164. இறைத் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்ன?

164. இறைத் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்ன?

வ்வசனங்களில் (3:79, 6:89, 19:12, 21:74, 28:14, 45:16) நபிமார்களைப் பற்றிக் கூறும்போது அவர்களுக்கு வேதத்தையும் ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

ஹுக்ம் என்றால் அதிகாரம் என்று பொருள். திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்ற நபிமார்களை நாம் எடுத்துக் கொண்டால் அந்த நபிமார்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படவில்லை.


அப்படியானால் அதிகாரத்தை வழங்கியதாக அல்லாஹ் கூறுவது எந்த வகை அதிகாரம் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்திலேயே யஹ்யாவுக்கு ஹுக்மை (அதிகாரத்தை) வழங்கியதாக 19:12 வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிமார்களுக்கு வேதம் வழங்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்களுக்கு ஆட்சியதிகாரம் கொடுக்காமல் இருந்தும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுவது ஏன் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

இது ஆட்சி அதிகாரத்தைக் குறிக்க முடியாது. மாறாக வேதத்திற்கு விளக்கமாகச் சட்டமியற்றி மார்க்கத் தலைவர் என்ற முறையில் மக்களுக்கு ஆணையிடுகின்ற அதிகாரத்தைத்தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

இவ்வாறு பொருள் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அதிகாரம் வழங்கியதாகக் குறிப்பிடுவதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.

ஆட்சியதிகாரம் என்று நாம் அர்த்தம் கொடுத்தால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டும்.

ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்து விட்டார்கள் என்று திருக்குர்ஆனே சொல்கிறது. எல்லா நபிமார்களும் வெற்றி பெற்று பின்னாளில் ஆட்சி அமைக்கவில்லை.

நபிமார்களில் ஒரு சாராரை மறுத்தீர்கள்; பெரும்பாலானவர்களைக் கொன்று விட்டீர்கள் என்று 2:87 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அதனால் இந்த வசனங்களில் சொல்லப்படும் அதிகாரம் என்பது சட்டம் இயற்றும் அதிகாரத்தையே குறிக்கிறது. வேறு விதமான வஹீயின் மூலம் இந்தச் சட்டம் அவர்களுக்கு வந்து சேரும்.

அதனால்தான் வேதத்தைக் கொடுத்தோம் என்று மட்டும் சொல்லாமல் வேதத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம் என்று 6:89 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப்படவில்லை என்றிருந்தால் வேதத்தையும், நுபுவ்வத்தையும், ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். "இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம்'' என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, நபி எனும் தகுதியோ நமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கும் மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

இம்மூன்றையும் மறுப்பவர்கள் இறைமறுப்பாளர்கள் என்றும் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது.

இந்த வசனங்கள், "வேதத்தோடு நபிமார்களின் விளக்கமும் அவசியம்" என்று உறுதி செய்கின்ற வசனங்கள் ஆகும்.

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 3639, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply