லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்தத் தொழுகையை தொழவேண்டும்?

லுஹர் தொழாத நிலையில் அஸர் ஜமாஅத் நடந்தால் முதலில் எந்தத் தொழுகையை தொழவேண்டும்?

யணத்தில் இருக்கும் போது லுஹர் தொழுகை தொழ முடியாமல் இருந்து பிறகு பள்ளியில் அஸர் தொழுகை ஜமாஅத் நடைபெறும் போது ஜமாஅத்துடன் சேர்ந்து அஸர் தொழ வேண்டுமா? அல்லது லுஹரைத் தொழுத பிறகு தான் அஸர் தொழ வேண்டுமா?

ஏ.ஆகிலா பானு, வடகால்

தக்க காரணத்திற்காக விடுபட்ட தொழுகைகளை வரிசைப்படி தான் தொழ வேண்டும்.

صحيح البخاري
596 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، جَاءَ يَوْمَ الخَنْدَقِ، بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي العَصْرَ، حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ مَا صَلَّيْتُهَا» فَقُمْنَا إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ لِلصَّلاَةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى العَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا المَغْرِبَ

அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி), குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே, சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே” என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக நானும் அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். நாங்கள் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 596

உரிய நேரத்தில் அஸர் தொழுகையை தொழ முடியாத போது அஸர் தொழுகையை முதலில் நிறைவேற்றி விட்டுப் பின்னர் தான் மக்ரிப் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள்.

இந்த அடிப்படையில் லுஹரைத் தொழுத பிறகே அஸர் தொழவேண்டும்.

பள்ளியில் அஸர் தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அந்த ஜமாஅத்திலேயே சேர்ந்து லுஹர் தொழுகையை நிறைவேற்றலாம்.

இமாமுடைய தொழுகையும், பின்பற்றித் தொழுபவரின் தொழுகையும் வெவ்வேறாக இருக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري

700 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: «أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ، فَيَؤُمُّ قَوْمَهُ»

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டு தமது சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 700, 701

முஆத் (ரலி) அவர்கள் கடமையான தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நிறைவேற்றி விட்டு தமது சமுதாயத்தினரிடம் சென்று இமாமத் செய்துள்ளார்கள்.

முஆத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி தொழுததால் அவர்களின் கடமை நீங்கிவிட்டது. மீண்டும் அந்தத் தொழுகையைத் தொழுதிருக்க முடியாது என்பதால் முஆத் அவர்கள் மக்களுக்குத் தொழுவித்த தொழுகை அவரைப் பொருத்தவரை உபரியானதாக ஆகும். அதே சமயம் பின்பற்றித் தொழுபவர்கள் கடமையான தொழுகையை நிறைவேற்றுகின்றார்கள்.

இது போல் மற்றொரு ஹதீஸில், கடமையான தொழுகையின் ஜமாஅத்தைப் பிற்படுத்தும் ஆட்சியாளர்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, உரிய நேரம் வந்ததும் தொழுகையை நிறைவேற்றி விட்டு ஜமாஅத் நடக்கும் போது நஃபிலாகத் தொழ வேண்டும் என்று நபித் தோழருக்குக் கட்டளையிட்ட செய்தியையும் ஹதீஸ்களில் காண்கிறோம்.

இமாம் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கும் போது, பின்பற்றித் தொழுபவர் வேறொரு தொழுகையைத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை.

எனவே லுஹர் தொழுத பின்னர் தனியாக அஸர் தொழுது கொள்ள வேண்டும். அஸர் தொழுதுவிட்டு லுஹர் தொழுவதற்கு அனுமதி இல்லை.

மேல் கூறப்பட்ட அகழ்ப் போர் சம்பந்தமான ஹதீஸில், அஸர் தொழுகையை சூரியன் மறைந்த பிறகு நிறைவேற்றியிருப்பதால் இதை வைத்துக் கொண்டு தொழுகைகளை களா செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இது குறித்து கீழ்க்கண்ட ஆக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?