334. பைஅத் என்றால் என்ன?

334. பைஅத் என்றால் என்ன?

ந்த வசனங்கள் (48:10, 48:12, 48:18) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட 'பைஅத்' எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகின்றன.

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்களுடன் புறப்பட்டனர்.

நாங்கள் போர் செய்ய வரவில்லை. உம்ரா வணக்கத்தை நிறைவேற்றவே வந்துள்ளோம் என்று மக்காவாசிகளுக்கு தகவல் தெரிவிக்க உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்பினார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவில் உள்ள தலைவர்களிடம் இது குறித்து ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

உஸ்மான் (ரலி) திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டு அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று பொய்யான செய்தி நபிகள் நாயகத்தை எட்டியபோது அவர்கள் கடும் கோபத்துக்கு ஆளானார்கள். தூதர்கள் கொல்லப்படக் கூடாது என்று அனைவரும் ஒப்புக் கொண்ட விதியை மீறியவர்களுக்கு எதிராகப் போர் தொடுப்பது என முடிவு செய்தார்கள்.

போர்க்களத்தில் இருந்து ஒருக்காலும் பின்வாங்க மாட்டோம் என்ற உறுதி மொழியைத் தம் தோழர்களிடமிருந்து பெற்றார்கள். ஒவ்வொரு தோழரும் தம் கையை நபியின் கை மீது வைத்து இந்த உறுதிமொழியை வழங்கினார்கள். இந்த உறுதிமொழிதான் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் உஸ்மான் (ரலி) திரும்பி வந்து விட்டதாலும், பின்னர் மக்காவாசிகளுடன் ஹுதைபியா எனுமிடத்தில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டதாலும் இப்போருக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

புகாரீ 2698, 2700, 2731, 2958, 4163, 4164, 4170, 1694, 3182, 4178, 4180, 4844 ஆகிய ஹதீஸ்களில் இதன் விபரத்தை அறியலாம்.

முஸ்லிம்களில் உள்ள போலி ஆன்மிகவாதிகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும், தங்களின் சீடர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காகவும், எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு தங்களைப் பின்பற்றச் செய்வதற்காகவும் இவ்வசனத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் பைஅத் செய்திருப்பதால் எங்களிடமும் பைஅத் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். இவ்வாறு பைஅத் எனும் உறுதிமொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதிமொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர்.

இவ்வாறு ஒரு மதகுருவிடம் பைஅத் செய்து விட்டால் அந்த மதகுரு என்ன சொன்னாலும், இஸ்லாத்திற்கு எதிராகவே சொன்னாலும் அதற்குக் கட்டுப்பட வேண்டும்; எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்று கூறி மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து வருகின்றனர்.

அறியாத மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் அடிமைகளைப் போல் வைத்துக் கொண்டு அவர்களைச் சுரண்டி வருகின்றனர்.

அதுபோல் சில இயக்கத்தினரும் தங்கள் தலைவர்களிடம் பைஅத் என்ற பெயரில் உறுதிமொழி வாங்குகின்றனர்.

தலைவர் எப்போது அழைத்தாலும், எதற்காக அழைத்தாலும் உடனே அந்த அழைப்பை ஏற்க வேண்டும். கொலை செய்யச் சொன்னாலும், யாரையாவது தாக்கச் சொன்னாலும் அதைச் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பைஅத்தை முறித்த மாபெரும் குற்றம் ஏற்படும் எனக்கூறி மூளைச் சலவை செய்கின்றனர்.

ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது.


“உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுக்கிறார்கள்”  

என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட தூதர் என்பதால் அவர்கள் அல்லாஹ்வின் சார்பில் உறுதிமொழி வாங்க அவர்கள் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுக்கும் உறுதிமொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதிமொழியாகும் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம். தூதரிடத்தில் எடுக்கும் உறுதிமொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதிமொழி தான்.

நீ என்ன சொன்னாலும் கேட்பேன் என்று அல்லாஹ்விடம் மட்டும் தான் உறுதிமொழி எடுக்கலாம். ஏனெனில் அல்லாஹ் தான் அனைவருக்கும் அதிபதியாவான்.

நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று அல்லாஹ்வைத் தவிர வேறு எவரிடம் உறுதிமொழி எடுத்தாலும் அவர் அல்லாஹ்வின் இடத்தில் அவனது அடிமைகளில் ஒருவரை வைத்து விட்டார் என்பது தான் பொருளாகும். இது பகிரங்கமான இணைவைத்தலாகும்.

இத்தகைய உறுதிமொழிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு தலைசிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித்தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை.

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோரிடம் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்போம் என்று நபித்தோழர்கள் பைஅத் எடுக்கவில்லை.

பைஅத் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் ஒருவர் அறியாவிட்டாலும் பைஅத் என்பதன் பொருளை அறிந்து கொண்டாலே பைஅத் கும்பலிடம் சிக்கிக் கொள்ள மாட்டார்.

பைஅத் என்றால் உறுதிமொழி எடுத்தல் என்பது பொருளாகும். எந்தக் காரியம் குறித்து உறுதிமொழி எடுக்கப்படுகிறதோ அந்தக் காரியத்தில் யாருக்குச் சம்மந்தம் உள்ளதோ அவர்களிடம் தான் உறுதிமொழி எடுக்க முடியும். அப்படி எடுத்தால்தான் அது உறுதிமொழியாகும்.

ஃபாத்திமாவைத் திருமணம் செய்வதாக கதீஜாவிடம் உறுதிமொழி எடுக்க முடியாது.

மற்றவருக்குச் சொந்தமான கடையில் உள்ள பொருட்களை உனக்கு விற்பதாக உறுதி கூறுகிறேன் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் நீ என்ன அந்தக் கடைக்கு முதலாளியா என்று கேட்போம்.

ஒரு கல்லூரியில் சேர்வதற்கு இன்னொரு கல்லூரியில் விண்ணப்பம் கொடுக்க முடியாது. யார் எதற்கு உரிமையாளராகவும், பொறுப்பாளராகவும் இருக்கிறார்களோ அவர்களிடம்தான் உறுதிமொழி எடுக்க முடியும்.

அதுபோல் உரிமையாளரால் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பு வழங்கப்பட்டவரிடம் உறுதிமொழி எடுக்கலாம். என் சொத்தை விற்கும் அதிகாரத்தை யாருக்காவது நான் வழங்கி இருந்தால் அவர் எனது சொத்தை விற்கலாம். வாங்குபவர் அவரிடம் உறுதிமொழி வாங்கலாம்.

உலக விஷயங்களில் நாம் இதைச் சரியாகப் புரிந்து கொள்கிறோம். இதற்கு மாற்றமாக நடப்பவனை மூளை கெட்டவனாகவோ, மனநோயாளியாகவோ கருதுகிறோம். சம்மந்தமில்லாதவரிடம் செய்த ஒப்பந்தம் செல்லாது என்று தெளிவான தீர்ப்பை வழங்கி விடுகிறோம்.

ஆனால் மார்க்க விஷயத்தில் மட்டும் இந்த விழிப்புணர்வை நாம் மழுங்கடித்து விடுகிறோம்.

அல்லாஹ் எஜமான்; நாம் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கை லாயிலாஹ இல்லல்லாஹ்வுக்குள் அடங்கி இருக்கிறது.

அல்லாஹ் எஜமானனாகவும், நாம் அடிமைகளாகவும் இருப்பதால் இறைவா நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி கொடுக்கலாம். அல்லது அல்லாஹ் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று அவனால் நியமிக்கப்பட்ட தூதரிடம் உறுதிமொழி கொடுக்கலாம். வேறு எவரிடமும் எடுக்க முடியாது.

நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன் என்ற முழுச் சரணாகதியை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அளிக்க முடியாது. மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அடிமையாவான். என்ன சொன்னாலும் கேட்பேன் என்ற உறுதிமொழிக்கு அல்லாஹ் மட்டுமே சொந்தக்காரனாவான். அல்லாஹ்வைத் தவிர இந்த உறுதிமொழியை யார் எடுத்தாலும், யாரிடம் எடுத்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்த மாபாவிகளாவர்.

தரீக்கா என்ற பெயரிலோ, அமீர் என்ற பெயரிலோ யார் பைஅத் எடுத்தார்களோ அவர்கள் தங்கள் குருமார்கள் சொல்லும் மார்க்க விரோதமான காரியங்களிலும் கட்டுப்பட்டு சிந்திக்கும் திறனை அடகுவைத்து விட்டு ஆட்டு மந்தைகள் போல் மாறிவிடுவதை நாம் காண்கிறோம்.

இவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் குற்றத்தைச் செய்கிறார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

மதகுருவிடம் போய் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்போம் என்று உறுதிமொழி எடுப்பதும், இயக்கத் தலைவரிடம் போய் நீங்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படுவோம் என்று உறுதிமொழி எடுப்பதும் இஸ்லாத்தில் மாபெரும் குற்றமாகும்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தவிர வேறு எவருக்கும் கட்டுப்படுவதாக ஒருவர் உறுதிமொழி எடுத்தால் அவர் அல்லாஹ்வுடைய இடத்தையும் அல்லாஹ்வின் தூதருடைய இடத்தையும் அவர்களுக்கும் வழங்கியவராவார். அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவருமாவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுக்கும் பைஅத்தை நிறைவேற்றுவது மட்டுமே மார்க்கக் கடமை. அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இயன்றவரை அதை நிறைவேற்றுமாறு தான் பைஅத் எடுத்துள்ளனர்.


நீங்கள் சொல்வதைச் செவியுற்று கட்டுப்படுவேன் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி எடுத்தேன். அப்போது அவர்கள் "என்னால் இயன்றவரை'' என்று சேர்த்துச் சொல்லுமாறு திருத்திக் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : புகாரீ 7204 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் எடுத்த உறுதிமொழியைக் கூட அப்படியே நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. நம்மால் இயன்ற அளவுக்குத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று நமக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்க போலி ஆன்மிகவாதிகளும், போலித் தலைவர்களும் தங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட மேலான நிலையில் வைக்க முயற்சிக்கின்றனர். இதன் மூலம் முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றப் பார்க்கின்றனர்.

இப்படி யாரிடம் உறுதிமொழி எடுத்திருந்தாலும் அதை உடனடியாக முறிப்பது மார்க்கக் கடமையாகும். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதைவிடச் சிறந்ததைக் காணும்போது அந்தச் சத்தியத்தை முறிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.


நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அதைவிட சிறந்ததைக் கண்டால் அந்த சத்தியத்தை முறித்து விட்டு சிறந்ததைச் செய்வேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

பார்க்க : புகாரீ 3133, 4385, 5518, 6649, 6721, 7555 

அல்லாஹ்வுடைய இடத்திலும், அல்லாஹ்வின் தூதருடைய இடத்திலும் போலிகளை வைக்கும் வகையில் பைஅத் செய்தவர்கள் அதை நிறைவேற்றக் கூடாது. உடனடியாக அதில் இருந்து விடுபட வேண்டியது மார்க்கக் கடமையாகும்.

ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும்போது உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம் என்று மக்கள் உறுதிமொழி எடுக்கலாம். ஏனெனில் இது அவர் சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

இந்த உறுதிமொழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமர் (ரலி) அவர்களிடம் செய்தார்கள்.

இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின்போது சம்பந்தப்பட்டவர்களிடம் பைஅத் செய்யலாம். ஏனெனில் இது அவர் சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி – பைஅத் – எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடைமை விஷயத்தில் உறுதிமொழி எடுக்க அவருக்கு உரிமை உள்ளது.

ஒரு நிறுவனத்தில் சேரும்போது அது தொடர்பாக அதன் உரிமையாளரிடமோ, அல்லது அவரால் அதிகாரம் வழங்கப்பட்டவரிடமோ உறுதிமொழி எடுக்கலாம். ஏனெனில் இது அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயமாகும்.

இதை அறியாமல் பைஅத் கும்பலிடம் சிக்கியவர்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதரிடத்தில் உறுதிமொழி எடுப்பவர்கள் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கிறார்கள் என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள இந்தச் சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

தீட்சை, பைஅத், மெஞ்ஞானம் ஆகியன இஸ்லாத்தில் இல்லை என்பதை மேலும் அறிந்து கொள்ள 81, 182, 273, ஆகிய குறிப்புகளை வாசிக்கவும்.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit