90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

வ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது.

4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது.

இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா நபி இறைவனின் குமாரர் என்று சில கிறித்தவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.


ஈஸா நபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இருக்க முடியாது என்று 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153 , 39:4, 43:81 ஆகிய வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.

பிறகு ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்?

பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் ஆகு எனும் கட்டளை மூலம் தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது.

இறைவனின் உயிர் என்று ஈஸா நபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூற முடியாது.

என்னுடைய கை என்று சொல்கிறோம். என்னுடைய பேனா என்றும் சொல்கிறோம். இரண்டிலும் என்னுடைய என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

என்னுடைய கை என்பது என்னில் ஒரு பகுதியாக இருக்கும் கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

என்னுடைய பேனா என்று சொல்லும்போது என்னில் ஒரு பகுதியான பேனா என்று பொருள் கொள்ள மாட்டோம். கை எப்படி எனது உறுப்பாக உள்ளதோ அது போல் பேனா எனது உறுப்பாக இல்லாததே இதற்குக் காரணம்.

என்னுடைய பேனா என்றால் எனக்கு உடைமையான பேனா என்று பொருள் கொள்கிறோம்.

அது போல் தான் என்னுடைய உயிர் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஈஸா நபி என்னுடைய உயிர் என்றால் எனக்குச் சொந்தமான உயிர். நான் எனது கட்டளையால் உருவாக்கிய உயிர் என்ற பொருளில் தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள்.

எனவே இறைவனின் உயிர் என்றால் அவனுக்கு உடைமையான உயிர் என்பது தான் பொருள். அவனது ஒரு பகுதியான உயிர் என்று பொருள் இல்லை.

15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை.

ஆதம் (அலை) பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறப்படும்போது எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அப்படித்தான் ஈஸா நபி பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறுவதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானது எனத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரு பொருள் தரும் சொற்களை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாக அறிய 86வது குறிப்பையும் காண்க!

Leave a Reply