இம்மொழிபெயர்ப்பு பற்றி…

 இம்மொழி பெயர்ப்பு பற்றி…  

ம்மொழிபெயர்ப்பில் நாம் கடைப்பிடித்துள்ள சில ஒழுங்கு முறைகளை அறிந்து கொள்வது வாசிப்பவர்களுக்கு அதிகப் பயன் தரும்.

சில அரபுச் சொற்களை அரபுச் சொல்லாகவே பயன்படுத்தியுள்ளோம். அச்சொற்களின் முழுமையான கருத்தைத் தெரிவிக்கும் தமிழ்ச் சொற்கள் கிடைக்காததே இதற்குக் காரணம்.


  • சில வசனங்களுக்கு கூடுதல் விளக்கங்கள் தேவைப்படலாம்.
  • சில வசனங்களின் மொத்தக் கருத்து என்ன என்று சந்தேகம் வரலாம்.
  • எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முன்னறிவிப்புக்கள் சில வசனங்களில் இடம் பெற்றிருக்கலாம்.
  • சில வசனங்களில் அறிவியல் கருத்து அடங்கி இருக்கலாம்.
  • ஒரு வசனம் என்ன கூறுகிறது என்று விளங்கினாலும் இது எப்படி இக்காலத்துக்குப் பொருந்தும் என்று சிலருக்குத் தோன்றலாம்.
  • ஒரு வசனம் நேரடியாகச் சொல்லும் கருத்து தவிர அதில் மேலதிகமான கருத்தும் அடங்கியிருக்கலாம்.

இது போன்ற எல்லா இடங்களுக்கும் சிறிய அளவில் எண்கள் குறிப்பிட்டுள்ளோம். 12 என்று போடப்பட்டிருந்தால் அந்த இடத்தில் மேலதிகமான விளக்கம் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். 12ஆம் எண் குறிப்பில் அந்த விளக்கம் இடம் பெற்றிருக்கும்.

விளக்கங்களை திரும்பத் திரும்பக் கூறுதலைத் தவிர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளோம்.

உதாரணமாக வானம், அல்லது வானங்கள் பற்றி திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. அத்தனை இடங்களிலும் குறிப்பிட்ட ஒரு எண் 507 தான் போடப்பட்டிருக்கும்.

இம்மொழிபெயர்ப்பில் அதிக அளவில் சொல் சுருக்கத்தைக் கையாண்டுள்ளோம். இது பல வகைகளில் அமைந்துள்ளது.

ஒரு மனிதன் கைகளையும், கால்களையும், முகத்தையும், தலையையும் கழுவினான் என்றால் இதை அரபுமொழியில் "தனது கைகளையும், தனது கால்களையும், தனது முகத்தையும், தனது தலையையும் கழுவினான்'' என்று குறிப்பிடுவார்கள். அவ்வாறு குறிப்பிடுவது அம்மொழியில் சிறந்த நடை. ஆனால் தமிழ் மொழியில் இவ்வாறு குறிப்பிட்டால் அது சிறந்த நடையாக இருக்காது.

"தனது கைகளையும், கால்களையும், முகத்தையும் தலையையும் கழுவினான்'' என்று கூறுவது தான் தமிழில் நல்ல மொழிநடை எனப்படும்.

'தனது' என்ற சொல் அரபு மூலத்தில் நான்கு இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் 'தனது' என்பதை ஒரு தடவை பயன்படுத்துவதே தமிழ் மொழிக்குப் போதுமானது.

'அவனது' 'அவளது' 'அவர்களின்' 'அவர்களுடைய' என்பன போன்ற சொற்கள் ஒரு வாக்கியத்தில் பல தடவை பயன்படுத்தப்பட்டாலும் பெரும்பாலும் ஒரு தடவை தான் இம்மொழிபெயர்ப்பில் அதைக் குறிப்பிட்டுள்ளோம்.

அரபுமொழியில் "யார் உங்களை அடித்தார்களோ அவர்களை நீங்களும் அடியுங்கள்'' என்பன போன்ற நடையில் பல சொற்றொடர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும். அது அம்மொழியில் நல்ல நடைக்கு அடையாளமாகவும் இருக்கும். ஆனால் தமிழ்மொழியில் மிகமிக அரிதாகவே இது போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவோம். எனவே "உங்களை அடித்தவர்களை நீங்களும் அடியுங்கள்'' என்று இதைத் தமிழ்ப்படுத்துவது தான் தமிழுக்கு நெருக்கமான நடையாக இருக்கும்.

'யார் உங்களை ஏமாற்றினார்களோ அவர்கள்' என்ற சொற்றொடரை 'உங்களை ஏமாற்றியவர்கள்' என்று தமிழ்ப்படுத்துவதே போதுமானது.

மிகச்சில இடங்களில் அந்த நடையினால் ஒரு ஆழமான பொருள் கிடைக்கும். அத்தகைய இடங்களில் மட்டும் அந்த நடையைப் பயன்படுத்தியுள்ளோம்.

தமிழ்ச் சொற்களிலும் இயன்றவரை குறைந்த எழுத்துக்கள் வரும் வகையில் சொற்களைப் பயன்படுத்தியுள்ளோம்.

உதாரணமாக, "கருதிக் கொள்ள வேண்டாம்'' என்பதை விட "கருதாதீர்கள்'' என்பது சுருக்கமானது; அதே கருத்தைத் தருவது. எனவே "கொள்ள வேண்டாம்'' என்பது போன்ற சொற்களைத் தவிர்த்து விட்டோம். மூன்று சொற்களில் கூறுவதை ஒரு சொல்லில் இதனால் கூற முடிகின்றது.

வழக்கமான பொருள் அல்லாத வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை உணர்த்துவதற்காக நம்புதல், நம்பாதீர்கள் என்று பயன்படுத்தாமல் நம்பிக்கை கொள்ளுதல், நம்பிக்கை கொள்ள வேண்டாம் என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளோம்.

'செய்யக்கூடியவர்கள்' 'வரக்கூடியவர்கள்' போன்ற சொற்களையும் பெரும்பாலும் தவிர்த்து, 'செய்வோர்' 'வருவோர்' எனப் பயன்படுத்தி உள்ளோம்.

அரபுமொழியில் ஒரு கருத்தைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெரிவிப்பதற்காக "இன்ன" அல்லது "அன்ன" என்ற இடைச் சொல்லைப் பயன்படுத்துவார்கள். "நிச்சயமாக" என்று சிலர் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனர். இது தமிழ் மொழிநடைக்கு தேவையற்றதாகும்.

அரபுமொழியில் ஒன்றை உறுதிப்படுத்திக் கூறுவதற்காக "இன்ன" "அன்ன" ஆகிய சொற்கள் மட்டுமின்றி இன்னும் பல சொற்களும் உள்ளன. "இன்ன" "அன்ன" என்ற சொற்கள் எப்படி உறுதிப்படுத்திக் கூறுவதற்காக உள்ளனவோ அதே பொருளைத்தான் அந்தச் சொற்களும் தரும். இது போன்ற சொற்கள் தஃகீத் சொற்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு வாக்கியத்தில் ஒரு செய்தியில் ஐந்தாறு தஃகீத் சொற்களைக் கூட அரபுகள் பயன்படுத்துவார்கள்.

நான் நேற்று மருத்துவமனை சென்றேன்

என்பதைச் சில நேரங்களில்

"நிச்சயமாக நான் நிச்சயமாக நேற்று நிச்சயமாக மருத்துவமனைக்கு நிச்சயமாகச் சென்றேன்"

என்று சொல்வார்கள்.

இது அரபுமொழியில் விகாரமாகத் தெரியாது. ஆனால் தமிழில் இப்படி எழுதினால் இதை வாசிப்பவர்கள் திருக்குர்ஆனின் நடையைக் குறையாகக் கருதுவார்கள். அது அரபுமொழியின் வழக்கம் என்பதை அறிய மாட்டார்கள்.

தஃகீத் எனும் சொற்களை அலங்காரச் சொல்லாகவே அரபுகள் பயன்படுத்துகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதனால் இன்ன, அன்ன என்ற சொல்லுக்கும் தஃகீத் வகையைச் சேர்ந்த இதர சொற்களுக்கும் நாம் தமிழாக்கம் செய்யவில்லை.

இது தவறு என்று சில முஸ்லிம் அறிஞர்கள் நம்மை விமர்சிக்கின்றனர்.

இப்படி விமர்சிப்பவர்கள் தங்கள் மொழிபெயர்ப்புகளில் அனைத்து தஃகீத் சொற்களுக்கும் நிச்சயமாக என்று தமிழாக்கம் செய்திருக்க வேண்டும். இன்ன, அன்ன என்ற இரு தஃகீத் சொற்களுக்கு மட்டும் நிச்சயமாக என்று மொழிபெயர்த்து விட்டு இதே வகையைச் சேர்ந்த மற்ற சொற்களுக்கு நிச்சயமாக என்று மொழிபெயர்க்காமல் விட்டு விட்டனர்.

இதற்குச் சில உதாரணங்களை நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

20வது அத்தியாயத்தின் 97வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்.

இவ்வசனத்துக்கு நாம் செய்த தமிழாக்கம்

“நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் தீண்டாதே என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்” என்று (மூஸா) கூறினார். 

நமது தமிழாக்கத்தை எதிர்த்து இக்கேள்வியைக் கேட்பவர்கள் செய்ய வேண்டிய தமிழாக்கம் இப்படித்தான் வரவேண்டும்.

“நீ சென்று விடு! நிச்சயமாக உனது வாழ்க்கையில் ‘தீண்டாதே’ என நீ கூறும் நிலையே இருக்கும். நிச்சயமாக மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் நிச்சயமாக உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நிச்சயமாக நெருப்பில் நிச்சயமாக எரித்து பின்னர் நிச்சயமாக அதைக் கடலில் நிச்சயமாக தூவுவோம்” என்று (மூஸா) கூறினார்.

மேற்கண்ட 20வது அத்தியாயம் 97வது வசனத்தில் ஏழு இடங்களில் நிச்சயமாக என்ற கருத்தைத் தரும் சொற்கள் உள்ளன. எந்த அறிஞருடைய மொழிபெயர்ப்பிலாவது இவ்வசனத்தில் நிச்சயமாக என்ற சொல் ஏழு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

ஒருவர் கூட நிச்சயமாக என்று ஏழு இடங்களில் குறிப்பிடவில்லை. இதிலிருந்து அவர்களும் தஃகீத் எனும் வகையைச் சேர்ந்த சொல்லுக்குப் பொருள் செய்யாமல் விட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.

அதுபோல் 3:155 வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! இவ்வசனத்துக்கு நாம் செய்த தமிழாக்கம் இதுதான்:

இரு அணிகளும் மோதிக்கொண்ட நாளில் உங்களில் பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக ஷைத்தான் வழிதவறச் செய்தான். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன்.

இவ்வசனத்தில் தஃகீத் எனும் உறுதிப்படுத்தும் சொற்கள் ஐந்து உள்ளன. இன்ன என்பதற்கு நாம் பொருள் செய்யவில்லை என்று நமக்கு எதிராக வாதிடுவோர் ஐந்து இடங்களில் நிச்சயமாக என்று குறிப்பிட்டு பின்வருமாறு இவ்வசனத்தை மொழிபெயர்த்து இருக்க வேண்டும்.

இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் நிச்சயமாகப் பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக நிச்சயமாக ஷைத்தான் வழிதவறச் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் நிச்சயமாக அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன்.

இப்படி நிச்சயமாக என்ற சொல்லை ஐந்து இடங்களில் ஒரு அறிஞரும் இவ்வசனத்தின் தமிழாக்கத்தில் பயன்படுத்தவில்லை. இவர்களும் தஃகீத் சொற்களுக்குப் பொருள் செய்யாமல் விட்டுள்ளனர் என்பது இதிலிருந்தும் உறுதியாகின்றது.

கீழ்க்காணும் வசனங்களைக் காணுங்கள். அந்த வசனங்களில் தஃகீத் எனும் வகையிலான சொற்கள் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளன என்பதைக் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் மொழிபெயர்ப்பிலோ, ஆங்கில மொழிபெயர்ப்பிலோ தேடிப்பாருங்கள். அவர்கள் இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப நிச்சயமாக என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

  • 2:74 வசனத்தில் ஆறு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 2:130 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 5:12 வசனத்தில் ஒன்பது தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 5:32 வசனத்தில் ஆறு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 6:109 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 7:134 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 11:10 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 11:110 வசனத்தில் ஐந்து தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 12:32 வசனத்தில் ஏழு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 12:41 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 14:7 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 15:24 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 15:97 வசனத்தில் மூன்று தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 16:103 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 23:30 வசனத்தில் நான்கு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 29:3 வசனத்தில் ஆறு தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 30:58 வசனத்தில் ஐந்து தஃகீத் சொற்கள் உள்ளன.
  • 39:65 வசனத்தில் ஆறு தஃகீத் சொற்கள் உள்ளன.

மேற்கண்ட வசனங்களுக்கு யாருடைய தமிழாக்கத்தை நீங்கள் எடுத்துப் பார்த்தாலும் நிச்சயமாக என்ற சொல்லை இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதை அறிந்து கொள்வீர்கள்.

உதாரணத்துக்குத்தான் சில வசனங்களைப் பட்டியல் போட்டுள்ளோம். இதுபோல் ஏராளமான வசனங்கள் உள்ளன.

தஃகீத் எனும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ள சொற்கள் அனைத்துமே உறுதிப்படுத்துவதில் சமமான தகுதியில் உள்ளவை தான். இவற்றில் இன்ன, அன்ன என்ற இடைச் சொற்களுக்கு மட்டும் நிச்சயமாக என்று பொருள் செய்து விட்டு, மற்ற சொற்களுக்கு அவ்வாறு பொருள் செய்யாமல் அவர்கள் விட்டதற்கு எந்தக் காரணமும் இல்லை.

நிச்சயமாக என்பது அரபுமொழியில் அலங்காரத்துக்காகப் பயன்படுத்துவதாலும், தமிழில் இத்தகைய மொழிநடை இல்லாததாலும் நிச்சயமாக என்பதை நாம் தவிர்த்து விட்டோம். ஆனால் அவ்வாறு மொழிபெயர்த்தே ஆகவேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர்கள் சிலவற்றுக்கு மொழிபெயர்த்து சிலவற்றுக்கு மொழிபெயர்க்காமல் விட்டு விடுகின்றனர். இதற்கு அவர்களிடம் ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இல்லை.

அடுத்து முன்னிலையாகப் பேசும் சில வசனங்களில் முஹம்மதே என்று நாம் அடைப்புக்குறிக்குள் பயன்படுத்தியுள்ளோம். கட்டளைச் சொல்லாக திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளவை பெரும்பாலும் பொதுவானவை தான். அவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியவை அல்ல. என்றாலும் சில கட்டளைச் சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டும் குறிப்பவையாக உள்ளன. அது போன்ற வசனங்களில் அடைப்புக் குறிக்குள் முஹம்மதே என்று குறிப்பிட்டுள்ளோம்.

'முஹம்மதே' என்று மரியாதைக் குறைவாகக் குறிப்பிடலாமா? என சிலர் கருதலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை 'முஹம்மதே' என்று நாம் அழைத்தால் அது மரியாதைக் குறைவாகும். அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் அவ்வாறு அழைப்பது மரியாதைக் குறைவாகாது. இறைவன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிக் கூறுவதைப் போன்று அமைந்த வசனங்களுக்கு மட்டுமே நாம், 'முஹம்மதே' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம். இதில் எந்த மரியாதைக் குறைவும் இல்லை.

இம்மொழிபெயர்ப்பில் இயன்ற வரை அடைப்புக் குறிகளைத் தவிர்த்துள்ளோம். எனினும் மிகச் சில இடங்களில் அடைப்புக் குறிகளைப் பயன்படுத்தியுள்ளோம். அடைப்புக்குறிக்குள் உள்ளவை மூலத்தில் இல்லாமல் மொழிபெயர்ப்பாளர் சேர்த்தது என்று விளங்கிக் கொள்க!

மேலும் இயன்றவரை மொழிபெயர்ப்பில் சீரான ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்துள்ளோம்.

உதாரணமாக 'அலீம்' என்ற சொல்லுக்கு ஒரு இடத்தில் அறிந்தவன் என்று மொழி பெயர்த்தால் அச்சொல் இடம் பெற்ற அனைத்து இடங்களிலும் அறிந்தவன் என்றே இடம்பெறச் செய்துள்ளோம். இப்படி எல்லாச் சொற்களுக்கும் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்துள்ளோம்.

சில சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தரும் சொற்களாக இருக்கும். அது பயன்படுத்தப்படும் இடத்திற்கேற்ப பொருள் மாறும். இது போன்ற இடங்களில் மட்டுமே இந்த ஒழுங்குமுறையை நாம் கடைப்பிடிக்கவில்லை.

அடிக்குறிப்புக்களை அந்தந்தப் பக்கங்களில் இடம் பெறச் செய்தால் பல இடங்களில் ஒரே அடிக்குறிப்பைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பக்கங்கள் அதிகப்படும். இதைத் தவிர்க்கவே அடிக் குறிப்புகளைத் தனியாக இறுதியில் இணைத்துள்ளோம்.

Leave a Reply