இறைப் பாதையும் சிறைப் பயணமும்

ஏகத்துவம் செப்டம்பர் 2007

இறைப் பாதையும் சிறைப் பயணமும்

எம். ஷம்சுல்லுஹா

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்களிடத்தில் போதிக்கும் போது, இறை மறுப்பாளர்கள் மூன்று விதமான சதித் திட்டங்களைத் தீட்டினர்.

(முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏக இறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.

அல்குர்ஆன் 8:30

இந்த வசனத்தில் இறை மறுப்பாளர்கள் செய்யும் மூன்று விதமான சூழ்ச்சிகளையும் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கிறான்.

சிறை பிடித்தல், நாடு கடத்தல், கொலை செய்தல் ஆகியவை தான் அந்தச் சூழ்ச்சிகள்.

இது முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல! இந்த உலகில் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் அனைவருக்கும் எதிராக இந்தச் சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.

இறைத் தூதர்கள் மட்டுமல்ல! ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்பவர்கள், சத்தியக் கருத்தை மக்களுக்கு மத்தியில் எடுத்துரைப்பவர்கள் அனைவரும் இந்தச் சூழ்ச்சிகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்காகத் தான் திருக்குர்ஆனில் இந்தச் சம்பவங்களை அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுகின்றான்.

ஓர் அரசியின் அந்தப்புர, அந்தரங்கக் காதலராக இருக்க மறுத்த யூசுப் நபியவர்கள் சிறைவாசத்தை அனுபவித்தார்கள். அவர்கள் அனுபவித்த அந்தச் சிறைவாசத்தை என்னால் கூட அனுபவிக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள்.

சத்தியத்தைச் சொல்லக் கூடியவர்கள் தங்களுடைய வாழ்க்கையில், அந்த இறைப் பாதையில் சிறைப் பயணத்தைச் சந்தித்தே ஆக வேண்டும்.

அண்மையில் சகோதரர் பி.ஜே. அவர்கள் மலேஷியா சென்ற போது அவர்களைச் சிறைக்குள் தள்ளும் அனைத்துச் சதிவலைகளும் பின்னப்பட்டன.

ஏகத்துவத்தின் எதிரிகள், ஏகத்துவப் போர்வையில் இருப்பதாக நடித்துக் கொண்டிருக்கும் கபட வேடதாரிகள் ஆகியோர் பின்னிய சதி வலையின் காரணமாக பி.ஜே. அவர்களுக்கு சிறை வாழ்க்கைக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.

ஆனால் அல்லாஹ் அவர்கள் பின்னிய சதி வலையின் கன்னிகளைத் தகர்த்தெறிந்து விட்டான்.

பி.ஜே.யின் மலேஷியப் பயணத்தில் இப்படியொரு சோதனை என்றதும் சத்தியத்தின் எதிரிகளும், நம்மால் வளர்த்து விடப்பட்ட சந்தர்ப்பவாதிகளும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

அல்குர்ஆன் 3:120

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துப் போயினர். அந்த மட்டற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக இணைய தளத்தில் மின்னஞ்சல்களைப் பறக்க விட்டுப் பரவசமடைந்தனர். ஆனால் அவர்கள் அந்த மகிழ்ச்சிப் பரவசத்தை சொற்ப ஆயுளில் அல்லாஹ் முடித்து விட்டான்.

பி.ஜே. அவர்களுக்கு ஏற்பட்ட இந்தச் சோதனையின் காரணமாக நமது கொள்கைச் சகோதரர்கள் கொண்ட சோகத்திற்கு அளவே இல்லை.

பி.ஜே.யை நாட்டுக்குத் திரும்ப அனுப்பும் வரை தூதரக முற்றுகை என்றதும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மலேஷியத் தூதரகத்திற்கு வந்து குவிந்தனர்.

இந்த முற்றுகை முழுப் பயனைத் தந்தது. அல்லாஹ்வின் பெரும் கிருபையால் எதிரிகளின் மகிழ்ச்சி களைந்தது போன்று, நமது கொள்கைச் சகோதரர்களுக்கும் சோகம் களைந்து போனது. அல்ஹம்துலில்லாஹ்!

கொட்டும் மழையில் இப்படிக் கூடிய கொள்கைச் சகோதரர்களுக்கு ஏகத்துவம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் சில முக்கியமான விஷயங்களை இங்கு தெளிவு படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

த பி.ஜே. அவர்கள் இலங்கை சென்று திரும்பியது.

த துபை சென்று திரும்பியது.

த மலேஷியா பயணம்

இந்தப் பயணங்கள் குறித்து எதிரிகள் கேவலமாகச் சித்தரிக்கும் போது நம்முடைய கொள்கைச் சகோதரர்களும், "இது நமக்குப் பின்னடைவு தானே!’ என்று நினைக்கத் தலைப்படுகின்றனர்.

இங்கு தான் நாம் ஏகத்துவத்தைப் பற்றி முழுமையாகப் புரியாமல் இருக்கிறோமோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.

நூஹ் (அலை) அவர்கள் முதல் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை ஏகத்துவப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எல்லோருமே துரத்தித் தான் அடிக்கப்பட்டார்கள். திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாறு களிலிருந்து இதைத் தெளிவாக விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்ற வரலாற்றிலிருந்தும் இதை அறிய முடியும்.

ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், "(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை.

ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். கர்னுஸ் ஸஆலிப் என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது.

நான் கூர்ந்து கவனித்த போது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, "உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து, எனக்கு சலாம் சொல்லி விட்டுப் பிறகு, "முஹம்மதே! நீஙகள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார்.

உடனே, "(வேண்டாம்) ஆயினும் இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3231

நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்று விட்டுத் திரும்பி வந்தது யாருக்குக் கேவலமாகத் தெரிந்தது? மக்கா காஃபிர்களுக்கு! இப்போது நம்முடைய இந்தப் பயணம் யாருக்குக் கேவலமாகத் தெரிகின்றது? கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். மக்கத்துக் காஃபிர்களின் சிந்தனைகளில் இவர்கள் ஒத்திருக்கின்றார்கள். அதனால் தான் இது கேவலமாகத் தெரிகின்றது.

ஆனால் இந்தப் பயணம் நமக்குக் கேவலமாகத் தெரியக் கூடாது. மாறாக நாம் மகிழ்ச்சியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கிருபையால் நபிமார்களுக்குக் கிடைத்த அந்த ரிஸல்ட், விளைவு நமக்குக் கிடைப்பதன் மூலம், நாம் தான் அந்தப் பணியை உத்வேகத்துடன் செய்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணி மகிழ வேண்டும்.

மூன்று விதமான சதிகளை நபிமார்கள் சந்தித்தார்கள் என்று மேலே கண்டோம். ஏகத்துவவாதிகளான நாமும் இந்த விளைவுகளைச் சந்திப்பதற்காகத் தயாராகிக் கொள்ள வேண்டும். அப்படித் தயாரானால் தான் நாம் தவ்ஹீதுவாதிகள்.

அதிகப்பட்சமாக நமது உயிரையும் இந்தக் கொள்கைக்காக விடுவோம் என்ற நிலையை எடுத்துக் கொண்டோம் என்றால் மற்ற இரண்டு சதிகளும் நமக்குப் பெரிதாகத் தெரியாது.

ஒன்று, நாடு கடத்தல் அல்லது ஊர் நீக்கம் செய்தல். மற்றொன்று சிறைவாசம். எதிரிகள் நம் உயிரையும் எடுப்பார்கள் என்று நாம் தயாராக இருந்தால் இந்த இரண்டும் நமக்குச் சர்வ சாதாரணமாகி விடும்.

இதற்கு மூஸா (அலை) அவர்களின் வாழ்க்கையில் சிறந்த எடுத்துக்காட்டு உள்ளது.

நான் தான் உங்களின் மகத்தான இறைவன் என்று கூறிக் கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் ஏகத்துவத்தை எடுத்துரைக்குமாறு மூஸா, ஹாரூன் ஆகிய இருவரையும் அல்லாஹ் அனுப்பி வைக்கிறான்.

நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்! என்னை நினைப்பதில் சோர்வடையாதீர்கள்!

இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான்.

"அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது அஞ்சலாம்” (என்றும் கூறினான்.)

"எங்கள் இறைவா! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்” என்று இருவரும் கூறினர்.

"அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.

இருவரும் அவனிடம் சென்று "நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு! அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர் வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறுங்கள்!

"மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?” என்று அவன் கேட்டான்.

"ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்” என்று அவர் கூறினார்.

"முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?” என்று அவன் கேட்டான்.

"அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்” என்று அவர் கூறினார்.

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.

உண்ணுங்கள்! உங்கள் கால்நடைகளை மேய விடுங்கள்! அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.

அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். அவன் பொய்யெனக் கருதி மறுத்து விட்டான்.

"மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா?” என்று அவன் கேட்டான்.

அல்குர்ஆன் 20:42-57

மூஸா, ஹாரூனுக்குப் பதிலடி கொடுப்பதற்காக ஃபிர்அவன் நாள் குறிக்கிறான்.

அந்தக் குறிப்பிட்ட தினத்தில் நடக்கும் ஆச்சரியமான சம்பவம் இதோ:

"இது போன்ற ஒரு சூனியத்தை நாமும் உம்மிடம் செய்து காட்டுவோம். எமக்கும் உமக்குமிடையே (போட்டி நடத்திட) பொதுவான இடத்தில் ஒரு நேரத்தை நிர்ணயிப்பீராக! அதை நாமும் நீரூம் மீறாதிருப்போம்” (என்றும் கூறினான்.)

"பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பகலில் மக்கள் ஒன்று திரட்டப்படட்டும்” என்று அவர் கூறினார்.

ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று தனது சூழ்ச்சியை ஒருமுகப் படுத்தினான். பின்னர் வந்தான்.

"உங்களுக்குக் கேடு தான் ஏற்படும். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்! அவன் உங்களை வேதனையால் அழிப்பான். இட்டுக்கட்டியவன் நஷ்டமடைந்து விட்டான்” என்று அவர்களிடம் மூஸா கூறினார்.

அவர்கள் தமக்கிடையே விவாதம் செய்தனர். அதை இரகசியமாகச் செய்தனர்.

"இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழி முறையை அழிக்கவும் நினைக்கின்றனர்” எனக் கூறினர்.

"உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள்! பின்னர் அணிவகுத்து வாருங்கள்! போட்டியில் வெல்பவரே இன்றைய தினம் வெற்றி பெற்றவர்” (என்றனர்)

"மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

"இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.

"அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்” என்று கூறினோம்.

"உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றனர்.

"நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்” என்று அவன் கூறினான்.

"எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்” என்றனர்.

"எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைத்த சூனியத்தையும் எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்” (என்றும் கூறினர்.)

அல்குர்ஆன் 20:58-73

உலக வரலாற்றில் சொற்ப நேரத்தில் ஈமான் கொண்டு, சொற்ப நேரத்தில் வீர மரணம் அடைந்த சுவனவாதிகள் இந்த மந்திரவாதிகள் தான்.

அதனால் தான் இந்த வரலாற்றைத் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்ப, பல இடங்களில் இறைவன் கூறிக் காட்டுகின்றான்.

இந்த மந்திரவாதிகள் போன்று ஈமானியச் சுடரை நாமும் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டால் ஊர் நீக்கம், சிறைவாசம் என்பதெல்லாம் நமக்குக் கொசு தான். இது தான் ஏகத்துவம் உங்களுக்கு முன் வைக்கின்ற கோரிக்கையாகும்.