அத்தியாயம் : 6 அல் அன்ஆம்

அத்தியாயம் : 6 

அல் அன்ஆம் – கால்நடைகள்

மொத்த வசனங்கள் : 165

கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1.எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே வானங்களையும்,507 பூமியையும் படைத்தான். இருள்களையும்,303 ஒளியையும் ஏற்படுத்தினான். பின்னரும் (ஏகஇறைவனை) மறுப்போர் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.

2.அவனே உங்களைக் களிமண்ணால்503 படைத்தான்.368 பின்னர் (மரணத்திற்கான) காலக்கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக்கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!506

3.வானங்களிலும்,507 பூமியிலும் அவனே அல்லாஹ். அவன் உங்களின் இரகசியத்தையும், வெளிப்படையானதையும் அறிகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் அறிகிறான்.

4. தம் இறைவனது சான்றுகளில் ஏதேனும் ஒரு சான்று அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.

5. உண்மை அவர்களிடம் வந்தபோது அதை அவர்கள் பொய்யெனக் கருதினர். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது குறித்த விபரங்கள் பின்னர் அவர்களிடம் வந்து சேரும்.

6.இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா? உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம். வானத்தை507 அவர்கள் மீது தொடர்ந்து மழைபொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம்.

7.(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட152 வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும்312 "இது வெளிப்படையான சூனியத்தைத்357 தவிர வேறு இல்லை'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.

8."இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?'' என அவர்கள் கூறுகின்றனர்.154வானவரை நாம் அனுப்பியிருந்தால்153 காரியம் முடிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

9. வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.154

10. (முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தவர்களைச் சூழ்ந்தது.

11. "பூமியில் பயணம் செய்து, பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்பதைச் சிந்தியுங்கள்!'' என்று கூறுவீராக!

12. "வானங்களிலும்507, பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வுக்கே எனக் கூறுவீராக! அருள் புரிவதைத் தன் மீது அவன் கடமையாக்கிக் கொண்டான். கியாமத் நாளில்1 அவன் உங்களைத் திரட்டுவான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

13. பகலிலும், இரவிலும் வாழ்பவை அவனுக்கே உரியன. அவன் செவியுறுபவன்; 488 அறிந்தவன்.

14. "வானங்களையும்,507 பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான்.463 அவன் உணவளிக்கப்படுவதில்லை'' என்று கூறுவீராக! "கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்'' எனவும் கூறுவீராக!

15. "என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின்1 வேதனையை அஞ்சுகிறேன்'' எனக் கூறுவீராக!

16. அந்நாளில்1 வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி.

17. அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

18. அவனே தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்; அவன் ஞானமுள்ளவன்; நன்கறிந்தவன்.

19. "மிகப் பெரும் சாட்சியம் எது?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன். இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது''187 எனக் கூறுவீராக! "அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா? நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்'' என்று நீர் கூறுவீராக! "வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே. நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டவன்'' எனவும் கூறுவீராக!

20. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை (முஹம்மதை) அறிவார்கள்.25 தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

21. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

22. அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில்1 "நீங்கள் கற்பனை செய்த உங்கள் தெய்வங்கள் எங்கே?'' என்று இணை கற்பித்தோரிடம் கேட்போம்.

23. "எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் இணை கற்பித்தோராக இருக்கவில்லை'' என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களின் பதிலாக இருக்காது.

24. தமக்கெதிராக அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் கற்பனை செய்த யாவும் அவர்களை விட்டு மறைந்து போகும்.

25. (முஹம்மதே!) உம்மிடம் (வந்து) செவிமடுப்போரும் அவர்களில் உள்ளனர். அதைப் புரிந்து கொள்ளாத வகையில் அவர்களின் உள்ளங்கள் மீது மூடிகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தி விட்டோம். அத்தனை சான்றுகளையும் அவர்கள் பார்த்தாலும் அதை நம்ப மாட்டார்கள். (நம்மை) மறுப்போர் உம்மிடம் வரும்போது "இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' எனக் கூறி உம்மிடம் தர்க்கம் செய்வார்கள்.

26. அவர்கள் அதை விட்டு தாமும் ஒதுங்கிக் கொண்டு, மற்றவர்களையும் தடுக்கின்றனர். அவர்கள் தம்மையே அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

27. நரகின் முன்னே அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீராயின் "நாங்கள் திரும்ப அனுப்பப்படலாகாதா? எங்கள் இறைவனின் வசனங்களைப் பொய்யெனக் கருதாமல், நம்பிக்கை கொண்டோராக ஆவோமே'' என்று கூறுவார்கள்.

28. மாறாக, இதற்கு முன் அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது. அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்டதையே மீண்டும் செய்வார்கள். அவர்கள் பொய்யர்களே.

29. "நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

30. தமது இறைவன் முன் அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீராயின் "இது உண்மையல்லவா?'' என்று இறைவன் கேட்பான். "ஆம். எங்கள் இறைவன் மீது ஆணையாக! (உண்மையே)'' எனக் கூறுவார்கள். "நீங்கள் (என்னை) மறுத்துக் கொண்டிருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று (இறைவன்) கூறுவான்.

31. அல்லாஹ்வின் சந்திப்பைப்488 பொய்யெனக் கருதியோர் நட்டமடைந்து விட்டனர். திடீரென யுகமுடிவு நேரம்1 அவர்களிடம் வரும்போது "உலகில் வரம்பு மீறி நடந்து கொண்டதால் எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே'' என்று கூறுவார்கள். தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பார்கள்.265 கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது.

32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

33. (முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.

34. (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை.30 தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.

35. (முஹம்மதே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தெரிந்தால் உமக்கு முடியுமானால் பூமியில் சுரங்கத்தை ஏற்படுத்தி, அல்லது வானத்தில்507 ஏணியை அமைத்து அவர்களிடம் அற்புதத்தைக் கொண்டு வாரும்! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான்.81 அறியாதவராக நீர் ஆகி விடாதீர்!

36. செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

37. "இவரது இறைவனிடமிருந்து இவருக்கு அற்புதம் அருளப்பட்டிருக்க வேண்டாமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "அற்புதத்தை அருளிட அல்லாஹ்வே ஆற்றலுடையவன்'' எனக் கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

38. பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை.157 பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

39. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்களாவர்; ஊமைகளாவர். இருள்களில்303 அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் செலுத்துகிறான்.

40. "உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது யுகமுடிவு நேரம்1 வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்!'' என்று கேட்பீராக!

41. மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான்.

42. (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம்.

43. அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.

44. அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்தபோது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.

45. எனவே அநீதி இழைத்த கூட்டத்தினர் வேரறுக்கப்பட்டனர். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

46."உங்கள் செவிப்புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

47."அல்லாஹ்வின் வேதனை திடீரென்று அல்லது பகிரங்கமாக உங்களிடம் வருமானால் அநீதி இழைத்த கூட்டத்தினர் தவிர (வேறு) யாரும் அழிக்கப்படுவார்களா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று கேட்பீராக!158

48.நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் தவிர நாம் தூதர்களை அனுப்புவதில்லை. நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

49. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் குற்றம் செய்து கொண்டிருந்ததால் வேதனை அவர்களை வந்தடையும்.

50."அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

51."தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ17 இல்லை'' என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர்.

52.தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

53."நம்மில் இ(ந்த அற்பமான)வர்களுக்குத் தானா அல்லாஹ் அருள் புரிய வேண்டும்?'' என்று அவர்கள் கூறுவதற்காக அவர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம்.484 நன்றி செலுத்துவோரை அல்லாஹ் நன்கறிந்தவன் அல்லவா?

54. (முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் "உங்கள் மீது ஸலாம்159உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனக் கூறுவீராக!

55. குற்றவாளிகளின் பாதை தெளிவாகத் தெரிவதற்காக இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

56. "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன்'' என்று கூறுவீராக! "உங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்ற மாட்டேன். (பின்பற்றினால்) வழிதவறி விடுவேன். நேர்வழி பெற்றவனாக ஆகமாட்டேன்'' என்றும் கூறுவீராக!

57. "நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். நீங்கள் அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (எவருக்கும்) இல்லை.234 அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்'' என்றும் கூறுவீராக!

58."நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அநீதி இழைத்தவர்களை அல்லாஹ் அறிந்தவன்'' என்றும் கூறுவீராக!

59. மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில்303 உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில்157 இல்லாமல் இல்லை.

60. அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

61.அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை160அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள்161அவரைக் கைப்பற்றுகிறார்கள்.165 அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

62.பின்னர் அவர்களது உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவார்கள். கவனத்தில் கொள்க! அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவன் விரைவாகக் கணக்கெடுப்பவன்.

63. "இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்'' என்று பணிவாகவும், இரகசியமாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்யும்போது "தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து303 உங்களைக் காப்பாற்றுபவன் யார்?'' என்று கேட்பீராக!

64. "இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக!

65. "உங்களுக்கு மேலே இருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழே இருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்பிடவும், உங்களைப் பல பிரிவுகளாக்கி ஒருவரின் கொடுமையை மற்றவர் சுவைக்கச் செய்திடவும் அவன் ஆற்றலுடையவன்'' என்றும் கூறுவீராக! அவர்கள் புரிந்து கொள்வதற்காகச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக!

66.இது உண்மையாக இருந்தும் உமது சமுதாயத்தினர் பொய்யெனக் கருதுகின்றனர். "உங்களுக்கு நான் பொறுப்பாளன் அல்ல''81 என்று கூறுவீராக!

67. ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!

68. நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும்போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்!

69. அவர்களைப் பற்றிய விசாரணையில் (இறைவனை) அஞ்சுவோருக்கு எந்தப் பங்கும் இல்லை. எனினும் அவர்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக அறிவுரை கூறுதல் (உங்களுக்கு) உள்ளது.

70. யார் தமது மார்க்கத்தை விளையாட்டாகவும், வீணாகவும் ஆக்கி, இவ்வுலக வாழ்க்கையும் அவர்களை மயக்கி விட்டதோ அவர்களை விட்டு விடுவீராக! தான் செய்தவற்றுக்கு ஒவ்வொருவரும் கூலி கொடுக்கப்படுவது பற்றி இதன் மூலம் அறிவுரை கூறுவீராக! அல்லாஹ்வையன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ17 அவர்களுக்கு இல்லை. அவர்கள் அனைத்து வகை ஈட்டுத் தொகையை வழங்கினாலும் அவரிடம் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் செய்தவற்றுக்கே கூலி கொடுக்கப்படுவார்கள். அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் சூடேற்றப்பட்ட பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

71."எங்களுக்கு நன்மையும், தீங்கும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போமா? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் வந்த வழியே திருப்பப்படுவோமா? (அவ்வாறு திரும்பினால்) 'எங்களிடம் வந்து விடு' என நேர்வழிக்கு அழைக்கும் நண்பர்கள் இருந்தும், பூமியில் ஷைத்தான்கள் யாரை வழிகெடுத்து குழப்பத்தில் தள்ளி விட்டார்களோ அவனைப் போல் ஆகி விடுவோம்'' எனக் கூறுவீராக! "அல்லாஹ்வின் வழியே நேர்வழி. அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்றும் கூறுவீராக!

72. தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்!

73. அவனே வானங்களையும்,507 பூமியையும் தக்க காரணத்துடன் படைத்தான். 'ஆகு' என்று அவன் கூறும் நாளில் அது ஆகி விடும். அவனது சொல் உண்மையானது. ஸூர் ஊதப்படும் நாளில்1ஆட்சி அவனுக்கே உரியது. மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் அறிபவன்; அவன் ஞானமிக்கவன்; நன்கறிந்தவன்.

74."சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்'' என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

75.உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள்507 மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.

76. இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்தபோது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.

77.சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்'' என்றார். அது மறைந்தபோது "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்'' என்றார்.

78. சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது'' என்றார். அது மறைந்தபோது "என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்'' எனக் கூறினார்.162

79. "வானங்களையும்,507 பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்'' (எனவும் கூறினார்)

80.அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். "அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?''

81. "அல்லாஹ் உங்களுக்குச் சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?'' (என்றும் அவர் கூறினார்.)

82. நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.

83. இது நமது சான்றாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக இதை அவருக்கு வழங்கினோம். நாம் நாடியவருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

84, 85, 86. அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித்தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விடச் சிறப்பித்தோம்.26

87. அவர்களின் முன்னோரிலும், அவர்களது வழித்தோன்றல்களிலும், அவர்களது சகோதரர்களிலும் (பலரைத்) தேர்வு செய்து அவர்களை நேரான வழியில் செலுத்தினோம்.

88. இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.498

89. அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும்,164 நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம்.

90. அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். எனவே அவர்களின் வழியை (முஹம்மதே!) நீரும் பின்பற்றுவீராக! "இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை; இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை'' எனக் கூறுவீராக!

91. "எந்த மனிதருக்கும் அல்லாஹ் எதையும் அருளவில்லை'' என்று அவர்கள் கூறியதால் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை. "ஒளியாகவும், மனிதர்களுக்கு நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை அருளியவன் யார்?" என்று கேட்டு, 'அல்லாஹ்' எனக் கூறுவீராக! "அதை ஏடுகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறீர்கள்! அதைப் பகிரங்கப்படுத்துகிறீர்கள். அதிகமானதை மறைத்தும் வருகிறீர்கள்! நீங்களும், உங்கள் முன்னோர்களும் அறிந்திராதவை உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.'' (என்றும் கூறுவீராக!) பின்னர் அவர்கள் மூழ்கிக் கிடப்பதில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டு விடுவீராக!

92. இது, தாய்க்கிராமத்தை (மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம்.281 பாக்கியம் பெற்றதும், தனக்கு முன்சென்றவற்றை4உண்மைப்படுத்துவதுமாகும். மறுமையை நம்புவோர் இதை நம்புகின்றனர். அவர்கள் தமது தொழுகையில் பேணுதலாகவும் உள்ளனர்.

93.அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் 'எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், 'அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள்165 அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று166 இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (எனக் கூறுவார்கள்).

94. "உங்களுக்கு நாம் வழங்கியவற்றை உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டுவிட்டு உங்களை ஆரம்பத்தில் நாம் படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பரிந்துரையாளர்களை17 நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்து விட்டன. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன'' (என்று கூறப்படும்.)

95.அல்லாஹ்வே விதைகளையும், கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்பவன். உயிரற்றதிலிருந்து441 உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன். அவனே அல்லாஹ். எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

96. அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதி தருவதாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

97.தரை மற்றும் கடலின் இருள்களில்303 நீங்கள் வழியை அறிந்து கொள்வதற்காக உங்களுக்காக நட்சத்திரங்களை அவனே ஏற்படுத்தினான். அறிகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.

98. அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான்.368 (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும்167 உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.

99. அவனே வானிலிருந்து507 தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும்போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

100.ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும்போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன்.10 அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

101. (அவன்) வானங்களையும்,507 பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

102. அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்.

103. அவனைக் கண்கள் பார்க்காது.21 அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

104. "உங்கள் இறைவனிடமிருந்து சான்றுகள் உங்களிடம் வந்து விட்டன. அதைக் கவனிப்போருக்கு அது நன்மையாகும். அதைப் பார்க்காதிருப்போருக்கு அது கேடாகும். நான் உங்களுக்குக் காவலன் அல்லன்'' (என்று கூறுவீராக)

105. "(மற்றவர்களிடம்) கற்று விட்டுக் கூறுகிறீர்''169 என்று அவர்கள் கூறுவதாலும், அறிகின்ற சமுதாயத்திற்கு இதைத் தெளிவுபடுத்திடவும் இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.

106. (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை கற்பித்திருக்க மாட்டார்கள். உம்மை அவர்களுக்குக் காவலராக நாம் ஆக்கவில்லை. அவர்களுக்கு நீர் பொறுப்பாளரும் அல்லர். 81

108.அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.170 இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

109. "எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன எனக் கூறுவீராக!269 "அது நிகழும்போது அவர்கள் நம்ப மாட்டார்கள்'' என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

110.அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் புரட்டுவோம். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுவோம்

111.அவர்களிடம் வானவர்களை நாம் இறக்கினாலும், இறந்தோர் அவர்களுடன் பேசினாலும், ஒவ்வொரு பொருளையும் அவர்களின் கண்முன்னே நாம் ஒன்று திரட்டினாலும், அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியாதவர்கள்.

112.இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை5 ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

113.மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் அச்சொல்லைச் செவிமடுப்பதற்காகவும், அதை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்து வந்ததை(த் தொடர்ந்து) செய்வதற்காகவும் (இவ்வாறு ஆக்கினோம்)

114.தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் அல்லாதவர்களையா தேடுவேன்?234 அவனே இவ்வேதத்தை தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களிடம் அருளினான். (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் "இது உமது இறைவனிடமிருந்து உண்மையை உள்ளடக்கியதாக அருளப்பட்டது'' என்பதை அறிவார்கள். எனவே சந்தேகப்படுபவராக நீர் ஆகி விடாதீர்!

115.உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது கட்டளைகளை155 மாற்றுபவன் எவனும் இல்லை.30 அவன் செவியுறுபவன்; 488 அறிந்தவன்.

116.பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

117. "தனது பாதையை விட்டும் வழிதவறியவன் யார்?' என்பதை உமது இறைவன் நன்றாக அறிபவன். நேர்வழி பெற்றோரையும் அவன் மிக அறிபவன்.

118.நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்! 171

119. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?171 நீங்கள் நிர்பந்திக்கப்படும்போது431 தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான்.42 அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

120.பாவங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் விட்டு விடுங்கள்! பாவத்தைச் செய்தோர், தாம் செய்து வந்ததன் காரணமாகத் தண்டிக்கப்படுவார்கள்.

121.அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்!171 அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.

122.இறந்தவனை உயிர்ப்பித்து, மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன், இருள்களில்303 கிடந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன.

123.இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் மிகப் பெரிய குற்றவாளிகளைச் சூழ்ச்சி செய்வோராக ஆக்கியுள்ளோம். அவர்கள் தமக்கெதிராகவே சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

124.அவர்களிடம் ஏதேனும் சான்று வருமானால் "அல்லாஹ்வின் தூதர்களுக்கு வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் வழங்கப்படும் வரை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். "தனது தூதை எங்கே வைப்பது? (யாரிடம் கொடுப்பது)" என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். குற்றம் செய்து கொண்டிருந்தோருக்கு அவர்கள் செய்து வந்த சூழ்ச்சியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கடும் வேதனையும் கிடைக்கும்.

125. ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில்507 ஏறிச் செல்பவனைப் போல் இறுகச்செய்து விடுகிறான்.172 இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

126. இதுவே உமது இறைவனின் நேரான வழி. சிந்திக்கின்ற சமுதாயத்திற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

127. அவர்களுக்குத் தமது இறைவனிடம் அமைதி இல்லம் இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவனே அவர்களின் பொறுப்பாளியாவான்.

128.அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்1 "ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்'' (என்று கூறுவான்). அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவா! எங்களில் ஒருவர் மற்றவர் மூலம் பயனடைந்தனர். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் அடைந்து விட்டோம்'' என்று கூறுவார்கள். "நரகமே உங்கள் தங்குமிடம். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். அல்லாஹ் நாடுவதைத் தவிர''173(என்று கூறுவான்.) உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

129.அநீதி இழைத்தோரின் செயல்களின் காரணமாக அவர்களில் ஒருவரை மற்றவருக்கு இவ்வாறே நண்பர்களாக ஆக்குவோம்.

130.ஜின், மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை1 நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. "(ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம்'' எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.

131.ஊரார் கவனமின்றி இருக்கும் நிலையில் (அவர்கள் செய்த) அநியாயத்தின் காரணமாக அவ்வூராரை உமது இறைவன் அழிப்பதில்லை என்பதே இ(றைத் தூதர்களை அனுப்புவ)தற்குக் காரணம்.

132.ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்தவற்றின் காரணமாகப் பல தகுதிகள் உள்ளன. அவர்கள் செய்வதை உமது இறைவன் கவனிக்காதவனாக இல்லை.

133.உமது இறைவன் தேவைகளற்றவன்; 485 இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித்தோன்றல்களிலிருந்து46 உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.

134. உங்களுக்கு எச்சரிக்கப்பட்டது வந்தே தீரும். நீங்கள் வெற்றி பெறுவோர் அல்லர்.

135. "என் சமுதாயமே! நீங்கள் உங்கள் வழியில் செயல்படுங்கள்! நானும் (எனது வழியில்) செயல்படுகிறேன். அவ்வுலகின் முடிவு யாருக்குச் சாதகமாக இருக்கும்? என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

136. அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்களிலும், கால்நடைகளிலும் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். "இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது'' என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங்களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். அல்லாஹ்வுக்கு உரியது, அவர்களின் தெய்வங்களைச் சேருமாம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.

137.இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

138."இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும், பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாது'' என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.

139."இந்தக் கால்நடைகளின் வயிற்றில் உள்ளவை எங்களில் ஆண்களுக்கு மட்டுமே உரியவை. எங்களில் பெண்களுக்குத் தடுக்கப்பட்டவை. அவை இறந்தே பிறந்தால் அதில் அனைவரும் பங்காளிகள்'' எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் இக்கூற்றுக்காக அவர்களை அவன் தண்டிப்பான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

140.அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும்,487அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நட்டமடைந்தனர்; வழிகெட்டனர்; நேர்வழி பெறவில்லை.

141.படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஜகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

142.கால்நடைகளில் சுமப்பவற்றையும், சுமக்காதவற்றையும் (அவன் படைத்தான்). அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

143."(பலியிடும் பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!'' எனக் கேட்பீராக!

144."ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?'' என்று கேட்பீராக! இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குக் கூறியபோது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? அறிவின்றி மக்களை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

145."தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட42 பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால்431உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். 171

146.குளம்பு மற்றும் நகங்களுக்கிடையே பிளவில்லாத ஒவ்வொன்றையும் யூதர்களுக்குத் தடை செய்திருந்தோம். ஆடு, மாடு ஆகியவற்றின் கொழுப்புகளில் அவற்றின் முதுகுகள் அல்லது சிறு குடல்கள் சுமந்திருப்பவை, அல்லது எலும்புடன் கலந்து விட்டவை தவிர மற்றவைகளை (கொழுப்புகளை) அவர்களுக்குத் தடை செய்திருந்தோம். அவர்கள் அநீதி இழைத்ததற்காக இவ்வாறு நாம் தண்டித்தோம். நாம் உண்மையே கூறுகிறோம்.

147.(முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் "உங்கள் இறைவன் விசாலமான அருளுக்குரியவன்; (ஆயினும்) குற்றவாளிகளான கூட்டத்திற்கு அவனது வேதனை தடுக்கப்படாது'' எனக் கூறுவீராக!

148."அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணைகற்பித்திருக்க மாட்டோம். எதையும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்'' என்று இணைகற்பிப்போர் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். "உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை'' என்று கேட்பீராக!

149."முழுமையான சான்று அல்லாஹ்வுக்கே உரியது'' என்று கூறுவீராக! அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான்.

150."அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக) சாட்சியமளித்தால் அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, மறுமையை நம்பாதோரின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்! அவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.

151."வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்!487 உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.463 வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

152அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.68 உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

153.இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

154.பின்னர் தமது இறைவனின் சந்திப்பை488 அவர்கள் நம்புவதற்காக மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். அது, நன்மை செய்தோருக்கு (நன்மையை) நிறைவு செய்வதாகவும், ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்துவதாகவும், நேர்வழியாகவும், அருளாகவும் இருந்தது.

155.இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்!

156, 157."எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது; நாங்கள் அதைப் படிக்கத் தெரியாமல் இருந்தோம்'' என்றும், "எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் அவர்களை விட நேர்வழி பெற்றிருப்போம்'' என்றும் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வேதத்தை அருளினோம்). உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றும், நேர்வழியும் அருளும் வந்து விட்டன. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நமது வசனங்களைப் புறக்கணிப்போருக்கு அவர்கள் புறக்கணித்து வந்த காரணத்தினால் கடுமையான வேதனையை அளிப்போம்.26

158.(முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை,153 அல்லது உமது இறைவன் வருவதை,61 அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில், ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங்களைச் செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன் தராது.384 "நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' எனக் கூறுவீராக!

159.தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

160.நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமையின் அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

161."எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை'' என்று கூறுவீராக!

162, 163."எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில்295 நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக!26

164."அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.265 பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக!

165.அவனே உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கினான். அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக484 உங்களில் சிலரை விட சிலருக்குத் தகுதிகளை உயர்த்தினான். உமது இறைவன் விரைவாகத் தண்டிப்பவன்; அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

 

Leave a Reply