இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா?

இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா?

கேள்வி:

விந்து வெளிப்படுவதற்கு முன்பு இச்சைநீர் மட்டும் வந்தால் குளிப்பு கடமையாகுமா? அல்லது விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமையாகுமா?

முஹம்மது.

பதில் :

ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ – இச்சை நீர் – எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல.

இது வெளியேறுவதால் குளிப்பு கடமையாகாது. இச்சை நீர் வெளிப்பட்டால் ஆணுறுப்பைக் கழுவிட்டு உளூச் செய்துகொள்ள வேண்டும்.

132 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ عَنْ الْأَعْمَشِ عَنْ مُنْذِرٍ الْثَّوْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ فَقَالَ فِيهِ الْوُضُوءُ رواه البخاري

அதிக அளவில் "மதீ' வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். "அதற்காக உளூச் செய்ய வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரீ 132

269 حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ حَدَّثَنَا زَائِدَةُ عَنْ أَبِي حَصِينٍ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَلِيٍّ قَالَ كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَكَانِ ابْنَتِهِ فَسَأَلَ فَقَالَ تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ رواه البخاري

"ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரி 269 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

180 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ كُنْتُ أَلْقَى مِنْ الْمَذْيِ شِدَّةً وَكُنْتُ أُكْثِرُ مِنْ الِاغْتِسَالِ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ إِنَّمَا يُجْزِيكَ مِنْ ذَلِكَ الْوُضُوءُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي مِنْهُ قَالَ يَكْفِيكَ بِأَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ فَتَنْضَحَ بِهَا مِنْ ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَهُ رواه أبو داود

ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

எனக்கு (அதிகமாக) மதீ வெளிப்பட்டதால் நான் சிரமத்தை அடைந்தேன். இதற்காக நான் அதிகம் குளித்தேன்.  இது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இதற்காக நீ உளூச் செய்வதே போதுமானதாகும் என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே எனது ஆடையில் மதீ பட்டுவிட்டால் என்ன செய்வது என்று நான் கேட்டபோது, ஒரு கையளவு நீர் அள்ளி, இச்சை நீர் எங்கே பட்டுவிட்டதாக நீர் கருதுகிறாயோ அந்த இடத்தில் தெளிப்பது உனக்குப் போதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

நூல் : அபூதாவூத் 180