159. ஸலாம் கூறும் முறை

159. ஸலாம் கூறும் முறை

ருவரை ஒருவர் சந்திக்கும்போது கூற வேண்டிய ஸலாம் குறித்து இவ்வசனங்களில் (4:94, 6:54, 7:46, 10:10, 11:69, 13:24, 14:23, 15:52, 16:32, 19:33, 19:47, 19:62, 24:27, 24:61, 25:63, 25:75, 27:59, 28:55, 33:44, 33:56, 36:58, 37:79, 37:109, 37:120, 37:130, 37:181, 39:73, 43:89, 51:25, 56:26, 56:91, 97:5) கூறப்படுகின்றன.

முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறுவதை அனைவரும் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவ்வாறே நடைமுறைப்படுத்தி 14 நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் திருக்குர்ஆனில் சில வசனங்களைக் கவனிக்கும்போது, அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறாமல் வேறு வார்த்தைகளைக் கூறுமாறு வழிகாட்டப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனின் 7:46, 13:24, 16:32, 39:73 ஆகிய வசனங்களில் சொர்க்கத்தில் நல்லோர்களுக்கு வானவர்கள் ஸலாமுன் அலைக்கும் என்று கூறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

அது போல 6:54 வசனத்தில் ஸலாமுன் அலைக்கும் என்று கூறுவீராக என்று கூறப்பட்டுள்ளது.

28:55 வசனத்தில் நல்லவர்கள் ஸலாமுன் அலைக்கும் என்று கூறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

10:10, 11:69, 14:23, 15:52, 19:32, 25:63, 25:75, 33:44, 36:58, 37:79, 37:109, 37:120, 37:130, 37:181, 43:89, 51:25, 56:26 ஆகிய வசனங்களில் ஸலாமுன் அலைக்கும் எனக் கூறாமல் ஸலாம் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

ஸலாம் என்பது தான் அதிகமான இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

ஒருவருக்கு ஸலாம் கூறும்போது ஸலாமுன் அலைக்க என்று கூறலாம் என்பதை 19:47 வசனத்தில் இருந்து அறியலாம்.

ஸலாம் என்ற சொல்லுடன் அல் என்ற சொல்லை இணைத்து அஸ்ஸலாமு என்றும் கூறலாம் என்பதை 19:33 வசனத்தில் இருந்து அறியலாம்.

ஒருவருக்கொருவர் ஸலாம் கூறும்போது திருக்குர்ஆனில் கூறப்படுவது போல் ஸலாம் என்று மட்டும் கூறினாலும், ஸலாமுன் அலைக்கும் எனக் கூறினாலும், ஸலாமுன் அலைக்க என்று கூறினாலும் மார்க்கத்தில் அது குற்றமில்லை. திருக்குர்ஆனின் வழிகாட்டுதலைச் செயல்படுத்தியதாகத்தான் அது அமையும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் என்று பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளனர். இதைப் பயன்படுத்துவது மேற்கண்ட வசனங்களுக்கு எதிரானது அல்ல.

ஏனெனில், ஸலாமுன் அலைக்கும் என்பதும், அஸ்ஸலாமு அலைக்கும் என்பதும் ஒரு வாக்கியத்தின் இரு வேறு வடிவங்களாகும். ஸலாமுன் அலைக்கும் என்றால் உங்கள் மீது அமைதி நிலவட்டும் என்பது பொருள். அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் அந்த அமைதி உங்கள் மீது நிலவட்டும் என்று பொருள்.

அதாவது எந்த ஸலாமைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளானோ அந்த ஸலாம் உங்கள் மீது உண்டாகட்டும் என்ற கருத்தில் இது அமைந்துள்ளது.

அடுத்தது முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்துகின்ற இந்த ஸலாம் என்ற சொல் மிகவும் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியது.

திருக்குர்ஆன் கற்றுத் தருகின்ற இந்த வாழ்த்து எல்லா நேரத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றது.

உங்கள் மீது அமைதி ஏற்படட்டும், சாந்தி ஏற்படட்டும், நிம்மதி ஏற்படட்டும், கடவுளின் பாதுகாப்பு ஏற்படட்டும் என்று இந்தச் சொல்லுக்கு அர்த்தம் உள்ளது.

இதனைத் திருமண வீடுகளில் மகிழ்ச்சியாக இருப்பவர்களிடமும் கூறலாம். சோகமாக இருப்பவர்களிடமும் கூறலாம். இரு தரப்பினருக்கும் நிம்மதி அவசியமானது.

காலையிலும் கூறலாம். மாலையிலும் கூறலாம். இரவிலும் கூறலாம்.

பெரியவர்கள் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் பெரியவர்களுக்கும் கூறலாம்.

ஆரோக்கியமானவர்கள் நோயாளிகளுக்கும், நோயாளிகள் நோயற்றவர்களுக்கும் கூறலாம்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், தலைவர்கள் தொண்டர்களுக்கும், தொண்டர்கள் தலைவர்களுக்கும் கூறலாம்.

எந்தவிதமான கேவலமோ, அவமரியாதையோ ஏற்படாமல் எல்லோருடைய மரியாதையையும் பேணும் சொல்லாக இந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்ற சொல் அமைந்துள்ளது.

வெவ்வேறு வாழ்த்து முறைகள் உலகத்தில் நடைமுறையில் உள்ளன. சில வாழ்த்து முறைகள் நல்ல காலைப் பொழுது என்று உள்ளது. இதனைச் சோகமான இடங்களில் சொல்ல முடியாது. இது அவர்களின் மனதிற்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். நல்ல காலைப் பொழுது என்பதை மாலையிலோ, இரவிலோ சொல்ல முடியாது.

அதே போன்று ஒருவரை ஒருவர் உயர்த்தி மதிப்பது போன்றும், கும்பிடுவது போன்றும், வணங்குவது போன்றும் கருதப்படுமானால் ஒரு மனிதரின் சுயமரியாதைக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார் என்பது போன்ற சொற்களுக்கு உங்களை வணங்குகிறேன் என்று பொருள். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வணங்குவது சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்தும்.

அவ்வாறில்லாமல் ஒருவருக்காக மற்றவர் கடவுளிடம் வேண்டுவது என்ற அடிப்படையில் அமைந்திருக்கின்ற இந்த வாழ்த்து இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும்போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களையும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் சொற்களையும் கூறும் நிர்பந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர்.

திருக்குர்ஆனில் 2:130, 2:135, 3:95, 4:125, 6:161, 16:123, 22:78 ஆகிய வசனங்களில் இப்ராஹீம் நபியவர்களின் வழிமுறையை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்துகின்றான்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத தமது தந்தைக்காக இப்ராஹீம் நபியவர்கள் ஒரு தடவை பாவமன்னிப்புத் தேடினார்கள். அது தவறு என்று தெரிந்ததும் அதிலிருந்து விலகிக் கொண்டார்கள். அவர்கள் தமது தந்தைக்குப் பாவமன்னிப்புக் கோரிய அந்த விஷயத்தைத் தவிர அவர்களின் மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உள்ளது என்று அல்லாஹ் 60:4 வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.

"உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்'' என்று இப்ராஹீம் நபி கூறினார்கள் என 19:47 வசனம் கூறுகிறது.

இறைவனுக்கு இணைகற்பித்த தந்தைக்கு இப்ராஹீம் நபியவர்கள் ஸலாம் கூறியதை நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் உண்டாகுமாறு எப்படிப் பிரார்த்திக்க முடியும் என்று சிலர் கேள்வியெழுப்புவர். இக்கேள்வி தவறாகும்.

அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் பொருள் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்பதாகும்.

இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை முஸ்லிமல்லாதவர் ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்குச் சாந்தி கிடைக்கட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. முஸ்லிமல்லாதவர் இவ்வுலக வாழ்க்கையின் நன்மைகளைப் பெற்று சாந்தி அடையட்டும் என்ற பொருளும் இதற்குள் உண்டு. இவ்வுலக நன்மைகள் முஸ்லிமல்லாதவருக்குக் கிடைக்க நாம் துஆ செய்யலாம். இதற்குத் தடை ஏதும் இல்லை. எனவே முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறுவதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.

"உனக்குத் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாமைப் பரப்பு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(பார்க்க புகாரீ 12, 28, 6236)  

முஸ்லிமுக்கு மட்டும் தான் ஸலாம் கூற வேண்டும் என்றால் முஸ்லிம் என உனக்குத் தெரிந்தவருக்கு ஸலாம் கூறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறாமல் தெரிந்தவருக்கும், தெரியாதவருக்கும் ஸலாம் கூறு என்று பொதுவாகக் கூறியுள்ளனர்.

ஒருவரைப் பற்றிய விபரம் நமக்குத் தெரியாது என்றால் அவர் முஸ்லிமா? முஸ்லிம் இல்லையா என்பதைத் தெரியாமல் இருப்பதையும் குறிக்கும். தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஸலாம் கூறு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலமும் முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாம் என்பதை அறிய முடியும்.

மேலும் 25:63, 28:55, 43:88,89 வசனங்களில் மூடர்கள் உரையாடினால் ஸலாம் என்று கூறிவிடுமாறு அல்லாஹ் வழிகாட்டுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முஸ்லிமல்லாதவர்களில் உள்ள சில மூடர்கள் குதர்க்கம் செய்ததைப் பற்றித் தான் இவ்வசனம் கூறுகிறது.

மேற்கண்ட வசனங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டி முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

"வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரீ 6258 

வேதமுடையோர் ஸலாம் கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும்) என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்பது அவர்களின் வாதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும், ஒரு காரணத்தைக் கூறி அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.

வேதமுடையோரின் ஸலாமுக்குப் பதில் கூறுவதைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலைக்கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.

"யூதர்கள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று (லா என்ற எழுத்தை விட்டுவிட்டு) கூறுகின்றனர். (உம் மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 6257, 2935, 6256, 6024, 6030, 6395, 9401, 6927 

யூதர்கள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக ஸலாம் கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத்தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும் இதுதான் ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரண்படாத வகையில் ஹதீஸ்களை அணுகும் சரியான முறையாகும்.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit