ஈஸா நபி ஹனஃபி மத்ஹப்பைப் பின்பற்றுவார்களா?

ஈஸா நபி ஹனஃபி மத்ஹப்பைப் பின்பற்றுவார்களா?

றுமை நாளின் அடையாளமாக ஈஸா (அலை) அவர்கள் பூமிக்கு இறங்கி வருவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. இது நம் அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ஒரு சுன்னத் ஜமாஅத் ஆலிம்சாவின் உரையைக் கேட்டேன். ஈஸா (அலை) அவர்கள் அவ்வாறு பூமிக்கு இறங்கி வரும் போது ஹனஃபி மத்ஹபு அடிப்படையில் தான் ஃபத்வா வழங்குவார்கள் என்று அந்த ஆலிம் உரை நிகழ்த்தினார். இது உண்மையா?

– அக்ரம் பாட்ஷா, கோவை

சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்சாக்களின் கப்சாக்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. இவர்களைச் சொல்லி குற்றமில்லை. இவர்களுக்கு அவ்வாறாக வெறியூட்டப்படுகின்றது. ஆம். ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தார் என்ற நூலில் அந்த ஆலிம் சொன்னதாக நீங்கள் குறிப்பிட்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதற்கான காரணமாக அவர்கள் சொல்லுவது என்ன தெரியுமா?

அபூஹனீஃபா  இந்த உலகில் குர்ஆனுக்கு அடுத்து அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்று அல்லாஹ்வின் அச்சம் சிறிதுமில்லாமல் பொய்  மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளனர்.

وَالْحَاصِلُ أَنَّ أَبَا حَنِيفَةَ النُّعْمَانَ مِنْ أَعْظَمِ مُعْجِزَاتِ الْمُصْطَفَى بَعْدَ الْقُرْآنِ  ( الدر المختار ج: 1ص: 56)

சுருங்கச் சொல்வதென்றால் நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனிஃபா தான். 

நூல்: துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 52

நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில் திருக்குர்ஆன் மகத்தானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கடுத்த அற்புதம் அபூஹனீஃபா தான் என்றால் அதன் பொருள் என்ன?

நபி (ஸல்) அவர்களைப் பார்க்காத, அவர்களின் காலத்தில் பிறந்திராத அபூஹனீஃபாவை, நபியவர்களின் அற்புதம் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்?

குர்ஆனில் எந்தத் தவறும் இல்லாதது போன்று, அபூஹனீஃபாவின் தீர்ப்புகளிலும் தவறே இருக்காது என்று அர்த்தமா? அப்படியானால் அல்லாஹ்வைப் போன்று அபூஹனீஃபாவும் தவறுக்கு அப்பாற்பட்டவர் என்று நிலைநாட்டப் போகிறார்களா?

உலகில் உள்ள எல்லா நூற்களையும் விட திருக்குர்ஆன் சிறப்பாக இருப்பது போன்று, உலகிலுள்ள அனைத்து மனிதர்களிலும் அபூஹனீஃபா சிறந்தவர் என்று அர்த்தமா?

அப்படியானால் நபித்தோழர்களை விட, நான்கு கலீபாக்களை விட இவர் சிறந்தவர் என்று கூறப் போகிறார்களா? எந்தப் பொருள் கொண்டாலும் அது அபத்தமாகவே உள்ளது.

நபியவர்கள் தமது நபித்துவத்தை நிரூபிக்க குர்ஆனைச் சமர்ப்பித்தார்கள். அது போல் அபூஹனீஃபாவையும் சமர்ப்பித்து தமது நுபுவ்வத்தை நபியவர்கள் நிரூபித்தார்களா? இப்படியும் அர்த்தம் கொள்ள முடியாது.

எனவே இமாம்கள் மீது பக்தி வெறியூட்டுவதற்காக இவ்வாறு உளறியுள்ளனர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம்.

وقد جعل الله الحكم لاصحابه وأتباعه من زمنه الى هذه الايام الى ان يحكم بمذهبه عيسى عليه السلام ( الدر المختار ج: 1ص: 56)

அபூ ஹனீஃபாவின் காலம் முதல், இன்றைய காலம் வரை  அல்லாஹ் அவரை பின்பற்றக் கூடியவர்களுக்கும், அவருடைய தோழர்களுக்கும் ஞானத்தை வழங்கிவிட்டான்.. அவருடைய மத்ஹபைக் கொண்டுதான் ஈஸா (அலை) அவர்கள் தீர்ப்பளிப்பார்கள்.

துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 56

இதுவும் மாபெரும் இட்டுக்கட்டாகும் அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையிலும், அவனது தூதரின் போதனையின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களை ஓரணியில் திரட்டக்கூடிய ஈஸா (அலை) அவர்கள் – மத்ஹபுகளை எல்லாம் தகர்த்தெறியக் கூடிய ஈஸா (அலை) அவர்கள் – அபூஹனீஃபாவைப் பின்பற்றுவார்கள் என்று எழுத இவர்களின் கை கூசவில்லை.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:21

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டுபவன், எதுவுமே அவனுக்கு (இறைவனிடமிருந்து) அறிவிக்கப்படாதிருந்தும் "எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், மற்றும் "அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள்!' (எனக் கூறுவார்கள்).

 திருக்குர்ஆன்  6: 93

அல்லாஹ்வுடைய அச்சம் சிறிதுமின்றி அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் பொய்களை இட்டுக்கட்டி மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்துச் செல்லும் இந்த மத்ஹபு குப்பைகளை முஸ்லிம்கள் பின்பற்றினால் நரகப்படுகுழிதான் அல்லாஹ்விடத்தில் பரிசாகக் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Leave a Reply