அத்தியாயம் : 7 அல் அஃராஃப்

 அத்தியாயம் : 7  

அல் அஃராப் – தடுப்புச் சுவர்

மொத்த வசனங்கள் : 206

சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடையே அகலமான தடுப்புச் சுவர் ஒன்று இருக்கும். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படாத சிலர் அதில் தங்க வைக்கப்படுவார்கள். அந்தத் தடுப்புச் சுவர் தான் அஃராப் எனப்படுகிறது.

இது பற்றி இந்த அத்தியாயத்தின் 46, 47, 48, 49 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயம் அஃராப் என்று பெயர் பெற்றது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. அலிஃப், லாம், மீம், ஸாத்.2

2. (இது) வேதம். நம்பிக்கை கொண்டோருக்கு அறிவுரையாகவும், இதன் மூலம் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும் உமக்கு இது அருளப்பட்டது. எனவே இதனால் உமது உள்ளத்தில் கலக்கம் ஏற்பட வேண்டாம்.

3.உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

4. எத்தனையோ ஊர்களை அழித்திருக்கிறோம். அவ்வூர்களுக்கு நமது வேதனை இரவு நேரத்திலோ, முற்பகலில் அவர்கள் தூங்கும் போதோ வந்து சேர்ந்தது.

5. நமது வேதனை அவர்களிடம் வந்தபோது "நாம் அநீதி இழைத்து விட்டோம்'' என்று கூறுவதைத் தவிர வேறு ஏதும் அவர்களின் கூப்பாடாக இருக்கவில்லை.

6. யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.

7. (நமக்குத்) தெரியும் என்பதால் அவர்களுக்கு விளக்குவோம். நாம் கவனிக்காமல் இல்லை.

8. அந்நாளில்1 மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர்.

9. (நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் அநீதியாக அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.

10. பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம்.175 உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!

11. உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத்509 தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.

12."நான் உனக்குக் கட்டளையிட்டபோது பணிவதை11 விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால்503 படைத்தாய்!'' என்று கூறினான்.506

13."இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.

14. "அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான்.

15. "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.

16. "நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று அவன் கூறினான்.

17."பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).

18."இழிவுபடுத்தப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின்பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்'' என்று (இறைவன்) கூறினான்.

19."ஆதமே! நீரும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில்12 தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை13 நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்'' (என்றும் கூறினான்)

20.அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான்.174 "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை13 உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.

21. "நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே'' என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.

22. அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச்13சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது.174 அவ்விருவரும் சொர்க்கத்தின்12 இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து "இம்மரத்தை13 நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான்.

23."எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்''14 என்று அவ்விருவரும் கூறினர்.

24."(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன''175 என்று (இறைவன்) கூறினான்.

25."அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான். 175

26.ஆதமுடைய மக்களே!504 உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.

27.ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து12வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான்.174 நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

28.அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும்போது "எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக!

29."எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

30.சிலருக்கு அவன் நேர்வழி காட்டினான். மற்றும் சிலர் மீது வழிகேடு உறுதியாகி விட்டது. அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். தாங்கள் நேர்வழி நடப்போர் எனவும் எண்ணிக் கொள்கின்றனர்.

31.ஆதமுடைய மக்களே!504 ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்!176 உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

32."தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?'' என்று கேட்பீராக! "அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும்1 நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது'' எனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.

33."வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' எனக் கூறுவீராக!

34.ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

35.ஆதமுடைய மக்களே!504 எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும்போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

36.நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போரே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

37.அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களைக் கைப்பற்ற நமது தூதர்கள்161அவர்களிடம் வரும்போது165 "அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று கேட்பார்கள். "எங்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர்'' என அவர்கள் கூறுவார்கள். "நாங்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக இருந்தோம்'' எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.

38."உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களான ஜின்களுடனும், மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!'' என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும்போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் "எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழிகெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!'' என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். "ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்'' என்று (அவன்) கூறுவான்.

39."எங்களை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. எனவே நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக265 வேதனையைச் சுவையுங்கள்!'' என்று முந்தியோர், பிந்தியோரிடம் கூறுவார்கள்.

40. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின்507வாசல்கள் திறக்கப்பட மாட்டாது.177 ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

41.அவர்களுக்கு நரகத்திலிருந்து விரிப்பும், அவர்களுக்கு மேலே (நரகத்திலிருந்து) போர்வைகளும் உள்ளன. இவ்வாறே அநீதி இழைத்தவர்களைத் தண்டிப்போம்.

42.நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை.68

43.அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதத்தை எடுத்து விடுவோம். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். "நமக்கு இத்தகைய வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருக்காவிட்டால் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். நமது இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர்'' என அவர்கள் கூறுவார்கள். "உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவே'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.

44."எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டீர்களா?'' என்று சொர்க்கவாசிகள் நரகவாசிகளிடம் கேட்பார்கள். அவர்கள் 'ஆம்' என்பர். "அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம்6 உள்ளது'' என்று அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார்.

45.அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தனர். அதைக் கோணல் வழியாகவும் கருதினர். மறுமையை ஏற்க மறுத்துக் கொண்டும் இருந்தனர்.

46.அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பு (சுவர்) இருக்கும். அந்தத் தடுப்புச்சுவரின் மேல் சில மனிதர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டு அவர்கள் அறிந்து கொள்வார்கள். சொர்க்கவாசிகளை அழைத்து "உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும்'' என்பார்கள். அவர்கள் ஆசைப்பட்டாலும் அங்கே நுழையாமல் இருப்பார்கள்.

47.அவர்களின் பார்வைகள் நரகவாசிகளை நோக்கித் திருப்பப்படும்போது "எங்கள் இறைவா! எங்களை அநீதி இழைத்த கூட்டத்துடன் சேர்த்து விடாதே!'' எனக் கூறுவார்கள்.

48, 49.தடுப்புச் சுவரின் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அறிந்து கொள்வார்கள். "உங்களுடைய ஆள் பலமும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களைக் காப்பாற்றவில்லை; அல்லாஹ் அருள் புரிய மாட்டான் என (சொர்க்கவாசிகளான) இவர்களைப் பற்றியா சத்தியம் செய்தீர்கள்?'' என்று கூறுவார்கள். (இதன்பின்) "சொர்க்கத்தில் நுழையுங்கள்!178 உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்" (என தடுப்புச் சுவரிலிருப்போரை நோக்கிக் கூறப்படும்.) 26

50. நரகவாசிகள், சொர்க்கவாசிகளை அழைத்து "எங்கள் மீது சிறிது தண்ணீரை அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை ஊற்றுங்கள்!'' எனக் கேட்பார்கள். ''(தன்னை) மறுப்போருக்கு அவ்விரண்டையும் அல்லாஹ் தடை செய்து விட்டான்'' என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள்.

51.அவர்கள் தமது மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டனர். இவ்வுலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது. இந்த நாளைச்1 சந்திக்க வேண்டிவரும் என்பதை அவர்கள் மறந்து, நமது வசனங்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தது போல் இன்று அவர்களை நாமும் மறந்து விட்டோம்.6

52.அவர்களிடம் வேதத்தைக் கொண்டு வந்துள்ளோம். அறிவுப்பூர்வமாக அதைத் தெளிவுபடுத்தியுள்ளோம். நம்பிக்கை கொள்கின்ற சமுதாயத்துக்கு அது நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

53.இவ்வேதத்தில் செய்யப்பட்ட எச்சரிக்கையைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அந்த எச்சரிக்கை நிறைவேறும் நாளில் "எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர். எங்களுக்காகப் பரிந்துரைப்போர் யாரும் இருந்து எங்களுக்குப் பரிந்துரை17 செய்ய மாட்டார்களா? அல்லது மீண்டும் (உலகுக்கு) திருப்பி அனுப்பப்பட மாட்டோமா? ஏற்கனவே செய்து வந்தவற்றுக்கு மாற்றமாகச் செய்வோமே'' என்று அந்நாளை1 இதற்கு முன் மறந்திருந்தோர் கூறுவார்கள். அவர்கள் தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டும் மறைந்து விட்டன.

54.உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும்,507 பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.511 இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

55. உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.180

56.பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதைச் சீர்கெடுக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. 49

57. தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும்போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.

58.தாவரங்கள், தனது இறைவனின் கட்டளைப்படி நல்ல பூமியில் வெளிப்படுகிறது. கெட்ட பூமியில் அற்பமானதைத் தவிர வேறெதுவும் வெளிப்படாது. நன்றி செலுத்தும் சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.

59. நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; மகத்தான நாளின்1வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.

60. "நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழிகேட்டிலேயே காண்கிறோம்'' என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினர்.

61. "என் சமுதாயமே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்'' என்று அவர் கூறினார்.

62. "என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்''

63."உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் (இறைவனை) அஞ்சவும், உங்களுக்கு அருள் செய்யப்படவும், உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?'' (என்றும் கூறினார்.)

64. ஆயினும் அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம்.222 நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

65. ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டார்.

66."உம்மை மடமையில் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். பொய்யராகவும் உம்மை நாங்கள் கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

67. "என் சமுதாயமே! என்னிடம் எந்த மடமையும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்'' என்று அவர் கூறினார்.

68. "என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். நான் உங்களின் நலம் நாடுபவன்; நம்பிக்கைக்குரியவன்''

69. "உங்களை எச்சரிப்பதற்காக உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவது உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? நூஹுடைய சமுதாயத்திற்குப் பின் உங்களை வழித்தோன்றல்களாக46 அவன் ஆக்கியதையும், உடலமைப்பில் உங்களுக்கு வலிமையை அதிகப்படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்!'' நீங்கள் வெற்றியடைவீர்கள் (என்றும் அவர் கூறினார்).

70."எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று அவர்கள் கூறினர்.

71. "உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும், கோபமும் உங்கள் மீது ஏற்பட்டு விட்டன. நீங்களும், உங்கள் முன்னோர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களைப் பற்றி (கற்பனைப் பாத்திரங்களைப் பற்றி) என்னிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. எதிர்பாருங்கள்! உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன்'' என்று அவர் கூறினார்.

72.அவரையும், அவருடன் இருந்தவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரைக் கருவறுத்தோம். அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

73.ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சி வந்துள்ளது. அது உங்களுக்குச் சான்றாக உள்ள அல்லாஹ்வின் ஒட்டகம்.269 அல்லாஹ்வின் பூமியில் அதை மேயவிட்டு விடுங்கள்! அதற்குத் தீங்கிழைக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும்'' என்று அவர் கூறினார்.

74. "ஆது சமுதாயத்துக்குப் பின்னர் உங்களை வழித்தோன்றல்களாக46 அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!'' (என்று அவர் கூறினார்).

75."ஸாலிஹ் தமது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் என்பதை அறிவீர்களா?'' என்று அவரது சமுதாயத்தில் கர்வம் பிடித்த பிரமுகர்கள் அவர்களில் நம்பிக்கை கொண்ட பலவீனர்களிடம் (கிண்டலாக) கேட்டனர். அதற்கு, (பலவீனர்கள்) "அவரிடம் கொடுத்து அனுப்பப்பட்ட செய்தியை நாங்கள் நம்புகிறோம்'' என்று கூறினர்.

76. "நீங்கள் நம்புவதை நாங்கள் மறுக்கிறோம்'' என்று கர்வம் பிடித்தவர்கள் கூறினர்.

77. பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். "ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்'' எனவும் கூறினர்.

78. உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

79. (வீழ்ந்து கிடக்கும்) அவர்களை விட்டு அவர் விலகினார். "என் சமுதாயமே! எனது இறைவனின் தூதுச் செய்தியை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். உங்களுக்கு நல்லதையே விரும்பினேன். எனினும் நலம் நாடுவோரை நீங்கள் விரும்பவில்லை'' எனக் கூறினார்.

80.லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). "உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?'' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.

81. "நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.)

82. "இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.

83. எனவே அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.

84. அவர்களுக்கு பெருமழையைப் பொழிவித்தோம். "குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு இருந்தது?" என்பதைக் கவனிப்பீராக!

85. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் தக்க சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று அவர் கூறினார்.

86."ஒவ்வொரு பாதையிலும் (மக்களை) மிரட்டுவதற்காக அமராதீர்கள்! அல்லாஹ்வின் பாதையைக் கோணலாகச் சித்தரித்து, நம்பிக்கை கொண்டோரை அதை விட்டும் தடுக்காதீர்கள்! நீங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததையும், உங்களை அவன் அதிகமாக்கியதையும் எண்ணிப் பாருங்கள்! குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!''

87. "எனக்குக் கொடுத்தனுப்பப்பட்டதை உங்களில் ஒரு சாரார் நம்பி, மற்றொரு சாரார் நம்பாமல் இருந்தால் அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருங்கள்! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்'' (எனவும் அவர் கூறினார்.)

88. "ஷுஐபே! உம்மையும், உம்முடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்'' என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) "நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?'' என்று கேட்டார்.

89.உங்கள் மார்க்கத்தை விட்டும் அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிய பின்னர் அதற்குத் திரும்பினால் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோராக ஆவோம். எங்கள் இறைவன் நாடினால் தவிர அதற்கு (உங்கள் மார்க்கத்திற்கு) திரும்புதல் எங்களிடம் ஏற்படாது. எங்கள் இறைவன் ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன் (எனவும் ஷுஐப் கூறினார்.)

90. "ஷுஐபைப் பின்பற்றினால் நீங்கள் நட்டமடைந்தோராவீர்கள்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

91. உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

92. ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோர் (அதற்கு முன்) அங்கே வசிக்காதவர்களைப் போலானார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோரே நட்டமடைந்தோரானார்கள்.

93. (வீழ்ந்து கிடக்கும்) அவர்களை விட்டு அவர் விலகினார். "என் சமுதாயமே! என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். உங்களுக்கு நல்லதையே நாடினேன். எனவே (ஏகஇறைவனை) மறுத்த கூட்டத்திற்காக எவ்வாறு கவலைப்படுவேன்?'' என்றார்.

94. எந்த ஊருக்கு நபியை நாம் அனுப்பினாலும் அவ்வூரார் பணிய வேண்டும் என்பதற்காக அவர்களை வறுமையினாலும், நோயினாலும் நாம் பிடிக்காமல் இருந்ததில்லை.

95. பின்னர் கெட்டதற்குப் பகரமாக நல்லதை மாற்றிக் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகியபோது "(எங்களுக்கு மட்டுமின்றி) எங்கள் முன்னோருக்கும் துன்பமும், இன்பமும் ஏற்பட்டன'' எனக் கூறினர். எனவே அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களைத் தண்டித்தோம்.

96.அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும்,507 பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக265 அவர்களைத் தண்டித்தோம்.

97. அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும்போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

98. அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது முற்பகலில் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

99. அல்லாஹ்வின் சூழ்ச்சியில்6 அச்சமற்று இருக்கிறார்களா? நட்டமடைந்த கூட்டத்தினர் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் சூழ்ச்சியில் அச்சமற்று இருக்க மாட்டார்கள்.

100. நாம் நாடியிருந்தால் பூமிக்கு உரியவர்களிடமிருந்து (அவர்கள் அழிக்கப்பட்ட பின்) அதைக் கைப்பற்றிக் கொண்டவர்களை அவர்களது பாவங்களின் காரணமாகத் தண்டித்திருப்போம் என்பதும், அவர்கள் செவியுறாதவாறு அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டிருப்போம் என்பதும் விளங்கவில்லையா?

101. (முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

102. அவர்களில் பெரும்பாலோரிடம் வாக்கை நிறைவேற்றுதல் இல்லை. அவர்களில் அதிகமானோரைக் குற்றம் புரிவோராகவே காண்கிறோம்.

103. அவர்களுக்குப் பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவற்றை அவர்கள் ஏற்க மறுத்தனர். "குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?" என்பதைக் கவனிப்பீராக!

104. "ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்'' என்று மூஸா கூறினார்.

105. அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்க நான் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு181 (எனவும் கூறினார்).

106. "நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வாரும்!'' என்று அவன் கூறினான்.

107. அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது.269

108. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.269

109, 110. "இவர் தேர்ந்த சூனியக்காரராக357 உள்ளார்285. உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.26

111, 112. "இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர்357ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.26

113. சூனியக்காரர்கள்357 ஃபிர்அவ்னிடம் வந்தனர். "நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று அவர்கள் கேட்டனர்.

114. "ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என (அவன்) கூறினான்.

115. "மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று அவர்கள் கேட்டனர்.

116. "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்டபோது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.285 மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை357 அவர்கள் கொண்டு வந்தனர்.

117. "உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.269

118. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.285

119. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.285

120. சூனியக்காரர்கள்357 ஸஜ்தாவில் விழுந்தனர்.285

121,122. "அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர்.26

123. "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) பின்னர் அறிந்து கொள்வீர்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

124. "உங்களை மாறுகால், மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்'' (என்றும் கூறினான்)

125. "நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள்'' என்று அவர்கள் கூறினர்.

126. "எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிவிட்டு) "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக295 மரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்.

127. "இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். "அவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண் (மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

128. "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.

129. "நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி46 எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்'' என்றும் கூறினார்.

130. "படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும், பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்''

131. அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் "அது எங்களுக்காக (கிடைத்தது)'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். "கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.''

132."எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும், நாம் உம்மை நம்பப் போவதில்லை'' என்று அவர்கள் கூறினர்.

133.எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம்.269 அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்.

134.அவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் "மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்''181என்று அவர்கள் கூறினர்.

135. அவர்கள் நிறைவு செய்யும் காலக்கெடு வரை அவர்களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மீறுகின்றனர்.

136. அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கருதி, அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம்.

137. பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.

138.இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!'' என்று கேட்டனர். "நீங்கள் அறிவுகெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்'' என்று அவர் கூறினார்.

139. "அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியும். அவர்கள் செய்து வந்தவையும் வீணானது.''

140. "அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்'' என்று (மூஸா) கூறினார்.

141. உங்கள் ஆண் மக்களைக் கொன்று, உங்கள் பெண் (மக்)களை உயிருடன் விட்டு, உங்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னின் கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்! உங்கள் இறைவனிடமிருந்து இதில் கடும் சோதனை இருந்தது.

142.மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது.18 "என் சமுதாயத்திற்கு நீர் எனக்குப் பகரமாக46 இருந்து சீர்திருத்துவீராக! குழப்பவாதிகளின் பாதையைப் பின்பற்றிவிடாதீர்!'' என்று தம் சகோதரர் ஹாரூனிடம் மூஸா (ஏற்கனவே) கூறியிருந்தார்.

143. நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசியபோது488 "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது.21 எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் பின்னர் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்தபோது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்தபோது "நீ தூயவன்.10 உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார்.

144. "மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன்488 மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக!'' என்று (இறைவன்) கூறினான்.

145. பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும், அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமாகவும் அது இருந்தது.184 "இதைப் பலமாகப் பிடிப்பீராக! இதை மிக அழகிய முறையில் பிடிக்குமாறு உமது சமுதாயத்திற்கும் கட்டளையிடுவீராக! குற்றம் புரிந்தோரின் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்''428 (என்று இறைவன் கூறினான்.)

146. நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம்.

147. நமது வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்யெனக் கருதியோரின் செயல்கள் அழிந்து விடும். அவர்கள் செய்ததைத் தவிர வேறு எதற்கும் கூலி கொடுக்கப்படுவார்களா?

148.மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. "அது அவர்களிடம் பேசாது என்பதையும், அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா?19 அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள்.

149. தாங்கள் வழிதவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்டபோது "எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்காவிட்டால் நட்டமடைந்தோராவோம்'' என்றனர்.

150. கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பியபோது "எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா?'' என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்) "என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!'' என்றார்.

151. "என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன்'' என்று (மூஸா) கூறினார்.

152. காளைக் கன்றைக் கடவுளாகக் கருதியோருக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் ஏற்படும். கற்பனை செய்வோரை இவ்வாறே வேதனைக்கு உட்படுத்துவோம்.19

153. யார் தீமையான காரியங்களைச் செய்து, பின்னர் திருந்தி நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை) உமது இறைவன் அதன் பிறகு மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

154. மூஸாவுக்குக் கோபம் தணிந்தபோது பலகைகளை எடுத்தார். அதன் எழுத்துக்களில் இறைவனை அஞ்சுவோருக்கு அருளும், நேர்வழியும் இருந்தது.

155. நாம் நிர்ணயித்த இடத்தில் மூஸா தமது சமுதாயத்தில் எழுபது ஆண்களைத் தேர்வு செய்தார். அவர்களைப் பூகம்பம் தாக்கியபோது "என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்பே அவர்களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா? இது உன் சோதனை தவிர வேறில்லை. இதன் மூலம் நீ நாடியோரை வழிகேட்டில் விட்டு விடுகிறாய். நீ நாடியோருக்கு வழிகாட்டுகிறாய். நீயே எங்கள் பொறுப்பாளன். எனவே எங்களை மன்னித்து, எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே மன்னிப்போரில் சிறந்தவன்'' என்று (மூஸா) பிரார்த்தித்தார்.392

156. "எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக! நாங்கள் உன்னிடம் திரும்பி விட்டோம்'' (எனவும் பிரார்த்தித்தார்) "என் வேதனையை நான் நாடியோருக்கு அளிப்பேன். எனது அருள், எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. (என்னை) அஞ்சி, ஜகாத்தும் கொடுத்து, நமது வசனங்களை நம்புகின்ற மக்களுக்காக அதைப் பதிவு செய்வேன்'' என்று (இறைவன்) கூறினான்.

157. எழுதப் படிக்கத்312 தெரியாத152 இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும்491 இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை457 அவர்கள் காண்கின்றனர்.25 இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.186 அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

158."மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும்281 அல்லாஹ்வின் தூதராவேன்.187 அவனுக்கே வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத்312 தெரியாத152 இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்.

159.மூஸாவுடைய சமுதாயத்தில் உண்மையின்படி வழி காட்டுவோரும், அதன்படி நீதி செலுத்துவோரும் உள்ளனர்.

160.அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்டபோது "உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!' என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன.269ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா442 (எனும் உண)வை இறக்கினோம். "உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!" (என்று கூறினோம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்கே தீங்கிழைத்தனர்.

161. "இவ்வூரில் குடியிருங்கள்! விரும்பியதை இதில் உண்ணுங்கள்! 'மன்னிப்பு (கேட்கிறோம்)' எனக் கூறுங்கள்! பணிந்து, வாசல்வழியாக நுழையுங்கள்! உங்கள் தவறுகளை உங்களுக்கு மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதை நினைவூட்டுவீராக!

162. அவர்களில் அநீதி இழைத்தோர், (மேற்கூறப்பட்ட சொல்லை) தமக்குக் கூறப்படாத சொல்லாக மாற்றிக் கொண்டார்கள். எனவே அவர்கள் அநீதி இழைத்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து507 வேதனையை இறக்கினோம்.

163. கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால்23 இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.484

164. "அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின்போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.

165. கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். குற்றம் புரிந்து வந்ததால் அநீதி இழைத்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தோம்.188

166.தடுக்கப்பட்டதை அவர்கள் மீறியபோது "இழிந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். 23

167. கியாமத் நாள்1 வரை அவர்களுக்குக் கொடிய வேதனை அளிப்போரையே அவர்களுக்கு எதிராக நியமிப்பதாக உமது இறைவன் பிரகடனம் செய்ததை நினைவூட்டுவீராக! 99 உமது இறைவன் விரைவாகத் தண்டிப்பவன்; அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

168.அவர்களைப் பூமியில் பல கூட்டத்தினராகப் பிரித்தோம். அவர்களில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு அல்லாதோரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் திருந்துவதற்காக அவர்களை நல்லவை மூலமும், தீயவை மூலமும் சோதித்தோம். 484

169. அவர்களுக்குப் பின்னர் மற்றொரு சமுதாயத்தினர் அவர்களுக்குப் பகரமாக46 வந்தனர். அவர்கள் வேதத்தை வாரிசு முறையில் பெற்றனர். (அதன் மூலம்) இந்த மட்டமான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். எங்களுக்கு மன்னிக்கப்படும் எனவும் கூறுகின்றனர். மீண்டும் அது போன்ற அற்பப் பொருள் அவர்களுக்குக் கிடைத்தால் அதையும் பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையைத் தவிர (எதையும்) கூறக்கூடாது என்று அவர்களிடம் வேதத்தில் (தெளிவுபடுத்தி) உறுதிமொழி எடுக்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் படிக்கவில்லையா? (இறைவனை) அஞ்சுகின்ற மக்களுக்கு மறுமை வாழ்வே சிறந்தது. (இதை) நீங்கள் விளங்க வேண்டாமா?

170.யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

171. "மலையை அவர்களுக்கு மேல் மேகத்தைப் போன்று நாம் உயர்த்தி, அது தம் மீது விழுந்து விடும் என்று அவர்கள் நினைத்தபோது "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடியுங்கள்! அதில் உள்ளதை எண்ணிப் பாருங்கள்! (நம்மை) அஞ்சுவோராகலாம்'' (என்று கூறினோம்) 22

172, 173. "ஆதமுடைய மக்களின்504 முதுகுகளிலிருந்து189 அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில்1 நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)26

174. அவர்கள் திருந்துவதற்காக இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

175. (முஹம்மதே!) அவர்களுக்கு ஒருவனைப் பற்றிய செய்தியைக் கூறுவீராக! அவனுக்கு நமது வசனங்களை வழங்கியிருந்தோம். அவன் அதிலிருந்து நழுவிக் கொண்டான். அவனை ஷைத்தான் தொடர்ந்தான். எனவே அவன் வழிகெட்டவனாகி விட்டான்.

176.நாம் நாடியிருந்தால் அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாயாகும். அதை நீர் தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக!

177.நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, தமக்குத் தாமே தீங்கிழைத்த கூட்டத்தினரே மோசமான உதாரணமாவர்.

178. அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனே நட்டமடைந்தவன்.

179. ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

180.அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.190

181. நாம் யாரைப் படைத்தோமோ அவர்களில் உண்மையான வழிகாட்டும் சமுதாயத்தினரும், அதைக் கொண்டே நீதி செலுத்துவோரும் உள்ளனர்.

182. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோரை அவர்கள் அறியாத விதத்தில் விட்டுப் பிடிப்போம்.

183. அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளேன். எனது திட்டம் உறுதியானது.

184. அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை468 என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

185. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சியையும், அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா? இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்?

186. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழிகாட்டுபவர் யாருமில்லை. அவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவான்

187. "யுகமுடிவு நேரம்1 எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும்,507 பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

188. "அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

189. "அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான்.368 அவரிலிருந்து அவரது துணைவியை504 அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்தபோது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்தபோது (உறுப்புக்களில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்'' என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.

190. அவ்விருவருக்கும் (உறுப்புக்களில்) குறைகளற்றவனை அவன் கொடுத்தபோது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அல்லாஹ்வுக்குப் பங்காளிகளை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூரமானவன்.191

191. எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர்.

192. இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது.

193. (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே!

194. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

195. அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!

196. "இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்'' (என்றும் கூறுவீராக!)

197. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

198. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

199. பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!

200. ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

201. (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

202. அவர்கள் (ஷைத்தான்கள்), தமது சகோதரர்களை வழிகேட்டில் இழுத்துச் செல்வார்கள். பின்னர் (அதில்) எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள்.

203. (முஹம்மதே!) அவர்களிடம் சான்றை நீர் கொண்டு வராவிட்டால் "அதைக் கொண்டு வரமாட்டீரா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுகிறேன். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த தெளிவாகவும், நேர்வழியாகவும், நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு அருளாகவும் உள்ளது'' என்று கூறுவீராக!

204. குர்ஆன் ஓதப்படும்போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

205. உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!192

206. உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப் புறக்கணிக்க மாட்டார்கள். அவனைத் துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.396

 

Leave a Reply