை முடிக்குச் சாயம் போடுவது சுன்னத் என்று புரிந்து கொள்ள முடியும்.

யூதர்கள் கால் சட்டை அணிகின்றனர். வேட்டி அணிவதில்லை என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் வேட்டி அணியுங்கள்! கால் சட்டை அணியாதீர்கள் என்று சொல்லி இருந்தால் அதை சுன்னத் என்று புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொல்லாமல் வேட்டியும் அணியுங்கள்! கால் சட்டையும் அணியுங்கள் எனக் கூறுகிறார்கள். அதாவது யூதர்கள் எதை அணிகிறார்களோ அதையும் அணியச் சொல்கிறார்கள். அவர்கள் எதை அணிவதில்லையோ அதையும் அணியச் சொல்கிறார்கள். யூதர்கள் அனிவதையே நாமும் அணிவது எப்படி சுன்னத்தாகும்?

இங்கே யூதர்களுக்கு மாறுசெய்வது எப்படி அமைகிறது? யூதர்கள் ஒன்றை அணியலாம் என்று நம்புகிறார்கள். மற்றொன்றை அணியலாகாது என்று நம்புகிறார்கள். நாமோ இரண்டையும் அணியலாம் என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கை தான் இங்கே சுன்னத்தாக ஆகின்றது.

நாம் கால்சட்டையையே அணிந்து கொண்டு வந்தாலும் வேட்டியையும் அனியலாம் என்று நம்பினால் போதும்.

இதை இதுபோல் அமைந்த இன்னொரு ஹதீஸ் மூலம் இதை தெளிவாக்கிக் கொள்ளலாம்.

யூதர்கள் செருப்பனிந்து தொழுவதில்லை. நீங்கள் செருப்பணிந்தும் தொழுங்கள் என்று நபியவர்கள் கட்டளை இட்டனர். இதன் பொருள் செருப்பணிந்து தொழுவது சுன்னத் என்பதல்ல. மாறாக நாம் செருப்பு அணியாமல் தொழுதாலும் செருப்பனிந்தும் தொழலாம் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்பவரை தடுக்காமல் இருக்க வேண்டும் என்பது தான்.

இந்த ஹதீஸை வைத்து செருப்பணிந்து தொழுவது தான் சுன்னத் என்று ஒருவரும் சொன்னதில்லை. இதைப் புரிந்து கொள்வது போல் நீங்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸையும் புரிந்து கொண்டால் குழப்பம் நீங்கி விடும்.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit