துரோகிகளை நம்பிய நபிகள் நாயகம்

துரோகிகளை நம்பிய நபிகள் நாயகம்

صحيح البخاري
3064 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ رِعْلٌ، وَذَكْوَانُ، وَعُصَيَّةُ، وَبَنُو لَحْيَانَ، فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا، وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ، «فَأَمَدَّهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعِينَ مِنَ الأَنْصَارِ»، قَالَ أَنَسٌ: كُنَّا نُسَمِّيهِمُ القُرَّاءَ، يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ، فَانْطَلَقُوا بِهِمْ، حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ، غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ، فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَبَنِي لَحْيَانَ، قَالَ قَتَادَةُ: وَحَدَّثَنَا أَنَسٌ: أَنَّهُمْ قَرَءُوا بِهِمْ قُرْآنًا: أَلاَ بَلِّغُوا عَنَّا قَوْمَنَا، بِأَنَّا قَدْ لَقِيَنَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا، ثُمَّ رُفِعَ ذَلِكَ بَعْدُ

நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான்,  உஸய்யா,  பனூ லஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர். மேலும்,  தமது சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பி உதவும்படியும் நபி (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் காரீகள் (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், மவூனா என்ற கிணற்றை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக்  கொன்று விட்டனர். உடனே,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறை வசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3064

மேலும் இந்த ஹதீஸ் புகாரியில் 1002, 3170, 4088, 4090, 4096 ஆகிய இலக்கங்களிலும் பதிவாகியுள்ளது.

நபியவர்களிடம் வந்த நான்கு கூட்டத்தாரும் வஞ்சகர்கள் என்பதும், துரோகம் செய்யப் போகிறார்கள் என்பதும் நபியவர்களுக்குத் தெரியவில்லை. 70 முஸ்லிம்களைக் கொன்ற பிறகு தான் அந்தக் கூட்டத்தினர் கெட்டவர்கள் என்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. 70 பேரையும் அழைத்துச் சென்று வஞ்சமாகக் கொலை செய்யவே இவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை முதலிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிந்திருந்தால், அந்தக் கூட்டத்தினரைக் கைது செய்திருப்பார்கள்.

ஓரிருவர் அல்ல; 70 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் இது சாதாரணமான விஷயம் அல்ல. கொல்லப்பட்ட 70 தோழர்களும் குர்ஆனை நன்கு மனனம் செய்தவர்கள். குர்ஆனை மிகவும் அறிந்த ஆலிம்கள். மார்க்க அறிஞர்களாக இருந்த ஸஹாபாக்கள்.

நபியவர்கள் அத்தகைய ஸஹாபாக்களை முத்துக்களைப் போல பொறுக்கி எடுத்து அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் நல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன், பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எதுவும் எடுக்காமல் வெறுங்கையுடன் சென்ற அந்த 70 பேரையும் நம்ப வைத்து அந்த துரோகிகள் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

நான்கு குலத்தார்களையும் நல்லவர்கள் என்று நபியவர்கள் கணித்தது தவறாக ஆகிவிட்டது. நபியவர்களும், மற்ற ஸஹாபாக்களும் யாரை முஸ்லிம்கள் என்றும், நல்லவர்கள் என்றும் நினைத்தார்களோ அவர்கள் கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெளிப்படையான தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என நம்பி ஏமாந்துள்ளார்கள்.

அந்த 70 பேரும் கொல்லப்பட்டது வஹீயின் மூலம் வந்தபோது தான் அவர்களுக்குத் தெரிந்தது.

ஆக நபியவர்களைக் கூட ஒரு கூட்டம் ஏமாற்றியிருக்கிறது என்றால் நம்மை ஒருவன் ஏமாற்றுவது பெரிய விஷயமே அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே ஒரு கூட்டம் ஏமாற்ற முடியும் என்றால், நம்மைப் போன்ற சாதாரண மக்களை ஏமாற்ற முடியாதா?

தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் மகான்கள் என்று நாம் நாம் நம்புகிறோமே நாம் எப்படி இதைக் கண்டுபிடித்தோம்? அல்லாஹ்வின் தூதரால் கண்டுபிடிக்க முடியாததை நாம் கண்டுபிடித்து விட முடியுமா?

Leave a Reply