கடுமையான அசுத்தம் பட்டால் மண் போட்டு கழுவ வேண்டுமா?

கடுமையான அசுத்தம் பட்டால் மண் போட்டு கழுவ வேண்டுமா?

நஸீம்.

பதில்:

பொதுவாக அப்படி மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. நாயின் எச்சில் பாத்திரத்தில் பட்டால் மண் போட்டு கழுவுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கட்டளையிட்டுள்ளனர்.

நாயின் எச்சில் மிகவும் விஷத்தன்மையுடையது. இதன் மூலம் ரேபிஸ் என்ற நோய் பரவுவதாகச் செய்திகள், எச்சரிக்கை நோட்டீஸ்கள் எல்லா மருத்துவமனையிலும் ஒட்டப்பட்டுள்ளன.

எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அதை ஏழு முறை கழுவ வேண்டும் என்றும், முதலாவது தடவை மண்ணால் கழுவ வேண்டும் என்றும் கூறினார்கள்.

420و حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ رواه مسلم

உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அதைத் தூய்மை செய்யும் முறையானது, ஏழு முறை அதை அவர் கழுவுவதாகும். முதல் முறை மண்ணால் அதைக் கழுவ வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

மண்ணால் கழுவ வேண்டும் என்ற சட்டம் நாய் வாய் வைத்த பாத்திரத்திற்கு மட்டும் உரிய சட்டமாகும். இது அல்லாத முறையில் அசுத்தம் ஏற்பட்டால் அதை வெறுமனே நீரினால் சுத்தம் செய்வது போதுமானது.

01.06.2011. 6:42 AM

Leave a Reply