சதாம் ஹசைனின் கடைசி நிமிடங்கள்….

ஏகத்துவம் பிப்ரவரி 2007

சதாம் ஹசைனின் கடைசி நிமிடங்கள்….

சதாம் ஹுசைன்…

ஏகத்துவத்தின் பக்கங்களில் இடம் பிடிப்பதற்கு இவர் ஒன்றும் ஏகத்துவத்தை நிலை நாட்டுவதற்காகத் தியாகம் செய்து பாடமும் படிப்பினையாகவும் திகழ்ந்த இப்ராஹீம் (அலை) அல்லர்.

ஏகத்துவத்திற்காகத் தங்கள் இளமைப் பருவத்தை அர்ப்பணித்து நாட்டைத் துறந்து குகையில் தஞ்சமடைந்த அஸ்ஹாபுல் கஹ்ஃப் அல்லர்.

ஏகத்துவத்திற்காக அரபகத்தில் குரல் கொடுத்த இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களோ அல்லது அதற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த நபித்தோழர்களோ அல்லர்.

மாறாக இவர் தனது ஆட்சிக் காலத்தில் ஏகத்துவத்திற்கே எதிராக, தனது சிலைகளை இராக்கில் நிறுவியவர்; அரபு இன வாதம் பேசியவர்; அவரது பஃத் கட்சி கம்யூனிஸம் பேசியது என்று அவரது வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை, பாதகமான பக்கங்களை நாம் நிறையவே அடுக்கடுக்காகப் பட்டியல் போடலாம்.

இருப்பினும்….

அமெரிக்கா இவரை நோக்கி, "பணிந்து நாட்டை விட்டு ஓடி விடு’ என்று சொன்ன போது பணியாதது

அராஜக அமெரிக்கா படையெடுத்து உள்ளே நுழைந்த பின்னும் உயிருக்குப் பயந்து ஓடாமல் எதிர் கொண்டது

அமெரிக்காவிடம் சமரசமாகி சரணாகதியடையும் சாமர்த்தியம் இருந்தும், தப்பியோட வாய்ப்பிருந்தும், அடைக்கலம் கொடுக்க அண்டை நாடுகள் காத்திருந்தும் வேறெங்கும் செல்லாமல் தன் சொந்த ஊரான திக்ரித்திலேயே கைதானது

தன்னைக் கொல்லப் போகின்றார்கள் என்று தெரிந்ததும் நீதிபதியிடம், "நான் ஒரு ராணுவ வீரன்; அதனால் என்னைத் தூக்கிலிடாதீர்கள்; துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள்” என்று முழங்கியது

இறுதி வரை கைகளில் குர்ஆனுடன் காட்சியளித்தது

தூக்கில் தொங்கும் வரை அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து உயர்ந்த தொனியில் குரல் கொடுத்தது

மரணத்தைக் கண்டு அஞ்சாமல் இருந்தது

மரணிக்கும் முன் இறுதி வார்த்தையாக "அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்; வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற ஏகத்துவ உறுதிமொழியைக் கூறியது

இவை அனைத்தும் அவர் தவ்பாச் செய்த ஒரு நல்லடியார் என்பதற்குச் சான்றுகளாக அமைந்தன. மரணத் தறுவாயில் கூறப்படும் ஏகத்துவ உறுதிமொழி கடந்த காலப் பாவங்களைக் கரைத்து விடுகின்றது. கடுகளவும் கறைகள் இல்லாமல் கழுவி விடுகின்றது.

இதனால் அவர் ஏகத்துவத்தின் பக்கங்களில் இடம் பிடிப்பதில் இந்த இதழ் பெருமையடைகின்றது.

நாம் அவரது அந்தரங்கத்தைப் பார்க்க முடியாது; பகிரங்கத்தைத் தான் பார்க்க முடியும்.

குறிப்பாக சதாம் ஹுசைனைத் தூக்கில் போடும் பொறுப்பை ஏற்றது ஷியாக்கள் தான். அவரைத் தூக்கில் போடும் போது அந்த ஷியாக்கள் அவரிடம் செய்த சீண்டல்கள்! கொட்டிய கொக்கரிப்புகள்! காட்டிய பழி வாங்கும் உணர்ச்சிகள்! அவரது மரணச் செய்தியைக் கேட்டு உலகெங்கும் உள்ள ஷியாக்கள் அடைந்த மகிழ்ச்சிகள்! மரணத்திற்கு முன் ஷியாக்களைப் பற்றி சதாம் குறிப்பிட்ட வாசகங்கள்!

இந்த அம்சங்களால் தான் அவரது கடைசி நிமிடத் துளிகளை ஏகத்துவ இதழ் தன்னகத்தே காட்சிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும், கடமைக்கும் உள்ளானது. ஷியாயிஸத்தைப் பற்றி நாம் ஆய்வு செய்வதற்கு இந்த நிகழ்வு ஒரு தூண்டுகோலாகவும் அமைந்தது.

அந்த அடிப்படையில் கண்ணீர் துளிகளை வரவழைக்கும் அவரது கடைசி நிமிடத் துளிகளைப் பார்ப்போம்.

அதற்கு முன் இவரை அழிப்பதற்கு அமெரிக்கா அவசரம் காட்டியது ஏன்?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சதாம் 148 பேரைக் கொன்றார் என்று உப்புச் சப்பில்லாத ஒரு குற்றச்சாட்டைக் கூறி அவரை அவசர கதியில் தண்டிக்க வேண்டிய அவசியம் என்ன? இங்கு தான் சதாமைப் பற்றி இன்னும் ஆழமாகப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

1991ல் சதாம் ஹுசைன் குவைத்தில் நுழைந்து, அதைத் தனது நாட்டின் ஒரு மாநிலமாக அறிவித்ததும் சதாமின் மீது அமெரிக்கா தன் கழுகுப் பார்வையைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு செலுத்த ஆரம்பித்தது. அது வரை சதாமிற்கு முழுக்க முழுக்க ஆதரவாகவே அமெரிக்கா இருந்து வந்தது.

சதாம் குவைத்தை ஆக்கிரமித்தது நியாயமானதா? என்ற வாதத்திற்குள் நாம் செல்லவில்லை. அரபு நாடுகளின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக சதாம் செய்த எட்டாண்டு காலப் போரின் காரணமாக இராக் கடன் சுமையில் ஆழ்ந்தது. குவைத்திற்குத் தர வேண்டிய 3000 கோடி டாலர்களைத் தள்ளுபடி செய்யுமாறு சதாம் குவைத்திடம் கோரிக்கை விடுத்தார். இதை குவைத் மறுக்கவே குவைத்தைக் கைப்பற்றினார்.

இதை உலக நாடுகள் கண்டித்த போது, "ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை வெளியேறச் சொல்லுங்கள்; நான் குவைத்தை விட்டு வெளியேறுகிறேன்’ என்று அறிவித்தார். இதன் மூலம் அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து ஃபலஸ்தீனை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய வரலாற்றை உலகறியச் செய்தார். எனவே சதாம் செய்த குவைத் ஆக்கிரமிப்பு சரியா? தவறா? என்ற ஆய்வுக்குள் நாம் இறங்கவில்லை.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் செல்லப் பிள்ளையும் கள்ளப் பிள்ளையுமான யூதர்களை 1947ம் ஆண்டு ஃபலஸ்தீனத்தில் குடியமர்த்தி அவர்களுக்கு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொடுத்தது முதல் அரபகத் தலைவர்கள் கோழைகளாகவே இருக்கின்றனர்.

அமெரிக்காவுக்கு எதிராக அரபகத்தில் இது வரை எந்தக் கொம்பனும் இல்லை என்ற கோழைத்தனமான வரலாற்றைத் தொடர்கையில் அதை உடைத்துக் கொண்டு சதாம் கிளம்பியதை அமெரிக்காவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சீயோனிச, ஷியாயிஸ எதிர்ப்பாளர் சதாம்

91ல் சதாம் இஸ்ரேலைத் தாக்க ஆரம்பித்ததும் சீயோனிஸத்தின் பிடறியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்ததும் அதன் மூலம் அவர் அரபகத்தை ஒன்றுபடுத்தி விடுவார் என்று அமெரிக்கா அலற ஆரம்பித்து விட்டது. காரணம் சீயோனிஸத்தை உடைத்தெறியும் ஒரு வீரத் திருமகனை அரபகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. எனவே இது அரபக முஸ்லிம்களை ஒற்றுமையாக்கி விடும் என்று அமெரிக்கா உடனடியாக சதாமை ஓய்க்கப் பார்த்தது.

அத்துடன் சீயோனிஸத்திற்கு நிகரான ஈரானிய, இராக்கிய ஷியாயிஸத்தையும் எதிர்க்கும் திறமையை சதாம் கொண்டிருந்தார். அரபகத்தில் ஈரானை எதிர்த்து எட்டாண்டு காலம் போரிட்டவர் என்ற பெயரைப் பெற்றிருந்தார்.

(இராக்கிலிருந்த ஷியாக்களை அவர் கட்டுக்குள் வைத்திருந்த அவரது இந்தத் திறமை, அமெரிக்கா இராக்கை ஆக்கிரமிப்பு செய்ததும் தான் உலகுக்குத் தெரிய வந்தது. அது வரைக்கும் கர்பலாவில் தங்கள் கந்தூரியைக் கொண்டாட முடியாமல் இருந்த ஷியாக்கள் சதாமின் ஆட்சி வீழ்ந்ததும் கந்தூரி கொண்டாடத் துவங்கினர்; பஞ்சா ஊர்வலம் நடத்தினர். இவற்றைத் தனது ஆட்சியில் தலை தூக்காமல் பார்த்துக் கொண்டது, பக்கத்து ஈரானைப் பலமாகக் கொண்டிருந்த முக்ததா அல் ஸத்ர் போன்ற நாகப் பாம்புகள் தலை தூக்காமல் பார்த்துக் கொண்டது போன்றவை சதாமின் அரசியல் ஆண்மையை, ஆட்சித் திறமையை உணர்த்தியது)

இப்படி சீயோனிஸத்தையும் ஷியாயிஸத்தையும் ஒரு சேர எதிர்க்கும் ஒரு வீரனைத் தான் அரபுலகம் தேடிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட ஒருவன் தான் அரபுலகத்தை ஒன்றிணைக்க முடியும் என்று கனவு கண்டு கொண்டிருந்தது.

அந்தக் கனவு நடந்தேறி விட்டால் அரபுலகம் அமெரிக்காவுக்கு அடிமை சாசனம் செய்யாது என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்துத் தான் சதாம் ஹுசைனின் கதையை முடித்து விட அமெரிக்கா தீர்மானித்தது. ஆனால் 91ல் நடைபெற்ற வளைகுடாப் போரில் சதாமை வீழ்த்தும் முயற்சியில் அமெரிக்கா தோல்வியடைந்தது.

தான் நினைத்தது நடைபெறவில்லை என்றதும் இராக் மீது பொருளாதாரத் தடையை ஐ.நா. மூலம் விதிக்கச் செய்து, அதனால் உள்நாட்டுப் போர் மூண்டு சதாம் கொல்லப்படுவார் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் அந்தப் பொருளாதாரத் தடையிலும் சதாம் தன்னைத் தக்க வைத்துக் கொண்டார்.

குர்துகள், ஷியாக்கள், சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஆகிய அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஒரு வீரன் என்றென்றைக்கும் தனக்கு ஆபத்து என்று கருதிய அமெரிக்கா உடனே அவரைக் கொல்ல நினைத்தது.

ஆனால் அப்படிச் செய்தால் அது ஒரு கொந்தளிப்பையும் கொதிப்பையும் உலகில் ஏற்படுத்தும் என்று கருதி, பேரழிவு ஆயுதங்கள் என்ற பொய்யைக் கூறி போர் தொடுத்தது. லட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்த பின் சதாமைக் கைது செய்து, பொம்மை நீதிமன்றத்தை உருவாக்கி, வழக்கை ஜோடித்து, தான் விரும்பிய தீர்ப்பை வாங்கி அதன் மூலம் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஷியாக் கூட்டம் பாதை வகுத்துக் கொடுத்து, சதாமைப் பழி தீர்த்துக் கொண்டது.

இதைத் தான் ஐ.நா.வுக்கான முன்னாள் இராக் தூதர் முஹம்மது அல்தவ்ரி, "ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டுகின்ற, அரபுகளை ஒற்றுமைப்படுத்துகின்ற ஒரு மாவீரனை அரபுலம் இழந்து விட்டது” என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட மாவீரனின் மரண வேளையை இப்போது பார்ப்போம்.

சமுதாய மக்களுக்கு சதாம் எழுதிய கடிதம்

அமெரிக்கக் கைக்கூலிகள் கடந்த டிசம்பர் 26ம் தேதி இராக் அதிபர் சதாம் ஹுசைனுக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்த பின்னர் அவர் தமது சமுதாய மக்களுக்கு, அரபுலகிற்கு எழுதிய அரபிக் கடிதத்தின் (முக்கிய பகுதிகளின்) தமிழாக்கம்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ் எங்கள் மீது விதித்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு ஏற்படாது. (இது அல்குர்ஆன் 9:51 வசனத்தின் ஒரு பகுதியாகும்)

கண்ணியத்திற்குரிய இராக் மக்களே! நம்முடைய ஆயுதப் படையின் போராளிகளே! மதிப்புக்குரிய இராக் பெண்களே! மாண்புமிகு நம்முடைய சமுதாய மக்களே! மிக மிகத் துணிச்சலுடன் எதிரிகளைக் களத்தில் எதிர் கொள்ளும் ஆற்றல் மிகு இறை விசுவாசிகளே!

கடந்த காலத்தில் நீங்கள் அறிந்திருப்பது போல் நான் ஒரு போராளி தான். மீண்டும் ஒரு தடவை நான் போர்க்களத்தில் நிற்பதை அல்லாஹ் நாடியிருக்கின்றான். 1968ல் புரட்சியின் போது ஏற்பட்ட அதே உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் இன்னும் அதிகமான சோதனை நிறைந்த காலகட்டத்தில் நான் மீண்டும் போர்க்களத்தில் நிற்கின்றேன்.

அன்பர்களே! நாம் இருக்கும் இந்தக் கடுமையான சூழல், அதில் சோதனைக்குள்ளாகி இருக்கும் இராக்! நிச்சயமாக இது ஒரு புதிய பாடமே! ஒரு புது விதமான சோதனையே! இந்தச் சோதனையின் மூலம் மக்கள் தீர்மானிக்கப்படுகின்றார்கள். அவரவர் எண்ணத்திற்குத் தக்கவாறு அல்லாஹ்வின் முன்னிலையிலும், மக்களின் முன்னிலையிலும் இதுவே ஓர் அடையாளமாக அமைகின்றது.

இன்று நாம் சந்திக்கும் இந்த நெருக்கடி, நாளை ஒரு புகழ் மிக்க வரலாறாகப் பதிவாகும். அப்போதும் இது தான் அடையாளமாக நிற்கும். வரப் போகின்ற வரலாற்றுக் கட்டங்களுக்கு இந்தச் சோதனை ஓர் அடித்தளமாகும். இது தான் சிறந்த அளவு கோல்!

தன் சொந்த நாட்டு மக்களை அடக்குவதற்கு அந்நிய சக்திகள் தரும் அதிகாரத்தைப் பயன்படுத்துவோர் ஒரு போதும் உருப்படியானவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் உதவாக்கரைகள்! ஒன்றுக்கும் ஆகாதவர்கள்! இவர்கள் நுரையைப் போன்றவர்களே!

"நுரையோ மறைந்து விடுகின்றது; மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகின்றது” என்று (13:17) அல்லாஹ் உண்மையையே கூறியிருக்கின்றான்.

கண்ணியத்திற்குரிய சமுதாய மக்களே! மனித குலத்தாரே!

இந்தக் கடிதத்தின் கதாநாயகன் நம்பிக்கைக்குரியவன்; கண்ணிய மிக்கவன்; பிறர் நலம் பேணுபவன்; புத்திசாலி; கை சுத்தமானவன்; மக்கள் சொத்துக்களைப் பாதுகாப்பவன்; நீதமாக நடப்பவன்; ஏழைகளுக்கு இரக்கம் காட்டுபவன்; ஏழைகளின் நிலை முன்னேறும் வரை அமைதி பெறாதவன்; அவர்களின் தேவையை நிறைவேற்றுபவன்; அவன் தனது நாட்டு மக்களுக்கும் சமுதாயத்தினருக்கும் விரிந்த மனப்பான்மையைக் கொண்டவன்; ஒரு நம்பிக்கைக்குரிய இறை விசுவாசி; திறமை, முயற்சி, நாட்டுப்பற்று ஆகியவற்றைத் தவிர்த்து தன் நாட்டு மக்களிடம் பாரபட்சம் காட்டாதவன்.

இன்னும் உங்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக, நீதமானவர்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

என் நாட்டு மக்களே! என் சமுதாயமே! கண்ணியமிக்க ஆண்களே! மரியாதைக்குரிய பெண்களே!

உங்களுடைய சகோதரனை, நாட்டை வழி நடத்துபவனை நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள். இவன் எந்த அக்கிரமக்காரனுக்கும் பணிந்ததில்லை. நல்லவர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, போர் வாளாகவே இருந்திருக்கின்றான்.

உங்களுடைய சகோதரன், வழிகாட்டி இப்படித் தானே இருந்திருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் இல்லையா? ஆம்! சதாம் ஹுசைன் அப்படித் தான் இருந்திருக்கின்றான். ஒரு நாட்டை வழி நடத்துவோர் இந்தத் தகுதிகளையும், தன்மைகளையும் பெற்றவராகவே இருக்க வேண்டும்.

இதோ எனது உயிரை அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கின்றேன். அவன் விரும்பினால் இந்த உயிரை ஸித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள் அணியுடன் சேர்க்கட்டும். அவன் அவகாசம் அளிக்க விரும்பினால் அவகாசம் அளிக்கட்டும்! அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்! அவனே நம்மைப் படைத்தவன்; நாம் அவன் பக்கமே திரும்புபவர்கள். துரோகிகளுக்கு எதிராக அவனிடம் தான் உதவி தேடப்படும். அழகிய பொறுமையை நான் மேற்கொள்கின்றேன்.

அருமைச் சகோதரர்களே! பெறுமதியுள்ள இறை நம்பிக்கையைத் தாங்கிய, அர்த்தமிக்க வாழ்க்கையை நீங்கள் பேண வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாகரீகப் பண்பாட்டின் ஒளி விளக்காக நீங்கள் பிரகாசிக்க வேண்டும் என்று உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

நபிமார்களின் தந்தையும் அல்லாஹ்வின் நண்பருமான இப்ராஹீம் (அலை) மற்றும் இதர நபிமார்களின் தொட்டிலான இந்தப் பூமி உயர்ந்த பண்பைத் தாங்கி நடைபோடுகின்ற மாண்பாளர்களாக உங்களை ஆக்கட்டுமாக!

நமது மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோமாக!

இந்தப் பாலைவனத்தில் வீசிய கடும் புயலில் 1968 புரட்சிக்கு முன்னும் பின்னும் அல்லாஹ் சதாமின் உயிரைக் காத்திருக்கின்றான். இந்தத் தடவை அவ்வுயிரை அவன் பறிக்க நினைத்தால் இந்த உயிர் அவனது பயிர்! அவனே அதை உருவாக்கி இது வரை பாதுகாத்திருக்கின்றான்.

இந்த நாட்டின் எதிரிகள், இதை ஆக்கிரமித்தவர்கள் பாரசீகர்கள் (ஈரானின் ஷியாக்கள்) ஆவர். அவர்கள் உங்களை அடிமையாக ஆக்குவதற்கு உங்களது ஒற்றுமை குறுக்கே வந்து நிற்கின்றது என்று உணர்ந்த அவர்கள் உங்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

இராக்கிய குடியுரிமை தாங்கிய அந்நியர்களின் உள்ளங்கள் வெறுமையில் உள்ளன. அல்லது வெறுப்பில் நிரம்பியிருக்கின்றன. இது ஈரானிய பாரசீகத்தால் அவர்களது உள்ளங்களில் பதியப்பட்டவை.

நீங்கள் அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்தின் கீழ் நின்று உங்களுடைய எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதை விட்டு விட்டு, உங்களுக்கு எதிராகவே உங்களைத் திருப்பி விட நினைக்கும் அந்த இழி பிறவிகள் வெகு விரைவில் மண்ணைக் கவ்வுவார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் போராடும் போராளிகளே! பொறாமையை விட்டு விடுங்கள். ஏனெனில் அது புறப் பார்வையையும் அகப் பார்வையையும் குருடாக்கி விடும். சிந்தனையின் வாசல்களை அது மூடிவிடும். நடுநிலையாகச் சிந்திப்பதற்கு அது ஒரு தடைக் கல்லாக ஆகி விடும்.

அடுத்து நான் உங்களிடம் முன் வைக்கும் வேண்டுகோள்!

உங்கள் மீது தாக்குதல் தொடுத்த மற்ற நாட்டு மக்களை நீங்கள் வெறுத்து விடாதீர்கள்! திட்டம் வகுத்தவர் களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்! ஆட்சியாளர்கள் வகுத்த திட்டத்திற்குப் பொதுமக்கள் எப்படிப் பொறுப்பாளர்கள் ஆவார்கள்?

இராக்கிற்கு உள்ளே அல்லது வெளியில் எவர் திருந்தினாலும் அவரை மன்னித்து விடுங்கள்!

ஆக்கிரமிப்பாளர்களில் உங்களுக்கு ஆதரவான மக்களும் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் தாமாக முன் வந்து கைதிகளுக்காக வழக்காடினர். அந்தக் கைதிகளில் சதாம் ஹுசைனும் ஒருவன் என்பதை மனதில் கொள்ளுங்கள்! நான் பிரியாவிடை கொடுத்த போது கண்ணீர் விட்டு அழுதவர்களும் இவர்களில் உண்டு.

இந்தப் போரினால் ஏற்பட்ட அவலங்களையும் அராஜகங்களையும் உலகிற்குக் கொண்டு வருகின்ற மக்களும் அந்த ஆக்கிரமிப் பாளர்களில் இருக்கிறார்கள்.

அசத்தியத்தைக் கொண்டு எதிரிகள் நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றார்கள். நாம் சத்தியத்தைக் கொண்டு அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். நம்முடைய சத்தியம் வெற்றியடையும்! அசத்தியம் இழிவடையும்!

நமக்கென்று மாளிகைகள் உண்டு. அவற்றின் ஜோதி அணைந்து விடாது.

நமது எதிரிகளுக்கும் தங்கும் இடங்கள் உண்டு. ஆனால் அவர்களை நெருப்பு பொசுக்கிக் கொண்டிருக்கும்.

மறுமையில் ஹூருல் ஈன்கள் நம்மை வரவேற்பார்கள். அந்த வரவேற்பு அளிக்கப்படுபவன் மரியாதைக்குரியவன்; அவன் இழிவடைய மாட்டான்.

பாதையை அறிந்திருக்கிறோம்!

போராளி ஒருவன் நீதத்துடன் அதில் நடந்து செல்கிறான்.

அவனை மற்றொரு போராளி பின் தொடர்ந்து கொண்டே வருகின்றான்.

அந்தப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக வழி நடத்த வந்து கொண்டே இருப்போம்.

நாம் தான் முன்னணி வீரர்கள்!

(இது சதாம் எழுதிய வீரக் கவிதையாகும்)

நம்பிக்கைக்குரிய உண்மையான இறை விசுவாசியின் நல்லெண்ணம் ஒரு போதும் வீணாகாது.

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!

நம்முடைய சமுதாயம், மனித குலம் நீதமாக நேர்மையாக நடக்கும் போதெல்லாம் அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழட்டும்!

மகத்தான போராளி சமுதாயம் வாழ்க! இராக் வாழ்க! ஃபலஸ்தீன் வாழ்க! அறப்போர் வாழ்க! அறப்போர் புரிவோர் வாழ்க! அல்லாஹு அக்பர்! இழிவடைவோர் இழிவடையட்டும்!

இப்படிக்கு

சதாம் ஹுசைன்

இராக் அதிபர் மற்றும் போராளிப் படைகளின் தலைமை தளபதி

குறிப்பு: ஆக்கிரமிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் குற்றவியல் நீதிமன்றம் கடைசி வார்த்தைகள் சொல்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் என்று என்னுடைய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் அதன் தலைமை நீதிபதி ஒரு வார்த்தை கூட தெரிவிப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களின் விருப்பத்திற்கு இணங்க எங்கள் மீது மரண தண்டனைக்குரிய தீர்ப்பை வழங்கினார். அதனால் மக்களாகிய நீங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.

இது தான் சதாம் எழுதிய அந்த இறுதிக் கடிதமாகும்.

இந்தக் கடிதத்தில் அவருடைய இஸ்லாமிய உணர்வும், ஈமானிய உறுதிப்பாடும் மிகத் தெளிவாக எதிரொ-ப்பதைப் பார்க்க முடிகின்றது.

தனக்குரிய தூக்குத் தண்டனை ஒரு மாதத்திற்குள் என்று அமெரிக்கா குறிப்பிட்டாலும் அதற்கு அவ்வளவு தூரமில்லை; அது மிக அருகில் தான் என்று தூர நோக்குடனும், துல்லியக் கணக்குடனும் கணித்து இந்தக் கடிதத்தை எழுதுகின்றார்.

முஸ்லிம்களின் பெருநாளை சோக நாளாகவும், கிறித்தவர்களின் புத்தாண்டை மகிழச்சியான நாளாகவும் ஆக்கி, சதாமின் சாவைப் புத்தாண்டுப் பரிசாக வழங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கத்தின் அடிப்படையில் சதாம் ஹுசைன் வடக்கு பாக்தாதில் உள்ள கேம்ப் ஜஸ்டிஸ் என்ற இடத்திற்குக் கொண்டு வரப்படுகின்றார்.

அப்போது அவர் வெள்ளை சட்டையும் கருப்புக் கோட்டும் அணிந்திருந்தார்; அவருடைய கையில் திருமறைக் குர்ஆன் இருந்தது.

சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட உலோகத் தூக்கு மேடைக்கு அவர் கொண்டு வரப்படுகின்றார்.

அங்கே காவலாளிகள் (ஷியாக்கள்) சதாமிடம், "நீ மரணத்தைக் கண்டு பயப்படுகிறாயா?” என்று கேட்கின்றனர்.

சதாம்: இறை நிராகரிப்பாளர்களை, ஆக்கிரமிப்பாளர்களை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போரிட்டுள்ளேன்.

காவலர்கள்: நீ ஏன் இராக் நாட்டை நாசப்படுத்துகின்றாய்? எங்களையும் நாசப்படுத்துகின்றாய்! நீ எங்களைப் பட்டினியால் வாட வைத்தாய்! அமெரிக்காவை எங்கள் மீது ஆக்கிரமிக்க வைத்தாய்!

சதாம்:நான் ஆக்கிரமிப்பாளர்களை அழித்திருக்கின்றேன். இராக்கின் எதிரிகளை அழித்திருக்கின்றேன். வறுமையிலிருந்து இராக்கை செல்வச் செழிப்புக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.

சதாமுக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் பணியில் இருந்த நீதிபதி முனீர் ஹத்தாத் என்பவரிடம் பி.பி.சி. செய்தியாளர் ஜான் சிம்ப்ஸன் கண்ட பேட்டியில் மேற்கண்ட தகவலைத் தெரிவிக்கின்றார்.

ஜான் சிம்ப்ஸன்: சதாமுக்கு போதை மருந்து எதுவும் கொடுக்கப்பட்டதா?

ஹத்தாத்: அறவே இல்லை. சதாம் சாதாரண நிலையில் தான் இருந்தார். தனது முடிவை நன்கு தெரிந்திருந்தார். மரணத்திற்குத் தயாராக இருந்தார். "இது எனது இறுதிக் கட்டம்; இது என் வாழ்க்கையின் முடிவு; ஒரு போராளியாக, ஓர் அரசியல் வீரனாக எனது வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். அதனால் என்னை மரணம் ஒரு போதும் மிரட்ட முடியாது” என்று கூறினார்.

ஜான் சிம்ப்ஸன்: பிறகு என்ன நடந்தது?

ஹத்தாத்: கட்டப்பட்டிருந்த அவரது கைகள் அவிழ்க்கப்பட்டு, பின்புறமாகக் கட்டப்படுகின்றன. கால்களுக்கும் விலங்கிடப்படுகின்றது.

"அல்லாஹு அக்பர்; அல்லாஹு அக்பர்” என்று முழங்கினார்.

"அமெரிக்கா ஒழிக! ஆக்கிரமிப்பாளர்கள் ஒழிக! நாம் சுவனத்திற்குச் செல்கிறோம்; நமது எதிரிகள் நரகத்திற்குச் செல்கிறார்கள்” என்று கூறினார்.

இராக்கியர்கள் தங்களுக்கு மத்தியில் அன்பு பாராட்ட வேண்டும் என்றும் மன்னிக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆக்கிரமிப்புக்கார அமெரிக்கர்கள் மற்றும் ஈரானிய பாரசீகர்களை எதிர்த்துப் போரிடும்படி அவர் இராக்கியர்களைக் கேட்டுக் கொண்டார்.

ஜான் சிம்ப்ஸன்: பிறகு என்ன நடந்தது?

ஹத்தாத்: காவலர் அவரது முகத்தில் துணியைப் போட்டு மூட முனைந்தார். சதாம் அதற்கு மறுப்பு தெரிவித்தார். "முக்காடு போடாமல் மரணத்தை எதிர் கொள்ள விரும்புகின்றேன்” என்று தெரிவித்தார்.

அப்போது குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதினார்.

"அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்; வஅஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று உறுதி கூறுகின்றேன்; முஹம்மது அவனுடைய தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்)” என்று கூறினார்.

"இராக் மக்களே! நீங்கள் ஈரானியர்களின் கூட்டணியை நம்பாதீர்கள்; அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்” என்று தெரிவித்தார்.

சதாம் தூக்கு மேடையில் மிக அமைதியாக ஏறினார். அப்போது அவர் மிக உறுதியாகவும், துணிச்சலாகவும் இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். "நீ பயப்படாதே!” என்று அவர் எனக்குச் சொல்வது போல் இருந்தது. உண்மையில் இது ஒரு வித்தியாசமான உணர்வாகும்.

தன் கையில் இருந்த குர்ஆனை தன் குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு நீதிபதி ஹத்தாத் குறிப்பிடுகின்றார்.

இறுதிக் கட்டத்தில் சதாம் வெறியாட்டத்தில் ஷியாக்கள்

சதாம் ஹுசைனைக் கொல்கின்ற பொறுப்பை அமெரிக்கா திட்டமிட்டு, தெரிந்தே ஷியாக்களிடம் கொடுக்கின்றது. பொதுவாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, தண்டனை நிறைவேற்றப்படும் போது அவர்களிடம் கருணையும், அன்பும் காட்டுவது உலக மனிதாபிமான நடைமுறை; மரபு! ஆனால் இந்த நாகரீக நடைமுறையையும், மரபுகளையும் காலில் போட்டு மிதிக்கின்றார்கள் ஷியா வெறியர்கள்.

சதாம்: யா அல்லாஹ்!

ஷியாக்கள்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! (நாமும் இந்த ஸலவாத்தைச் சொல்கிறோம்; ஆனால் இதை, "முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என்ற வார்த்தையை, சதாமுக்கு முன்னால் இவர்கள் சொல்வதன் நோக்கம் தாங்கள் ஷியாக்கள் என்று பிரகடனப்படுத்துவதற்காகவே!)

அவர்களின் (ஷியாக்களின்) மகிழ்ச்சியை விரைந்து நிறைவேற்று! அவர்களின் எதிரியைச் சபித்து விடு!

முக்ததா! முக்ததா! முக்ததா! (சதாம் தனது ஆட்சிக் காலத்தில் முக்ததா அல்ஸத்ரின் தந்தையை தூக்கில் போட்டதை குத்திக் காட்டும் விதமாக இந்தப் பெயரை உச்சரிக்கின்றனர்)

சதாம்: (கிண்டலாக) முக்ததா ஸத்ர்!!

ஷியாக்கள்: முஹம்மது பாகிர் ஸத்ர் வாழ்க!

சதாம்: இது என்ன? இதை வீரம் என்று நினைக்கிறீர்களோ?

ஷியாக்கள்: (சதாம்) நரகத்திற்குச் செல்லட்டுமாக!

ஷியாக்களில் இன்னொருவர்: இப்படிச் செய்யாதீர்கள்! இவர் தூக்கிலிடப்பட உள்ளார். அதனால் இப்படிச் செய்யாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

சதாம்: அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்! வஅஷ்ஹது அன்ன முஹம்மது…..

(ஏகத்துவ உறுதி மொழியை முழுமையாகச் சொல்லி முடிப்பதற்கு முன்னதாக அவரைத் தாங்கி நின்ற மேடையின் விசை இயக்கப்பட்டு விடுகின்றது, இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

ஷியாக்கள்: ஓர் அழிச்சாட்டியக் காரன் மண்ணில் விழுந்து விட்டான்.

தூக்கு மேடை ஏறியதும் சதாம் திரும்பத் திரும்ப "அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்; வஅஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று கூறிக் கொண்டிருந்தார். கடைசி கட்டத்தில் ஷியாக்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, அஷ்ஹது அன்ன முஹம்மது… என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரைத் தூக்கில் தொங்க விட்டனர் ஷியாக்கள்.

இங்கு தான் ஷியாக்களின் நிறத்தையும், தரத்தையும் தெரிந்து கொள்கின்றோம். சதாம் தன்னுடைய இறுதிக் கட்டத்தில் குறிப்பிட்டது போன்று இவர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அதனால் தான் சதாம் ஹுசைன் இவர்களை முஸ்லிம்கள் என்று குறிப்பிடவில்லை; ஷியாக்கள் என்றும் குறிப்பிடவில்லை. மாறாக "பாரசீகர்கள்’ என்று அவர்களின் இன அடையாளத்தைச் சொல்லிக் குறிப்பிடுகின்றார்.

உண்மையும் அது தான்! இதை ஷியாயிஸம் குறித்த தனித் தலைப்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.