அத்தியாயம் : 14 இப்ராஹீம்

அத்தியாயம் : 14

இப்ராஹீம் – ஓர் இறைத் தூதரின் பெயர்

மொத்த வசனங்கள் : 52

ந்த அத்தியாயத்தில் இப்ராஹீம் நபியவர்கள் கஃஅபாவை புனர்நிர்மாணம் செய்தது 35வது வசனத்திலும், தமது குடும்பத்தினரை இறைவனின் கட்டளைப்படி பாலைவனப் பெருவெளியாக இருந்த மக்காவில் குடியமர்த்திய செய்தி 37வது வசனத்திலும், முதுமையில் அவர்களுக்கு இறைவன் இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய குழந்தைகளை வழங்கிய நிகழ்ச்சி 39வது வசனத்திலும் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இப்ராஹீம் எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.


 


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1.அலிஃப், லாம், ரா.2 மனிதர்களை அவர்களது இறைவனின் அனுமதியின்படி இருள்களிலிருந்து303 வெளிச்சத்திற்கும், புகழுக்குரிய மிகைத்தவனின் பாதைக்கும் நீர் கொண்டு செல்வதற்காக உமக்கு இவ்வேதத்தை அருளினோம்.

2.வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு, கடுமையான வேதனை எனும் கேடு உள்ளது.

3. அவர்கள் மறுமையை விட இவ்வுலக வாழ்வை விரும்புகின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அதைக் கோணல் மார்க்கமாகச் சித்தரிக்கின்றனர். அவர்கள் (உண்மையிலிருந்து) தூரமான வழிகேட்டில் உள்ளனர்.

4.எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.244 தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

5."உமது சமுதாயத்தை இருள்களிலிருந்து303 வெளிச்சத்திற்குக் கொண்டு செல்வீராக! அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவூட்டுவீராக!'' என்று மூஸாவை நமது சான்றுகளுடன் அனுப்பினோம். அதில் ஒவ்வொரு பொறுமையாளருக்கும், நன்றி செலுத்துவோருக்கும் சான்றுகள் உள்ளன.

6.ஃபிர்அவ்னுடைய ஆட்களிடமிருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றி, (உங்களுக்குச் செய்த) அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்கள் மோசமான துன்பத்தை உங்களுக்குச் சுவைக்கச் செய்தனர். உங்களின் ஆண் மக்களை அறுத்துக் கொன்றனர். உங்களின் பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள் இறைவனிடமிருந்து இதில் பெரும் சோதனை இருந்தது'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!

7. "நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது'' என்று உங்கள் இறைவன் பிரகடனம் செய்ததை எண்ணிப் பாருங்கள்!

8."நீங்களும், பூமியில் உள்ள அனைவரும் (ஏகஇறைவனை) மறுத்தால் அல்லாஹ் தேவைகளற்றவன்;485 புகழுக்குரியவன்'' என்று மூஸா கூறினார்.

9. உங்களுக்கு முன்சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது மற்றும் ஸமூது சமுதாயம், அவர்களுக்குப் பின் வந்தோர் பற்றிய செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். அவர்களிடம், அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அம்மக்கள் தமது கைகளை வாய்களில் வைத்து "எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுத்து விட்டோம். எதை நோக்கி எங்களை அழைக்கிறீர்களோ அதில் பலமான சந்தேகத்தில் இருக்கிறோம்'' எனக் கூறினர்.

10."வானங்களையும்,507 பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்? உங்கள் பாவங்களை மன்னிக்கவும், குறிப்பிட்ட காலக்கெடு வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவுமே உங்களை அவன் அழைக்கிறான்'' என்று அவர்களின் தூதர்கள் கூறினர். "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!'' என்று அவர்கள் கேட்டனர்.

11. "நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது.269 நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

12. "அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' (என்றும் கூறினர்.)

13, 14. "உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். "அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இ(ந்தச் செய்தியான)து, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது.26

15. (தூதர்கள்) வெற்றி பெற்றனர். பிடிவாதம் பிடித்த ஒவ்வொரு அடக்குமுறையாளனும் நட்டமடைந்தான்.

16. அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும்.

17. அதை மிடறுமிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது.

18. தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும்.

19.வானங்களையும்,507 பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்துடன் படைத்தான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நாடினால் உங்களை அழித்து, புதிய படைப்பைக் கொண்டு வருவான்.

20. இது அல்லாஹ்வுக்குச் சிரமமானதல்ல.

21.அனைவரும் அல்லாஹ்வின் முன்னே நிற்பார்கள். "உங்களையே நாங்கள் பின்பற்றினோம். எனவே அல்லாஹ்வின் வேதனையிலிருந்து சிறிதளவேனும் எங்களைக் காப்பாற்றுவீர்களா?'' என்று கர்வம் கொண்டிருந்தோரிடம் பலவீனர்கள் கேட்பார்கள். அதற்கவர்கள் "அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டியிருந்தால் உங்களுக்கு வழிகாட்டியிருப்போம். நாம் இங்கு துடிப்பதும், சகிப்பதும் நம்மைப் பொறுத்த வரை சமமானதே. நமக்கு எந்தப் போக்கிடமும் இல்லை'' என்று கூறுவார்கள்.

22. "அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறிவிட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் நீங்கள் (இறைவனுக்கு) என்னை இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

23. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் தமது இறைவனின் கட்டளைப்படி நிரந்தரமாக இருப்பார்கள். ஸலாம்159 என்பதே அதில் அவர்களின் வாழ்த்தாக இருக்கும்.

24. நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.

25. தனது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.

26. தீய கொள்கைக்கு உதாரணம் கெட்ட மரம். அது பூமியின் மேற்புறத்திலிருந்து பிடுங்கப்பட்டுள்ளது; அது நிற்காது.

27. நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

28, 29. அல்லாஹ்வின் அருட்கொடையை (இறை) மறுப்பாக மாற்றி, தமது சமுதாயத்தை நரகம் எனும் அழிவு உலகத்தில் தங்க வைத்தோரை நீர் அறியவில்லையா? அதில் அவர்கள் எரிவார்கள். அது மிகவும் கெட்ட தங்குமிடம்.26

30. அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுப்பதற்காக அவனுக்கு இணைகற்பித்தனர். "அனுபவியுங்கள்! நீங்கள் சென்றடையும் இடம் நரகமே'' என்று கூறுவீராக!

31. எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள்1 வருவதற்கு முன் தொழுகையை நிலைநாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்குக் கூறுவீராக!

32. அல்லாஹ்வே வானங்களையும்,507 பூமியையும் படைத்தான். வானிலிருந்து507 தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப்படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

33. தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.

34. நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.

35. "இறைவா! இவ்வூரை அபயமளிப்பதாக ஆக்குவாயாக!34 என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!'' என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! 245

36. இறைவா! இவை (சிலைகள்) மனிதர்களில் அதிகமானோரை வழிகெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறுசெய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில்,33 விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!246

38. எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ507 அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

39. இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

40. என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!

41.எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில்1 மன்னிப்பாயாக!247 (எனவும் இப்ராஹீம் கூறினார்)

42. அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே1 அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.

43. (அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராக தறிகெட்டு ஓடுவார்கள். (நிலைகுத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.

44. மனிதர்களை வேதனைப்படுத்தும் நாளைப்1 பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) "எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்'' என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன் நீங்கள் சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?

45. தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் குடியிருப்புகளில் நீங்களும் குடியிருந்தீர்கள். அவர்களை எவ்வாறு நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பல (முன்) உதாரணங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறினோம். (என்று அவர்களுக்குக் கூறப்படும்)

46. அவர்கள் கடும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் சூழ்ச்சி மலைகளைப் புரட்டுவதாக இருந்தபோதும் அந்த சூழ்ச்சி (வெல்வது) அல்லாஹ்விடமே உள்ளது.

47. தனது தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியை அல்லாஹ் மீறுபவன் என்று நீர் எண்ணாதீர்! அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

48.அந்நாளில்1 பூமி, வேறு பூமியாகவும், வானங்களும்507 (வேறு வானங்களாகவும்)453மாற்றப்படும்.225 ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.

49. அந்நாளில்1 குற்றவாளிகள் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருப்பதை நீர் காண்பீர்!

50. அவர்களின் சட்டைகள் தாரினால் தயாரிக்கப்பட்டவை. அவர்களின் முகங்களை நெருப்பு மூடிக் கொள்ளும்.

51. ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்பட்டதற்கேற்ப அல்லாஹ் கூலி கொடுப்பான். அல்லாஹ் விரைவாக விசாரிப்பவன்.

52. இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும்.187 இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.)

 

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit