நல்லவர் என்று நபிகளின் கணிப்பும் தவறாகலாம்!

நல்லவர் என்று நபிகளின் கணிப்பும் தவறாகலாம்!

صحيح البخاري 
2680 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ أَخِيهِ شَيْئًا، بِقَوْلِهِ: فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ فَلاَ يَأْخُذْهَا "

ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நூல்: புகாரி 2680

தம்மிடம் வழக்குகள் கொண்டு வரப்படும் போது வெளிப்படையான வாதங்களையும், ஆதாரங்களையும் வைத்துத் தீர்ப்பளிப்பதாகவும் சில நேரங்களில் அந்தத் தீர்ப்பு தவறாக அமைந்து விடும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.

அதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை நல்லவர்கள் என்று கருதினார்களோ அவர்களில் சிலர் மறுமையில் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் என்று நபிகள் நாயகத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் சிலர் நல்லவர்களாகவும் இருப்பார்கள். தன் முன்னால் நின்று வழக்குரைக்கும் இருவரில் யார் உண்மையாளன் என்பதை நபியவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்றால் மற்றவர்களுக்கு அது இயலுமா?

மனிதர்களின் உள்ளத்தில் இருப்பதை நபியவர்கள் அறிபவர்களாக இருந்தால் அவ்விருவரில் யார் பொய் சொல்கிறார், யார் உண்மை சொல்கிறார் என்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை செய்யாமல் அந்தப் பொருள் யாருக்குரியதோ அவரிடம் கொடுத்திருப்பார்கள். எனவே நபியவர்களால் கூட நல்லவர் யார். கெட்டவர் யார் என்பதை அறிய முடியவில்லை என்பதற்கு இந்தச் செய்தி சான்றாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் எத்தனையோ பேருக்கு இப்படி தீர்ப்பளித்திருப்பார்கள். எத்தனையோ நல்லவனை, கெட்டவன் என்று முடிவு செய்திருப்பார்கள். எத்தனையோ கெட்டவனை நல்லவன் என்று முடிவு செய்திருப்பார்கள். இவ்வாறிருக்க நாம் எப்படி ஒருவரை அவ்லியா, இறைநேசர், மகான் என்று கண்டுபிடிக்க முடியும்?

அவ்வாறு முடியும் என்று சொன்னால், நபியவர்களை விட நமக்கு அதிகமான அறிவு ஞானம் இருக்கிறது என்றாகிவிடாதா? நபிகள் நாயகத்துக்குத் தெரியாதது எங்களுக்குத் தெரியும்; உள்ளத்தில் உள்ளதை நபியவர்களுக்குக் கண்டுபிடிக்கத் தெரியாது; ஆனால் எங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியும் என்றாகி விடாதா?

இதை நாம் புரிந்து கொண்டால் நாம் யாரையும் அவ்லியா என்றோ மகான் என்றோ சொல்ல மாட்டோம்.

Leave a Reply