ஸலவாத்தும் ஸலாமும் ஆதாரமாகுமா?

ஸலவாத்தும் ஸலாமும் ஆதாரமாகுமா?

பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறுமாறு 33:56 வசனத்தில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

அதிகமதிகம் தன் மீது சலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஆர்வமூட்டியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் சலவாத் கூறுவதில் இருந்து அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று தெரிகிறதே என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூற வேண்டும் என்பது உண்மைதான். அது மிகச் சிறந்த வணக்கங்களில் ஒன்று தான். இதில் எந்த மறுப்பும் நமக்கு இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இவ்வுலகுடன் தொடர்பில் உள்ளனர் என்பதற்கும், இங்கே வருகை தருவார்கள் என்பதற்கும், நாம் கோருவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்பதற்கும் இதில் எந்த ஆதாரமும் இல்லை.

சலவாத் என்றால் நபிகள் நாயகத்தை  நோக்கி நாம் பேசுவது என்றும், அவர்களிடம் உதவி தேடுதல் என்றும் தவறாகப் புரிந்து கொண்டதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

சலவாத் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேண்டுவது அல்ல. மாறாக அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்று நாம் அல்லாஹ்விடம் செய்யும் பிரார்த்தனை தான் சலவாத்.

தொழுகைகளில் அத்தஹிய்யாத் எனும் இருப்பில் நாம் சொல்ல வேண்டிய சலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதை எல்லா முஸ்லிம்களும் தமது தொழுகைகளில் கூறி வருகின்றனர்.

அந்த சலவாத்தின் பொருளைப் பாருங்கள்!

இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ எவ்வாறு அருள் புரிந்தாயோ அது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக!

இது தான் இந்த சலவாத்தின் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது தான் சலவாத் என்பதை இந்த அர்த்தமே நமக்குச் சொல்லி விடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டவுடன் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் என்று சொல்கிறோம். அல்லது அல்லாஹும்ம சல்லி வசல்லிம் வபாரிக் அலைஹி என்று சொல்கிறோம். இதன் பொருள் என்ன? இறைவா அவருக்கு (முஹம்மது நபிக்கு) அருள் புரிவாயாக என்பதுதான் இதன் பொருள்.

எந்த சலவாத்தை எடுத்துக் கொண்டாலும் அனைத்துமே நபிகள் நாயகத்துக்கு நாம் துஆச் செய்யும் வகையில் தான் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் அதிகம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் வழியாகவே இந்த மார்க்கத்தை அல்லாஹ்  நமக்கு வழங்கினான். எனவே அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும்; மதிக்க வேண்டும் என்பது இயல்பாகும். அன்பு செலுத்துகிறோம்; மதிக்கிறோம் என்ற பெயரில் பிற சமுதாய மக்கள் எல்லை மீறியது போல் நாமும் எல்லை மீறக்கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த வழிமுறை தான் சலவாத்.

என்னை மதிப்பதாக இருந்தால் என்னை அழைக்கக் கூடாது; என்னிடம் பிரார்த்திக்கக் கூடாது; எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆச் செய்ய வேண்டும். அதுதான் சலவாத் என்று கற்றுத் தந்துள்ளார்கள்.

அவர்களுக்கு நாம் சலவாத் சொல்லும் இந்த நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்காமல் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தைத் தரவில்லை. அவர்கள் இவ்வுலகுக்குத் திரும்ப வருவார்கள் என்ற கருத்தையும் தரவில்லை. மரணித்த அவர்களுக்காக நாம் தான் துஆச் செய்ய வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையைத் தான் சலவாத் எனும் வணக்கம் அழுத்தமாகச் சொல்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் சொல்லும் சலவாத் எனும் துஆ அவர்களின் காதில் விழுமா? ஆன்மாக்களின் உலகில் அவர்கள் உயிருடன் இருந்தாலும் நாம் கூறும் சலவாத் அவர்களின் காதுகளில் விழாது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவாக்கி விட்டார்கள்.

سنن النسائي (3/ 91)

1374 – أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ، وَفِيهِ قُبِضَ، وَفِيهِ النَّفْخَةُ، وَفِيهِ الصَّعْقَةُ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ»قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ، وَقَدْ أَرَمْتَ أَيْ يَقُولُونَ قَدْ بَلِيتَ؟ قَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ»

நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்று தான் மரணித்தார்கள். அன்று தான் உலகத்தை அழிக்க சூர் ஊதப்படும். அன்று தான் எழுப்புதல் நிகழும். எனவே அன்றைய தினம் எனக்காக அதிகம் சலவாத் கூறுங்கள். நீங்கள் கூறும் சலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்கிப் போன நிலையில் எங்கள் சலவாத் எப்படி உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும் என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் உடல்களை மண் சாப்பிடுவதை அல்லாஹ் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)

நூல்கள் : நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத் 

எனக்காக நீங்கள் செய்யும் சலவாத் எனும் துஆவை நான் செவிமடுக்கிறேன் என்று கூறாமல் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். நாம் கூறும் சலவாத்தை அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

சலவாத் என்பது அல்லாஹ்வை அழைத்து பிரார்த்திப்பது என்பதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியுறும் அவசியம் எதுவும் இல்லை. எனவே இனின்னார் சலவாத் சலவாத் கூறினார்கள் என்ற தகவல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

(மேற்கண்ட ஹதீஸில் நபிமார்களின் உடல்களை மண் திண்ணாது என்று சொல்லப்படுகிறது. மண் திண்ணாமல் உள்ளதால் அவர்கள் செவியுறுவார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒரு நல்லடியாரின் உடல் நூறு ஆண்டுகள் பூமியின் மேற்பரப்பில் மண் திண்ணாத வகையில் கிடந்தது. ஆனாலும் அவரால் எதையும் அறிய இயலவில்லை. உடலை மண் திண்ணாது என்பதால் இவ்வுலகில் நடப்பதை அறிவார்கள் என்று அர்த்தம் இல்லை. இதை இறந்த பின் எதையும் அறியாத நல்லடியார் என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம்.)

ஒருவர் உயிருடன் இருந்தால் அவரை மண் சாப்பிடுவதில்லை. அவர் உயிருடன் இருப்பதே அவரை மண் சாப்பிடுவதில் இருந்து தடுத்து விடும். உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம். இவர்களில் யாரையாவது மண் தின்றுள்ளதா? உயிருடன் இருப்பவனை மண் சாப்பிடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் மண் சாப்பிடாது என்று சொல்லத் தேவை இல்லை. ஏனென்றால் உயிருடன் இருப்பவரை மண் சாப்பிடாது.

அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர்களின் உடலை மண் சாப்பிடுமா என்ற கேள்வியே பிறக்கிறது. இதற்கு, "நபிமார்கள் இறந்து விட்டாலும் அவர்களது உடலை மண் சாப்பிடாது'' என்ற கருத்தில் நபிகள் நாயகம் பதிலளிக்கிறார்கள். எனவே இது நபிமார்கள் உயிருடன் இல்லை என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.

ஸலாம் குறித்து  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் இதை உறுதி செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சலவாத் சொல்வது போல் ஸலாமும் சொல்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் இருப்பில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு – நபியே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் – என்று கூறுகிறோம். இது அவர்களை அழைத்துப் பேசுவது போல் அமைந்துள்ளது. இதைக் கூட அவர்கள் செவியுற மாட்டார்கள்.

பின் வரும் நபிமொழியில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

سنن النسائي (3/ 43)

1282 – أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ، ح وأَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّتِي السَّلَامَ»

இப்பூமியில் சுற்றிக் கொண்டிருக்கும் வானவர்களை அல்லாஹ் நியமித்துள்ளான். அவர்கள் என் சமுதாயத்தினரின் ஸலாமை எனக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்கள் : நஸாயீ, அஹ்மத், தாரிமி, ஹாகிம், இப்னு ஹிப்பான், தப்ரானி, அபூயஃலா, பஸ்ஸார் 

நபிகள் நாயகத்துக்குச் சொல்லப்படும் ஸலாமை ஆன்மாக்களின் உலகில் உயிருடன் இருக்கும் நபிகள் நாயகத்துக்கு எடுத்துச் சொல்லும் ஒரே பணிக்காக அல்லாஹ் சில வானவர்களை நியமித்துள்ளான். நாம் கூறும் ஸலாமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவிமடுப்பார்கள் என்றால் அதை எடுத்துச் சொல்லும் அவசியம் இல்லை. ஸலாமை எடுத்துச் சொல்வதற்காக வானவர்களை அல்லாஹ் நியமனம் செய்திருப்பதிலிருந்து நாம் கூறும் ஸலாமை அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது.

அவர்களை அடக்கம் செய்துள்ள இடத்தின் அருகில் நின்று அழைத்தாலும் அவர்கள் அதைச் செவியுற மாட்டார்கள்.

இறந்தவர்கள் இவ்வுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தில் நாம் முன்னர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இது ஒத்துப் போகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் கூறும் ஸலாம், வானவர்கள் எத்திவைப்பதால் தான் அவர்களுக்குத் தெரிய வருகிறது. மற்றவர்களை நாம் ஜியாரத் செய்யும் போது ஸலாம் கூறுகிறோம். அந்த ஸலாம் அவர்களுக்கு கேட்காது என்பதும் இதிலிருந்து உறுதியாகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் கூறும் ஸலாமை எடுத்துச் சொல்ல வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போல் மற்றவர்களுக்கு இவ்வாறு நியமிக்கப் படாததால் அவர்கள் அதை அறிந்து கொள்ள மாட்டார்கள்.

மேலும் ஸலாமை எத்தி வைப்பதற்குத் தான் வானவர்களை அல்லாஹ் நியமித்துள்ளான். அது தவிர வேறு எந்த விஷயத்துக்காக நாம் நபியை அழைக்கவும் கூடாது. அழைத்தாலும் அதைச் செவியுறவும் மாட்டார்கள். இதற்காக வானவர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் அவர்கள் அறியவும் மாட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்க்கியுள்ளது.

இதற்கு இன்னும் வலுவான ஆதாரமும் உள்ளது.

அத்தஹிய்யாத்தில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு என்று நபிக்கு நாம் ஸலாம் சொல்கிறோம். இப்போது நாம் கூறுவது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் நபித்தோழர்கள் தமது தொழுகைகளில் ஸலாம் கூறினார்கள். ஒரு நேரத்தில் ஏராளமான நபித்தோழர்கள் சுன்னத்தான, உபரியான தொழுகைகளைத் தொழுவார்கள். மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது போல் மேலும் பல பள்ளிவாசல்களில் கடமையான தொழுகைகளையும் அவர்கள் தொழுவார்கள்.

தொழுகையில் கூறும் ஸலாம் நபியவர்களுக்குக் கேட்கும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) வ அலைக்கு முஸ்ஸலாம் என்று ஒவ்வொரு வினாடி நேரமும் பதில் சொல்லிக் கொண்டே இருந்திருப்பார்கள். ஏனெனில் ஸலாம் கூறப்பட்டு அது செவியில் விழுந்தால் அதற்குப் பதில் அளிப்பது அவசியமாகும்.

அப்படி அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கவில்லை என்பதால் நபித்தோழர்கள் கூறிய ஸலாமை அவர்கள் உயிருடன் இருக்கும் போது செவியுறவில்லை என்று தெரிகிறது.

நேருக்கு நேராக வந்து யார் ஸலாம் கூறினார்களோ அதை மட்டும் கேட்டு பதிலளித்தார்கள். நேருக்கு நேர் வராமல்  தொழுகையில் ஏராளமான நபித்தோழர்கள் ஸலாம் கூறினார்கள். அவற்றில் ஒரு ஸலாமுக்குக் கூட நபியவர்கள் பதிலளிக்கவில்லை.

உயிருடன் வாழும் போதே யார் அருகில் வந்து நேருக்கு நேராகப் பார்த்து ஸலாம் கூறினார்களோ அதை மட்டும் தான் கேட்டார்கள். அதற்கு மட்டும் தான் பதில் சொன்னார்கள் என்றால் மரணித்த பின்னர் எப்படி அனைவரின் ஸலாமையும் செவியுற முடியும்?

எனவே இறந்தவரை ஜியாரத் செய்யச் செல்லும் போது நாம் ஸலாம் கூறுவது அவர்களுக்குக் கேட்கும் என்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும் என்று துஆ செய்வதற்காகவே என்பதில் சந்தேகம் இல்லை.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று நேரடியாக அழைப்பது போல் அமைந்துள்ள ஸலாம் உயிருள்ளவர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் அதைச் செவியுற்று பதில் அளிப்பார்கள் என்பதற்காகச் சொல்லப்படுகிறது. மரணித்தவர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காகச் சொல்லப்படுகிறது. இதனால் தான் நாம் கூறும் ஸலாம் நபிகள் நாயகத்துக்கு வானவர்கள் மூலம் எடுத்துச் சொல்லப்படுகிறது.

குழந்தையைக் கொஞ்சும் போது கண்ணே மணியே என்று கூறுகிறோம். அந்தக் குழந்தையை அழைத்துப் பேசும் வடிவில் இருந்தாலும் அதன் பொருள் அழைப்பதல்ல. ஏனெனில் அந்தக் குழந்தைக்கு இதன் அர்த்தம் விளங்காது. நமது அன்பை வெளிப்படுத்துதல் மட்டுமே இதன் நோக்கமாகும்.

நிலா நிலா ஓடிவா என்றும், அணிலே அணிலே என்றும் நாம் படிப்பது குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவதற்குத் தான். அணிலையும், நிலாவையும் அழைத்துப் பேசுவதற்கு அல்ல. ஏனெனில் இவை பேசாது; நம் பேச்சைக் கேட்காது.

நமது பேச்சைக் கேட்டு புரிந்து கொள்ளக் கூடியவர்களை நோக்கிப் பேசினால் அதற்கு நேரடி அர்த்தம் தான் கொடுக்க வேண்டும். கணவன் மரணித்துக் கிடக்கும் போது என்னை விட்டு போய் விட்டீர்களே என்று மனைவி புலம்பினால் அவரிடமே பேசுவது என்பது அர்த்தம் அல்ல. என்னை விட்டுப் போய்விட்டார் என்பதைத் தான் என்னை விட்டுப் போய்விட்டாய் என்று முன்னிலையாகப் பேசுகிறார்.

எனவே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று முன்னிலையாகப் பேசுவதால் அவர்கள் ஸலாமைச் செவியுறுகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஆகாது.

அடுத்து பினவரும் ஹதீஸையும் தீய கொள்கையுடையவர்கள் தமது ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

سنن أبي داود (1/ 622)

 2041 – حدثنا محمد بن عوف ثنا المقري ثنا حيوة عن أبي صخر حميد بن زياد عن يزيد بن عبد الله بن قسيط عن أبي هريرة  : أن رسول الله صلى الله عليه و سلم قال " ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام " .

எனக்கு எந்த அடியான் ஸலாம் கூறினாலும் அவருக்கு நான் பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனது உயிரை எனக்குத் திருப்பித் தராமல் இருக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அபூதாவூத் 

இன்னும் பல நூல்களிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆதாரப்பூர்வமானது பல அறிஞர்கள் கூறியிருந்தாலும் இதன் கருத்தில் தெளிவு இல்லை. தனக்குத்தானே இது முரண்படுகிறது. எண்ணற்ற ஆதாரங்களுடன் இது மோதுகிறது. திருக்குர்ஆனுக்கும் முரணாக அமைந்துள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இதில் உள்ள குழப்பங்களை விரிவாகப் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மரணித்த அனைவரும் ஆன்மாக்களின் உலகில் எப்போதும் உயிருடன் தான் உள்ளனர். எப்போதும் உயிரற்ற நிலையில் உள்ளதாகவும் ஸலாம் கூறும் போது மட்டும் உயிர் கொடுக்கப்படுவதாகவும் சொல்வது இதற்கு முரணாகும்.

ஆன்மாக்களின் உலகில் உள்ள உயிரை இது குறிக்கவில்லை. மரணிப்பதற்கு முன் உயிருடன் வாழ்ந்தார்களே அது போன்ற உயிர் கொடுப்பது பற்றி இந்த ஹதீஸ் கூறுகிறது என்று கூறுவார்களானால் அதுவும் தவறாகும்.

அப்படி இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமது ஸலாத்துக்குப் பதில் கூறுவது நம் செவிகளில் விழ வேண்டும். அப்படி விழுவதில்லை என்பதால் இந்த வகை உயிரைக் குறிக்கவில்லை என்று ஆகிறது.

உலகில் உள்ள முஸ்லிம்கள் தொழுகையில் கூறும் சலவாத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு வினாடியிலும் பல்லாயிரக்கணக்கான ஸலாம் சொல்லப்படுகிறது. அப்படியானால் பதில் சொல்வதற்காக உயிரைத் திரும்பக் கொடுக்கும் பேச்சுக்கு இடமில்லை. ஒரு வினாடி கூட உயிர் பிரிந்திருக்காது எனும் போது ஸலாம் சொல்லும் போது மட்டும் பதில் சொல்வதற்காக உயிர் மீண்டும் வழங்கப்படுகிறது என்பது பொருளற்றதாகி விடுகிறது.

இது உண்மை என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு மைக்ரோ செகண்டிலும் நபியவர்கள் ஸலாமுக்குப் பதில் கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். எப்போது பார்த்தாலும் வ அலைகு முஸ்ஸலாம் என்று அவர்கள் சொல்வதை நிறுத்த முடியாது. அபடியானால் இது கப்ர் வணங்கிகளுக்கு எதிரான ஆதாரமாகவே அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமது கோரிக்கைகளைச் செவிமடுப்பார்கள் என்றும், அவர்களைப் புகழும் சபைகளுக்கு வருகை தருவார்கள் என்ற வாதம் இப்போது அடிபட்டுப் போகிறது. 24 மணி நேரமும் வ அலைக்கு முஸ்ஸலாம் என்று சொல்வதிலேயே நபியின் முழு நேரமும் முடிந்து போய்விடும்.

ஒரு வினாடியில் பல்லாயிரம் பேர் ஸலாம் கூறினால் அதை மனிதரால் கேட்க முடியாது. இது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தன்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுகில் உயிருடன் வாழும் போது நபித்தோழர்கள் தொழுகையில் ஸலாம் கூறியதை அவர்கள் செவியுறவும் இல்லை. அதற்குப் பதில் ஸலாமும் கூறியதில்லை. இதை முன்னர் விளக்கியுள்ளோம். உயிரைத் திருப்பிக் கொடுத்தாலும் ஒரு நேரத்தில் பல்லாயிரம் ஓசைகளைக் கேட்டு பிரித்தரிவது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதால் அதற்கு முரணாக இது அமைந்துள்ளது.

ஒரு ஹதீஸை ஆதாரமாகக்  காட்டுவோர் அதில் அடங்கியுள்ள எல்லா கருத்துக்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக் கொள்ள முடியாத வகையிலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எண்ணற்ற ஆதாரங்களுக்கும் எதிரான வகையிலும் உள்ளதால் இது ஹதீஸ் அல்ல. இது கட்டுக்கதை தான்.

இவ்வுலகில் வாழும் போது தனக்கு அறிமுகமாக இருந்தவரின் அடக்கத்தலத்தை ஒரு அடியான் கடந்து செல்லும் போது ஸலாம் கூறினால் இறந்தவர் இவரை அறிந்து கொள்வதுடன் அவரது ஸலாமுக்குப் பதிலும் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.

தாரீக் அல்கதீப், அல்ஃபவாயித், இப்னு அஸாகிர், தைலமீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் சைத் பின் அஸ்லம் என்பார் பலவீனமானவர். இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது ஆதாரமாக ஆகாது.

இது போல் இப்னு அபித்துன்யா என்பார் தனது நூலில் ஒரு ஹதீஸைப் பதிவு செய்துள்ளார். சைத் பின் அஸ்லம் என்பார் அபூ ஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சைத் பின் அஸ்லம் அபூ ஹுரைராவைச் சந்தித்ததில்லை என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜவ்ஹரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

மேலும் இது வரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு முரணாக உள்ளதால் இது கட்டுக்கதைகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதாகும்.

Leave a Reply