ஆகஸ்ட் 2007 ஏகத்துவம்
சத்தியத்தை நீங்கள் காத்து நின்றால் சத்தியம் உங்களைக் காத்து நிற்கும்
அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி. கடையநல்லூர்
நாம் ஏன் படைக்கப்பட்டோம்? நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு எட்டும் மறுமையில் நம்மை சுவனத்தில் கொண்டு போய் சேர்க்குமா? என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஏகத்துவ வாதிகள் இதனை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் மிக வீரியமாகச் சென்றடைந்து கொண்டிருக்கின்றது.
ஏகத்துவத்திற்கு எதிரான கப்ரு வணங்கிகளெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தான் தங்களின் மிக முக்கிய எதிரியாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். "நாங்களும் தவ்ஹீதைத் தான் பிரச்சாரம் செய்கிறோம்’ என்று பல அமைப்புகள் சொல்லிக் கொண்டு இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் இல்லாத ஓர் எதிர்ப்பு நமக்குத் தான் இருக்கின்றது.
தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் பள்ளியில் விரலசைத்துத் தொழுதாலே விரலை ஒடித்து விடுவோம் எனக் கூக்குரலிடும் பாரம்பரியக் கட்சியைச் சார்ந்தவர்கள் கூட, வாரியத்தைப் பெற்றவர்கள் விஷயத்தில் வாய் மூடி மவுனம் காக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அங்கு ஏகத்துவ வீரியம் இல்லை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்ததினால் தான்.
நம்முடைய ஜமாஅத்தை ஒழித்து விட்டால் தவ்ஹீதையே இல்லாமல் ஆக்கி விடலாம் என அவர்கள் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தாலும் நாம் நம்முடைய இலக்கை மறந்து விடக் கூடாது.
இன்றைக்கு நாம் சத்தியக் கொள்கையுடன் சமுதாயப் பணிகளையும் திறம்பட செய்து வருகின்றோம். சத்தியக் கொள்கைக்காகத் தான் சமுதாயப் பணிகளே தவிர, அவற்றிற்காக நாம் ஒரு போதும் சத்தியப் பிரச்சாரத்தில் பின்தங்கி விடக் கூடாது.
நமக்கு மத்தியில் உள்ள இயக்கங்களில் இணை வைப்புக் காரியங்களை தவிர்த்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் இணை வைப்புக் கொள்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள் எத்தனை பேர்? அதனை முழு முதற் கடமையாகக் கொண்டவர்கள் எத்தனை பேர்? என்று நாம் கணக்கிட்டுப் பார்த்தர்ல் அவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்.
இன்றைக்குப் பல இயக்கத்தினர் இணை வைப்புக் காரியங்களால் ஏற்படும் பின் விளைவுகளையும் தவ்ஹீதின் பலனையும் உணராதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
இத்தகையவர்கள் நம்மைப் பார்த்து, "இவர்கள் ஏன் ஒரு தாயத்திற்காகத் தாயைப் பகைக்கிறார்கள்? யாரோ தர்ஹாவுக்குச் சென்றால் இவர்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்கள் ஏன் அதை எதிர்க்க வேண்டும்? மற்றவர்கள் மவ்லிது ஓதினால் இவர்களுக்கென்ன? இவர்களுக்குப் பிடிக்காவிட்டால் ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தானே? இதற்காக சமுதாயத்தைப் பகைக்கலாமா? சமுதாய ஒற்றுமையைக் குலைக்கலாமா? என்றெல்லாம் நம்மைப் பார்த்து ஏளனமாகக் கேட்கிறார்கள்; புழுதி வாரித் தூற்றுகிறார்கள்.
ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் அவர்களின் சிந்தனையில் வார்த்தெடுக்கப்பட்ட அனைத்து இயக்கத்தவர்களையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஏகத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் காரியங்களெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.
படைத்தவனுக்கு எதிரான பல்லிக் கதை
இவர்களால் வெளியிடப்படும் சமரசம் என்ற மாத இதழில் ஜூன் 2007 இதழில் சிறுவர் அரங்கம் என்ற பகுதியில் "பல்லியின் சப்தம்” என ஒரு கதை! கதை சுவராஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக இறைவன் மீதே இட்டுக்கட்டப்பட்ட கதை!
மனிதர்கள் பொய் பேசினால் சப்தமிட வேண்டும் என்பதற்காகத் தான் இறைவன் பல்லியைப் படைத்தானாம். ஆனால் பல்லியால் அந்த வேலையைச் செய்ய முடியவில்லையாம். இறைவனிடம் சென்று, "மனிதர்கள் அதிகமதிகம் பொய் தான் பேசுகிறார்கள்; கத்திக் கத்தி எங்களுக்கு வாய் வலிக்கிறது; எங்களால் இந்தப் பணியைச் செய்ய முடியாது” என பல்லிகள் முறையிட்டதாம்.
அப்போது தான் மனிதர்கள் பொய் பேசுகிறார்கள் என இறைவனுக்குத் தெரிய வந்ததாம். உடனே மனிதர்கள் உண்மை பேசினால் மட்டும் கத்துமாறு இறைவன் பல்லிகளுக்குக் கட்டளையிட்டானாம். இது தான் பல்லிகள் கத்துவதின் ரகசியமாம்.
இவர்கள் எதைப் போதிக்க இந்தக் கதையை எழுதுகின்றார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பல்லிகள் மறைவான விஷயங்களை அறியக் கூடியவையா? பல்லிகள் சொல்லித் தான் மனிதர்கள் பொய் பேசும் விஷயம் இறைவனுக்குத் தெரியுமா? இப்படியெல்லாம் கதை எழுதுவது எவ்வளவு பெரிய இணை வைப்பு? என்பது கூட இவர்களுக்கு உரைக்காது.
இதை நாம் சுட்டிக் காட்டினால் சிறுவர்களுக்காக எழுதிய கதையைக் கூடவா இப்படி விமர்சிப்பது? என்று தான் கேட்பார்களே தவிர நாம் எவ்வளவு பெரிய அபத்தமான மூட நம்பிக்கையுடன் கூடிய இணை வைப்புகள் நிறைந்த கதையைப் போட்டு விட்டோம் என்பதை இவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஏனென்றால் இணை வைப்பின் பின்விளைவுகள் இவர்களின் மனங்களுக்குப் பாரதூரமாகத் தெரியாது.
இதன் காரணமாகத் தான் தர்ஹா வழிபாட்டின் தலைவர்களைக் கட்டித் தழுவும் இவர்கள், அவர்களிடம் காட்டும் பாசத்தில் நூறில் ஒரு பங்கு கூட நம்மிடம் காட்ட மாட்டார்கள். இவர்களின் பாசம் நமக்குத் தேவையில்லை. இணை வைப்பிற்கு எதிராக இவர்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதற்காகத் தான் இதை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
ஏகத்துவம் இருந்தால் சுவனம் நிச்சயம்
ஒருவன் தன்னுடைய உள்ளத்தில் அணுவின் முனையளவு இணை வைப்பு நம்பிக்கையில் மரணித்தாலும் அவனுடைய மறுமை வாழ்வு நிரந்தர நரகத்திற்கு உள்ளாகி விடும். ஆனால் ஒரு அணுவின் முனையளவிற்குக் கூட நன்மை செய்யாமல் தவ்ஹீத் கொள்கையில் மட்டும் உறுதியாக இருந்தான் என்றால் அவனுடைய மறுமை வாழ்வில் நிச்சயம் சுவனம் கிடைக்கும்.
இதனால் நாம் எந்தப் பாவத்தையும் செய்யலாம் என எண்ணி விடக் கூடாது. இறைவன் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: "எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்காத ஒருவன் பூமி நிறைய பாவத்துடன் என்னைச் சந்தித்தாலும் நான் அது போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் அவனைச் சந்திப்பேன்”
நூல்: முஸ்லிம் 4852
மேற்கண்ட ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக எனது சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராக தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் "இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய என்னுடைய எழுத்தாளர்கள் உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா?” என்று கேட்பான். "என்னுடைய இரட்சகனே! இல்லை! (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்)” என்று கூறுவான். "(நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், "என் இரட்சகனே! ஏதுமில்லை” என்று கூறுவான்.
அப்போது அல்லாஹ், "அவ்வாறில்லை! உனக்கு நம்மிடம் ஒரு நன்மை இருக்கிறது. இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது” என்று கூறிய உடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.
"நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார்” என்று அல்லாஹ் கூறுவான். "என்னுடைய இரட்சகனே! (இந்தப் பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன?” என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் "நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்” என்று கூறுவான்.
அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்தச் சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடி விடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.
அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ்(ரலி)
நூல்: திர்மிதி 2563
மேற்கண்ட ஹதீஸ்களை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு பின்வரும் ஹதீஸைப் படியுங்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகத்தில் மிகக் குறைந்த வேதனை அனுபவிக்கக் கூடியவனிடம் அல்லாஹ், "இந்தப் பூமி அளவிற்குத் தங்கம் உனக்கு இருந்தால் அதனை இதற்குப் பகரமாக நீ தருவாயா?” எனக் கேட்பான். அதற்கவன் "ஆம்” எனப் பதிலளிப்பான். உடனே இறைவன் "இதை விட மிகவும் லேசானதான, "எனக்கு நீ இணை கற்பிக்காதே!’ என்று தானே நீ ஆதமுடைய முதுகில் இருக்கும் போது நான் கேட்டேன். ஆனால் நீயோ அதனை மறுத்து இணை கற்பித்து விட்டாயே! (நான் எப்படி மன்னிக்க முடியும்?)” என்று கூறுவான்
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 3087
மறுமையில் நம்மை நிரந்த சுவனத்தில் கொண்டு சேர்க்கக் கூடியது ஏகத்துவக் கொள்கை தான் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன .
பிரச்சாரமே நம் உயிர் மூச்சு
நம்முடைய சமுதாயம் இவ்வுலக வாழ்க்கையில் படும் துன்பங்கள் நீங்க நாம் பல போராட்டங்களை நடத்துகின்றோம்; பலவிதமான உதவிகளைச் செய்கின்றோம்.
ஆனால் இதை விடப் பல மடங்கு அதிகமாக, நிரந்தர வாழ்க்கையாகிய மறுமையில் அவர்களும் நாமும் தோல்வி அடையாமல் இருப்பதற்காக ஏகத்துவத்தை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும். நம்முடைய பேச்சும் மூச்சும் இதுவாகத் தான் இருக்க வேண்டும்.
ஏனென்றால் இணை வைப்பின் உண்மையான பாதிப்பை விளங்கியவர்கள் நாம் தான். நம்மைத் தான் இறைவன் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறான்.
எல்லோரும் வசதிகளை அனுபவிக்கும் போது நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? காலா காலத்துக்கும் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியது தானா? எத்தனை காலங்களுக்கு தாயத்தையும், தர்ஹாக்களையும், மவ்லிதுகளையும், மத்ஹபுகளையும் பேசிக் கொண்டிருப்பது? என்ற எண்ணம் நம்மிடம் ஒரு போதும் வந்து விடக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உண்மையான) இஸ்லாம் (ஆரம்பத்தில் மக்களுக்கு) புதுமையாகத் தான் தோன்றியது. இவ்வாறு ஆரம்பித்தது போன்றே (பிற்காலத்திலும் உண்மையான இஸ்லாம் மக்களுக்கு) புதுமையானதாக மீண்டும் வரும். (அப்போது உண்மை இஸ்லாத்தைப் போதிக்கும்) அந்தப் புதுமை வாதிகளுக்கு நற்செய்தி கூறுங்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹ‚ரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 208
நபியவர்கள் போதித்த அந்த உண்மை ஓரிறைக் கொள்கையை நாம் எடுத்துரைக்கும் போது அது சிலருக்குப் புதுமையாகவும் சமுதாயப் பிரிவினையாகவும் தோன்றலாம்.
ஏனென்றால் அதிகமான மக்களுக்கு உண்மை இஸ்லாம் மறைக்கப்பட்டு அசத்தியக் கொள்கை தான் இஸ்லாம் என்று எண்ணம் ஏற்பட்டு விட்டது.
எனவே நபியவர்கள் அறிவித்த அந்தப் புதுமைவாதிகளாக நாமிருக்க வேண்டும். சத்தியத்தை நாம் காத்து நின்றால் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சத்தியம் நம்மைக் காத்து நிற்கும். இதை நாம் அனுபவித்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் இனியும் கொள்கைப் பிரச்சாரத்தில் தடைக் கற்களை உடைத்தெறிந்து இறை வழியில் முன்னேறிச் செல்ல வேண்டும். இறைவன் அதற்கு அருள் புரிவானாக!