செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..?

செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..?

ல்வழியில் செலவிடும் போது பெருமைக்காகச் செய்கிறோனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது ஷைத்தானின் வேலையா?

முஹம்மத் சைபுல்லா.

பதில்:

பொருளாதாரத்தைச் செலவிடும் போது இரகசியமாகவும் செலவிடலாம். பகிரங்கமாகவும் செலவிடலாம்.

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:271

தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:274

ஆயினும் பகிரங்கமாகச் செய்யும் போது பெருமை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இரகசியமாகச் செய்யும் போது அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இரகசியமாகச் செலவிட்டு பெருமையடிக்கும் எண்ணம் தலைதூக்காமல் உள்ளதா என்று பார்க்கவும்.

சொல்லப்போனால் வலது கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்று சொல்லும் அளவுக்கு இரகசியமாகச் செலவிட்டால் நியாயத் தீர்ப்பு நாளில் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியளித்துள்ளனர். இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்!

இரகசியமாகச் செய்தாலும் பெருமையடிக்கும் எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்தினால் அல்லாஹ்விடம் உடனடியாக பாவமன்னிப்பு தேடிக் கொண்டால் அந்த எண்ணம் தோன்றியதற்காக அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். பெருமையடித்ததாக எடுத்துக் கொள்ளவும் மாட்டான்.

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.  (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது  அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

திருக்குர்ஆன் 7:200,201

Leave a Reply