81. நேர்வழியில் செலுத்துவது இறைவனின் கையில்

81. நேர்வழியில் செலுத்துவது இறைவனின் கையில்

வ்வசனங்களில் (2:272, 3:8, 3:20, 5:92, 6:35, 6:66, 6:107, 10:43, 10:108, 13:40, 16:37, 16:82, 17:54, 24:54, 27:81, 27:92, 28:56, 29:18, 30:53, 34:50, 35:8, 39:41, 42:52, 42:48, 43:40, 50:45, 88:21, 93:7) மனிதர்களை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது என்றும், அந்த அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளிட்ட எந்த இறைத்தூதருக்கும் பங்கு இல்லை என்றும் கூறப்படுகின்றது.


இறைத்தூதர்கள் மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காகத்தான் அனுப்பப்பட்டனர். மனித உள்ளங்களில் தமது போதனைகளை அவர்களால் சேர்த்து வைக்க முடியாது என்பதை இவ்வசனங்கள் அழுத்தமாகக் கூறுகின்றன.

இதனால் தான் எத்தனையோ இறைத்தூதர்களின் குடும்பத்தினர் தவறான வழியில் சென்றபோது அவர்களால் தமது குடும்பத்தினரை நல்வழிப்படுத்த முடியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எடுத்து வளர்த்தவரும், அவர்களின் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக நின்றவருமான அபூதாலிப் அவர்கள் மரணப் படுக்கையில் கிடக்கும்போது அவரை நபிகள் நாயகம் (ஸல்) சந்திக்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்குமாறு எவ்வளவோ வலியுறுத்துகிறார்கள். ஆனால் கடைசி வரை அவர் இஸ்லாத்தை ஏற்காமலே மரணித்து விட்டார். இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவலைப்பட்டார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தான்

“நீர் நாடியவருக்கு உம்மால் நேர்வழி காட்ட முடியாது. தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்”

என்ற வசனத்தை (28:56) அல்லாஹ் அருளினான். (பார்க்க: புகாரீ 3884, 4772) 

இஸ்லாத்தின் இந்தப் போதனை ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் எல்லாவிதமான மோசடிகளையும் ஒழித்துக் கட்டுகிறது.

பெரியார்கள், பக்குவம் பெற்றவர்கள் என்று யாரையாவது முடிவு செய்து கொண்டு அவரிடம் சிலர் தீட்சை பெறுகின்றார்கள். அவரிடம் தீட்சை பெற்றால் தங்களது உள்ளத்தில் உள்ள கசடுகளை அவர் நீக்குவார்; பக்குவப்படுத்துவார் என்றும் நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் பெரும்பாலான மக்கள் மதகுருக்களைத் தேடிச் செல்கின்றனர். மக்களின் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு மதகுருக்களும் நன்றாக ஏமாற்றி வருகின்றனர்.

இதுபோல் மக்களை யாரும் ஏமாற்றாமல் காப்பதற்காக, இறைத்தூதர்கள் போன்ற உயர் நிலையை அடைந்த மகான்களானாலும் அவர்கள் இன்னொருவரின் உள்ளத்தில் தாம் விரும்புவதைச் சேர்ப்பிப்பதோ, அவரைப் பக்குவப்படுத்துவதோ இயலாது என்று திட்டவட்டமாக இவ்வசனம் அறிவிக்கிறது.

தீட்சை, பைஅத், மெஞ்ஞானம் ஆகியன இஸ்லாத்தில் இல்லை என்பதை மேலும் அறிந்து கொள்ள 182, 273, 334 ஆகிய குறிப்புகளை வாசிக்கவும்.

Leave a Reply