335. பூமி உருண்டையானது

335. பூமி உருண்டையானது

37:5, 70:40 வசனங்களில் உதிக்கும் பல திசைகளுக்கு இறைவன் என்று கூறப்பட்டுள்ளது.

55:17 வசனத்தில் இரண்டு கிழக்குகளுக்கும், இரண்டு மேற்குகளுக்கும் இறைவன் என்று கூறப்பட்டுள்ளது.

இப்பூமியில் வாழும் நாம் தினமும் சூரியன் உதிப்பதைக் காண்கிறோம். தினமும் ஒரு திசையில் தான் உதிக்கிறது. மாறிமாறி உதிப்பதில்லை. அப்படியானால் பல உதிக்கும் திசைகள் என்று சொல்லப்படுவது ஏன்? இரண்டு உதிக்கும் திசைகள், இரண்டு மறையும் திசைகள் என்று 55:17 வசனத்தில் சொல்லப்படுவது ஏன்?

பூமி தட்டையானது என்று மக்கள் நம்பியிருந்த காலத்தில் பல கிழக்குகள், பல மேற்குகள் இருப்பதாகக் கூறவே முடியாது.

ஆனால் பூமி உருண்டையாக இருப்பதால் ஏராளமான உதிக்கும் திசைகளும், ஏராளமான மறையும் திசைகளும் இருப்பதை இன்றைக்கு அறிய முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

சூரியன் உதிப்பதும், மறைவதும் ஒரு வினாடியில் முடியக் கூடியதல்ல. ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு பகுதியாக உதித்துக் கொண்டும், ஒவ்வொரு பகுதியாக மறைந்து கொண்டும் இருக்கும். இதனால் ஏராளமான உதிக்கும் திசைகளும், ஏராளமான மறையும் திசைகளும் ஏற்படும்.

பூமி தட்டையாக இருந்தால் ஒரு திசையில் சூரியன் உதித்து மறு திசையில் மறைந்து விடும். பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.

பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் பேசுகிறது. இது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாகும்.

இரண்டு கிழக்குகள், இரண்டு மேற்குகள் என்று சொல்லப்படுவது ஏன்? பூமி உருண்டையாக இருந்தால் அப்போது இரண்டு கிழக்குகளும், இரண்டு மேற்குகளும் இருந்தே தீரும்

சென்னையில் இருக்கும் நாம் கிழக்கே சூரியன் உதிப்பதைப் பார்க்கிறோம். பூமியின் மறுபக்கத்தில் சென்னைக்கு நேர்கீழாக இருப்பவர் அந்தச் சூரியனை மறைவதாகக் காண்பார். அதாவது நாம் கிழக்கு என்று சுட்டிக்காட்டும் திசையை அவர் மேற்கு என்று சுட்டிக்காட்டுவார்.

உதிக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் வாழும் மக்களின் பார்வையைக் கவனித்து உதிக்கும் பல திசைகள் என்று சொல்லப்படுகிறது.

ஒரு புள்ளியில் வாழும் ஒரு மனிதனின் பார்வையைக் கவனித்து உதிக்கும் இரு திசைகள் என்று சொல்லப்படுகிறது.

பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலமும், உதிக்கும் இரு திசைகள் என்ற சொல் மூலமும் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி திருக்குர்ஆன் பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாகும்.

இது குறித்து மேலும் அறிய 274வது குறிப்பையும் காண்க!

Leave a Reply