256. திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி

256. திருக்குர்ஆனை விளக்குவதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி

வேதத்தை வழங்குவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்வு செய்யக் காரணம், அவர்கள் அதனை விளக்க வேண்டும் என்பது தான் என்று இவ்வசனத்தில் (16:64) கூறப்படுகின்றது.

"நீர் விளக்குவதற்காக இதை அருளினேன்'' என்று கூறுவதை விட "நீர் விளக்குவதற்காகவே தவிர இதை அருளவில்லை'' என்பது அழுத்தம் நிறைந்ததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்ற கருத்தை இவ்வாசக அமைப்பு தெளிவாக அறிவிக்கின்றது.

திருக்குர்ஆனை மக்களிடம் கொடுத்தவுடன், அல்லது வாசித்துக் காட்டியவுடன் அவர்களுக்கு அனைத்தும் விளங்கி விடும் என்றிருந்தால், "நீர் விளக்குவதற்காகவே தவிர இதை அருளவில்லை'' என்று அல்லாஹ் கூறியிருப்பானா? விளக்காமலே விளங்குவதை யாரேனும் விளக்குவார்களா? நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் இத்தகைய அறிவற்ற வேலையைச் செய்வானா?

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் துணையோடு தான் நாமும் திருக்குர்ஆனை விளங்க வேண்டும்; விளங்க முடியும்.

திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்துடன் தான் அறிய வேண்டும் என்பதை மேலும் விரிவாக அறிய 18, 3639, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply