மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!

ஆகஸ்ட் 2007 ஏகத்துவம்

மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!

பி. ஜைனுல் ஆபிதீன்

"குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்”

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!

இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடிக்கடி எடுத்து வைக்கப்பட்டு வருகின்றது.

இறைவன் மட்டுமே தவறுக்கு அப்பாற்பட்டவன்; இறைவனைத் தவிர எவராக இருந்தாலும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்ற இந்தக் கருத்து இஸ்லாத்தின் பல அடிப்படைகளை நிறுவுவதற்குப் பெரிதும் துணை நிற்கின்றது.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கலாகாது என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் பிரகடனம் செய்கின்றன. அதை மேற்கண்ட நபிமொழி வலுவூட்டுகின்றது.

தவறுக்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை எனும் போது, தவறு செய்யும் ஒருவரை எப்படி வணங்க முடியும்? என்ற சிந்தனையை இந்த நபிமொழி ஏற்படுத்துகிறது.

அது போல் குர்ஆனையும் நபிவழியையும் மட்டும் தான் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணற்ற வசனங்களும் நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.

இந்தக் கொள்கைக்கும் மேற்கண்ட நபிமொழி வலு சேர்க்கிறது.

மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களாக இருப்பதால் எந்த மனிதனின் கூற்றையும் யாரும் பின்பற்றி நடக்கக் கூடாது; தவறு நேராத இறைவனின் செய்திகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற தெளிவை மேற்கண்ட நபிமொழி ஏற்படுத்துகிறது.

தரீக்காக்கள், பித்அத்கள் என்ற பல தீமைகளுக்கு எதிராகப் போரிடுபவர்களின் ஆயுதங்களில் ஒன்றாக மேற்கண்ட நபிமொழி அமைந்துள்ளது.

இதன் காரணமாக இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சார மேடைகளில் அதிகமதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கண்ட ஹதீஸைச் சில அறிஞர்கள் உறுதியானது என்று கூறினாலும் வேறு சில அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் வரிசையில் காணப்படும் குறையைச் சுட்டிக் காட்டி, பலவீனமான ஹதீஸ் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த விமர்சனம் சரியானது தானா? என்பதை நாம் ஆய்வு செய்வோம்.

மேற்கண்ட ஹதீஸ் ஹாகிம், தாரமீ, முஸ்னத் அபீயஃலா, இப்னுமாஜா, திர்மிதீ, அஹ்மத் உள்ளிட்ட பல நூற்களில் இடம் பெற்றுள்ளது.

அனைத்து நூற்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அனஸ் (ரலி) நபித்தோழர் என்பதால் அவர்களை எடை போடக் கூடாது.

அனஸ் (ரலி) கூறியதாக கதாதா என்பார் அறிவிப்பதாக மேற்கண்ட அனைத்து நூற்களிலும் பதிவாகி உள்ளது. கதாதா நம்பகமானவர் என்பதால் இவரைக் காரணம் காட்டி இந்த ஹதீஸைக் குறை கூற முடியாது.

கதாதா கூறியதாக அறிவிப்பவர் அலீ பின் மஸ்அதா அல்பாஹிலீ என்பவராவார். மேற்கண்ட அனைத்து நூற்களிலும் இவரே அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இவரைப் பற்றி அறிஞர்கள் முரண்பட்ட முடிவுகளைக் கூறுகின்றனர்.

இவர் நம்பகமானவர் என்று அபூதாவூத் தயாலீஸீ அவர்களும், இவர் தகுதியானவர் என்று இப்னு மயீன் அவர்களும், இவரிடம் தவறேதும் இல்லை என்று அபூஹாதம் அவர்களும் இவரைப் நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர்.

இவரிடம் ஆட்சேபணை உண்டு என்று புகாரி அவர்களும், இவர் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும், இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸயீ அவர்களும் இவரது ஹதீஸ்கள் ஏற்புடையவை அல்ல என்று இப்னு அதீ அவர்களும் கூறியுள்ளனர். பலவீனமானவர் பட்டியலில் உகைலீ அவர்கள் இவரையும் சேர்த்துள்ளார். நம்பகமானவர்களுக்கு ஒப்ப இவர் அறிவிப்பவை தவிர மற்ற ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

இவரைப் பற்றி முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. முந்தைய அறிஞர்களின் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு அறிவிப்பாளரை எடை போடும் அறிஞர்களும் இவரைப் பற்றி முரண்பட்ட தீர்ப்பையே அளிக்கின்றனர்.

மேற்கண்ட ஹதீஸ் வலுவான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஹதீஸ் என்று ஹாகிம், இப்னுல் கத்தான் உள்ளிட்ட பல அறிஞர்கள் அடித்துக் கூறுகின்றனர். மற்றும் பல அறிஞர்கள் இவரைக் குறை கூறும் விமர்சனங்களைக் காரணமாகக் கொண்டு இவரையும் மேற்கண்ட ஹதீஸையும் பலவீனமாக்கியுள்ளனர்.

இவரைக் குறை கூறுபவர்கள் எந்தக் குறையின் காரணமாகக் குறை கூறியுள்ளனர் என்பதை இப்னு ஹிப்பான் அவர்கள் தெளிவாக விளக்குகின்றார்கள். "இவர் குறைவாக ஹதீஸ்களை அறிவித்திருந்தும் அதில் தவறு செய்பவராக இருந்தார். மேலும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களை வேறு யாரும் அறிவிப்பதில்லை என்ற அளவுக்கு தனித்து அறிவிப்பவராக இருந்தார்” என்பதே இப்னு ஹிப்பான் அவர்கள் அளிக்கும் விளக்கம்.

அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவரிடம் சில தவறுகள் நேரலாம். இவ்வாறு நேராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களை அறிவிப்பவர், அதில் கூட அடிக்கடி தவறு செய்தார் என்றால் அவரது நினைவாற்றல் சராசரியை விடக் குறைவானது என்று பொருள்.

மேலும் இவர் அறிவிக்கும் எந்தச் செய்தியானாலும் அதை இவர் மட்டுமே அறிவிப்பார். வேறு யாரும் அறிவிப்பதில்லை என்பது இவரது பலவீனத்தை அதிகப்படுத்துகின்றது என்பது இப்னு ஹிப்பான் அவர்களின் மேற்கண்ட கூற்றுக்கு விளக்கமாகும்.

"ஒருவரைப் பற்றிய நிறையை விட, குறையைப் பேசும் விமர்சனமே ஏற்கப்படும் என்ற விதிப் படியும், இப்னு ஹிப்பான் அவர்கள் தக்க காரணத்துடன் குறை கூறி இருப்பதாலும் இதன் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும். இந்த அறிப்பாளர் பலவீனமானவர் என்று முடிவு செய்வதும், அதன் காரணமாக இந்த ஹதீஸ் சரியானதல்ல என்று முடிவு செய்வதும் தான் சரியானது’ என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

இந்த வாதத்தில் உள்ள நியாயத்தை மறுக்க முடியாது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் இதே வாசகத்துடன் வேறு யார் மூலமும் அறிவிக்கப்படாவிட்டாலும் மேற்கண்ட கருத்து வேறு வாசகத்தைக் கொண்டு நம்பகமான அறிவிப்பாளர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"…எனவே ஒருவருக்கொருவர் அநீதி இழைக்ணகாதீர்கள். ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர். பின்னர் என்னிடம் மன்னிப்புக் கேட்கின்றனர். எனவே அவர்களை நான் மன்னிக்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்னத் அஹ்மத் நூலில் இடம் பெற்றுள்ள நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாக மேற்கண்ட வாசகம் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதாக இதை அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர் என்பதால் இவரைப் பற்றிப் பரிசீலனை செய்யத் தேவையில்லை.

அபூதர் கூறியதாக அபூ அஸ்மா என்பார் அறிவிக்கிறார். அம்ர் பின் மிர்ஸத் என்பது இவரது பெயர். இவர் நம்பகமானவர். இவரது ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

அபூ அஸ்மா அறிவிப்பதாக அபூ கிலாபா அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.

அபூ கிலாபா அறிவிப்பதாக கதாதா அறிவிக்கிறார். இவரும் நம்பகமானவர்.

கதாதா கூறியதாக ஹம்மாம் அறிவிக்கிறார். இவரும் நம்பகமானவர்.

ஹம்மாம் கூறியதாக அப்துர்ரஹ்மான், அப்துஸ்ஸமத் ஆகிய இருவர் அறிவிக்கின்றனர். இவ்விருவரும் நம்பகமானவர்கள்.

இவ்விருவர் வழியாக நூலாசிரியர் அறிவிக்கிறார்.

மொத்தத்தில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அனைவரும் நம்பகமானவர்களாக உள்ளனர்.

"ஆதமுடைய மக்கள் அனைவரும் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர்” என்பதும்,

"ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள்” என்பதும் ஒரே கருத்தைத் தரும் சொற்களாகும். இரவிலும் பகலிலும் என்று கூறப்படாவிட்டாலும் தவறு செய்பவர்கள் என்பதில் அந்தப் பொருள் அடங்கியுள்ளது.

எனவே வார்த்தைகளில் தான் வேறுபாடு உள்ளதே தவிர இரண்டு ஹதீஸ்களுக்கும் கருத்தில் பெரிய வேறுபாடு இல்லை.

எனவே, "குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்’ (ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். அவர்களில் மன்னிப்புக் கேட்டுத் திருந்துபவரே சிறந்தவர்) என்பது பலவீனமானது என்பதால் அதைத் தவிர்த்து விட்டு,

குல்லு பனீ ஆதம யுக்திவு பில்லைலி வன்னஹாரி (ஆதமுடைய மக்கள் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர்) என்பதைக் கூறுவதே சிறந்ததாகும்.

இந்த அறிவிப்பின் காரணமாக மேற்கண்ட ஹதீஸின் தரம் ஹஸன் என்ற நிலைக்கு உயரும் என்றாலும் அதை விட வலுவானதாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முந்தைய ஹதீஸ் எவ்வாறு பல்வேறு அடிப்படைக் கொள்கைகளை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்ததோ அது போலவே இந்த ஹதீசும் அமைந்துள்ளது.