36:13,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

36:13,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர் அவர்கள் இதை மறுக்கின்றார்கள். எனவே இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் தூதர்கள் யார் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளனவா?

கே. அப்துர்ரஹ்மான், புதுக் கல்லூரி, சென்னை

பதில் : 

ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 36:13,14

இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் தூதர்கள் யார் என்ற குறிப்பு குர்ஆனில் வேறு எங்கும் காணப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது குறித்து எந்த விளக்கத்தையும் கூறியதாக ஹதீஸ்களில் காண முடியவில்லை.

தப்ஸீர்களில் தான் இது குறித்து பல்வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் இறைத்தூதர்கள் இல்லை, ஈஸா நபியின் தூதர்கள் தான் என்று கூட தப்ஸீரில் இடம் பெற்றுள்ளது. எனவே இவற்றையெல்லாம் நாம் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அந்த இறைத்தூதர்களின் வரலாற்றை அல்லாஹ் எடுத்துக் கூறுவதன் நோக்கம்,அதிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டும் என்பது தான். அவர்கள் யார் என்பதை அறிந்தால் தான் அந்த வரலாற்றிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதில்லை. அவர்கள் யாரென்று அறியாவிட்டால் நமது ஈமானுக்கோ அல்லது அமல்களுக்கோ எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


கேள்வி – பதில் – ஏகத்துவம்,ஜனவரி 2005