273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்

273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்

வ்வசனங்களில் (18:60-82 வரை) மூஸா நபியவர்கள் ஹில்று அவர்களைச் சந்தித்து, பாடம் கற்ற வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகின்றது.

மூஸா நபிக்குத் தெரியாத மூன்று விஷயங்கள் ஹில்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததாக இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இதைச் சிலர் தமது தவறான கொள்கைக்கு சான்றாகக் கருதுகின்றனர்.

மூஸா நபியவர்கள் பெரிய இறைத்தூதராக இருந்தாலும், சில அற்புதங்களை அவர்கள் நிகழ்த்தினாலும் அவர்களுக்குத் தெரியாத இரகசிய ஞானம் ஹில்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஹில்று அவர்கள் தமது தவவலிமை மூலம் பெற்ற ஞானம், மூஸா நபியவர்கள் வஹீ மூலம் பெற்ற ஞானத்தை விடச் சிறந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்.


மேலும் கண்களுக்குத் தெரியாத மறைவான விஷயங்கள் யாவும் இந்த ஞானத்தின் மூலம் புலப்படும்; இறைவனின் வஹீயை எதிர்பார்க்காமலேயே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். இதுதான் மெஞ்ஞானம் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் இவர்களின் வாதம் ஏற்கத்தக்கதல்ல.

இந்த நிகழ்ச்சியின் பின்னணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

மூஸா நபியவர்கள் இஸ்ரவேலர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக எழுந்தார்கள். "மனிதர்களில் மிகவும் அறிந்தவர் யார்?'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. "இதுபற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன்'' எனக் கூறாமல், "நானே மிக அறிந்தவன்'' எனக் கூறி விட்டார்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் மீது கோபமடைந்தான். "இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் எனது அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகம் அறிந்தவர்'' என்று அல்லாஹ் அறிவித்தான். அதற்கு மூஸா நபியவர்கள், "அவரை நான் எப்படி அடைவது?'' என்று கேட்டார்கள். "ஒரு பாத்திரத்தில் ஒரு மீனைப் போட்டுக் கொள்! அந்த மீனை எங்கே தவற விடுகிறாயோ அந்த இடத்தில் தான் அவர் இருக்கிறார்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.

மூஸா நபியவர்களும், (அவர்களின் உதவியாளர்) யூஷஃ பின் நூன் அவர்களும் பாத்திரத்தில் மீனை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஒரு பாறையைக் கண்டு அங்கே தலைசாய்த்து தூங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் பாத்திரத்திலிருந்த மீன் நழுவி கடலில் சென்று விட்டது.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். (புகாரீ 122, 3401, 4725, 4726)  

இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து குறிப்பிடும்போது….

குறிப்பிட்ட இடத்தில் ஹில்று அவர்களை மூஸா நபியவர்கள் கண்டுபிடித்தனர். அவருக்கு மூஸா நபியவர்கள் ஸலாம் கூறினார்கள். அப்போது ஹில்று, "உங்கள் பகுதியில் ஸலாம் கூறும் வழக்கம் எப்படி'' என்று கேட்டார். அதற்கு மூஸா நபியவர்கள், "நான் தான் மூஸா'' என்று கூறினார்கள். அதற்கு ஹில்று, "இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட மூஸாவா?'' என்று கேட்டார்கள். அதற்கு மூஸா நபியவர்கள் ஆம் என்றனர். (புகாரீ 122, 3401, 4725, 4727)  

நீர் எதற்காக இங்கே வந்துள்ளீர்? என்று ஹில்று கேட்டார். அதற்கு மூஸா நபியவர்கள், "உமக்குத் தெரிந்ததை எனக்கு நீர் கற்றுத் தர வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார்கள். அதற்கு ஹில்று அவர்கள், "உமக்குத்தான் இறைவனிடமிருந்து தூதுச்செய்தி வருகின்றதே? உமது கையில் தவ்ராத் வேதமும் உள்ளதே?'' என்று கேட்டார்கள். (புகாரீ 4726)  

மூஸா நபிக்குத் தெரியாத மூன்று விஷயங்கள் ஹில்று அவர்களுக்குத் தெரிந்ததாக மேற்கண்ட வசனங்கள் கூறுவதை ஆதாரமாகக் கொண்டு ஹில்றுக்கு மெஞ்ஞானம் தெரியும்; மெஞ்ஞானத்தின் மூலம் அனைத்தையும் அறிய முடியும் என்று வாதிடுவோருக்கு மேற்கண்ட ஹதீஸ்களில் தக்க மறுப்பு உள்ளது.

மூஸா நபியவர்கள் ஹில்றைச் சந்தித்து ஸலாம் கூறியபோது, "உமது ஊரில் ஸலாம் கூறும் வழக்கம் எப்படி?'' என்று ஹில்று கேட்கின்றார்.

வந்தவர் ஓர் இறைத்தூதர் என்பதோ, தன்னைப் போலவே முஸ்லிம் என்பதோ ஹில்றுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.

இதன் பின்னர் மூஸா நபியவர்கள், "நான் தான் மூஸா'' என்கிறார்கள். இப்படிச் சொன்ன பிறகு கூட, வந்தவர் இறைத்தூதர் என்பது ஹில்றுக்குத் தெரியவில்லை. இதனால் தான் "இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட மூஸாவா?'' என்று கேட்கிறார்.

எதற்காக இங்கே வந்துள்ளீர்? என்று ஹில்று கேட்கிறார்.

மறைவான ஞானம் அவருக்கு இருந்திருந்தால் மூஸா நபியவர்களிடம் கேட்காமலேயே, "என்னிடம் சில விஷயங்களை அறிந்து கொள்ளத்தான் நீர் வந்துள்ளீர்'' என்று அவர் கூறியிருக்க வேண்டும்.

மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளில் கீழே விழ இருந்த சுவரைத் தூக்கி நிறுத்திய சம்பவமும் ஒன்றாகும்.

ஓர் ஊருக்குச் சென்ற மூஸா நபியும், ஹில்று அவர்களும் அவ்வூராரிடம் உணவு கேட்டனர். அவ்வூரார் உணவளிக்க மறுத்து விட்டனர் என்று மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அவ்வூரார் உணவு தர மாட்டார்கள் என்ற உண்மை முன்பே ஹில்றுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் உணவை ஏற்பாடு செய்து கொண்டு அவ்வூருக்குச் சென்றிருப்பார். அவ்வூராரிடம் உணவளிக்குமாறு கோரியிருக்க மாட்டார்.

மூஸா நபியவர்கள், இனிமேல் எதிர்க்கேள்வி கேட்க மாட்டேன் என்று கூறி விட்டு மூன்று தடவை அதை மீறிவிட்டார்கள். மூஸா நபியவர்கள் வாக்கு மீறுவார்கள் என்ற உண்மை ஹில்ருக்கு முன்பே தெரிந்திருந்தால் முதல் தடவையிலேயே அவரைத் திருப்பி அனுப்பி வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மூஸா நபி கூறிய சமாதானத்தை அப்படியே ஏற்று ஏமாந்திருக்கிறார்.

எனவே மறைவானதை அறிந்து கொள்ளும் எந்த மெஞ்ஞானமும் கிடையாது என்பதற்குத்தான் மேற்கண்ட சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.

அப்படியானால் மேற்கண்ட மூன்று மறைவான நிகழ்ச்சிகள் ஹில்றுக்கு மட்டும் தெரிந்தது ஏன்? மூஸா நபிக்குத் தெரியாமல் போனது ஏன்?

இவ்வசனங்களைச் சிந்தித்தாலே இக்கேள்விக்கான விடையை அறிந்து கொள்ள முடியும்.

மூன்று நிகழ்ச்சிகள் நடந்த பின்னர், "இதை நானாகச் செய்யவில்லை. அல்லாஹ் அறிவித்துத் தந்ததையே செய்தேன்'' என்று ஹில்று கூறியதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

மூஸா நபியவர்கள், "நான்தான் மிகவும் அறிந்தவன்'' என்று கூறியதற்குப் பாடம் கற்பிப்பதற்காக, அவர்களுக்குத் தெரியாத மூன்று விஷயங்களை ஹில்றுக்கு இறைவன் கற்றுக் கொடுத்தான் என்பதை ஹில்று அவர்களின் மேற்கண்ட பதிலிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

நல்ல கப்பலை அபகரிக்கும் மன்னரின் ஆட்கள் வரவுள்ளனர் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுத்ததால் கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.

கீழே விழ இருந்த சுவற்றுக்கு அடியில் புதையல் இருப்பதையும், இரண்டு சிறுவர்களுக்கு அது உரியது என்பதையும் இறைவன் அறிவித்துக் கொடுத்ததால் சுவற்றை நிமிர்த்தினார்கள்.

அவ்வூரார் உணவளிக்க மாட்டார்கள் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுக்காததால் அதை அவர்களால் அறிய இயலவில்லை.

ஓர் இளைஞன் தானும் வழிகெட்டு, தனது பெற்றோரையும் வழிகெடுக்க முயற்சிப்பதால் அவனைக் கொலை செய்கிறார்கள். இறைவனின் கட்டளைப்படி இதையும் செய்கிறார்கள்.

எனவே மூஸா நபிக்கு அறிவிக்காமல் ஹில்றுக்கு மட்டும் இறைவன் இம்மூன்று விஷயங்களையும் அறிவித்து, இதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிவித்துக் கொடுத்ததால் அவ்வாறு செய்து முடித்தார்கள்.

இதில் மெஞ்ஞானம் என்று ஏதும் இல்லை.

மேலே நாம் சுட்டிக் காட்டிய ஹதீஸ்களில், "எனக்கு இறைவன் அறிவித்துத் தந்ததை நான் அறிவேன். உமக்கு இறைவன் அறிவித்துத் தந்ததை நீர் அறிவீர்'' என்று மூஸா நபியிடம் ஹில்று கூறியது இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

மூஸா நபியும், ஹில்று அவர்களும் கப்பலில் பயணித்தபோது ஒரு சிட்டுக் குருவி வந்து கடலில் தனது அலகால் கொத்தியது. அதைக் கண்ட ஹில்று அவர்கள் "மூஸாவே! இக்கடலில் இச்சிட்டுக்குருவி வாய் வைத்ததால் எவ்வளவு தண்ணீரை எடுத்துக் கொண்டதோ அதை விடக் குறைவாகவே அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து நம் இருவருடைய அறிவும் உள்ளது'' என்று குறிப்பிட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (பார்க்க: புகாரீ 122, 3401, 4725)  

இதில் ஒரு மெஞ்ஞானமும் கிடையாது என்பதை எவ்வளவு அழகாக ஹில்று அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்!

அடுத்து இந்த நிகழ்ச்சி குறித்து விரிவுரையாளர்கள் செய்துள்ள மற்றொரு தவறையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

சில விரிவுரையாளர்களும், மொழிபெயர்ப்பாளர்களும் ஹில்று அவர்களால் கொல்லப்பட்டவன் பாலகன் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் இதில் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

அவன் வளர்ந்து பெரியவனானால் தனது பெற்றோரை வழிகெடுத்து விடுவான் என்பதால் ஹில்று அவர்கள் அவனைக் கொன்றதாகக் கூறுகின்றனர்.

எதிர்காலத்தில் ஒருவன் பெரிய குற்றம் செய்வான் என்பதற்காக அக்குற்றத்தைச் செய்யும் முன் அவனைக் கொல்வது இறைநியதிக்கு ஏற்றது தானா? பச்சிளம் பாலகனைக் கொல்வது என்ன நியாயம்? என்ற கேள்வி இதனால் எழுகின்றது. இக்கேள்விக்கு ஏற்கத்தக்க எந்த விடையையும் அந்த விரிவுரையாளர்களால் கூற முடியவில்லை.

எனவே சிறுவன் என்று மொழிபெயர்க்காமல் இளைஞன் என்று மொழிபெயர்த்தால் இந்தக் கேள்வி எழாது. இளைஞனாக அவன் இருந்து அன்றாடம் தனது பெற்றோரைத் துன்புறுத்தி வந்தான் எனவும், அவர்களை இறைமறுப்பாளர்களாக மாற்ற நிர்பந்தம் செய்து வந்தான் எனக் கூறினால் அதற்காக அவனைத் தண்டிப்பது இறைநியதிக்கு ஏற்றதாக அமையும்.

சிறுவன் என்று மற்றவர்களும், இளைஞன் என்று நாமும் தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் (18:74) குலாம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பல அர்த்தங்களைக் கொண்ட சொல்லாகும்.

அடிமை, சேவகன், சிறுவன், இளைஞன், தக்க வயதுடையவன் என இதற்குப் பல பொருள்கள் உள்ளன.

சிறுவன் என்று பொருள் கொண்டு செய்யாத குற்றத்துக்காக ஒருவன் தண்டிக்கப்பட்டான் எனக் கூறுவதை விட, இளைஞன் எனப் பொருள் கொண்டு செய்த குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டான் என்று கூறுவது இறைநியதிக்கு ஏற்றதாகும்.

இவ்வாறு பொருள் கொள்வதற்கு ஹதீஸ்களில் சான்று உள்ளது.

நான் திருமணமாகாத – குலாமாக – இளைஞனாக இருந்தேன் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள். (புகாரீ 7031, 3739) 

“நான் இளைஞனான – குலாமாக – இருந்தேன்”

என்று இப்னு உமர் கூறியது புகாரீ 6122வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூபக்ரின் மகன் இளைஞனாகவும், குலாமாகவும் இருந்தார். (புகாரீ 5807) 

இந்த குலாமுக்கு இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ 3472)

ஹாரிஸா அவர்கள் குலாமாக இருந்தபோது போரில் கொல்லப்பட்டார்கள். (புகாரீ 3982, 6550) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பணியாற்றிய யூத குலாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். (புகாரீ 1356, 5657) 

இந்த இடங்களில் குலாம் என்ற சொல்லுக்குச் சிறுவன் என்று பொருள் செய்தால் அறவே பொருந்தாது.

இந்த ஹதீஸ்களில் குலாம் என்ற சொல்லுக்கு இளைஞன் என்று பொருள் கொள்வதுபோல் மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்ற சொல்லுக்கும் பொருள் கொள்வதே சரியானதாகும்.

தீட்சை, பைஅத், மெஞ்ஞானம் ஆகியன இஸ்லாத்தில் இல்லை என்பதை மேலும் அறிந்து கொள்ள 81, 182, 334 ஆகிய குறிப்புகளை வாசிக்கவும்.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit