89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா?
இவ்வசனங்களில் (3:118, 3:128, 4:89, 4:139, 4:144, 5:51, 5:57, 5:80, 5:81, 9:16, 9:23, 58:14, 60:1, 60:8, 60:9, 60:13) முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
பிறமத மக்களுக்கு எதிரான வெறுப்பை இஸ்லாம் விதைப்பதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணலாம். இவ்வாறு எண்ணுவது தவறாகும்.
இது யாரைக் குறிக்கிறது? எதற்காக இவ்வசனம் அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பலதெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படைதிரட்டிக் கொண்டிருந்தார்கள்.
எப்படியாவது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்குத் தகவல்கள் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கீழ்க்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைக் கவனித்தால் இத்தடை பொதுவானது அல்ல என்பதையும், முஸ்லிமல்லாத அனைத்து மக்களைப் பற்றியது அல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
இஸ்லாத்தைக் கேலிப் பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள் என்று 5:57 வசனம் சொல்கிறது. இஸ்லாத்தைக் கேலிப்பொருளாக ஆக்காமல் முஸ்லிம்களுடன் இணக்கமாக நட்பு பாராட்டுவோரை இது குறிக்காது.
உங்களுக்குப் பகைவர்களாக இருப்போரையும், கைகளாலும், நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள் என்று 60:2 வசனம் கூறுகிறது. முஸ்லிம்களின் பகைவர்களாக இல்லாமல், நாவுகளாலும், கைகளாலும் முஸ்லிம்களுக்குத் தீங்கு இழைக்காத மக்களுடன் நட்பு பாராட்டுவதை இது தடுக்காது.
உங்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்த உங்கள் பகைவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள் என்று 60:1 வசனம் கூறுகிறது.
தமக்கு எதிராக இதுபோல் செயல்படுவோருடன் எந்த மதத்தினரும் நட்பு பாராட்ட மாட்டார்கள்.
உங்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், விரட்டியடித்தவர்களையும் மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! அவ்வாறு நடக்காத முஸ்லிமல்லாதவர்களுடன் நட்புப் பாராட்டுவதுடன் அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள் என்று 60:8,9 வசனங்கள் கூறுகின்றன.
முஸ்லிமல்லாதவர்களில் நட்பு கொள்ளத்தக்கவர்களும் உள்ளனர். நட்புகொள்ளத் தகாதவர்களும் உள்ளனர் என்று இவ்வசனங்கள் வேறுபடுத்திக் காட்டுகின்றன.
வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டி, உள்ளுக்குள் உங்களை ஒழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள் என்று 3:118 வசனம் சொல்கிறது.
அன்றைய கிறித்தவ சமுதாயத்தினர் முஸ்லிம்களிடம் நெருக்கமான அன்பு கொண்டவர்கள் என்று 5:82 வசனம் சொல்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த முஸ்லிமல்லாத மக்களில் கிறித்தவர்கள் முஸ்லிம்களுடன் இணக்கமாகவும், நெருக்கமாகவும் இருந்ததை இவ்வசனம் வரவேற்கிறது.
ஒரு சமுதாயம் உங்களுக்குச் செய்த தீமை காரணமாக அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள் என்று 5:2, 5:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. முஸ்லிம்களுக்குத் தீமை செய்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கான நீதியை மறுக்கக் கூடாது என்பதற்கு நிகரான மதநல்லிணக்கம் இருக்க முடியுமா?
உடன்படிக்கை செய்து முறையாக நடப்போரிடம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள் என்று 9:4 வசனம் கூறுகிறது.
முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6 வசனம் கூறுகிறது. முஸ்லிமல்லாத ஒருவர் பிறரால் பாதிக்கப்பட்டு முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடினால் அவர் முஸ்லிமல்ல என்ற காரணத்துக்காக அடைக்கலம் அளிக்க மறுக்கக்கூடாது என்ற அளவுக்கு பிற மதத்தினரை இஸ்லாம் அரவணைக்கிறது.
பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு திருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
இவ்வசனங்களையும் மேற்கண்ட வசனங்களுடன் சேர்த்துக் கவனித்தால் போர்ப் பிரகடனம் செய்யாத முஸ்லிமல்லாத மக்களுடன் நன்றாகப் பழகவே இஸ்லாம் கட்டளையிடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்ந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெரும் எதிரிகளாக இருந்த யூத சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளர்களில் ஒருவராக வைத்திருந்தார்கள். (பார்க்க : புகாரீ 1356)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் வாழ்ந்த யூதர்கள் பலவகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இடையூறு செய்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்லவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர். எதிரி நாட்டவருக்குத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டவர்களும் அவர்களில் இருந்தனர். இரட்டை வேடம் போட்டு முஸ்லிம்களாக நடித்து ஏமாற்றியவர்களும் இருந்தனர்.
இத்தகைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளராகச் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சமுதாயத்தினர் எதிரிகளாக உள்ளதால் அச்சமுதாயத்தில் உள்ள நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அளவுக்கு அவர்களிடம் மனிதநேயம் மிகைத்திருந்தது. இதனால்தான் எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் தமது ஊழியர்களில் ஒருவராக அவர்களால் சேர்த்துக் கொள்ள முடிந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர். (பார்க்க : புகாரீ 2096, 2252, 2509, 2513, 2068, 2200, 2251, 2386, 2916)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் யூதர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தார்கள். மேலும் அவர்களில் பலர் தமது நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரி நாட்டவர்களுக்குத் தகவல்கள் தந்து ஒத்துழைப்புச் செய்பவர்களாக இருந்தனர்.
நாட்டுக்கு விசுவாசமாக இல்லாமல் இரட்டை வேடம் போட்டு வந்த சமுதாயத்தவர்களை எந்த நாடும் மரியாதையுடன் நடத்துவதில்லை. ஆனால் யூதர்கள் பலவிதமான இடையூறுகள் அளித்த நிலையிலும் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் எந்த அளவு கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டனர் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
நாட்டின் அதிபதி அடைமானம் வைக்கக் கூடியவராகவும், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெற்றுக் கொள்பவராகவும் இருந்தனர் என்பதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விசாலமான உள்ளத்தை அறிந்து கொள்ள முடியும்.
யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைப் பொரித்துக் கொண்டு வந்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) சாப்பிட்டனர். உடனே அவள் பிடித்து வரப்பட்டாள். இவளை நாங்கள் கொன்று விடட்டுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. வேண்டாம் என்று அவர்கள் விடையளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்கள் உள்வாயின் மேற்பகுதியில் நான் பார்ப்பவனாக இருந்தேன் என்று அனஸ் (ரலி) கூறுகிறார்.
நூல் : புகாரீ 2617
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிரிகளாகவும், சிறுபான்மையினராகவும் இருந்த யூத இனத்துப் பெண் விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொண்டு வந்து தந்தபோது அதைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை இருந்தது. அவள் விஷம் கலந்த செய்தி தெரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டாள். அவளைக் கொன்று விடலாமா? என்று நபித் தோழர்கள் கேட்டபோது, வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் நிலை என்னவென்றால் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்பது தான்.
சட்டத்தை அமுல்படுத்துவதில் கடும் போக்கை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய சொந்த விவகாரம் என்றவுடன் மன்னித்து விடுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். 'இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.
நூல் : புகாரீ 1313, 1311
இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும்போது இருபதாம் நூற்றாண்டில் கூட கலவரங்கள் நடப்பதைக் காண்கிறோம். எதிரி சமுதாயத்தவரின் உடல்களை எங்கள் தெரு வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என்று ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களே வெட்டு குத்துக்களில் இறங்குவதையும் காண்கிறோம்.
உயிருடன் இருக்கும்போது நடமாடுவதற்கு அனுமதியளித்தவர்கள் கூட இறந்த உடலுக்கு அந்த உரிமையை வழங்க மறுத்து வருவதைக் காண்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கிறார்கள். அவர்களின் எதிரி சமுதாயமாக யூதர்கள் இருந்தனர். எதிரி சமுதாயத்தைச் சேர்ந்த – சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த – ஒருவரின் உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் தயக்கமோ, அச்சமோ இன்றி கொண்டு செல்லப்படுகிறது.
முஸ்லிம்களின் ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினர் வசிக்கும் பகுதி வழியாக, முஸ்லிம் அரசின் அதிபர் வசிக்கும் தெரு வழியாக பிரேதத்தை எடுத்துச் செல்ல சிறுபான்மை மக்களுக்கு எந்த அச்சமும் இருக்கவில்லை. சர்வசாதாரணமாகப் பிரேதத்தை எடுத்துச் செல்கிறார்கள்.
பிரேதம் கடந்து செல்லும்போது உள்ளத்தில் வெறுப்பைச் சுமந்து கொண்டு வேண்டாவெறுப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் அமைதி காத்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த உடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியதன் மூலம் உளப்பூர்வமாகவே அனுமதித்தார்கள் என்பதை அறியலாம்.
யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்துள்ளனர். (பார்க்க : புகாரீ 2412, 2417)
நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூட, வெளிப்படையாகப் போர்ப்பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர். அதனால் தான் இஸ்லாம் அந்த மக்களை வென்றெடுத்தது.
எனவே முஸ்லிமல்லாதவர்களை நண்பர்களாக்கக் கூடாது என்பது பொதுவானது அல்ல என்பதையும், முஸ்லிமல்லாதவர்களுடனும் நல்லிணக்கம் பேண வேண்டும் என்பதையும் இந்த ஆதாரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
போர், பயங்கரவாதம், ஜிஹாத் ஆகியவை குறித்து மேலும் அறிந்திட 53, 54, 55, 89, 197, 198, 199, 203, 359 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.